சரக்கு



இந்த முறை எப்படியும் சரக்கைக் கைமாற்றிவிட வேண்டும்.இரண்டு வாரங்களுக்கு முன்பே அனுப்பியிருக்க வேண்டியது. கடைசி நேரத்துக் குழப்பம். ‘நானே அழைத்துச் செல்கிறேன்’ என்றவர் அழைக்காமல் கிளம்பிப் போனதில் சரக்கைக் கைமாற்ற முடியவில்லை.

சாம்பார் இட்லியை சாப்பிட்டவாறே, பக்கத்து இருக்கையில் இருந்த சரக்குப் பையை இடது கையால் தூக்கிப் பார்த்தான் பாலு. எப்படியும் ஐந்து கிலோ இருக்கும்.ஐந்து கிலோ எடையைக் கொண்டு போவதில் இருக்கும் சிரமம் அதைக் கொண்டு போகும் நபர் சார்ந்தது. அவர் பொருட்டு கொண்டு போகும் பொருட்கள் எல்லாம் சேர்ந்து, ஏற்கனவே கணிசமான எடை இருக்கும்.

விமானப்பயணத்தில் ஒருவருக்கு அனுமதிக்கப்படும் எடையில் - முப்பதோ நாற்பதோ - இந்த ஐந்து கிலோ எடையைச் சேர்க்க முடியாமல் போகவே அதிக வாய்ப்புள்ளது. அது மாதிரி ஒரு காரணத்தாலேயே அந்த மனிதர் அழைக்காமல் கிளம்பிப் போயிருக்கலாம்.

இந்த முறை தவறவிடக் கூடாது. இன்று கொடுக்க வேண்டிய நபரிடம் காலையிலேயே அலைபேசியில் பேசியாகி விட்டது. “ஐந்து ஆறு கிலோ பிரச்னையே இல்லை...” என்று அந்த நபர் சொன்னபோது பாலுவிற்கு கொஞ்சமும் ஆச்சரியமாக இல்லை.எப்போதும் நடப்பதுதான்.
நிறைய விஷயங்களில் பாலுவும் பார்த்து விட்டான். அவனுக்கென்று போகும் காரியங்கள் பலதும் ஒன்று நிறைய சொதப்பும் அல்லது முடியாமல் இழுத்துக் கொண்டு போகும். இவன் நண்பன் செல்வம் பொருட்டு முன்னெடுக்கும் காரியங்கள் பட்டென்று முடியும்.

இந்த சரக்கு மாற்றத்தையே எடுத்துக் கொண்டால், ஒரு வாரத்திற்கு முன்னால் தவறவிட்டது, இதோ இன்று முடியப் போகிறது.
காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது பாலுவின் மகன் கேட்டது ஞாபகம் வந்தது.“என்ன டாடி… சரக்கு மாத்தப் போறீங்களா..? கோட் வர்ட் எல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கா?’’

சற்று ஆச்சரியத்தோடு மகனைப் பார்த்தான் பாலு. இத்தனைக்கும் ஒரு முறை அவன் நண்பனோடு தொலைபேசியில் பேசும்போது பாலு தமாஷாகக் குறிப்பிட்ட ‘சரக்கு’ என்ற வார்த்தையை அவன் சரியாக ஞாபகம் வைத்திருந்தது ஆச்சரியம் தந்தது. படிப்பில் இந்த ஞாபக சக்தியை உபயோகப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இட்லி சாப்பிட்டு முடிந்ததும் வந்த காபியை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான். இந்த ஹோட்டலில் பாலுவுக்குப் பிடித்ததே இந்த அம்சம்தான். நிறைய ஹோட்டல்களில் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே காபியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அது ஒரு ஓரத்தில் ஆறிக்கொண்டிருக்கும். சூடான காபிக்காக சாப்பிடும் வேகத்தைக் கூட்ட வேண்டியிருக்கும்.

காபியைக் குடித்து முடித்து பில்லுடன் கேஷ் கவுண்டரை நோக்கி நடந்தான். அலைபேசி ஒலித்தது. பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தான். புது எண். “சார்… பாலுங்களா..?”“ஆமாங்க...”“நான் முருகன்... காலைல கூப்பிட்டிருந்தீங்களே…”“ஆமாம் சார்... கிளம்பிட்டேன்... தாம்பரம்தான் வந்திட்டிருக்கேன். பெரம்பூர்ல இதோ ட்ரெயின் ஏறப் போறேன்...”“ஓகே சார். ஒரு சின்ன சேன்ஜ். தாம்பரத்துக்கு பதில் பல்லாவரம் ஸ்டேஷன்ல இறங்கிடுங்க. வெளியே ஒரு சரவணபவன் இருக்கு… அங்க வெயிட் பண்ணுங்க… அந்தப் பக்கம் ஒரு வேலையா வரேன். அப்படியே உங்களைப் பார்த்து பார்சலை வாங்கிக்கறேன்...”அதன்படியே ஸ்டேஷன் சென்று பல்லாவரம் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கி, சரக்குப் பை கனக்க, படிகளில் ஏறி, சென்ட்ரல் செல்லும் பிளாட்பார்மில் இறங்கவும், ரயில் வரவும் சரியாக இருந்தது.

ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சரக்குப் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான். அது ஒரு தீபாவளி மலர். அதைப்போல் இன்னும் பல தீபாவளி மலர்கள் உள்ளே இருந்தன. கூடவே கதைத் தொகுப்புகள் நாவல்கள் ஒன்றிரண்டும்.இவ்வளவும் படிக்க நண்பனுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. அப் படியொன்றும் வெட்டி ஆபீசர் வேலையில்லை. அபுதாபியில் அவன் வேலைசெய்யும் கம்பெனி யில் பொறுப்பான ஒரு சீனியர் பொறியாளன்.ஒருமுறை அதைப் பற்றிக் கேட்ட போது முதலில் சிரித்தான். ‘‘நேரம் இல்லைன்னு சொல்லிக்கினே நாம நிறைய நேரத்தை வீணாக்கிக்கிட்டு இருக்கோம்...’’அலைபேசி பாக்கெட்டில் அதிர்ந்தது. அவன்தான்.

“சொல்றா எப்டி இருக்கே?”
“வேலை செய்யச் சொல்றாங்க... அது ஒண்ணுதான் பிரச்னை...”
“பார்றா...’’ “அதுவும் நிறைய செய்யச் சொல்றாங்க... சரி அதை வுடு… சரக்கு கை மாத்தியாச்சா..?”
“அதுக்குதான் போயிட்டிருக்கேன். பல்லாவரத்தில வச்சு கொடுத்துடுவேன்...”
“கொடுத்துட்டு போன் பண்ணு.”“சரிங்க சார்... பை ஆர்டர்!”
“நோ ஜோக்ஸ்... ஒரு மீட்டிங் போறேன் இப்ப... ஒன் அவர்ல ஃப்ரீயாயிடுவேன்... அப்புறம் கூப்புடுறேன்...’’
பார்க் ஸ்டேஷனில் இருந்து ரயில் பிடித்து பல்லாவரம் போய்ச் சேர்ந்தபோது மணி 11.

பத்தரை மணி போல் வருவதாகச் சொன்ன முருகன் வந்திருப்பாரா என்று யோசித்துக் கொண்டே சரவண பவனை நெருங்கிய பாலு பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்தான்.சட்டென்று அந்த யோசனை ஓடியது.எப்போதும் அலைபேசியை வைத்தே எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோமே, இந்த ஒரு தடவை அலைபேசியில்லாமல் ஆளைக் கண்டுபிடித்தால் என்ன?அந்த ஃபாஸ்ட் ஃபுட் சரவண பவனில் இருந்த வட்ட வடிவ மேஜைகள் எல்லாவற்றிலும் சுற்றி ஆட்கள் இருந்தனர். சுற்றிலும் கண்ணை ஓட்டியவன் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒருவரைப் பார்த்தான்.

சுமார் ஐம்பது வயது இருக்கலாம். பாதி தலை வழுக்கை. அரைக்கை வெள்ளைச் சட்டை. நம்ம நண்பனுக்கு எல்லா வயதிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அவரை நெருங்கி ‘‘ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?’’ என்றான்.

“ஆமா...” என்றவர் “நீங்க?” என்றார்.‘‘காபி குடிச்சுட்டே பேசுவோமா..?’’அவர் தலையசைத்தார். இரண்டு காபி வாங்கி அப்போதுதான் காலியான மேஜை ஒன்றில் வைத்தபடி ‘‘நீங்க குடிங்க... இதோ வந்திடுறேன்...’’ என்று வாஷ்ரூம் போய் வந்தான்.

அதற்குள் அவர் காபியைக் குடித்து முடித்திருந்தார்.மேஜையை நெருங்கிய பாலு, பார்சல் கவரை அவர் பக்கம் தள்ளிவைத்து, ‘‘இதுதாங்க... என் வேலை முடிஞ்சது. கொண்டுபோய் சேர்க்க வேண்டியது இனி உங்க பொறுப்பு...’’ என்றான் சிரித்தபடி.ஏறிட்டு பாலுவைப் பார்த்தவர் ‘‘என்னதிது?” என்றார்.“புக்ஸ்தாங்க... வேறொண்ணும் இல்ல... செல்வம் சொல்லியிருப்பாரே? செல்வமும் நானும் காலேஜ் நாள்லேருந்தே ஃபிரண்ட்ஸ்... அவருக்கு வேணும்ன்ற புக் லிஸ்ட் அனுப்புவார். வாங்கி அனுப்புறது என் வேலை...”“சரி... அதை ஏன் என்கிட்ட குடுக்கிறீங்க...?”

ஏதோ சரியில்லை என்று பாலுவுக்குத் தோன்ற ‘‘நீங்க...முருகன்தானே?’’ என்றான்.“இல்லைங்க... வேற யாரையோ நினைச்சி எங்கிட்ட பேசிட்டிருக்கீங்கனு நினைக்கிறேன்...’’சரியாக அப்போது பாலுவின் அலைபேசி ஒலிக்க, எடுத்தவன், ‘‘ஹலோ... ஆமா பாலுதான் பேசுறேன்… ஓ… முருகன்… எங்கேயிருக்கீங்க?’’ என்றான்.“பில் கவுண்டர்கிட்ட... நீலச் சட்டை... நீங்க?”“பின்னாடி திரும்பிப் பாருங்க...” என்றபடி பில் கவுண்டரை நெருங்கி முருகனின் கையைப் பிடித்து குலுக்கினான் பாலு.

கைகுலுக்கியபடியே புத்தகங்கள் இருந்த மேஜையை நெருங்கி, “நீங்கன்னு நினைச்சு சார்கிட்ட பார்சலை குடுக்கப் போய்... நல்ல தமாசு...” என்றான் பாலு.இப்போது பாலுவைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார் அவர்.“இது வெறும் புக்ஸ் சம்பந்தப்பட்டது... தமாசு... ஓகே... இதுவே வேற ஏதாவது பணம் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா? நினைச்சுப் பாருங்க.... எவ்ளோ பேர் லைஃபே திசைமாறிப் போயிருக்கு... என்னை மாதிரி...”
சொல்லிக் கொண்டிருந்தவரை இடைமறித்த முருகன், பாலுவிடம் “கொஞ்சம் அவசரமா போகணும்… என்னோட மாமா வெளில பைக்ல வெயிட் பண்ணிட்டிருக்காரு... இந்த புக்ஸ்தானே... கொண்டு போய் குடுத்துடறேன்... நான் கிளம்பட்டா?” பார்சலை கைகளில் எடுத்தபடி விடைபெற்றுப் போனார்.

அந்த மனிதரிடம் வேறென்ன பேச என்று பாலுவுக்குத் தெரியவில்லை.“வரேங்க...” என்று சொல்லி விட்டு ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பத்தடிதான் நடந்திருப்பான்.‘‘என்னா சார்… எவ்ளோ குடுத்தீங்க?’’ என்ற குரல் வந்த திசையைப் பார்த்தான்.கொஞ்சம் தள்ளி பூ கட்டிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து வந்தது அந்தக் குரல்.“என்ன சொன்னீங்க?’’ அருகில் போனான்.

“ரொம்ப நேரமா… அவரோட பேசிட்டிருந்தீங்களே... எவ்ளோ ரூபா குடுத்தீங்கன்னு கேட்டேன்...”
“ஒண்ணும் குடுக்கலையே… ஏன் கேட்கறீங்க?”‘‘அப்படியா... வழக்கமா ஏதாவது வாங்காம உடமாட்டாரே...’’
“அப்படியா, உங்களுக்குத் தெரியுமா அவரை?”
“ஆள் யாருன்னு எல்லாம் தெரியாது… டெய்லி இங்க வந்து குந்திக்கினு இருப்பாரு. உங்களை மாரி யாராவது மாட்டினா, ஏதாவது கதை சொல்லி காசு கேட்பாரு...”

“கதைன்னா?”
“பொண்டாட்டிக்கு உடம்பு சரில்ல… பொண்ணுக்கு பெரிய ஆபரேசன்... இப்படி ஏதாச்சும் சொல்லி காசு கேட்பாரு...
உங்ககிட்ட எதுவும் கேட்கலையா...’’“இல்லையே...”
“அப்ப ஏற்கனவே இன்னைக்கு சரக்கு போட்டாச்சு போல?”
“சரக்குனா? குடிப்பாரா?”

“எப்பவும் தண்ணியிலதான் இருப்பாரு... இன்னிக்கு அதுவும் இல்லையா... ஆச்சரியந்தான்...”பாலுவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.அந்தப்பெண் சொன்ன எந்த மாதிரியும் அவர் இல்லாமல் இருந்தது.

கற்க கசடற

லாக்டவுனில் மும்பை வீட்டில் இருந்தாலும், உருப்படியாக ஒரு விஷயம் செய்து கொண்டிருக்கிறார் ராஷி கண்ணா. யெஸ். ஆன்லைனில் தமிழ் கற்கிறார். ஏற்கெனவே தெலுங்கிலும் இந்தியிலும் சரளமாகப் பேசும் பொண்ணு, இனி தமிழிலும் அருவியாகக் கொட்டவிருக்கிறார். ‘‘என் தமிழ் டீச்சர் லீலா, நிறைய ஹோம் ஒர்க் குடுக்கறாங்க. ஸ்கூல் ஃபீல் வருது...’’ என்கிறார்!

இண்டியன் ஃபுட்!

லண்டனில் கணவரோடு வசிக்கிறார் ராதிகா ஆப்தே. லாக்டவுன் நிலவுவதால் மும்பை திரும்ப முடியாத சூழலிலும் ஹேப்பி. ‘‘திடீர்னு நம்ம இண்டியன் ஃபுட் சாப்பிடணும்னு தோணுச்சு. என்னோட லக், லண்டன்ல ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட் திறந்திருந்தது. அங்குள்ள செஃப் என்னை வரவேற்று உபசரித்தார். லிட்டில் டேஸ்ட்டிதான். ஆனாலும் நம்ம ஊர் சாப்பாடாச்சே...
சந்தோஷமா சாப்பிட்டேன்!’’ பூரிக்கிறார் ராதிகா ஆப்தே.

செல்வராஜ் ஜெகதீசன்