கொரோனா விழிப்புணர்வு வீடியோஸை வெளியிடும் டூப்ளிகேட் தனுஷ்!



ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்தாலும் ஓய்வு நேரம் முன்பைவிட அதிகம் கிடைத்துவிட்டதால் பலரும் சமைப்பது, கைவேலைகள் செய்வது, சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக வீடியோக்கள் பகிர்வது... என நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் எம்.செல்வகுமார் என்னும் இளைஞர் நூற்றுக்கும் மேலான கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

‘‘சொந்த ஊர் திருநெல்வேலி. படித்தது, வளர்ந்தது எல்லாமே அங்கதான். ஐடி வேலை காரணமா 2012ல சென்னைக்கு வந்தேன். கொஞ்ச நாள்லயே சொந்த ஊரு மாதிரி சென்னை மாறிடுச்சு...’’ சிரிக்கும் செல்வகுமாருக்கு சிறுவயது முதலே பாட்டு, டான்ஸ், நடிப்பில் ஆர்வம் உண்டாம்.‘‘அதனால சென்னை வந்த புதுசுல ஒரு பக்கம் வேலை இன்னொரு பக்கம் நடிப்புக்கான வாய்ப்புகளைத் தேடறதுனு இருந்தேன். நிறைய ஆடிஷனுக்கும் போயிருக்கேன்.
இந்த விடாமுயற்சிக்கு பலனா பிரபலமான ஒரு யூ டியூப் சேனல் மூலமா மீடியா வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்படிதான் வெங்கட்பிரபு சாருடைய அசிஸ்டெண்ட் கார்த்திக் சார் இயக்கத்துல ஒரு குறும்படத்துல நடிச்சேன். பிறகு விளம்பரப் படங்கள்ல கமிட் ஆக ஆரம்பிச்சேன்...’’ என்றவர் டிக்டாக்கிலும் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை தொடங்கியிருக்கிறார்.

‘‘ஆனா, மத்தவங்க மாதிரி சினிமா வசனங்களோ,  டப்ஸ்மாஷோ செய்யலை. மாறா, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை ஷேர் பண்ண ஆரம்பிச்சேன். எதுக்கும் ஓர் ஆரம்பம் வேணுமில்லையா..? என்னைப் பார்க்கற பலரும் ‘நீ தனுஷ் சார் மாதிரி இருக்கே’னு சொல்வாங்க. இதையே பயன்படுத்தி எனக்கான வட்டத்தை அதிகரிச்சேன். தனுஷ் சார் பேசின டயலாக்ஸ், சீன்ஸை எல்லாம் அவரை மாதிரியே டிரஸ் செய்துகிட்டு டிக்டாக்ல இமிடேட் பண்ணினேன்.

எதிர்பார்த்த மாதிரியே நிறைய ஃபாலோயர்ஸ் சேர்ந்தாங்க. அதாவது இரண்டு லட்சங்கள் வரை! இப்ப இந்தியாவுல டிக்டாக்கை தடை செய்துட்டதுனால கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் டிக்டாக் வீடியோக்களை இன்ஸ்டா, ஃபேஸ்புக்கிலும் தனித்தனியா பதிவேத்தறதால ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை பெருசா குறையலை.

கொரோனா காலத்துல தொடர்ந்து நான் செய்த விழிப்புணர்வு வீடியோக்கள் வைரலாகி பலரிடமும் போய்ச் சேர்ந்திருக்கு. உண்மைல மகிழ்ச்சியா இருக்கு...’’ என்னும் செல்வகுமார், இரண்டு மூன்று யூ டியூப் சேனல்களில் இப்போது ஒர்க்கிங் பார்ட்னராக இருக்கிறார்.‘‘ஊரடங்கு காலத்துல ஃப்ரெண்ட்ஸோடு நடந்த ஜாலி தருணங்களையே அடிப்படையா வைச்சு கான்செப்ட்டை ரெடி செய்தேன். குறிப்பா ஒர்க் ஃப்ரம் ஹோம், சமூக இடைவெளி, வெட்டுக்கிளி, மாஸ்க்... இப்படி டிரெண்ட்ல இருக்கிற பிரச்னைகளை கருவாக்கி விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கினேன்.

இதெல்லாம் வாட்ஸ்அப்புலயும் ஃபார்வர்ட் ஆகி மூலை முடுக்குல எல்லாம் என்னை கொண்டு போய் சேர்த்திருக்கு. என்னுடைய கொரோனா விழிப்புணர்வு வீடியோல எந்த தப்பான வழிகாட்டுதலும் இல்லைனு டாக்டர்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க. இது போதாதா..? தொடர்ந்து மக்களை சிந்திக்க வைக்கற வீடியோக்களை வெளியிடுவேன்...’’ என்ற செல்வகுமார், தன் ஐடி வேலையை இப்பொழுது ராஜினாமா செய்துவிட்டார். ‘‘இனி 24 X 7 வீடியோ ப்ளஸ் சினிமாதான்!’’ என்றபடி தன் கட்டை விரலை உயர்த்துகிறார்!

ஷாலினி நியூட்டன்