தினம் 18 மணிநேரம் தூங்குபவன் கொலையாளிகளை கண்டுபிடிக்குறான்!அழவைக்கும் குடும்ப சென்டிமென்ட்டுடன் ஒரு நல்ல க்ரைம் - திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உடனே சன் நெகஸ்ட்டில் அப்லாஸை அள்ளிக் கொண்டிருக்கும் ‘ஜென்டில்மேன்’ கன்னடப் படத்தைப் பாருங்கள்.‘ஸ்லீப்பிங் ப்யூட்டி சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயினால் அவதிப்படுகிறான் பரத். இந்த நோய் கோடியில் ஒருவரைத்தான் தாக்கும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 18 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். அந்த தூக்கத்தின்போது யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. தூங்கும் நேரம் வந்துவிட்டால் எங்கிருந்தாலும் தூங்கிவிடுவார்கள்.அதாவது 6 மணி நேரம்தான் விழிப்பில் இருப்பார்கள். அதற்குள் எல்லா வேலையையும் பார்த்துவிட வேண்டும்.

பரத்திற்கு இரவு 10 மணி ஆகிவிட்டால் தூக்கம் வந்துவிடும். தூங்கியவன் அடுத்த நாள் மாலை 4 மணிக்குத்தான் எழுந்து கொள்வான். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு எலெக்ட்ரானிக் ஷோரூமில் வேலை பார்க்கிறான். அவனுக்கு அண்ணன், அண்ணி, அவர்களின் குழந்தை வரூ என அழகான குடும்பம் இருக்கிறது.

தனக்கிருக்கும் நோயை மறைத்து ஒரு பெண் மீது காதலில் விழுகிறான். உண்மை தெரிந்த பிறகு அந்தப் பெண் பரத்தை விட்டுச் சென்று விடுகிறாள்.
இந்நிலையில் அவனுக்கு அண்ணனின் குழந்தை வரூ மட்டுமே ஆறுதலாக இருக்கிறாள்.ஒருநாள் விபத்தில் அண்ணனும் அண்ணியும் இறந்துவிட, வரூவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பரத்திடம் வருகிறது. 18 மணி நேரம் தூங்கும் பரத்தால் வரூவை சரியாக கவனிக்க முடியவில்லை. தன் இயலாமையை எண்ணி வருந்துகிறான். பரத்தின் நிலையை அறிந்து காதலி திரும்ப வந்துவிடுகிறாள்.

இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஆம்; வரூவை யாரோ கடத்திவிடுகிறார்கள். வரூவைத் தேடிப்போகும் பரத்துக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. இளம் பெண்களைக் கடத்தி அவர்களிடமிருந்து சினை முட்டையை எடுத்து வியாபாரம் செய்யும் கும்பலால்தான் தன் அண்ணனும் அண்ணியும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிகிறான்.

இந்தக் கும்பலுக்கு பின்னணியாக யார் இருக்கிறார்கள்? அண்ணனையும் அண்ணியையும் ஏன் கொன்றார்கள்? வரூ எங்கே... என்ற கேள்விகளுக்கு விடை தேடிப்போகிறான் பரத். தூக்க நோய்க்கு மத்தியில் எப்படி அவன் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்தான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது திரைக்கதை.

சினைமுட்டை திருட்டைப் பற்றிப் பேசும் முதல் படம் இது. தூக்க நோயால் அவதிப்படும் இடங்களிலும் அண்ணன் மகளைக் கவனிக்க முடியாத இயலாமையையும் நடிப்பில் காட்டி நம்மை அழ வைக்கிறார் ப்ரஜ்வால் தேவராஜ்.வித்தியாசமான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு மிரட்டியிருக்கிறார் இயக்குநர் ஜதேஷ் குமார் ஹம்பி.