லாக்டவுனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.6000 கோடி இழப்பு!



தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை எனப் பெயர் கொண்டது சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை. மிகப் பழமையான இந்தத் தொழிற்பேட்டையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனால், எப்பொழுதும் பரபரப்புடனே இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், இன்று கொரோனாவால் களையிழந்து போயிருக்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை. ஊரடங்கால் அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியின்றி திணறி வருகின்றன. இதனால், பல நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுஜிஷைச் சந்தித்தோம்.

‘‘இந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆயிரத்து 430 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1965ல் காமராஜர் முதல்வரா இருக்கும்போது சிட்கோவால் கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. அன்னைக்கு பாடியிலிருந்து ஆவடி வரை தொழில் பகுதியா பிரிச்சாங்க. பாடியில் டிவிஎஸ் கம்பெனி வந்தது. கொரட்டூர் ஏரியா கனரக தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்டு, பின்னாடி வீட்டுவசதி வாரியமா மாறி குடியிருப்புகளாகிடுச்சு.  

அப்புறம் அம்பத்தூர், ஆவடியில் தொழில் நிறுவனங்கள் வந்துச்சு. இடைல குடியிருப்புப் பகுதிகளும் வளர்ந்துச்சு. அன்னைக்கு தமிழ்நாடுதான் தொழில்துறையில நம்பர் ஒண்ணா திகழ்ந்துச்சு. அம்பத்தூரும், கிண்டியும் அந்தளவுக்கு பெயர் வாங்கித் தந்துச்சு. இதுல, உலகளவுல தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்த தொழிற்பேட்டை அம்பத்தூர். ஏன்னா, இங்கிருந்து போற சரக்குகள், அதன் தரம், கொண்டு சேர்க்கும்முறைனு எல்லாம் சிறந்த தரத்துல இருந்தது. இப்பவும் அதே தரத்துடன்தான் இருக்குது.

இதுக்குள்ள மட்டும் 2400 தொழில் நிறுவனங்கள் இயங்குது. இது இல்லாம பாடி, வானகரம், அத்திப்பேட்டைனு சுத்தியிருக்கிற பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சின்ன நிறுவனங்கள் இருக்கின்றன. தொழிற்பேட்டை யல் உள்ள 90%, ஆட்டோமோட்டிவ் கம்பெனிகள்தான். அதாவது, வண்டிகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி செய்கிற நிறுவனங்கள். இதைத் தவிர்த்து டெக்ஸ்டைல்ஸ், கெமிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், லெதர்னு கிட்டத்தட்ட 60வகைக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கிட்டு வருது.

இங்க மட்டும்  மூணு லட்சம் தொழிலாளர்கள் இருக்காங்க. தவிர, சுத்துப்பட்டுல இருக்குற நிறுவனங்களை நம்பி 2 லட்சம் பேர் இருப்பாங்க. மொத்தமா, ஐந்து லட்சம் தொழிலாளர்கள். இதுல பெண்களே சுமார் ரெண்டு லட்சம் பேர். அப்படிப் பார்க்கும்போது இந்தப் பகுதிகள்ல உள்ள தொழில் நிறுவனங்களை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் இருக்கு...’’ என தொழிற்பேட்டை பற்றி ஒரு விரிவான இன்ட்ரோ கொடுத்தவர், ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்னைக்குள் வந்தார்.

‘‘முதல் லாக்டவுன் வந்தப்ப இந்தியா மட்டுமல்ல, உலகமே மூடிக்கிடந்தது. அப்ப எந்த தாக்கமும் இங்க இல்ல. ஆனா, ரெண்டாவது லாக்டவுன்  போட்டப்ப வடஇந்தியாவுல உள்ள  நிறுவனங்கள் எல்லாம் பணியைத் தொடங்கிட்டாங்க. பெரும்புதூர்ல ஹூண்டாய் ஓட ஆரம்பிச்சது. இவங்க எல்லாரும் நம்மகிட்ட சப்ளை கேட்கும்போது ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஏப்ரல் - மே மாசங்கள் பயங்கர சிரமமா இருந்துச்சு. மே மாசக் கடைசில நமக்கு தளர்வு கிடைச்சதும் ஒருமாதிரி சமாளிக்க ஆரம்பிச்சோம்.

ஆனா, இரண்டு மாசம் முழு லாக்டவுன் இருந்ததால வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. சுமார் 75 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இங்க வேலை செய்தாங்க.

இதைவிட வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில்னு பல ஊர்கள்ல இருந்துவந்து இங்க  பணி செய்ற தொழிலாளர்கள் அதிகம். அவங்களும் செய்திகளைப் பார்த்து ரொம்பப் பயந்து ஊருக்கு போயிட்டாங்க.  இவங்களைத் திரும்ப கூப்பிட்டப்ப தயங்கினாங்க. சென்னை வந்தாலே கொரோனா தொற்று ஏற்படுமோனு அச்சப்பட்டாங்க. இது தவிர திருவள்ளூர், அரக்கோணத்துல இருந்து அதிகம் பேர் வேலைக்கு வர்றாங்க. அவங்களும் பஸ், ரயில் ஓடாததால வரலை. சிலர் மட்டுமே டூவீலர்ல வர்றாங்க. ரயில், பஸ் ஓடினாதான் இங்க பணிகள் வேகம் எடுக்கும்.

இந்த நேரத்துல தொழிலாளர் நிலை மட்டுமல்ல, முதலாளிகள் நிலையும் சங்கடம்தான். வருமானம் இல்லாமல், வட்டி கட்ட முடியாமல், சம்பளம் கொடுக்க முடியாமல் ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கோம். இன்னைக்கு மின்கட்டண பில் வந்திருக்கு. அதையும் கட்டணும்.

இங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், ஜப்பான்னு எல்லா நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதி செய்றோம். ஆனா, கடந்த ரெண்டு மாசமா ஏர்போர்ட், துறைமுகம் எல்லாம் மூடியிருக்கறதால பாதிப்பு அதிகம். இப்ப பிசினஸ் தொடங்கியிருக்கு. ஆனா, ஏர்போர்ட்ல முன்னாடி ஒரு கிலோ ஏத்த 250 ரூபாயா இருந்துச்சு. இப்ப ஆயிரம் ரூபாய் வசூலிக்கறாங்க. அதாவது நான்கு மடங்கா கட்டணம் உயர்ந்திருக்கு. ஆர்டரை காப்பாத்திக்க உடனே மெட்டீரியல் வந்தாக வேண்டிய நிலை. அப்ப நான்கைந்து மடங்கு செலவாகுது.  

இந்தத் தொழிற்பேட்டையைப் பொறுத்தவரை ஒரு மாசம் வேலை எதுவும் நடக்கலைனா 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இரண்டு மாசமா எந்த வேலையும் நடக்கல. சில எமர்ஜென்ஸி நிறுவனங்கள் மட்டும் பணி செய்திட்டு இருந்தாங்க. அதனால, இந்த ரெண்டு மாசத்துல 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கு. இதை ஈடு செய்யவே முடியாது.

மீண்டும் பழையபடி மாற குறைஞ்சது ரெண்டு ஆண்டுகளாவது பிடிக்கும்...’’ என வேதனை தெரிவித்தவரிடம், ‘மத்திய அரசு சில கடன் சலுகைகளை அறிவித்துள்ளதே...’ என்றோம். ‘‘மத்திய அரசு தொழில்நிறுவனங்களுக்கு மூணு லட்சம் கோடி ரூபாய் கடன் அளிச்சிருக்கு. ஆனா, அது ரொம்ப ஏமாற்றமா இருக்கு. ஏன்னா, இங்க எல்லாருமே கடன் வாங்கித்தான் வியாபாரம் பண்றோம். இன்னைக்கு ஒவ்வொரு தொழில்நுட்பம் வரும்போதும் அதுக்கேத்த மாதிரி நாம் மாற வேண்டியிருக்கு. மிஷின்லயும், உபகரணங்கள்லயும் புது முதலீடு செய்யணும். அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி உள்ள மிஷினை வச்சு இன்னைக்கு வேலை செய்ய முடியாது.

புதுசா மிஷினும் உபகரணங்களும் வாங்கணும்னா நாங்க கடன் வாங்கித்தான் ஆகணும். ஏற்கனவே கடன் வாங்கி பிசினஸ் பண்றோம். அதுக்கான வட்டியே கடந்த ரெண்டு மாசமா கட்டல. இப்ப மறுபடியும் கடன் வாங்கினா, இருக்குற கடனுக்கான வட்டியை அடைக்கலாம். அவ்வளவுதான்.
பிறகு, பிசினஸுக்குனு மறுபடியும் கடன் வாங்கணும். இப்படி பிசினஸ் பண்ற பணம் கைக்கு வர மூணு மாசமாவது ஆகும். ஆக, ஆறுமாசம் கழிச்சு இந்தக் கடனுக்கான வட்டியும் சேர்ந்து நிற்கும்.  

இந்தச் சூழல்ல எப்படி நிறுவனத்தை நடத்த முடியும்? கடனை அடைக்கிற தைரியம் இன்றைய சூழல்ல யாருக்கும் இல்ல. பொதுவா, பிசினஸ்ல நீங்க ஒரு பிரிவுக்குள்ள மட்டும் இருக்காதீங்க. ஆட்டோமோட்டிவ், கெமிக்கல், கார்மெண்ட்ஸ்னு வேறு சில தொழில்கள்லயும் இருங்கன்னு சொல்வாங்க. ஆனா, இன்னைக்கு எல்லா பிரிவும் மோசமாதான் இருக்கு.

எவ்வளவுதான் கேர்ஃபுல்லான பிசினஸ்மேனா இருந்தாலும் இன்னைக்கு அவர் நிலை கஷ்டம்தான். இதுக்கு அரசு என்ன செய்திருக்கலாம்னா,
வட்டிக்கு சலுகை தர்றோம்னு சொல்லியிருக்கலாம். அதாவது இப்ப 12 சதவீத வட்டின்னா நீங்க ஆறு சதவீதம் கட்டுங்க, நாங்க ஆறு சதவீதம் கட்டுறோம்னு சொல்லியிருக்கலாம். இப்படிச் செய்தா வட்டி விகிதம் கம்மியாகி கடன் தொல்லைல இருந்து வெளிய வர வாய்ப்பு கிடைக்கும். ஒரு வருஷம் கழிச்சு கம்பெனி நல்லா ஓடினா அந்த முழுக் கடன்ல இருந்தும் நாங்க வெளிய வந்துட முடியும்.
 

ஆனா, இன்னைக்கு இருக்குற சூழல்ல ஆறு மாசம், ஒரு வருஷம் கழிச்சு பிசினஸ் மேம்பட்டாலும் எங்களால கடனை அடைக்கவே முடியாது என்பதுதான் உண்மை...’’ என்றவர், அரசு வேறு என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார்.

‘‘முதல்ல, வட்டிக்கு சலுகை  தரணும். அடுத்து, ஜிஎஸ்டி வரியைக் குறைக்கணும். இன்னைக்கு சேல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு. காரும், பைக்கும் யாருமே வாங்கல. இந்நேரத்திலும் 28% ஜிஎஸ்டினா நல்லாயிருக்குமா?

அரசு ஒரு ெரண்டு மாசத்துக்கு மட்டும் ஜிஎஸ்டியை 18%க்கு மாத்தினா, பிறகு வண்டியை வாங்கலாம்னு நினைப்பவர்கள் கூட இப்ப வாங்குவாங்க.
ஆயிரம் வண்டி விக்கிற இடத்துல ஆயிரத்து 500 வண்டி போகும். அதிலிருந்து 18% ஜிஎஸ்டி வந்தாலும் அரசால மேக்கப் செய்துக்க முடியும்.
இதுமாதிரி கொஞ்சம் மாத்தி யோசிச்சு தொழிற்துறையை ஊக்கப்படுத்தணும். நிரந்தரமா ஜிஎஸ்டியைக் குறைக்கச் சொல்லலை. ஒரு ரெண்டு மாசம்தான்.

அப்புறம், தொழிலாளர்களுக்கு நாங்க ஏற்கனவே கஷ்டப்பட்டு சம்பளம் வழங்கியிருக்கோம். இதுதவிர, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரமோ, ரூ.5 ஆயிரமோ வங்கிக் கணக்குல நேரடியா கொடுங்கனு அரசுகிட்ட கோரிக்கை வச்சிருக்கோம்.
 
அதாவது, ரெண்டு மூணு மாசம் மட்டும் இந்த உதவியை செய்ங்கனு கேட்கிறோம். இந்தப் பணத்தை அந்தத் தொழிலாளர் அப்படியே வங்கிக் கணக்குல வைச்சுக்க மாட்டார். செலவழிப்பார். அப்ப பணம் சுழற்சியாகும். பொருளாதாரம் மீளுவதற்கான வழி கிடைக்கும். மற்ற நாடுகள் எல்லாம் இப்படித்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறாங்க.

இதுதவிர, மத்திய அரசுகிட்ட கடந்த ஒரு வருஷமா ஒரு கோரிக்கையை முன்வச்சிட்டு இருக்கோம். அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துல எல்லோரும் வேலை செய்யலாம். இதுல அரசு ஒரு நாளைக்கு 257 ரூபாய் கொடுக்குது. நாங்க என்ன சொல்றோம்னா, பல மாவட்டங்கள்ல படிச்ச  இளைஞர்கள் நிறைய இருக்காங்க. இந்த இளைஞர்களை தொழில் நிறுவனங்களுக்குக் கொடுங்க. இவங்களுக்கு அரசு அந்த மகாத்மா காந்தி திட்டத்தின் வழியா 257 ரூபாய் தரட்டும்.

 நாங்க 300 ரூபாய் தர்றோம். ஆக, 550 ரூபாய் ஒருநாளைக்குக் கிடைக்கும். அந்த இளைஞனும் கைத்தொழில் கத்துக்கிட்டமாதிரி இருக்கும். அவனுக்கு
வருமானத்துக்கு ஒரு வழியும் கிடைக்கும். ஒருவருஷம் கழிஞ்சதும் அந்தத் தொழில் நிறுவனத்துலயே அவன் வேலை செய்யலாம் அல்லது வேறு நிறுவனங்களுக்கும் போகலாம். இதனால, நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதை நாங்க திறன்மேம்பாட்டுப் பயிற்சினு சொல்றோம். தொழில் நிறுவனங்களுக்கும் நல்ல திறன்பெற்ற இளைஞர்கள் கிடைப்பதோடு, வேலையில்லாத்திண்டாட்டமும் ஒழியும். அடுத்து, இங்கிருந்து ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் திரும்ப வர்றதுக்கான ஏற்பாடா பஸ்ஸோ, ரயிலோ சென்னைக்கு விடணும். தொழிலாளர்களும் அவங்க ஊர்ல வேலையில்லாததால இப்ப வர்றதுக்கு தயாராவே இருக்காங்க.

இன்னைக்கு இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நல்ல விஷயம் என்னன்னா... மழை பெய்திருக்கு. அதனால, கிராமப்புற பொருளாதாரம்
நல்லாயிருக்கு. எப்பவும் கிராமப்புற பொருளாதாரம் நல்லாயிருந்தா மற்ற பொருளாதாரம் நல்லாவே இருக்கும். அப்படியொரு நம்பிக்கை. இதனுடன் அரசும் கொஞ்சம் உதவினா இன்னும் நம்பிக்கையோடு தொழில்துறை முன்னேறும்...’’ என்கிறார் சுஜிஷ்.  

பேராச்சி கண்ணன்