அணையா அடுப்பு - 9



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஒளியும் ஒலியும்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சென்னை, பெருநகரமாக வளர்ந்துகொண்டிருந்தது.தன்னுடைய கிராமிய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது.மாட்டு வண்டிகள் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில் மோட்டார் வண்டிகள் ஓடின.கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்துக்காக சென்னைக்கு வரத் தொடங்கினர்.சாலைகளில் நெரிசல்.

கட்டடங்கள் பெருகின.நகரம் அமைதி இழந்தது.ஆரவாரமான நகர வாழ்க்கைக்கு மக்கள் பழகிக் கொண்டனர்.ஆடம்பரத்துக்கும் குறைவில்லை.எப்போதும் இரைச்சல் கேட்டுக் கொண்டேதான் இருந்தது.அமைதியான வாழ்வை விரும்பிய இராமலிங்கத்துக்கு இந்த இரைச்சல் தொல்லையாக இருந்தது.அதுநாள் வரை நகர் உலாவில் பெரும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தவர் வீட்டுக்குள் முடங்கினார்.அல்லது -நகருக்கு வெளியே இருந்த தோட்டங்களுக்குச் சென்று, இயற்கையில் அமைதியை நாடினார்.

ஒருகட்டத்தில் நகர வாழ்க்கை அவருக்கு வேப்பங்காயாகக் கசந்தது.நகருக்குள் வருவதையே தவிர்க்கத் தொடங்கினார்.இரவில் நகரத்தின் ஆரவாரங்கள் அடங்கிய பின்னரே வீட்டுக்கு வருவார்.விடிவதற்கு முன்பாகவே கிளம்பி விடுவார்.கிராமங்களில் ஓடைகளுக்கு அருகில் அமர்ந்து தியானிப்பார்.நேரம் போவது தெரியாமல் தியானத்தில் மூழ்கி, சில சமயங்களில் இரவுகளிலும் கூட அங்கேயே இருப்பதுண்டு.இதற்கிடையே அவரது குடும்பமும் பெருகலாயிற்று.

வீட்டிலும் சப்தம்.ஞான வாழ்வுக்கு ஒளியும் ஒலியும் அவசியம். இவை இரண்டும் இணையும் புள்ளியிலேயே ஜோதி தெரியும். ஒளி பிறக்க ஒலி.
ஆனால் -நகர வாழ்வின் கட்டுப்படுத்தப்பட முடியாத பேரோசையை இராமலிங்கத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிறுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே
நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திருந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தநீ அறிந்தது தானே
- என நகர்ப்புற அலைக்கழிப்புகளால் தன் மனம் அல்லலுறறதைக் குறித்து எழுதியிருக்கிறார்.

இப்படி அல்லலுறும் மனம் என்ன முடிவெடுக்குமோ அதையே எடுத்தார். சென்னையை விட்டு அகல்வது. இது அவரது வாழ்வின் கடினமான முடிவு.அப்போது அவருக்கு வயது முப்பந்தைந்து.எனினும் -தோற்றம் இருபது வயது இளைஞனுக்கு உரிய வகையிலேயே பொலிவாக இருந்தது.
பல்லாண்டு காலமாக சென்னை அவருக்கு நன்கு பழகியிருந்தது.அனுதினமும் திருவொற்றி யூருக்குச் சென்று வந்துகொண்டிருந்தார்.

விரும்பியபோதெல்லாம் சென்னையைச் சுற்றியிருந்த திருத்தலங்களுக்கு பயணித்தார்.அதையெல்லாம் இழக்க நேரிடும்.பரவாயில்லை. ஒளி பிறக்கத்தான் ஒலி. ஒளியை மங்க வைக்கும் அளவுக்கு ஒலி வேண்டாம்.

முடிவெடுத்து விட்டார்.இராமலிங்கத்தின் ஞானவாழ்வு நோக்கிய பயணமாகவும் இந்த நகர் துறத்தல் சம்பவம் அமைந்தது.தன் பிறப்பிடமான மருதூர் நோக்கி நகர்ந்தார்.அவருடன் நெருக்கமான அன்பர்களும், நண்பர்களும் இருந்தனர்.
மாட்டு வண்டிப் பயணம்தான்.

வழிநெடுக இருக்கும் ஆலயங்களைத் தரிசித்துக்கொண்டே சென்றார்.பாண்டிச்சேரியில் விசுவநாதய்யர் என்பவர் வீட்டில் சில காலம் தங்கினார்.

பிரமாதமான உபசரிப்பு.இராமலிங்கம், பாண்டியிலேயே தங்கிவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.இந்த சொகுசுக்கு பழகிவிடக் கூடாது என்கிற எண்ணம் வந்ததுமே, மீண்டும் பயணத்தைத் துவக்கினார்.சிதம்பரம்.சீர்காழி.வைத்தீஸ்வரன் கோயில்.கடைசியாக மருதூர் அருகில் கருங்குழிக்கு வந்தடைந்தார்.அவருடைய பயணம் மேலும் தொடர்ந்திருக்கும்.

ஆனால் -கருங்குழியின் மணியக்காரராக இருந்த வேங்கட ரெட்டியாரின் அன்பு, அங்கு அவரை நிறுத்தியது.அங்கே தங்க சம்மதித்தார்.அடுத்த பத்தாண்டுகள் கருங்குழியில்தான் வசித்தார்.கருங்குழி -அவர் எதிர்பார்த்த அமைதியை அளித்தது. நினைத்தபோதெல்லாம் சிதம்பரம் சென்று வர முடிந்தது.அறியாப் பருவத்திலிருந்தே சிதம்பரம் அவருக்குப் பிடித்தமான தலங்களில் ஒன்றாகிப் போனது.

சென்னையில் இருந்தபோது எப்படி திருவொற்றியூருக்குச் சென்று வருவாரோ, அதுபோல கருங்குழியிலிருந்து சிதம்பரத்துக்குச் சென்று வரத் தொடங்கினார்.ரெட்டியாரின் இல்லம், இராமலிங்கத்துக்கு வசதியாக இருந்தது.ரெட்டியாரின் மனைவி முத்தியாலு, இராமலிங்கத்துக்கு சேவை செய்வதைத் தன் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

அங்கே, அவருக்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் அறை அமைத்துத் தரப்பட்டது.அவர் அமைதியாக தியானிக்கவும், வாசிக்கவும் வகையாக அமைந்தது.
ரெட்டியாரின் வீட்டுக்கு அருகே சிறிய விநாயகர் கோயில் ஒன்று இருந்தது.இராமலிங்கம் அங்கே வந்ததால் அவர் பாடல்பெற்ற விநாயகர் ஆனார்.

‘நற்கருங்குழி என்னும் ஊர் மேவி அன்பருக்கு அருளும் கணநாதனே!’ என்று அவர் பாடியது இந்த விநாயகரைத்தான்.அதுநாள் வரை முருகரைப் பாடிக் கொண்டிருந்தவர், முருகரின் அண்ணன் விநாயகரை முதன்முதலாகப் பாடியது இங்குதான்.

இனி, இராமலிங்கத்தை வள்ளலார் என்றே குறிப்பிடுவோம். சொந்த பந்தங்கள், சுகதுக்கங்களைத் துறந்து ஞானவாழ்வுக்கு முழுமையாக வந்துவிட்டார் அல்லவா?துறவு வாழ்வுக்கு வந்துவிட்டார் என்று சொன்னால், அவருக்கு இல்வாழ்க்கை இருந்ததா என்ற சந்தேகம் எழும்.இருந்தது.எல்லோரையும் போலவே இராமலிங்கத்துக்கும் திருமணம் நடந்தது.என்ன ஆனது அவரது மணவாழ்க்கை..?

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்