நண்பர்கள் எங்களை காதலர்களாகப் பார்த்தார்கள்... அதை உண்மையாக்கினோம்!



டான்ஸ் மாஸ்டர் ஷோபி / லலிதா

டான்ஸ் மாஸ்டர்களில் ஷோபியை இயக்கு நர்களும் நடிகர்களும் ஆர்வமாக தேடுகிறார்கள். ‘சிக்’கென புறப்பட்டு வரும் அவரது நடனஅைசவுகள் இசையோடு சேர்ந்து மிளிரும். ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்... ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ ெதாடங்கி ‘தர்பார்’, ‘சர்கார்’,‘பிகில்’ என அய்யாவின் வெறித்தனம் எக்கச்சக்க ஹிட்...

ஷோபி

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 15 வயதுபோல சினிமா நடனத்திற்கு வந்துவிட்டேன். காற்று மாதிரி ஒரு வாழ்க்கை. பட்டாம் பூச்சியை துரத்திக்கிட்டு ஓடற மாதிரி ஜாலியாகத் திரிவோம். நடுராத்திரியில் மியூசிக் போட்டு ஆடுவேன். ஒவ்வொரு பாட்டுக்கும் சரியான ரிதம் பிடிச்சுப் பார்ப்போம்.

அப்பா பவுல்ராஜ் மாஸ்டர் அப்போ ராத்திரி பகல் அறியாமல் ஷூட்டிங் போயிட்டு இருப்பார். ஒரு நல்ல மாஸ்டர் ஆகணும்னு வெறி பிடிச்ச மாதிரி என்னை தயார்படுத்தியிருக்கேன். ஆனால், அது வேடிக்கை இல்லைன்னு புரிஞ்சது. நடனத்துக்கு புதுசா சிந்திக்கிற இயல்பு வேணும், இளைஞர்களின் மனசைப் பிடிக்க பழகிக்கணும்.

அப்படிப்பட்ட சூழலில் ஸ்டூடியோ, பாடல் காட்சின்னு கொஞ்சம் கொஞ்சமா ஆழமா காலை ஊன்றிக்கிட்டு இருந்த நேரம். அப்போ முழு மூச்சாக எப்படியாவது ஒரு இடத்தைப் பிடிக்கணும், மக்களின் மனசை வெல்லணும் என்பதற்கு மேலே அவ்வளவாக எதிலும் ஆர்வம் இல்லை.
அப்பதான் ஒருநாள் மாலையில் ஒரு பெண் ஸ்டுடியோவில் இருந்து அவசர அவசரமாக வெளியே வர்றாங்க. தோளிலிருந்து துப்பட்டா நழுவி விழுகிறது. அடுத்த அடி அவங்க எடுத்து வைக்கிற நேரத்திற்குள் நான் எடுத்துக் கொடுக்கிறேன்.

அவங்களும் நிமிர்ந்து பளிச்சென்று சிரித்து ‘ரொம்ப நன்றி’ன்னு சொல்லிட்டுப் போறாங்க. அதுவரை நான் பார்க்காத பறவை பேசி சிறகடிச்ச மாதிரி இருக்கு. அவங்க இந்த லலிதாதான்.

லலிதா

ஷோபி மாஸ்டர் ‘உன்னோட துப்பட்டாவை நான் எடுத்துக் கொடுத்தேன். ஞாபகமில்லையா’ன்னு பின்னாடி கேட்டார். எனக்கு ஞாபகமில்லை.
ஆனால், அதற்குப்பிறகு அவரை தூரத்தில் வச்சு பார்த்த ஞாபகம் இருக்கு. யாரோ ‘பவுல்ராஜ் மாஸ்டர் பையன் ஷோபி டான்ஸ் ஆட வந்திட்டாரு. ஸ்டெப் எல்லாத்திலும் ஸ்டைல்’னு பேசிக்கிறாங்க.

திரும்பிப்பார்த்தால் அங்கேயும் ஒரு ஸ்டெப் போட்டுக்கிட்டே இருக்கார். ஆக, கண்டதும் காதலா… இல்லவே இல்லை. விஜய் சாரோட ‘என்ன அழகு... எத்தனை அழகு’ன்னு சேர்ந்து ஆடினார். அது உடனே ஷோபியை பிரபலம் ஆக்கிடுச்சு. கூட்டத்தில் ஆடினாலும் அவரை ரசிகர்களின் கண்கள் தேட ஆரம்பிச்சிடுச்சு.

அப்படி தேட ஆரம்பிக்கிறதுதான் நல்ல நேரம். அப்ப சின்னி பிரகாஷ் சார்கிட்டே நாங்க ஆடிக்கிட்டு இருக்கோம். அவரோட பாய்ஸ் எல்லோரும் நல்ல உயரத்தில் இருப்பாங்க. அப்படியே ஒரு சின்னதாக ஆடினவங்களை கலைச்சுப்போட்டு சேர்த்ததில் ஷோபி வந்து என் பக்கத்தில் வந்து ஜோடியாக ஆட நிற்கிறார்!

அடடா, உடனே காதலான்னு கேட்டால் அப்பவும் இல்லை. சரின்னு இரண்டு பேரும் சேர்ந்து ஆடுறோம். கூட ஆடினவங்க, எட்டி நின்னு பார்த்தவங்க எல்லோரும் ‘இரண்டு பேர் கெமிஸ்ட்ரியும் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு சொல்றாங்க. அப்புறம் நல்ல ஃப்ரெண்ட்ஸா ஆனோம். அதுவும் காதல் வந்த காலமாக இல்லை.

ஷோபி

எங்களுக்குள் லவ்வே இல்லை. ஆனால், எல்லோருமே ‘இவர்கள் காதல் ஜோடியானால் நல்லாயிருக்கும்’னு சொன்னாங்க. ‘இந்த ஜோடியைப் பாரு’ன்னு காட்டி காட்டிப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் எங்களைச் சேர்த்து வைச்சிட்டாங்கன்னுதான் சொல்லணும். அப்புறம் 15 வருஷமாக பழகினோம். அப்புறம் எங்களுக்குள்ளே பேசிக்கொண்டோம். என்னோட நெருங்கிய நண்பர்கள் ‘நீ ஒருத்தியையும், அவங்க இன்னொருத்தரையும் கல்யாணம் செய்துக்கப் போறாங்க. அப்படியிருக்கையில் நல்ல அலைவரிசையில் இருக்கிற நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துகொண்டால் என்ன’ன்னு கேட்டாங்க.

அதிலிருக்கிற உண்மையை யோசித்து, எங்க இரண்டு பேர் வீட்டிலும் சொன்னோம். ஃப்ரெண்ட்ஸ் சொன்னபடி இந்த ஜோடியை உண்மையாக்கினால் என்னவென்று தோன்றிவிட்டது. உன் விருப்பமும், என் விருப்பமும் எல்லாம் கலந்து அது நம் விருப்பமென மாறினால் நல்லதுதானே என நினைத்துவிட்டோம். இதற்குள்ளாக என் வீட்டின் நலன்களில் லலிதா அக்கறைப்பட ஆரம்பித்துவிட்டாள். ‘எனக்கு நீ, உனக்கு நான்’ என நினைக்கத் தொடங்கும்போது, தானாக அன்பு பெருக ஆரம்பித்து விடுகிறது.

லலிதா

ஷோபியின் அம்மா என்னை நேசிக்கத் தொடங்கியிருந்தார். ஷோபியின் சகோதரி பிரியா என்னை தோழியாகவே நினைத்தார். ஒரு குறையும் இல்லை. என்னை கையில் ஏந்தத் தொடங்கியிருந்தார்கள். ராஜுசுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களிடம் சேர்ந்து மிக பரபரப்பாக இருந்த கட்டம். எதிர்காலத்திற்கு பெரிய அடையாளங்கள் தெரிந்தன. இப்போதே அதற்கான ஒழுங்குமுறைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

இருவர் பக்கமிருந்தும் எங்கள் அன்பிற்கு மரியாதை தந்து திருமணம் செய்து வைத்தார்கள். அவரை ஒரு வடிவத்திற்குள் கொண்டுவந்தேன். தோல்விகள் அணுகவிடாமல், அவரை வெற்றிக்குப் பழக்கினேன். அவரை நான் காதலனாக நினைத்ததைவிட புருஷனாக உணர்ந்ததே அதிகம்! என் கண்கள் கசியும்போதெல்லாம் அனுசரணையாக அதை ஒத்தி எடுத்த விரல்கள் ஷோபியுடையவை. என்னை அவரே முழுமையாக்கினார். தாய்மை தந்து, சுதந்திரமாக இயங்க அனுமதித்து, என்னை முழு மனுஷியாக்கியது அவர்தான்.

ஷோபி

அழகான கோலத்தைப் பார்க்கும்போது, எந்தப்புள்ளியிலிருந்து கோடு இழுத்து ஆரம்பிச்சிருப்பாங்கன்னு எப்படிச்சொல்ல முடியாதோ… அதே மாதிரி எந்தப்புள்ளியில் எங்கள் இதயம் இணைந்தது என்பதுகூட தெரியவில்லை. எனக்கு லலிதா மேல் ஈர்ப்பு ஏற்பட பல காரணங்கள்.

எளிமையாக இரு்ககிறாள், நடப்புகளை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. என் அம்மாவும், அவள் அம்மாவும் அவளுக்கு வேறு வேறானவர்கள் இல்லை. வெறுங்கையில் இருந்தவனையும், இப்போது ஷோபி மாஸ்டர் என்பவனையும் ஒன்றாகப்பார்க்கிற ஈர மனது அவளுடையது.

இவ்வளவு புகழையும், நடனத் திறமையையும் கொஞ்சமாக பயன்படுத்திக்கொண்டு அவள் எங்களுக்காக செலவிடுகிற நேரம் அருமையானது. எங்களின் அன்புக்கு, பிரியத்திற்கு ஆதாரமாக மகள் ஷமந்தகமணி அஸ்விகா ஷோபி.நல்ல டான்ஸ்னா என்ன பிரதர், மனதிலிருந்து வரிகளை எடுத்துப்போட்டு, சந்தோஷமா அதை இசையில் கலந்து, அதை அழகான ஸ்டெப் போட்டு ஆடிப்பார்க்கிறதுதானே! என் வாழ்க்கையும் லலிதாவோடு அப்படித்தான்!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்