வந்தது கொரோனா... முறுக்கு வியாபாரியானார் கல்லூரி பேராசிரியர்!



ஒரு தொற்றுநோய் உலகையே முடக்கி கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்க... பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்களும் அடக்கம் என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம். கோவை பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த டி.மஹேஷ்வரன், இன்று தன் சொந்த ஊரில் முறுக்கு வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.  

‘‘பிப்ரவரி மாசமே கல்லூரி வேலையை விட்டுட்டு சொந்த ஊரான நெய்வேலிக்கு வந்துட்டேன். ஒவ்வொரு பேராசிரியரும் தலைக்கு அஞ்சு அட்மிஷன் கொண்டு வரணும்னு கெடு விதிச்சாங்க. அதோடு சம்பளத்திலும் கை வைச்சாங்க.இது வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சது. குடும்பப் பொறுப்பு, செலவு, மாசா மாசம் இஎம்ஐ... இப்படி கழுத்தை நெரிக்கிற பல பிரச்னைகள் இருக்கே!இதை எப்படி சமாளிக்கறதுனு நானும் என் குடும்பமும் யோசிச்சோம்.

என் அப்பா சின்னதா ஒரு கடை வெச்சிருக்கார். போதுமான போக்குவரத்து இல்லாம எந்த தின்பண்டமும் வரலை. எல்லா பாட்டில்களும் காலியா இருந்துச்சு. அதே சமயம் என் மனைவி சித்திரை செல்வம், திருவாரூரைச் சேர்ந்தவங்க; திருவாரூர் ஸ்பெஷல் முறுக்கு சுடுறதுல அவங்க திறமைசாலி.
இதையே எங்க முதலீடா வெச்சு சுவையான பலகாரங்கள் செய்தோம். அதை எங்க அப்பா கடைலயே விற்பனைக்கு வைச்சோம்...’’ என்னும் மஹேஷ்வரன், வீட்டுப் பலகாரங்களுக்கு அதிக கிராக்கி இருப்பதைப் புரிந்துகொண்டார்.

‘‘ஊரடங்கு காலத்துல சுத்தமா... வாய்க்கு ருசியா நாங்க பலகாரங்கள் செய்து விற்பதைப் பார்த்து பலரும் எங்ககிட்ட வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப நாள் ஒன்றுக்கு ரூ.800 வரை வருமானம் வருது.

இ-பாஸ் போக்குவரத்து தடை முடிஞ்சபிறகு எங்க வியாபாரம் எப்படியிருக்கும்னு தெரியலை. ஒருவேளை மக்கள் வீட்லயே இருக்கறதால நொறுக்குத் தீனி சாப்பிடறாங்களா என்ற கேள்வியும் எழுது. இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 4 கிலோ முதல் 5 கிலோ வரை விற்பனை ஆகுது. ஊரடங்குக்கு அப்புறம்தான் இந்தத் தொழிலை விரிவுபடுத்துவது பத்தி யோசிக்கணும்.

இனி பொறியியல் கல்லூரிகளுக்கு பெரிய எதிர்காலம் கிடையாது. ஏற்கனவே இன்ஜினியரிங் படிச்சவங்க வேலையில்லாம இருக்காங்க. இந்த நிலைல புதிதா மாணவர்கள் சேர்க்கையை எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியலை...’’ என்னும் மஹேஷ்வரன், தன் சக பேராசியர்களை நினைத்து வருந்துகிறார். ‘‘என் நண்பர் ஒருத்தர் டிரிபுள் இ பேராசிரியர். இப்ப தன் ஏரியாவுல மிக்ஸி, கிரைண்டர், டிவி மாதிரியான எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுது பார்த்துட்டு இருக்கார்.இன்னொரு பேராசிரியர், தன் சொந்த ஊர்ல ஆடு மேய்க்கறார்.

இதையெல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப வேதனையா இருக்கு. வேலைக்கு இடைல அட்மிஷனுக்கு உதவி செய்ங்கன்னு சொன்னா செய்யலாம். ஆறு செமஸ்டர் பாடங்களை மூணு மாசத்துல முடிச்சுட்டு அவங்கவங்க சொந்த ஊருக்குப் போய் அட்மிஷனுக்கு மாணவர்களைப் பிடிங்கனு சொன்னா..?

ஆரம்பத்துல நாங்களும் அப்படி செஞ்சோம். எனக்கு நெய்வேலி சொந்த ஊர். அதனால கடலூர் மாவட்டத்தை எனக்குக் கொடுத்தாங்க. ஒவ்வொரு ஸ்கூலா ஏறி இறங்கி... டேட்டா திரட்டி... வீடு வீடா போய் பெற்றோர்கள்கிட்ட பேசி... அவங்க பிள்ளைகளை எங்க கல்லூரில சேர்க்க தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சு... இதெல்லாம் செஞ்சாதான் சம்பளம்.

முடியலை. மன உளைச்சலுக்கு ஆளானேன். வேற கல்லூரில வேலைக்கு முயற்சியும் செஞ்சேன். இண்டர்வியூவுக்கு கூப்பிட்டவங்க என் அனுபவத்தையோ திறமையையோ பார்க்கலை... மாறா, அட்மிஷனுக்கு என்னென்ன திட்டங்கள் உங்ககிட்ட இருக்குனு கேட்டாங்க.

இன்னொரு கல்லூரில மூணு அட்மிஷன் கொண்டு வாங்க... அப்பாயின்ட்மென்ட் லெட்டர் தர்றோம்னு சொன்னாங்க. இத்தனைக்கும் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000தான்.

எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். கடைசியா என் மனைவியுடைய திறமைதான் கைகொடுக்குது. நானே சொந்தமா ஒரு தொழிலை உருவாக்கி முதலாளி ஆகிட்டேன். சைக்கிள் கேப்புல தப்பிச்சது நான்தான். பல பேராசிரியர்கள் இந்த நிமிஷம் வரை என்ன செய்யறதுனு தெரியாம திண்டாடிட்டு இருக்காங்க. 

என்னால முடிஞ்ச வரை இந்த வியாபாரத்துல என் சக நண்பர்களையும் சேர்த்துக்கலாம்னு இருக்கேன். எல்லாருக்கும் நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான்.உங்க மனைவி, அம்மா, சகோதரிகள்கிட்ட என்ன திறமை இருக்குனு கண்டுபிடிங்க... அதுதான் உங்களுக்கு இனி சோறு போடும்!’’ தீர்மானமாகச் சொல்கிறார் மஹேஷ்வரன்.

ஷாலினி  நியூட்டன்