கதையை நோக்கி கேமராவை வைப்பதே நல்ல ஒளிப்பதிவு! ரவி கே.சந்திரன் பளீர்



ரவி கே.சந்திரனைத் தள்ளி வைத்துவிட்டு இந்திய ஒளிப்பதிவாளர்களின் சரித்திரத்தை யாரும் எழுதிவிட முடியாது. வடக்கிலிருந்து தெற்கு வரை அவரது கால்ஷீட்டை நிச்சயப்படுத்தி விட்டுத்தான் அடுத்த வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் தொடங்கி அஜித் வரை அவர் கேமரா தொட்டுப்பார்க்காத முகம் இல்லை. மும்பைக்கும், சென்னைக்குமாக விமானத்தில் பறந்து கொண்டேயிருந்த அவருக்கு, கட்டிப்போட்ட லாக்டவுனில் கொஞ்சமாக ஓய்வு. கலைஞர் கருணாநிதி நகரின் தனித்த வீடொன்றில் தேநீரும், நல்ல ரொட்டித் துண்டுகளோடும் சேர்ந்து நடந்தது இந்த உரையாடல்.எப்படி அவ்வளவு சரியாக ஒளிப்பதிவைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்..?
என்னோடு உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். மூத்தவர் ராமச்சந்திர பாபு பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். அவரோடு உடன் படித்தவர்கள் ஜெயபாதுரி, சுபாஷ் கய் போன்றவர்கள்.

எங்கள் வீட்டில் கேமராக்களும், புத்தகங்களும் நிறைந்து கிடந்தன. அப்போதுதான் பிரெஞ்சின் நியூவேவ் படங்கள் வர ஆரம்பித்திருந்தன. இருபது வயதிலேயே என் அண்ணன் ‘அக்ரஹாரத்தில் கழுதை’யை ஒளிப்பதிவு செய்துவிட்டார். அவருடைய பாதிப்பு என்னில் நிறைந்திருந்தது.
என் சிநேகிதன் முரளி என்பவன் உள்ளூர் காயத்ரி தியேட்டரில் ஆபரேட்டராக இருந்தான். தினமும் படம் பார்க்க ஆரம்பித்தேன். வீட்டிற்கு பயந்து பாதிப்படங்களாக பார்த்துவிட்டு போயிருக்கிறேன். அப்புறம் அங்கிருந்து மணல் லாரியில் நண்பர்களோடு சேர்ந்து ஏறி, சென்னை ஆனந்த் தியேட்டரில் இறங்கி படங்கள் பார்த்து திரும்பியிருக்கிறேன்.

ஆக, அண்ணன் கூடவே இருந்து, சினிமா பார்த்து வெறியேறிய காலங்கள் தொடர்ந்து என்னையும் சினிமாவில் கொண்டு வந்தது. ஆனால், மிகவும் விரும்பி, ரசித்துத்தான் இங்கே வந்தேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எடுத்துரைக்கிறார்கள். சினிமாவிற்கு ஏற்ற ஒளிப் பதிவு என்பதுதான் என்ன..?நான் ஒளிப்பதிவு செய்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஒரு ரியலிஸ்டிக் படம். அதற்கு அது மாதிரிதான் ஒளிப்பதிவு வேண்டும். ஹீரோ பத்து பேரோடு சேர்ந்து பறக்கிற படத்திற்கு அதற்குரிய லைட்டிங்தான் செய்ய வேண்டும்.

‘கன்னத்தில் முத்தமிட்டாலி'ல் தலைக்கு மேலாக லைட் போட முடியாது. அந்தக் கதைக்கு அது உறுத்தும். ‘சிட்டிசன்’, ‘ஏழாம் அறிவு’க்கு செய்யலாம். அதற்கு ஹீரோயிசம் வேண்டும். இப்போது ‘மெர்சலி'ல் ஒரு புது கேமராமேன் அருமையான லைட்டிங் வைத்திருந்தார். ‘கைதி’யில் இன்னொரு கேமராமேன் வேறு மாதிரி செய்திருந்தார். ‘கைதி’ மாதிரி கதையில் ‘மெர்சல்’ லைட்டிங் பண்ண முடியாது. அதில் பாட்டு கிடையாது. ஓர் இரவு கதை. ‘மெர்சல்’ ஒளிப்பதிவில் பெரிய ஹீரோ, பிரம்மாண்டம் பொருத்தமாக இருந்தது. இதுவும் கதைக்கான ஒளிப்பதிவு. ஆக' இரண்டுமே கதைக்கான ஒளிப்பதிவுதான்.

‘பிளாக்’ (Black) போன்ற  படம் செய்யும்போதான மனநிலை பிற படங்களிலும் இருக்குமா..?
‘நாயகன்’ படம் பண்ணி 30 வருஷத்திற்கு மேலே ஆச்சு. அத்தனை வருஷத்திற்குப் பின்னாடி இப்ப பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கு. பி.சி.சார் லைட்டிங், மணிரத்னம், எடிட்டிங், கமல்னு அப்படி ஒரு கூட்டணி. இப்ப என் 20 வயது பையன் உட்கார்ந்து ரசிக்கிறான். ஒளிப்பதிவு காலத்தை வென்று நிக்கணும்.

பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ அப்ப பார்த்தப்பவும், இப்ப பார்க்கிறப்பவும் நல்லாயிருக்கு. ‘திருடா திருடா’, ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’ அப்படிப் பார்க்கலாம். சந்தோஷ் சிவனின் ‘இருவர்’, ‘ரோஜா’ இன்னும் புதுசாகவே இருக்கிறது. அப்படி இருக்கிறது நல்ல ஒளிப்பதிவு. ‘ஷோலே’ இன்னிக்கு பார்த்தாலும் ஹாலிவுட் ஃபீலிங்ஸ் தருது. ‘சந்திரலேகா’ முரசு நடனம் இப்ப முடிகிற காரியமா! இயக்குநர் தர் படத்தோட ஷாட் டிவிஷன் பார்க்கப் பார்க்க நல்லாயிருக்குமே... நல்ல படங்களில் நாம் செய்கிற ஒர்க் பேசப்படும். அது சந்தோஷம்தானே.

இந்திப் படங்களுக்கும், இங்கேயும் என்ன வித்தியாசம் சொல்வீங்க..?

அங்கே நிறைய கார்ப்பரேட் வந்திட்டாங்க. ஸ்கிரிப்ட் பக்காவாக இருக்கணும். ஸ்பாட்டில் போய் யோசிக்கிறது என்பதற்கெல்லாம் இடமே இல்லை.
ஒரு ஹீரோ சைக்கிளில் வர்றார்னா, அது என்ன சைக்கிள், அதன் அமைப்பு எப்படியிருக்கணும் என்பது வரை க்ளியராக இருக்காங்க. அங்கே சந்தேகங்களுக்கு இடமில்லை.

நான் அடுத்த வருஷம் எடுக்கப்போகிற படத்துக்கு இப்பவே லொகேஷன் பார்த்திட்டேன். அவர்கள் ‘அசுரன்’ அளவில் படம் பண்ண முடியாதுதான். ஆனால், ‘ஆர்ட்டிகிள் 15’, ‘தப்பட்’னு கொண்டு வர்றாங்க. பெரிய ஹீரோக்களை அதிகம் நம்பாமல் ஆயுஸ்மான் குரானா மாதிரி நாலைந்து ஹீரோக்கள் வந்திட்டாங்க. அவர்களுக்கு வரவேற்பு இருக்கு.

நாம் சும்மா இங்கே பார்த்த டாப்ஸி, அங்கே நல்ல ரோல்ல நடிச்சு பெரிய பெயர் வாங்கிட்டாங்க. இங்கேயும் அப்படிப்பட்ட படங்கள் வருது. ஆனால், புரட்சிப் பெண்மணியாகவே வர்றாங்க. OTTக்காகவே எடுக்கிற படங்கள் நல்லாவே இருக்கு.உங்களுக்கு பெரிய சிஷ்யர் கூட்டம் இருக்கு…32 அஸிட்டெண்ட்ஸ் இந்தியா முழுக்க பரவியிருக்காங்க. யார் பெஸ்ட்னு கேட்டால் யாரைச் சொல்றது! என் அஸிஸ்டெண்ட் சத்யா நேஷனல் அவார்ட் வாங்கிட்டான். நானே வாங்கலை! ரவி வர்மன், அயன்கா போஸ், ‘பாகுபலி’ செந்தில், மணிகண்டன், ‘96’ பிரேம்குமார், ஆர்.டி.ராஜசேகர், என்கூட ஒர்க் பண்ணினவங்கதான். கேசவ் பிரகாஷ் ‘விருமாண்டி’ பண்ணினான். இப்ப மனுஷ்நந்தன் வரைக்கும் வந்தாச்சு.

எல்லோரும் என்கிட்டே தொடர்பில் இருக்காங்க. எவ்வளவு வேலையிருந்தாலும் ரவிவர்மன் இரண்டு நாளைக்கு ஒரு தடவை போன் பண்ணிடுவான். இப்ப நீங்க வரும்போது நான் பேசிக்கிட்டு இருந்தது மனுஷ் நந்தனோடுதான். குருகுல வாசம். அதனால் பாசம். பாம்பே அஸிஸ்டெண்ட்ஸ் கொஞ்சம் விலகி இருப்பாங்க. எப்படியும் அவங்களுக்கு முதல் படம் பிரேக் வாங்கிக் கொடுத்திடுவேன். சரி... எனக்கு 32 பிள்ளைகள்னு வச்சுக்குங்க பிரதர்!
உங்க மகன் சந்தானகிருஷ்ணன் பெரிய கேமராமேன் ஆகிட்டார்...

அவன் பெரிய ஆக்‌ஷன் படங்கள் எடுத்து பண்றான். அவன்தான் பண்றான்னு நம்ப முடியலை. இளங்கன்று பயமறியாதுன்னு சொல்வாங்க. எக்ஸ்பரிமெண்டா பண்றான். ‘பாகி 2’, ‘கபீர்சிங்’ எல்லாம் தாறுமாறு ஹிட். இயக்குநர்  பால்கி பார்த்திட்டு ‘என்னய்யா உன் பையன் பின்றான்’னு சொல்றார். இத்தனைக்கும் அவர் பி.சி.ராமை வச்சுத்தான் படம் பண்ணுவார்.

ரவிவர்மன் சிபாரிசில் ஒரு படம் மலையாளத்தில் செய்தான். பயங்கர ஹிட். அங்கே போய் நம்ம பெயரைச் சொல்லாமல், ரவிவர்மன் அசிஸ்டெண்ட்னு சொல்லியிருக்கான். அமிதாப் பார்த்திட்டு ‘உன் பையன் அருமையாக ஷாட் வைக்கிறான்'னு புகழ்கிறார். அக்‌ஷய் குமார் ‘உன் பையனோட படம் பண்ணணும்’னு சொல்றார். 19 வயசிலேயே நசிருதீன் ஷா நடிச்ச ஒரு குறும்படம் பண்ணி பெயர் வாங்கிட்டான். சரி, இவனை 33வது பிள்ளைன்னு வச்சுக்குங்க!பெற்ற அனுபவம்..?

சஞ்சய் லீலா பன்சாலி ‘நீ செய்கிற தப்பு எல்லாம் பதிவாகிடும். அழிக்க முடியாது. ஒவ்வொரு ஷாட் வைக்கிறபோதும் நல்லா யோசி’ன்னு சொல்வார்.
அதுதான் உண்மை. எத்தனையோ பேர் இந்த இடத்திற்கு வரமுடியாமல் இருக்கிற நேரத்தில், நாம் இருப்பது ஒரு கவுரவம். கதையை நோக்கி கேமராவை வைச்சால் போதும்… அதுதான் நல்ல ஒளிப்பதிவு. எது எப்படியிருந்தாலும் முந்தைய வெற்றிதான் நமக்கு அடையாளம்!=

நா.கதிர்வேலன்