ஒருடிராக்... ஒருகீபோர்ட்... ஒருடுவிட்...



சஹானா என்ற குட்டிப் பெண் சமீபத்தில் வாசித்த கீ போர்ட் இசையைப் பாராட்டிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘Sweet’ என டுவிட் செய்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? சஹானா பிறப்பிலேயே பார்வை இன்றி பிறந்த மாற்றுத் திறனாளி! ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ‘அன்பின் வழியது உயிர்நிலைதானே...’ என்ற பாடலை உருகி உருகிப் பாடியவர்.

லலித் குமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி நடிகர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரியில் வெளியானது.  போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்பில் தோன்றி மிரள வைத்தார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சென்ற வாரம் சிங்கிள் ரெக்கார்டாக ‘தும்பி துள்ளல்...’ என்ற பாடலை படக்குழு  வெளியிட்டது. ஸ்ரேயா கோஷல், நகுல் அப்யங்கர் பாடிய மெலோடியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலைத்தான் அப்படியே கீ போர்டில் வாசித்து டுவிட்டரில் பதிவேற்றி இருக்கிறார் குட்டி தேவதை சஹானா.  இதைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சஹானாவை அழைத்து ‘சூப்பராக இருக்கு’ என பாராட்ட, இசைப் புயலோ தன் பங்குக்கு டுவிட் செய்து பொக்கேவை நீட்டியிருக்கிறார். இவர் டுவிட் செய்த சற்று நேரத்திலேயே சஹானாவின் வீடியோ வைரலாகி 4.3 லட்சம் வியூக்களை அள்ளியது. சஹானாவின் திறமையைப் பாராட்டிய ‘கோப்ரா’ படக் குழுவினர் சார்பாக தயாரிப்பாளர், சவுண்ட் சிஸ்டம் அடங்கிய பண்டிலை அன்பளிப்பாக வழங்கி அவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

‘‘எனக்கு கீபோர்டு சூப்பரா வாசிக்கத் தெரியும். ஒரு நிகழ்ச்சியில் ‘காதலே என் காதலே...’ பாட்டை நான் கீ போர்டில் வாசிக்க எஸ்பிபி அங்கிள் அந்தப் பாட்டை பாடினார். என் திறமையைப் பாராட்டிய அவர் எனக்கு ஒரு கீ போர்டை அன்பளிப்பாகத் தந்தார்...’’ என்று அசைபோடும் சஹானா, ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கே.எம்.மியூசிக் கல்லூரி’யில் ரஷ்யன் ஸ்டைல் பியானோ கற்று வருகிறார்.

‘‘பியானோல 4வது கிரேடு வரை முடிச்சாச்சு. கூடவே, ஹிந்துஸ்தானி வோக்கல், வீணை, வயலின், கிட்டார் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை எல்லாம் கத்துட்டு வரேன். ஒரே நேரத்துல இரண்டு இசைக்கருவிகளை என்னால வாசிக்க முடியும்! இளையராஜா சார் மாதிரி பெரிய இசை அமைப்பாளராகணும்... நிறைய பாடல்களை கம்போஸ் பண்ணணும்... இதுதான் என் ஆசை...’’ என புன்னகைக்கிறார் சஹானா.

‘‘பார்வையில்லாம இவ பொறந்தப்ப நாங்க உடைஞ்சு போனோம்...’’ மகளின் தலையை வருடியபடியே பேசத்தொடங்கினார்கள் சஹானாவின் பெற்றோர்.‘‘எப்படியாவது இந்த உலகத்தை இவ பார்க்கணும்னு நிறைய முயற்சி பண்ணினோம். ஒரு கட்டத்துல அது சாத்தியமே இல்லைனு தெரிஞ்சுது. அப்பதான் இசைல இவளுக்கு ஆர்வம் இருப்பதைப் பார்த்தோம். உடனே அதுல இவ மாஸ்டராக எங்களால என்னவெல்லாம் உதவ முடியுமோ... அந்த வகைல எல்லாம் கைகொடுத்தோம்.

சஹானாவால எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியும். இப்ப இவளுக்கு பார்வை இல்லையே என்கிற வருத்தம் எங்களுக்கு இல்ல. கண்டிப்பா பெரிய உயரங்களை இவ தொடுவா...’’ என நெகிழ்கிறார்கள்.

ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இசைக்காக இடம் பிடித்திருக்கிறார் சஹானா. அடுத்து..? அதே! கின்னஸ் ரெக்கார்டுக்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். படிப்பிலும் படு சுட்டி. அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், பிரெய்லி முறையில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்!

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்