யார் இந்த Friends of police?



காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ். சுருக்கமாக FOP. சாத்தான்குளம் சம்பவத்தை மேற்கோள்காட்டி தமிழகம் முழுவதும் FOPக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்..? அவர்களுக்கான தகுதிகள், பணிகள் என்ன... போன்ற கேள்விகளோடு குற்றவியல் மற்றும் காவல்துறையின் நிர்வாக உதவி பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் மைக்கேல் எல்.வளனை அணுகினோம்.‘‘1993ம் ஆண்டு, இப்போது சிபிசிஐடி ஏடிஜிபி ஆக இருக்கும் டாக்டர் பிரதீப் வி பிலீபால் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பே ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிப் பிரச்னைகள் அதிகமாக இருந்த காலத்தில் அங்கு எஸ்பி ஆக பிரதீப் பணியாற்றினார். அப்போது பாதி வழக்குகளே பதிவாகும். மற்றவை அவுட் ஆஃப் போலீஸ் ஸ்டேஷனில் அடக்குமுறையால் தீர்க்கப்படும். இதனால் மக்கள் மத்தியில் காவல்துறை மீதான அவநம்பிக்கை அதிகரித்தது.
இதைப் போக்கவேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே பாலமாகச் செயல்பட ஓர் அமைப்பு வேண்டும் என்பதற்காகவும் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பிரதீப் உருவாக்கினார்...’’ என இன்ட்ரோ கொடுக்கும் மைக்கேல் எல்.வளன், இது முழுக்க முழுக்க மாணவர்களைக் கொண்ட அமைப்பு என்கிறார்.

‘‘கல்லூரியில் எப்படி என்சிசி, என்எஸ்எஸ் போன்றவை செயல்படுகிறதோ அப்படிதான் இந்த FOP. அடிமட்ட காவலர்களுக்கு இருக்கும் அதிகாரம் கூட இவர்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க எதற்காக FOP என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் பொதுமக்கள் மத்தி
யிலேயே இருக்கிறது.புகார் அளிக்க நாம் ஒவ்வொருவரும் காவல்நிலையம் செல்கிறோமா..? இல்லை. காரணம், போலீஸ் மீது ஒரு பயம் இருக்கிறது. வெறுப்பு நிலவுகிறது. அந்த சீருடையைப் பார்த்தாலே பலரும் உள்ளூர அச்சப்படுகிறார்கள்.

டிராஃபிக்கில் போலீஸ் நிறுத்தினால் கூட... எல்லா ஆவணங்களும் சரியாக மக்களிடம் இருந்தால் கூட... படபடப்புடன்தான் மக்கள் நிற்கிறார்கள்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மக்கள் உணர்வதே இல்லை. மக்களின் பாதுகாப்புக்காகத்தான் போலீசார் 24 மணி
நேரமும் உழைக்கிறார்கள் என்பதை ஏனோ மக்கள் உணர்வதே இல்லை.

எனவே, மக்களுக்கும் காவலர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். காவலர்கள் யார்... அவர்கள் என்ன செய்கிறார்கள்... யாருக்காக எப்படி வேலை செய்கிறார்கள்... என்பதை எல்லாம் பொதுமக்கள் உணரும்போது போலீஸ் மீது அவர்களுக்கு நல்ல எண்ணம் வரும்.
இதை FOP செய்தனர். இவர்களின் முக்கியப் பணியே குற்றங்களைத் தடுப்பதும் குற்றங்களைப் பதிவு செய்வதும்தான்...’’ என்று கூறும் மைக்கேல்,  இவர்களுக்கான தேர்வு, தகுதிகள் பற்றியும் விளக்கினார்.  

“ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஒருங்கிணைப்பாளர் இருப்பார். கல்லூரியில் மாணவர்களிடையே ஒரு செகரட்டரி, ஃபேகல்ட்டி இன்சார்ஜ் இருப்பார்கள். உதாரணமாக சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை காவல் நிலையங்களில் FOP ஆக இருக்கின்றனர்.

தமிழகத்திலுள்ள மொத்த காவலர்களின் எண்ணிக்கை 1,10,000. ஆனால், மக்கள் தொகையோ ஏழரைக் கோடிக்கும் மேல். இவ்வளவு குறைந்த காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியும்..? எனவே வாலண்ட்டியர்ஸ் தேவைப்படுகிறார்கள். அதில் ஓர் அமைப்பாக FOP உள்ளனர்.

FOP-யில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். அதிலும் எல்லோரையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பையன் யார்... எங்கு படிக்கிறான்... வகுப்புக்கு ஒழுங்காகச் செல்கிறானா... படிக்கும் பையனா... அவன் மீது க்ரைம் ரிப்போர்ட் இருக்கிறதா... என்பதை எல்லாம் சரிபார்த்துதான் FOP ஆக நியமிக்கிறார்கள்.  

எங்கள் துறையிலேயே 210 மாணவர்கள் உள்ளனர். இதில் 120 பேருக்கு மேல் அப்ளிகேஷன் கொடுத்தார்கள். ஆனால், FOPக்கு தேர்வானவர்கள் 66 - 70 பேர்தான். இவர்களுக்கான பயிற்சிகளை நாங்களும் கொடுக்கிறோம். ஒழுங்காக வருகிறார்களா... எத்தனை மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் என்பதை எல்லாம் ரிப்போர்ட் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து அடிக்கடி வாங்கி ஆராய்கிறோம்...’’ என்ற மைக்கேலிடம், சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேட்டோம்.

‘‘அங்கு FOP என்னும் யூனிட்டே கிடையாது! இந்த கொரோனா நேரத்தில் காவலர்களுக்கு உதவிய வாலண்ட்டியர்ஸ்தான் அவர்கள்! எல்லா காவலர்களும் எப்படி கரப்டட் இல்லையோ அப்படி எல்லா FOPயும் கரப்டட் இல்லை! அப்படி கரப்டட் ஆக இருப்பது தெரிய வந்தால் கண்டிப்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரியில் படிக்கும் வரைதான் FOP ஆக இருக்க முடியும். அவர்கள் யார் யார் என்னும் ரகசியம் காக்கப்படும். இவர்களுக்கு என ஐடி கார்ட் ஒன்றும் வழங்குவோம். ஆனால், கல்லூரிப் படிப்பை அவர்கள் முடித்ததுமே அந்த ஐடி கார்டை வாங்கிவிடுவோம். இதன் பிறகு அவர்களால் FOP ஆக இருக்க முடியாது. முன்பே சொன்னபடி என்சிசி, என்எஸ்எஸ் மாதிரிதான்.

ஆனால், ஒரு சில இடங்களில் FOP உடன் வெளி ஆட்களும் கலந்திருக்கிறார்கள்... அதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்!FOP ஆக இருப்பவர்கள் யார் யார் என்பது அவர்கள் குடும்பத்துக்கோ, தெருவுக்கோ கூடத் தெரியாது. எந்த இடத்திலும் தங்களை FOP என அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு விபத்து நடந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பது FOPக்கு தெரியும். கூட்டமான நிகழ்ச்சிகளில் காவலர்களுக்கு உதவுவார்கள். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு ரோந்துக்கு செல்வார்கள்… இதுதான் FOP. இவர்கள் ஒருபோதும் யாரையும் அடிக்கவோ தண்டிக்கவோ மாட்டார்கள்.

27 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இந்த அமைப்புக்கு தேசிய அளவில் விருதுகளும் கிடைத்துள்ளன. மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும். அதேவேளையில் காவலர்கள் மீது நம்பிக்கை இருந்தால்தான் மக்களும் புகார் கொடுக்க வருவார்கள்.

இப்படி மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்படும் FOPக்கு தற்காலிகமாகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது! விரைவில் FOP பழையபடி இயங்கத் தொடங்கும் என்றே நினைக்கிறோம்!’’ என்கிறார் மைக்கேல் எல்.வளன்.

அன்னம் அரசு