உலகை உலுக்கிய நோய்கள்



மினி தொடர் 13

மும்பையில் நுழைந்த பிளேக்


பிளேக்கின் மூன்றாவது வருகை ஆசிய நாடுகளை, குறிப்பாக சீனாவையும் இந்தியாவையும் சூறையாடியது என்று பார்த்தோம்.
இந்தியாவுக்கு முதன் முதலாக பிளேக் சீனாவிலிருந்து கப்பல் மூலமாக பம்பாய்க்குத்தான் வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பம்பாய் மிக வேகமாக வளரத் தொடங்கிய ஒரு தொழில் நகரமாக இருந்தது. இன்று போலவே அன்றும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும்
பகுதி பம்பாயுடையதாக இருந்தது.

இதற்குக் காரணம் பருத்தி.பம்பாயில் பருத்தி ஆடை உற்பத்தி மிகச் சிறப்பாக நடந்தது. இந்தியப் பருத்தியும் ஆங்கிலேயர் கொண்டுவந்த அந்நிய ரகப் பருத்தியும் பம்பாயின் மில்களில் நூலாக நெய்யப்பட்டு, துணியாக பரிணமித்து உலகம் முழுதும் பரவின. இதனால் உலக அளவிலான துணி உற்பத்தியில் பம்பாய் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு இணையாக பருத்திஆடை உற்பத்தியில் சிறந்து விளங்கியதால் இதனை இந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணித்தார்கள்.

இப்படி, இரவு பகலாக இயங்கிய மில்களில் வேலை செய்ய மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் கிராமப்பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்தனர். ஆனால், ஆலைகளின் பகாசுரப் பசிக்கு மக்களின் உழைப்பு போதவில்லை. பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய இன்றைய மாநிலங்களில் இருந்து அந்நாட்களில் மக்கள் சாரி சாரியாக பம்பாய் நோக்கிப் படையெடுத்தனர். அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்ன லட்சுமியாகவே பம்பாய் இருந்தது.

1891ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பம்பாய் நகரின் மக்கள் தொகை, எட்டு லட்சத்து இருபதாயிரமாக இருந்தது. இதில் பெரும்பான்மையானவர்கள் மில்களிலும் அதனைச் சார்ந்த தொழில்களிலும் வாழ்ந்த கூலித் தொழிலாளிகள். இவர்கள் அனைவரும் ‘ச்சால்கள்’ எனப்படும் சின்னஞ்சிறிய ஒண்டுக்குடித்தனங்களில் அடைசலாக வாழ்ந்தார்கள். ச்சால்கள் என்பவை நாம் இன்று லைன் வீடுகள், காம்பவுண்ட் வீடுகள் என்று சொல்கிறோம் இல்லையா அதைப் போன்றவைதான்.

ஆனால், பல மாடிகள் கொண்ட உயரமான கட்டடங்கள். வரிசையாக பத்துக்குப் பத்து அறைகள் தீப்பெட்டி போல் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அறையிலும் இரண்டு அடுக்கு மூன்று அடுக்குக் கட்டில்கள் இரண்டு இருக்கும். இப்படியாக ஒவ்வொரு அறையிலும் சராசரியாக ஐந்தாறு தனிநபர்கள் அல்லது ஒரு குடும்பம் வசிக்கும். ஒரு ச்சாலில் நூறு வீடுகளாவது இருக்கும்.

இப்படி மும்பை நகரம் முழுதும் பல்லாயிரம் ச்சால்கள் இருந்தன. இந்த ச்சால்களின் கீழ்ப்புறம் குடோன்கள். பருத்தி முதல் பல்வேறு பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும். இதனால் இங்கு எலிகள் மனிதர்களோடு சர்வ சாதாரணமாகப் புழங்கும்.இப்படி எலியும் மனிதர்களும் சமேதமாய் வாழ்ந்த இடத்தில்தான் பிளேக் தன் முதல் கால் தடத்தைப் பதித்தது. சீனாவிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் இருந்த எலிகள் மூலமாக பிளேக் மும்பை நகரில் நுழைந்தது.

முதன் முதலில் 1896ம் ஆண்டு மண்ட்வி என்ற பகுதியில் முதல் பிளேக் நோயாளி கண்டறியப்பட்டார். அகாசியோ கேப்ரியல் வேகாஸ் என்ற புகழ்பெற்ற இந்திய மருத்துவர்தான் இதனைக் கண்டறிந்தார். கோவாவின் கிறிஸ்துவ குடும்பம் ஒன்றில் பிறந்த அகாசியோ, பின்னர் பம்பாயில் தனது
மருத்துவ சேவையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

1896ம் ஆண்டில், தான் சேவை செய்த நவ்ரோஜி ஹில்ஸ் பகுதியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு விநோதமான நோய் பரவுவதைக் கண்டார். ஒவ்வொருவராகத் தொற்றிக்கொண்டிருந்த இந்த நோயால் மும்பையின் தொழில்துறையே ஆட்டங்காணத் தொடங்கியபோது, அகாசியோ இந்த நோயை ஆராய்ந்து, இது பூபோனிக் பிளேக்தான் என்று அறிவித்தார்.

பிளேக் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த இடங்களில் உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி அங்கிருந்த குப்பைக் கூளங்களையும், மரித்த எலிகளையும் அப்புறப்படுத்தினார். இதனால் மேலும் பிளேக் பரவுவது கணிசமாகத் தடுக்கப்பட்டது.இவரது அறிவிப்பைக் கண்ட மும்பை நகராட்சி பிளேக்கை உறுதிப்படுத்துவதற்காக நான்கு வல்லுநர் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அகாசியோ சொன்னது உண்மைதான் என்று உணர்ந்தது.

பம்பாயின் கவர்னர், பிளேக்கை கட்டுப்படுத்துவதற்காக வால்டமர் ஹேஃப்கைன் என்ற அறிஞரை அழைத்தார். இவர்தான் காலராவுக்கான தடுப்பூசி மூலம் பல்லாயிரம் மக்களைக் காப்பாற்றியவர். ஹேஃப்கைனின் வருகையாலும் அகாசியோவின் சேவையாலும் அந்தப் பகுதியிலிருந்த இருபதாயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டன.

1898ல் டாக்டர் அகாசியோ மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக உயர்ந்தார். இவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இவருக்கு மும்பையில் ஒரு சிலை நிறுவப்பட்டது. அது இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.அந்நாளைய பிரிட்டீஷ் அரசு அப்படி ஒன்றும் உடனடியாக எல்லாம் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக பிளேக் பம்பாய் நகரம் முழுதும் பரவி, எளிய அடித்தட்டு மக்களிடமிருந்து நடுத்தட்டு வர்க்கத்துக்கும் மேல்தட்டு மக்களுக்கும் வரத் தொடங்கியபோதே அரசு உஷாரானது.
ஆனால், அதற்குள்ளாக பல லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்திருந்தார்கள்.

1896ம் ஆண்டு தொடங்கிய பம்பாய் பிளேக் இரண்டு ஆண்டுகள் ருத்ரதாண்டவமாடியது. பிளேக்கால் உற்பத்தி குறைந்து, தொழில்துறை முடங்கி, அரசுக்கும் வரி வருவாய் சரியத் தொடங்கியபோதுதான் அரசு பிளேக்கை ஒழிக்க துரித நடவடிக்கையில் இறங்கியது.
ஆனால், அதற்குள் பிளேக்குக்கு பயந்து சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்குள்ளும் பிளேக்கைக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

மும்பையில் பிளேக் பரவத் தொடங்கிய ஓராண்டு கழித்துதான் பிரிட்டீஷ் அரசு 1897ம் ஆண்டில் கொள்ளைநோய் பரவல் தடுப்புச் சட்டம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது. நமது மத்திய அரசு இப்போது வரை நடைமுறைப் படுத்திக்கொண்டிருப்பது இந்த சட்டத்தின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவத்தைத்தான்.

பம்பாயின் காவலர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு பிளேக் தடுப்புப் படை உருவாக்கப்பட்டது. இவர்கள் பம்பாயின் எந்தப் பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து சோதனையிடவும், அவசியப்பட்டால் அந்தக் கட்டடத்தை இடித்துத் தள்ளவும் உரிமை தரப்பட்டது.

மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது கண்காணிப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகக் கருதினார்கள். பிளேக் நோய் பரிசோதனையை ஆண் மருத்துவர்களும் ஆண் செவிலியர்களும் செய்வதை இந்தியப் பெண்கள் விரும்பவில்லை. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கெனவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பால கங்காதர திலகர் போன்றவர்கள் பிளேக் தடுப்பு என்ற பெயரில் இந்துக்களின் கோயில்களில் பூட்ஸ் கால்களுடன் ஆங்கிலேயப் படைகள் நுழைவதை எதிர்த்து எழுதினார்கள். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூனேயில் மருத்துவமனை நிறுவும் பணியில் திலகர் முக்கியப் பங்கு வகித்தார். ஆனால், இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பின்னர் எழுந்தது.

இப்படியாக, பிளேக் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை தூண்டவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இரண்டே ஆண்டுகளில் சுமார் பல லட்சம் பேரைக் காவு வாங்கியபின் சற்று ஓய்ந்தது. ஆனால், முழுமையாக ஒழியவில்லை.

(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்