பூஜை போடப்பட்ட மலையாளப் படத்துக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏன்..?



ஹீரோ பிரித்விராஜ்... வில்லன் கேரள இந்துத்துவவாதிகள்!

‘சால்ட் அண்ட் பெப்பர்’, ‘26 ஃபீமேல் கோட்டயம்’, ‘வைரஸ்’ போன்ற திரைப்படங்கள் மூலம் மலையாள மக்களின் சமகாலப் பிரச்னையை பேசியவர் கேரளாவின் இளம் இயக்குநர் ஆஷிக் அபு.இவர் அண்மையில் மலையாள இளம் சூப்பர் ஸ்டாரான பிரித்விராஜை வைத்து பூஜை போட்ட மலையாள திரைப்படத்துக்கு, இந்துத்துவ சக்திகளிடம் இருந்து ஏகப்பட்ட எதிர்ப்புகள். இதனைத் தொடர்ந்து அப்படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுத ஒப்புக்கொண்டவர் விலகியிருக்கிறார்.

காரணம், படத்தின் கதை! இந்தப் படத்தின் பெயர் ‘வாரியம் குன்னன்’. கேரள வரலாற்றில் மாப்ளா கலகம் என்று சொல்லப்படும் நிகழ்வின் உச்சக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரமே வாரியம் குன்னன்.கேரளாவின் தென் மலபாரை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தை மாப்ளாக்கள் என்கிறோம். சுமார் 100 ஆண்டுகள் வரை விட்டு விட்டு நடந்த மாப்ளா கலகத்தின் இறுதி எழுச்சி 1921ல் நடந்தது. அந்த ஆண்டு நடந்த கலகத்தின் பல நாயகர்களில் ஒருவரே இந்த வாரியம் குன்னத்து குஞ்சா அகமத் ஹாஜி.

எழுபதுகளில் கேரள அரசாங்கமே இந்த கலகத்தை பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போர் என்று அறிவித்து, போராட்டக்காரர்களுக்கு விடுதலை வீரர்கள் சான்றிதழைக் கொடுத்தது.கேரளாவின் அன்றைய பிரபல இயக்குநரான ஐ.வி.சசி, மம்முட்டியை ஹீரோவாக வைத்து இந்த நிகழ்வை ‘1921’ என்ற பெயரில் படமும் இயக்கினார். அன்று அந்தப் படத்துக்கு எதிராக எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. இன்றோ அதே கதாபாத்திரத்தை வைத்து எடுக்கும் படத்துக்கு கூச்சல் குழப்பம்!

‘மாப்ளாக்கள் விடுதலை வீரர்கள் அல்ல… இந்து விரோதிகள். கோயில்களை உடைத்தவர்கள், மக்களைச் சூறையாடியவர்கள், கட்டாய மதமாற்றச் செயல்களில் இறங்கியவர்கள், இந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள்’ என்பவை படத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் வாதம்.

ஆனால், மாப்ளாக்களின் வரலாற்றை ஒற்றைக் கண்கொண்டு பார்க்காமல் அதன் பல்வேறு சிடுக்குகளையும் ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள், இந்தக் கலகத்தை மதவெறியாகவோ அல்லது விடுதலைப் போராட்ட இயக்கமாகவோ சுருக்க விரும்பவில்லை.

மாப்ளா கலகம் என்பது பல்வேறு சம்பவங்களின் கோர்வை. அது ஒரு வானவில். அதைத் தனித்தனியாகப் பார்த்தால் இதுமாதிரியான குழப்பங்களே ஏற்படும். எனவே, சம்பவங்களுக்கு இடையேயான புள்ளிகளைச் சேர்த்தால் மட்டுமே தெளிவு பிறக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அதென்ன மாப்ளா கலகம்? அவர்களின் வரலாறுதான் என்ன..?

மாப்ளாக்களின் வரலாறு கி.பி.4ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது. இந்தக் காலத்தில்தான் அரேபிய முஸ்லீம்கள், வணிகம் காரணமாக அரேபியக் கடல் வழியாக மலபார் வந்து இறங்குகின்றனர். இது 7ம் நூற்றாண்டு வரை நிகழ்கிறது.இப்படி வணிகம் செய்ய வந்தவர்களில் பலர் உள்ளூர் பெண்களை மணந்து அரேபியாவிலும் மலபாரிலும் வாழ்ந்திருக்கின்றனர். வணிகத்தை தொடர்ந்திருக்கின்றனர். 16ம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்திருக்கிறது.

பிறகு போர்ச்சுகீசியர்கள் தலையெடுத்து அரேபியர்களை ஒடுக்கி வணிகத்தில் ஏகபோகம் பெற்றபோது மலபாரின் ஐந்தில் ஒரு பகுதி நிலம் கேரளாவின் உயர்சாதியான நம்பூதிரிகள் வசம் இருந்தது. அதுவும் 80 நபர்களுக்கு உரிமையாக. மற்ற நான்கு பகுதி நிலங்கள் இடைச்சாதிகளான நாயர்களிடமும் குறைந்தளவு பிற சாதிகளின் வசமும் இருந்திருக்கிறது.

இந்த நிலங்களில் குத்தகைக்கு வேலை செய்தவர்கள் - அடிமை முறையில் - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் வணிகத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு அரேபிய கலப்பு முஸ்லீம்கள் தள்ளப்பட்டதும் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களைப் போல் விவசாய கூலி வேலைக்கு வருகின்றனர். போதாதா? இவர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கின்றன.

ஆனால், மைசூர் மகாராஜாக்களான ஹைதர் அலி மற்றும் அவர் மகன் திப்பு சுல்தான் ஆட்சியில் ஓரளவு இம்மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தனர்.
இந்நிலையில் திப்பு சுல்தான் இறந்து ஆங்கிலேயர்கள் வசம் இப்பகுதி சென்றதும் மீண்டும் பழைய கெடுபிடிகள், ஒடுக்கு
முறைகள் ஆரம்பமாகின்றன.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறார்கள்.
இந்த மதமாற்றத்துக்குப் பிறகு மலபார் கலப்பு முஸ்லீம்கள் (அரேபிய + கேரள) எல்லோரும் சேர்ந்து ‘மாப்ளாக்கள்’ என்ற பொதுப்பெயரால் வலம் வரத் தொடங்கினர்.இதை நிலத்தின் உரிமையாளர்கள் விரும்பவில்லை. ஏனெனில் மதம் மாறிய இஸ்லாமியர்களுடன் சேர்த்து மாப்ளாக்கள் புது தெம்புடன் இருந்தனர்.

எனவே நம்பூதிரிகளும், நாயர்களும் கூட்டணி அமைத்து கூலித் தொழிலாளர்களை மேலும் கசக்கிப் பிழியத் தொடங்கினர்.நிலத்தின் வருவாயிலிருந்து வந்த வரி தங்களுக்குத் தேவைப்பட்டதால் அன்றைய ஆங்கிலேய அரசு, நில உரிமையாளர்களின் அனைத்து ஒடுக்குமுறைக்கும் துணை நின்றது.

இதை எதிர்த்து மாப்ளாக்கள் குரல் கொடுத்தார்கள். இதுவே மாப்ளா கலகம் என வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. 1836 முதல் 1919 வரை வெளிப்பட்ட கலகங்கள் எல்லாமே நில உரிமை தொடர்பானதுதான். இதன் உச்சக்கட்டம் 1921ம் ஆண்டு வாரியம் குன்னத்துக்கு நடந்த சம்பவங்கள்.

‘‘இதை கலகம், கிளர்ச்சி, புரட்சி, விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் ஒற்றை அடையாளத்தில் அடைப்பது சரியல்ல. உதாரணமாக, இவர்கள் சொல்லும் 1836 முதல் 1919 வரை நடந்த சம்பவங்கள் வெறும் 29தான்.

இதில் நேரிடையாக பங்கெடுத்த மாப்ளா முஸ்லீம்களும் வெறும் 352 பேர்தான்.ஆனால், இதில் கொல்லப்பட்டவர்கள் அதிகம். உதாரணமாக, நமக்குத் தெரிந்த 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வெறும் 379 பேர்தான் இறந்தார்கள். அதேபோல 1922ல் சவுரி சவுராவில் கொலை செய்யப்பட்டவர்களும் 23 பேர்தான்.

ஆனால், மாப்ளா பிரச்னையில் அரசு அறிக்கையின்படி சுமார் 2337 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1652 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 45,404 பேர் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.உண்மையில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 50 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், 20ஆயிரம் பேர் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், 10 ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
வெறும் 29 சம்பவங்கள், 352 பேர் நேரடியான பங்கெடுப்பு என்ற நிலையில் இத்தனை படுகொலைகள், காயங்கள் சாத்தியமா என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பதிலாக சிறிய சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்த அந்த மொத்த சமூகத்தையும் மிரட்டுவதற்கு உயர்சாதியினரையும், இடைச் சாதிகளையும் வைத்து பிரிட்டிஷ் அரசு விளையாடிய விளையாட்டே இந்த கலகங்கள் என்று சொல்லலாம்.

எனவே, சம்பவங்கள் சிறிது என்றாலும் அதன்  சாட்சிகளாக இருந்த அப்பாவி மாப்ளாக்களை எதிர்காலத்தில் மொத்தமாக முடக்கச் செய்வதற்கான ஒரு தந்திரமாகத்தான் இந்தக் கொலைகளையும் தாக்குல்களையும் பார்க்கவேண்டும்...’’ என்கிறார் ‘சபால்டன் ஸ்டடீஸ்’ புத்தகத் தொகுப்பில் இந்த கலகங்கள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்ட எம்.டி.அன்சாரி என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்.
சரி... இப்போது ‘வாரியம் குன்னத்' மலையாளப் படத்துக்கு எதிராக வலதுசாரிகள் முஷ்டியை உயர்த்த என்ன காரணம்..? யார் இந்த வாரியம் குன்னத்..?

துருக்கியின் ஒட்டமான் அரசு, உலக இஸ்லாமியர்களின் ஆன்மீக மையமாக இருந்தது. முதல் உலகப் போரில் துருக்கி தோல்வி அடைந்ததும் பிரிட்டானிய அரசு அந்நாட்டின் மீது பல தடைகளை விதித்தது.பழிவாங்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், துருக்கிக்கு ஆதரவாகவும் பல இஸ்லாமிய நாடுகள் களத்தில் குதித்தன. அந்த வகையில் இந்தியாவிலும் அலி சகோதரர்கள் என்ற இருவர் கிலாஃபத் இயக்கம் என்னும் பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தனர்.

மகாத்மா காந்தியும் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 1920ல் கேரளாவின் கோழிக்கோட்டில் காங்கிரஸ் சார்பில் கிலாஃபத் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் ஒன்று நடைபெற்றது. மகாத்மா காந்தி இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாப்ளாக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முக்கியமான இருவர் பங்கேற்றனர். ஒருவர் அலியார் முஸ்லியார்.

இன்னொருவர் குன்னத்! இந்த குன்னத்தை ஹீரோவாக வைத்துதான் இப்போது இயக்குநர் ஆஷிக் அபு, படம் இயக்க முற்பட்டிருக்கிறார்!
கிலாஃபத் இயக்கத்தில் வாரியம் குன்னத்தைவிடஅலியார் முஸ்லியார்தான் முன்னணியில் இருந்தார். பிரிட்டன் அரசு அலியாரை கைது செய்தது. அத்தோடு தேடுதல் வேட்டை என்னும் பெயரில் அலியாரின் ஆஸ்தான மசூதியையும் சல்லடை போட்டது.

இது, மசூதி சூறையாடப்படுவதாக மாப்ளாக்களிடம் பரவவே, அவர்கள் பள்ளிவாசலை நோக்கி படையெடுத்தனர். உடனே பிரிட்டன் அரசு அப்பாவி மாப்ளாக்கள் 7 பேரை அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்தியது. பிறகு கொலைகள். இரத்தம் ஆறாக ஓடியது.இதனைத் தொடர்ந்து வாரியம் குன்னத், முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

வாரியம் குன்னத்தையும் தாண்டி சில அசம்பாவிதங்களை மாப்ளாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேற்றினார்கள். ‘மாப்ளாக்கள் அப்பாவிகளைச் சூறையாடினால் என் இருகைகளை துண்டித்துக் கொள்வேன்’ என வாரியம் குன்னத் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.மாப்ளாக்களின் எழுச்சியால் பிரிட்டன் பின்வாங்கி அப்பிரதேசத்தை விட்டு அகன்றது. இதைப் பயன்படுத்தி வாரியம் குன்னத், மலபாரின் இரண்டு தாலுகாக்களை ஆட்சி செய்தார்.

வெறும் 6 மாதங்களே இவரது ஆட்சி நிலைபெற்றதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது ஜனநாயக ஆட்சியாக இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்கள்.குன்னத்துக்கு அதிகரிக்கும் ஆதரவைப் பொறுக்க முடியாத சிலர், அவரை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தனர். இதனையடுத்து 1922 ஜனவரியில் பிரிட்டன் அரசால் குன்னத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

‘‘சுமார் 100 ஆண்டுகளாக நடைபெற்ற 29 தனித்தனியான சம்பவங்களில் 82 இந்துக்கள்தான் கொல்லப்பட்டனர். அதிலும் 63 பேர் உயர்சாதி நம்பூதிரிகள். இவை அனைத்தும் நிலக்குத்தகை தொடர்பாக அரங்கேறியவையே.

ஆனால், பிரித்தானிய அரசோ அன்றே இவையெல்லாம் இரு மதங்களுக்கு இடையிலான மத மோதலாக பிரசாரம் செய்தது. இதற்கு மதவெறி என்று சாயம் பூசுவது பிரித்தானியருக்கு எளிதாக இருந்தது. இதைத்தான் இன்றைய வலதுசாரி களும் எதிரொலிக்கிறார்கள்...’’ என்கிறார் வரலாற்று ஆய்வாளரான அன்சாரி.ஓகே. ‘வாரியம் குன்னத்’ படத்தின் கதி என்ன..? காலம்தான் முடிவு செய்ய வேண்டும்!

ஒற்றைப் புள்ளியல்ல... மூன்று புள்ளிகள்!  

‘‘வரலாறு என்பது மிகவும் சிக்கலானது. அதை மேம்போக்காக பார்த்தால் குழப்பங்கள்தான் வரும். உதாரணம் திப்பு சுல்தான். அவர் கட்டாயமாக மக்களை மதம் மாற்றினார் என்று தொடர்ச்சியாக சொல்கிறார்கள். திப்பு சுல்தான் சிருங்கேரி மடத்துக்கு தானம் செய்ததையோ அல்லது ஐயங்கார்களில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டபோது மத்தியஸ்தராக இருந்து நியாயம் சொன்னதையோ வசதியாக மறந்து விடுகிறார்கள்.

அதேபோல் கஜினி முகமதுவைக் கூட சோமநாத கோயிலை கொள்ளையிட்டார் என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள். கஜினி முகமது சோமநாதர் கோயிலை கொள்ளையடிப்பதற்கு முன் ஓர் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் மன்னனுடன் போரிட்டு அங்கேயும் கொள்ளையிட்டார் என்ற விஷயத்தை மறைக்கிறார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் செல்வங்களை சேர்ப்பதே மன்னர்களின் நோக்கமாக இருந்தது. திப்பு சுல்தான் அமைச்சரவையில் இந்து அதிகாரிகளும், இந்து மன்னர்களின் சபையில் இஸ்லாமிய அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள்; மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.இப்போது அரசியல் ஆதாயங்களுக்காக தங்களுக்கு சாதகமான நிகழ்வுகளை மட்டும் வரலாறாக மக்கள் முன் வைக்கிறார்கள்.

மாப்ளா முஸ்லீம்களைப் பொறுத்தளவில் ஏராளமான தாழ்த்தப்பட்ட இந்து சமூகம் இஸ்லாமுக்கு மாறியது. அதுவரை தாழ்த்தப்பட்ட ஆண்கள் தோளில் துண்டு அணிய முடியாது. பெண்கள் தங்கள் மேலாடையை அணிய முடியாது. இந்நிலையில் இஸ்லாம் மதம் அவர்களுக்கு சுய மதிப்பையும் சுய கவுரவத்தையும் கொடுத்தது.

இந்த சுய கவுரவத்தால் உயர்சாதியினரான நம்பூதிரிகளும் நாயர்களும் கலவரமடைந்ததைத்தான் மாப்ளா வரலாற்று ஆசிரியர்கள் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில் மாப்ளா பிரச்னை என்பது விவசாய / தீண்டாமைக்கு எதிரான / பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எழுச்சி... இப்படி முப்புள்ளிகள் இதனுள் புதைந்திருக்கின்றன.

ஆனால், இந்துத்துவவாதிகள் இதை ஒற்றை பரிமாணமாக மாற்றுகிறார்கள். அதனாலேயே மாப்ளா கலகம் மதப் பிரச்னையாக இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது...’’ என்கிறார் உளவியல் பகுப்பாய்வாளரும் சமூக ஆர்வலருமான சஃபி.

டி.ரஞ்சித்