16 வயது ஆசிரியர்!ஈக்வடாரில் இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை. ஆன்லைன் வழியாகத்தான் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அங்கே 37 சதவீத வீடுகளில்தான் இணைய வசதி உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் 16 சதவீதம்தான். அதனால் பத்தில் ஆறு குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளைத் தொடரமுடியவில்லை.

இந்நிலையில் டெனிஷா டோலா என்ற 16 வயது மாணவி முன்னெடுத்திருக்கும் செயல் ஈக்வடாரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
காயாகில் என்ற நகரத்துக்கு வடக்கில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாற்பதுக்கும் மேலான குழந்தைகளுக்கு ஆசிரியையாக மாறிவிட்டார் டெனிஷா.

அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் இணையதளத்திற்குச் சென்று தினமும் என்னென்ன பாடங்கள் நடத்துகிறார்கள், வீட்டுப்பாடம் என்ன கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு ஒரு மரத்துக்குக் கீழே பாடம் நடத்துகிறார் டெனிஷா. ஈக்வடாரின் ஹீரோவாகிவிட்ட அவரிடம் பாடம் படிக்கும் நாற்பது குழந்தைகளின் வீட்டிலும் இணைய வசதியில்லை!

த.சக்திவேல்