பெண்கள் கொண்டாட... ஆண்கள் தூற்றுகிறார்கள்!



திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் (அமேசான் ப்ரைம்) வெளியான முதல் மலையாளப்படம் என்ற வரலாற்றுப் பெருமையுடன் சமூக வலைத்தளங்களில் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறது ‘சூஃபியும் சுஜாதையும்’.

படத்தைப் பார்த்த பெண்கள் எல்லோரும் கொண்டாடித் தீர்க்கின்றனர். ஆண்களோ படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என்று தூற்றுகின்றனர். இதுவே இப்படத்தின் சிறப்பு!திருமணம் முடிந்து, குழந்தை பெற்று, வருடங்கள் பல கழிந்த பிறகும் கூட முதல் காதலனை மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இந்தப் படம்.வாய்பேச முடியாத இளம் பெண் சுஜாதா.

கிராமத்திலேயே அவள் சிறந்த கதக் நடனக்காரி. ஒருநாள் பேருந்தில் பயணிக்கும்போது ஓர் இளம் சூஃபி (இஸ்லாமியத் துறவி)யைச் சந்திக்கிறாள். அவன் பேருந்தில் இஸ்லாமியர்கள் கழுத்தில் அணியும் மாலையைத் தவறவிடுகிறான். அந்த, மாலை அவனுடைய அம்மா பரிசாகக் கொடுத்தது.

சுஜாதா அந்த மாலையை எடுத்துக்கொண்டுபோய் சூஃபிக்குக் கொடுக்கிறாள். சூஃபியும் தன்னைப்போலவே நடனத்தில் திறமைசாலி என்பதை அறிகிறாள். அதிலிருந்து சுஜாதாவுக்கு சூஃபி மேல் இனம் புரியாத ஈர்ப்பு. அது நாளடைவில் காதலாக பரிணமிக்கிறது. தினமும் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். இதற்கிடையில் சுஜாதாவின் பெற்றோர் அவளுக்கு துபாயில் நல்ல வேலையில் இருக்கும் ஒரு மாப்பிள்ளையைப் பார்க்கிறார்கள்.

மாப்பிள்ளைக்கு சுஜாதாவைப் பிடித்துப்போக, திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடக்கிறது. இன்னொரு பக்கம் சூஃபியும் சுஜாதாவின் மீது காதல் வயப்படுகிறான்.  

இந்த காதல் விஷயம் சுஜாதாவின் தந்தைக்கும் சூஃபியின் குருவுக்கும் தெரிய வர பிரச்னை வெடிக்கிறது. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா? சூஃபியின் மீதான காதலா? இரண்டில் ஒரு முடிவைத்தான் சுஜாதாவால் எடுக்க முடியும்.

அவள் என்ன முடிவு எடுத்தாள்? அது எப்படி அவளது வாழ்வைப் புரட்டிப்போட்டது என்பதே படம். கேரளாவின் இயற்கை எழிலும் சூஃபி இசையும் அதிதி ராவின் அசத்தலான நடிப்பும் படத்துக்கு ப்ளஸ். அதே நேரத்தில் வெறும் சென்டிமென்ட் காதல் என்று படத்தைத் தவிர்ப்பதற்கும் வாய்ப்புண்டு.

இனி, சூஃபியாக நடித்திருக்கும் தேவ் மோகன் இளம் பெண்களின் கிரஷ்ஷாக வலம் வருவார்.பெண்களுக்கு எதிராக இருக்கும் மதச் சம்பிரதாயங்களுக்கு நடுவில் மென்மையான காதலை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நரனிபுழா ஷானவாஸ்.இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இப்படியொரு காதலா என்று ஏங்க வைக்கிறது ‘சூஃபியும் சுஜாதையும்’.

தொகுப்பு: த.சக்திவேல்