லெனி டீச்சர்



லெனி உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், உள்ளே ஓர் அச்சம் லேசான அலையாக ஓடிக்கொண்டிருந்தது.அம்மா கையில் இனிப்புடன் வந்தாள்.“அசோகா அல்வா செஞ்சேன் லெனி... உன் கனவு வேலைக்குப் போகப் போறே... சின்ன வயசுல இருந்து டீச்சர் டீச்சர்னு தெனம் சொல்லுவியே... அதே வேலை கிடைச்சிருக்கு... அதுவும் உயர்நிலைப் பள்ளிக்கூடம்... அவ்வளவு சந்தோஷமா இருக்குடா... வாயைத் திற...”
“தாங்க் யூ அம்மா...” என்று புன்னகைத்தாள்.

“பயமா இருக்கா? பயமே ஜெயம்... பாரு நீ கலக்கிட்டு வருவே கண்ணு... உன் சப்ஜெக்ட்ல நீ ராணி... இல்லையா?”
“அது இல்லேம்மா... பயம்னு சொல்ல முடியாது... ஆனா, என்ன சொல்றதுன்னும் தெரியல... ஆண்கள் பள்ளிக்கூடம் அம்மா... அதான் கொஞ்சம் கவலை...”“நான் கூட யோசிச்சேன் லெனி... ஆனா, உன்னைக் குழப்ப வேண்டாம்னுதான் எதுவும் சொல்லலே. ரொம்ப தொந்தரவா இருந்தா விட்டுட்டு வேறே பார்க்கலாம்...”கண்ணாடியைப் பார்த்தாள்.

இள மஞ்சள் வர்ண பருத்திச் சேலை. அதன் இணையாக மிக அழகான மெல்லிய கோடுகளைக் கரையாகக் கொண்ட ரவிக்கை. சின்னஞ்சிறு காதணி.  மையிடாத கண்களின் இயற்கை கருமை. அடர்ந்த இமைகளின், இளம் இதழ்களின், நெற்றிப் பொட்டின் ரம்மியமான அழகு. தோழிகள் சொல்வது போல, ஓவியப் பெண்ணழகு. வடிவான தேக அமைப்பும், இனிமையான முறுவலும், மென்மையான வார்த்தைகளுமாக தன்னை செதுக்கிச் செதுக்கி ஓர் உயர்ந்த சிலையாக நிற்கிற தன்னம்பிக்கை. காலத்தைத் தவிர எதுவும் சொந்தமில்லாத வாழ்க்கையில், முடிந்தவரை ஆசிரியப்பணி செய்து அர்த்தம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற உள்மனக் கனவு.

எல்லாம் கையில் வந்துவிட்டது. இதோ முதல் நாள். ஆனால், ஏதோ ஒரு முள் குத்துகிறது.பாகீரதி மேடம் அவளை அன்புடன் வரவேற்றார்.
“உன் அப்ளிகேஷன்தான் பர்ஃபெக்ட் ஆக இருந்தது லெனி... உன் பெயரும்... எனக்கும் லெனின், ரஷ்ய இலக்கியம், டால்ஸ்டாய் ரொம்பப் பிடிக்கும். உன் ஆசைக்கனவு இந்த வேலை என்கிறாய்... டீச்சர் டிரையினிங் வேறு, யதார்த்தம் வேறு... தெரியும்தானே?”“யெஸ் மேடம்... அதான் கொஞ்சம் படபடப்பாக இருக்கு...”“கவலை வேண்டாம்... நம் மாணவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்...

உணர்ந்திருக்கிறேன்... தைரியமாக நீ வகுப்புக்குச் செல்லலாம். பிளஸ் ஒன், பி பிரிவு...”அவள் திடுக்கிட்டாள். பெரிய பையன்களாக இருப்பார்களே! பார்வைகள் எப்படி இருக்குமோ? சமாளிக்கமுடியுமா? ஓ... அம்மா... என்ன இது எடுத்த எடுப்பில் இவ்வளவு பெரிய வகுப்புக்கு அனுப்புகிறார்கள்?
“ஆல் தி பெஸ்ட டியர்... கோகிலா வா... லெனி டீச்சரை அழைச்சுகிட்டு போ...”“தாங்க் யூ மேடம்...” என்று அவள் கிளம்பினாள். உள்ளே காற்று பலமாக அடிப்பதைப் போலிருந்தது.

வகுப்பினுள் நுழைந்தாள்.அதுவரை திரையரங்கம் போல இரைச்சலும் துள்ளலுமாக இருந்த வகுப்பறை சட்டென அமைதியானது.
அத்தனை முகங்களும் அவளையே பார்த்தன. புன்னகையையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டாள்.“டியர் ஸ்டூடண்ட்ஸ்... நான் லெனி... இனிமேல் லெனி டீச்சர்... கணக்குப் பாடம் எடுக்கப் போகிறேன். உங்கள் பெயர்களை தெரிந்து கொள்கிறேன்... நாம் சுலபமாக கணக்குப் பரீட்சைகளை எதிர்கொள்ளலாம்... சரியா?”ஒரு பத்து நொடிகள் வகுப்பு அமைதியாக இருந்தது.

கடைசி இருக்கையிலிருந்து ஒரு குரல் மட்டும் கேட்டது.“உங்க சேலை எங்க வாங்குனது டீச்சர்? ஹன்சிகா மாதிரி கட்டியிருக்கீங்க... சினிமால நடிச்சிருக்கீங்களா டீச்சர்?”வகுப்பு சிரித்தது.அடுத்து இன்னொரு குரல்.“லெனியா? அப்படின்னா? வெளிநாடா? எந்த கன்ட்ரி? ஜெர்மனியா? கடல்குளியல் பண்னியிருக்கீங்களா டீச்சர்?”மறுபடி சிரித்தது வகுப்பு.

ஒருவன் அதட்டினான். ஆறடி இருந்தான்.“டேய் பாவம்டா... மொத நாளே ஓவரா பண்ணாதீங்கடா... டயம் இருக்கில்லே? லெனி டீச்சர் கணக்குப் பாடம் இங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம் டீச்சர்... பிரைவேட் கோச்சிங் வரலாமா டீச்சர்?”ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள். அவள் விக்கித்துப் போய் நின்றாள்.   பாகீரதி மேடம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
‘‘சொல் லெனி... என்ன பிரச்னை?”

“தயவுசெய்து சிறு வகுப்புக்கு மாற்றுங்கள் டீச்சர்... இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள்...” என்றாள். குரல் வழு
வழுத்து விட்டது.“சரி... பார்க்கிறேன்... ஆனால், ஏன்?”“அவர்களின் முகம், பார்வை, பேச்சு எதுவுமே சரியில்லை மேடம். கொஞ்சம் கூட கண்ணியமில்லை. அந்த முப்பது நிமிடங்களும் நெருப்புமேல் நின்றிருந்தேன் மேடம். வேண்டாம் மேடம்...” என்பதற்குள் கண்கள் நிறைந்தன.
“அடடா லெனி லிட்டில் கேர்ள்...” என்று புன்னகைத்தார். அவள் தோளைத் தட்டினார்.

“லெனி... நீ புத்திசாலி. மனதாலும் சிந்திக்கிற புதிய தலைமுறை யுவதி. அவர்கள் யார்? புத்தம் புது வாலிபர்கள். இன்னும் பால்
மணம் மாறாத அதே சமயத்தில் எதிலும் புதிர்களைத் தேடுகிற வளர்ந்த குழந்தைகள். அம்மா, அக்கா, தங்கை, பாட்டி என்று வீடுகளுக்குள் பெண்களைப் பார்த்தவர்கள் இப்போதுதான் நெருக்கமாக ஓர் அடுத்த பெண்ணைப் பார்க்கிறார்கள்.

பெண்ணின் அழகு மட்டுமல்ல, அவளின் அறிவு, தைரியம், நம்பிக்கை எல்லாமே அவர்களைத் திகைக்க வைக்கின்றன... வியந்து பார்க்க வைக்கின்றன. அவ்வளவு கடினமான கணக்கு, பிசிக்ஸ் என்று படித்துவிட்டு வந்து பாடம் எடுக்கிறாளே என்கிற பிரமிப்பு… அழகாக, இளமையாக, நளினமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியம்... பெண்மை இப்படித்தான் இருக்குமோ என்கிற முதல் எண்ணம்...

கிணற்று நீர் போல பெண்ணும் ஒரு குளிர்ச்சி, சூரியனைப் போல அவளும் ஒரு சக்தி, காற்றைப் போல அவளும் ஒரு வலிமை என்று அவன் யோசிக்கத் தொடங்கும் பருவம் இது லெனி... அவனுக்கு சரியான வகையில் பெண்மையை அறிமுகப்படுத்தும் மாபெரும் பணி நம்மைப் போல ஆசியர்களுக்குத்தான் இருக்கிறது...

இயல்பாக அவன் உணர்வு களை வெளிப்படுத்தி முடிக்கட்டும்... நாம் பொறுமையாக இருந்து, பிறகு நம் வாய்ப்பு வரும்போது எடுத்துச் சொல்லலாம். எந்த மனிதனுக்கும் பொறுப்புதான் இருக்கிறதே தவிர, அதிகாரம் இல்லை என்று புரிய வைக்கலாம்.

ஒரு மனிதனால் புறாவைப் போல தீங்கற்றவனாக இருக்க முடியும். அழகான தடங்களை விட்டுச் செல்ல முடியும். ஆனால், பெண்ணின் துணையின்றி எதுவும் சாத்தியமல்ல என்று உணர வைக்கலாம்...’’அவள் முகம் நிமிர்ந்தது.

“எத்தனை ஆசிட் வீச்சுகள்? எவ்வளவு தாக்குதல்கள்? எவ்வளவு மிரட்டல்கள்? எல்லாமே அடிப்படையாக பெண்ணை வெறும் உடலாகப் பார்த்த கயமை மனம்தான்... நாற்றாங்கால் பருவமாக அந்த இளம் மனங்கள் நம் கையில் இருக்கின்றன லெனி...

பெண் வெறும் மலர்ச்செடி அல்ல. ஆலமரம் போல வலிமையானவள். உயிர்களைக் காப்பவள் என்பதை இந்த வளர்சிறுவர்களிடம் புரிய வைக்கலாம் லெனி... என்ன சொல்கிறாய்?”“நிச்சயமாக மேடம்... அன்பின் ஊற்றும் பெண்ணிடம்தான் இருக்கிறது என்றும் புரிய வைக்கலாம்...” என்று சொன்னபோது அவள் முகம் முல்லைப் பூவாக மலர்ந்திருந்தது!

கியராவின் ஏக்கம்!

ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கிய ‘லட்சுமி பாம்’ (‘காஞ்சனா’ ரீமேக்) ஓடிடியில் ரிலீஸ் ஆவதில், மகிழ்கிறார் அதன் நாயகியான கியரா
அத்வானி. ‘‘இந்த லாக்டவுன்ல எல்லாரும் உங்க வீட்ல இருந்தே ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்த்து ரசிக்க முடியும்...’’ என சிலிர்க்கும் கியராவின் நட்பு வட்டம் கொஞ்சம் பெரிது.

‘‘எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகம். எல்லாரையும் பார்க்க முடியாமப் போனதுல வருத்தமா இருக்கு. லாக் டவுன் முடிஞ்சாதான் அவங்களோட ஊர் சுத்த முடியும். அந்த நாள் எந்த நாளோ..?’’ என்கிறார் ஏக்கப் பெருமூச்சுடன்.

கற்றது ரகசியம்!

கிளாமர் போட்டோ ஷூட்டில் மின்னுகிறார் இந்துஜா. ‘மேயாத மான்’ பொண்ணு. ‘‘கிளாமர், ஹோம்லி எல்லாமே பார்க்கறவங்க பார்வையில்தான் இருக்கு. நடிக்க வந்துட்டோம்னா, நடிப்பு தொடர்பான எல்லா டேலன்டையும் காட்டணும். அதனாலதான் இப்படி ஒரு போட்டோ ஷூட் பண்ணினேன்...’’ என குளுகுளுப்பவர், இன்னொன்றையும் சொன்னார்... ‘‘இந்த கொரோனா ஊரடங்கு எனக்கு பல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கு...’’ என்கிறார் கண்கள் படபடக்க!ஆனால், கற்றது என்ன என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார்!

வி.உஷா