தகுதி என்னும் சாதி! தமிழக பொறியியல் கல்வியின் கதை‘தகுதி என்னும் சாதி’ என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ‘காஸ்ட் ஆஃப் மெரிட்’ (Caste or Merit) என்ற ஆய்வுப் புத்தகம்தான் அண்மையில் தமிழக கல்வியாளர்களிடையே ஹாட் டாபிக்.இதை எழுதியவர் லண்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இளம் பேராசிரியையாக இருக்கும் அஜந்தா சுப்ரமணியன்.

இவர் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்விச் செயல்பாட்டாளருமான வசந்தி தேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்புத்தகத்தின் அறிமுகத்தில், ‘‘இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான அடித்தளம் பிரித்தானியர் காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்டது.

அப்போது மண்ணின் மைந்தர்களாக இருந்த நம் பாரம்பரிய கை வினைஞர்களும் தொழில்நுணுக்கம் தெரிந்தவர்களுமான தாழ்த்தப்பட்ட / பிற்

படுத்தப்பட்ட சாதியினர் பலரும்  ஒதுக்கப்பட்டனர். காரணம், பொறியியல் தொழில்நுட்பத்தை ஆகாசத்தில் கோட்டை கட்டும் ஒரு கல்வித் துறையாக பிரித் தானியர் உருவாக்க விரும்பினர்.

இந்தப் படிப்புகளில் இடம்பிடித்தவர்களில் பெரும்பான்மையினர் உயர்சாதியினர். பிரித்தானியர் உருவாக்கிய அந்த அடித்தளம் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவிலும் மாறாமல் தொடர்வதுதான் அவலம்.

சென்னை ஐஐடியின் வரலாற்றை நுணுகிப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்...’’ என்று குறிப்பிடும் அஜந்தா, இந்தப் புத்தகத்துக்காக பிரித்தானிய ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்திருக்கிறார்; சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார்.
இதன் வழியாக தன் வாதத்துக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.

அன்று இந்தியாவில் இருந்த பிரித்தானியர்கள் நம் நாட்டில் பல தொழிற்சாலைகளை நிறுவியிருந்தனர். அவற்றுக்கு தொழில்நுட்பம் தெரிந்த உள்ளூர்வாசிகள் தேவைப்பட்டனர். இதற்காகத்தான் தொழில்நுட்பக் கல்வியைக் குறித்து பிரித்தானியர் யோசித்தனர். பொறியியல் கல்லூரிகளை நிறுவினர்.

என்றாலும் இதில் ஏற்கனவே தலைமுறை தலைமுறையாக பொறியியல் தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றிருந்த கைவினைக் கலைஞர்களைச் சேர்ப் பதில் பிரித்தானியர்களுக்கு உடன்பாடில்லை. ஏனெனில் களத்தில் இருந்த கைவினைக் கலைஞர்கள் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள்; தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்தவர்கள்.

எனவே, இப்பிரிவினரை ஒதுக்கிவிட்டு பிரித்தானியரின் கொள்கைகளுக்கு இசைந்தவர்களாக இருந்த உயர் சாதியினரை தாங்கள் நிறுவிய கல்லூரிகளில் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் மட்டுமே தங்கள் பேச்சைக் கேட்பார்கள்... தங்களுக்கு இசைவாக இருப்பார்கள் என பிரித்தானியர்கள் முடிவுசெய்தார்கள்...

- என தன் புத்தகத்தின் ஆரம்பப் பகுதிகளில் விவரிக்கும் அஜந்தா, பிரித்தானியருக்குப் பிறகு இந்த தொழில்நுட்பக் கல்வியில் உயர்சாதியையும் தாண்டிய பல பரிசோதனை முயற்சிகள் நடந்தன என்பதை பதிவு செய்யவும் தவறவில்லை.

அதேநேரம் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நாடு முழுவதும் ஐஐடி என்னும் பெயரில் பிரபல பொறியியல் கல்லூரிகளாக பிரித்தானியர் வடிவமைத்த கல்வி மாறியபோது, அதே பழைய நிலையே நாசூக்காகத் தொடர்ந்தது என்பதை சென்னை ஐஐடி-யின் வரலாற்றை ஆராய்ந்தபோது புரிந்துகொள்ளமுடிந்தது என்பதையும் ஆதாரத்தோடு முன்வைக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய நகரங்கள் சிலவற்றில் ஐஐடி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்து இன்று 23 ஐஐடிகள் இந்தியாவில் இருக்கும் நிலையை எட்டியிருக்கின்றன.சென்னையில் இருக்கும் ஐஐடி, அன்று பிரதமராக இருந்த நேருவால் 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சுதந்திரமான கல்வி என்பதே ஐஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதற்கான காரணம்.இந்தக் காரணம் - அதாவது சுதந்திரக் கல்வி - என்பது
ஐஐடியில் கடைப்பிடிக்கப்படு கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.தமிழகத்தில் சாதியத்துக்கு எதிராக திராவிடக் கட்சிகள் 1930 முதல் போராடி வருகின்றன. என்றாலும் 2008ம் ஆண்டு வரை ஒரேயொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரால் கூட ஐஐடியில் சேர முடியவில்லை.
இந்த அவலத்தையும் சுட்டிக்காட்டும் அஜந்தா, சென்னை ஐஐடியில் தொடர்ந்து உயர்சாதி யினரால் எப்படி இடம்பிடிக்க முடிந்தது என்பதற்கான காரணத்தையும் ஆதாரங்களுடன் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த ஆதாரங்களுக்காகவே ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்களைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை...’ என எல்லா முன்னாள் மாணவர்களும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால், இந்த ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்ற கருத்தே அவர்களைச் சாதியாக கட்டிப்போட்டிருக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

இந்த உண்மையை வெளிச்சமிட்டு தன் புத்தகத்தில் அஜந்தா காட்டியிருக்கிறார்.சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டு விதிகள் 1973ல் வந்திருக்கின்றன. என்றாலும் 2008 வரை பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரவேயில்லை.இதைச் சுட்டிக்காட்டும் அஜந்தா, 1968 வரை சென்னை ஐஐடியில் பயின்றவர்களில் 88 சதவிகிதத்தினர் உயர்சாதியினரான பிராமணர்களே என ஆதாரங்களுடன் பட்டியலிட்டிருக்கிறார். இந்த மாணவர்கள், ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்று குறிப்பிடுவதே மற்ற சாதிகளின் முன்னேற்றத்தை மறைமுகமாகத் தடுத்தது என்று குற்றம்சாட்டுகிறார்.

அத்தோடு, இதுமாதிரியான கல்வி நிறுவனங்களில் தகுதிதான் ஒரு மாணவனின் முன்னேற்றத்துக்கான வழிமுறையாக இருக்கவேண்டும் என்று கருதும் அந்த பழைய மாணவர்கள், ‘அந்தத் தகுதி’ என்பது வரலாற்று ரீதியாக ஒரு சலுகையால் வந்தது என்பதை மறந்து விடுகின்றனர் என்ற உண்மையை ஆணி அடித்தாற்போல சொல்கிறார்.

ஒரு சலுகையால் உயர்சாதி யினரை பிரித்தானியர்கள் உயர்த்தியதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சலுகை கொடுத்து பொறியியல் கல்விச்சாலைகளில் இடம்கொடுத்திருந்தால், அந்த சமூகத்தின் நிலையும் இன்று மாறியிருக்குமல்லவா என்ற கேள்வியை எழுப்புகிறார்.
இன்று ‘தகுதி’ என உயர்சாதியினர் குறிப்பிடுவது பிறப்பினால் உருவானதல்ல... சந்தர்ப்ப சூழ்நிலையால் உருவானது... என அஜந்தா தன் புத்தகத்தில் நிறுவுகிறார்.

மொத்தத்தில் தகுதி என்னும் மாயை... சாதி பார்ப்பதில்லை என்று பீற்றிக்கொள்ளும் நவீன நாகரீக மனோபாவம்... எல்லாம் உயர்சாதியை எப்படி ஒரு சாதியாகக் கட்டமைப்பதற்கு உதவியதாக இருந்தது என்பதை அந்த உயர்சாதி மாணவர்களின் வாயிலிருந்தே வரவழைத்திருக்கிறார் அஜந்தா.

இதனால் நாம் தவறவிட்டது அல்லது இழந்தது வேலைக்கும் கல்விக்கும் தொடர்புடைய ஒரு கல்வியும், நாட்டையும், மாநிலத்தையும் கட்டி எழுப்புவதற்கான அஸ்திவாரமும்தான்... என வருத்தப்படுகிறார்.இந்தப் புத்தகத்துக்குப் பிறகாவது சென்னை ஐஐடி-க்கு இன்று  இருக்கும்  ‘ஐயர்  ஐயங்கார் டெக்னாலஜி’ என்னும் கெட்ட பெயர் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!            

டி.ரஞ்சித்