அணையா அடுப்பு-8



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அண்ணி வடிவில்
வந்த வடிவுடையம்மன்!

வாகன வசதிகள்

பெருகிவிட்ட இன்றைய தேதியில் ஆச்சரியமாக இருக்கலாம்.அப்போதெல்லாம் திருவொற்றியூருக்கு சென்று ஏழுகிணறு வீட்டுக்கு திரும்புவது பெரும் பயணம்.பணக்காரர்களாவது மாடு பூட்டிய வில்லு வண்டியில் விரைவாகப் பயணிப்பார்கள்.சாதாரணர்களுக்கு கால்களே வாகனங்கள்.
இராமலிங்கம் அன்று திருவொற்றியூர் சென்றுவிட்டு வீடு திரும்ப வெகு தாமதமாகி விட்டது.அண்ணியை எழுப்பி உணவு கேட்டு சிரமப்படுத்துவது அவருக்கு ஒவ்வாத செயல்.பசியோடும், நடந்த உடல் களைப்போடும் வீட்டுத் திண்ணையில் சாய்ந்தார்.நடு இரவு இருக்கும்.

ஏதோ சத்தம் கேட்டு விழித்தார்.தட்டில் கொஞ்சம் சாதம் போட்டு புன்னகையோடு அவர் கண் முன்பாக நின்றார் அண்ணி.“பசியோடு தூங்காதீர்கள் தம்பி!”அண்ணிக்கு நன்றி சொல்லிவிட்டு கை கால் கழுவிவிட்டு அங்கேயே உணவு உண்டார் இராமலிங்கம்.“அண்ணி, நீங்கள் சென்று நித்திரை கொள்ளுங்கள்… நான் திண்ணையிலேயே படுத்துக் கொள்கிறேன்…”

தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அண்ணி.

சற்று நேரம் கழித்து மீண்டும் கதவு திறக்கப்பட்டது.
“பசியோடு தூங்காதீர்கள் தம்பி...” மீண்டும் அண்ணி வந்து சொல்ல, இராமலிங்கம் குழம்பினார்.
“அண்ணி! சற்று நேரம் முன்பு நீங்கள்தானே வந்து எனக்கு உணவு கொடுத்தீர்கள்?”

“என்ன தம்பி சொல்கிறீர்கள்? இரவு வெகுநேரம் நீங்கள் வராமல் போகவே, திருவொற்றியூரிலேயே தங்கிவிடுவீர்களோ என்று கருதி, தூங்கப் போய்விட்டேன். இப்போதுதான் விழிப்பு வந்து, நீங்கள் வந்திருப்பதைப் பார்க்கிறேன்…”குழப்பம் இப்போது அண்ணிக்கு.

இராமலிங்கமோ தெளிவாகி விட்டார்.திருவொற்றியூர் இருந்த திசை நோக்கி கைகூப்பினார்.“அண்ணியின் வடிவில் வந்த அன்னையே! திருவொற்றியூர் வடிவுடை நாயகியே… என் பசி போக்க இந்த எளியவனின் இல்லத்தில் எழுந்தருளினாயோ…” என்று உளமுருகப் பிரார்த்தித்தார்.இச்சம்பவத்தை அவர் ஒரு பாடலாகவும் எழுதியிருக்கிறார்.

நண்பர்களோடு ஒருமுறை திருவொற்றியூருக்கு நடந்து கொண்டிருந்தார்.
அப்போதெல்லாம் வழியில் நிறைய சிறு வனங்களும், குளங்களும் இருக்கும்.
மனிதருக்கு ஆபத்து தராத எளிய விலங்குகளும் ஏராளமாக உண்டு.

திடீரென மேகம் கறுத்தது.
சற்று நேரத்தில் அடைமழை பொழிந்தது.
வழியில் திடீரென்று காட்டாறுகள் தோன்றின.
இப்படி இடையில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று

இராமலிங்கத்தின் நண்பர்கள் பதைபதைத்துப் போனார்கள்.இந்த மழையில் பாதுகாப்பாக பயணிக்கவும் முடியாது; வீடு திரும்பவும் முடியாதே என்று வருத்தமடைந்தனர்.ஒரு சிலர் மழையை சபிக்கவும் செய்தனர்.“மழையை சபிக்காதீர்கள். அது நமக்கு இயற்கையின் பரிசு…” என்று புன்னகையோடு சொன்ன இராமலிங்கம், “குறுக்கு வழியில் விரைவில் திருவொற்றியூருக்கு போய்விடுவோம், வாருங்கள்…” என்று அழைத்தார்.
‘திருவொற்றியூருக்கு குறுக்கு வழியா?’ எல்லோருக்கும் அதிசயம்.

ஏனெனில் அது நேராகக் கோடு போட்டது போன்ற பாதை.ஒரு பக்கம் கடல். மறு பக்கம் வனங்களும், நீர்நிலைகளும்.

ஏதோ ஒரு குறுக்குப் பாதையில் திடீரென இராமலிங்கம் நடக்கத் தொடங்கினார்.மழையின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.

தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அவரது நண்பர்களும் அவரைப் பின்பற்றி நடந்தனர்.எவரும் எதிர்பாராத அதிசயமாக அடுத்த சில நிமிடங்களிலேயே திருவொற்றியூரை அடைந்தனர்.அச்சம்பவத்துக்குப் பிறகு அப்பாதையைக் கண்டவர் எவருமில்லை.

அப்படியொரு குறுக்குவழி இருந்தது பற்றி வேறு எவரும் சொன்னதுமில்லை.இராமலிங்கம் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதம் குறித்து, அன்று அவரோடு பயணித்த வேலாயுத முதலியார் மற்றும் சோமு செட்டியார் போன்ற நண்பர்கள் பின்னர் மற்றவர்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.

திருவொற்றியூர் அவரைக் கவர்ந்த ஊராக அமைந்துவிட்ட போதிலும், தன்னை முதன்முதலாக ஆட்கொண்ட தெய்வமான முருகனை அடிக்கடி திருத்தணிகை சென்று தரிசித்து விட்டு வந்தார்.

ஒவ்வொரு முறை திருத்தணிகைக்குச் செல்லும்போதும் சரி, சென்னையில் இருக்கும்போது திருத்தணிகை நினைவு வந்தாலும் சரி, நிறைய பதிகங்கள் பாடியிருக்கிறார்.

பிற்பாடு அவையெல்லாம் ‘திருத்தணிகைப் பதிகங்கள்’ என்றே நூலாகி இருக்கின்றன.திருவொற்றியூர், திருத்தணிகை தவிர்த்து சென்னையைச் சுற்றியிருந்த அருள் பெற்ற தலங்களான திருமுல்லைவாயில், திருவள்ளூர், திருவலிதாயம் போன்றவற்றுக்கும் சென்று வருவார்.

ஒரு முறை திருவலிதாயத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த திருவல்லீசுவரருக்கு ஒரு பழைய துணி அணிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு நெஞ்சுபொறுக்காமல் குமுறினார்.

‘நீரே கந்தை சுற்றி நிற்பீர் எனில் எமக்கு ஈயும் பரிசு என்ன?’ என்று கோபமுற்றுப் பாடினார்.இளைஞர் ஒருவர் சன்னதியில் நின்று கோபமாகப் பாடியதைக் கண்ட கோயில் நிர்வாகத்தார் பதறிப் போனார்கள்.வேகமாக ஓடிப்போய் புதுத்துணி வாங்கிவந்து ஈஸ்வரருக்கு அணிவித்தார்கள்.

இராமலிங்கம் அப்போதெல்லாம் ஒரு கோயிலுக்குப் போனால் அங்கே முறையான வழிபாடுகள் நடக்கிறதா, கடவுளுக்கு செய்யவேண்டிய திருப்பணியை எல்லாம் கோயில் நிர்வாகத்தார் சிறப்பாக செய்கிறார்களா, கோயில்களின் நிர்வாகம் எப்படி இருக்கிறது, கல்வெட்டுகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பார்.

அவருடைய இத்தகைய பண்புகளை அவர் எழுதியிருக்கும் பதிகங்களின் வாயிலாகவே நாம் அறிய முடிகிறது.சைவ மரபில் பிறந்த இராமலிங்கம் திருவள்ளூர், திருக்கண்ணமங்கை ஆகிய வைணவத் தலங்களையும் வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்து அவருக்கு சைவ  வைணவ வேறுபாடு இருந்ததில்லை என்பதை உணரலாம்.

மேலும் திருமாலைப் போற்றியும் அவர் பாடியிருக்கிறார்.அந்நாளைய சென்னையில் ஒரு புகழ் பெற்ற பிரமுகராகவே இராமலிங்கம் இருந்திருக்கிறார்.
நிறைய நூல்கள் வாசிப்பது, வாசித்தவற்றை பிறருக்கு எடுத்துச் சொல்வது, குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது, பிரசங்கம் செய்வது, விழாக்களில் உரையாற்றுவது... இவ்வாறாக, ஞானத்துறையில் முழுமையாக ஈடுபட்டு, முறையாகக் கல்வி கற்காதவராக இருந்தாலும் வித்வான் என்று மற்றவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டார்.

அப்போதெல்லாம் நூல்களை வெளியிடுபவர்கள், பெரிய வித்வான்களிடம் அளித்து ‘சாற்றுக்கவி’ பெறுவார்கள். அதாவது வாழ்த்துரை, அணிந்துரை மாதிரி.தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’. அந்நூலை எழுதியவர் எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

அவரும், இராமலிங்கத்துடன் நட்பாக இருந்தவர். அவர் எழுதிய நீதி நூல் ஒன்றுக்கு சாற்றுக்கவி எழுதி வழங்கியிருக்கிறார் இராமலிங்கம்.

அந்நூலில், ‘சென்னப்பட்டணம் வித்வான் ஸ்ரீராமலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றியது’ என்கிற அறிமுகத்தோடு அந்த சாற்றுக்கவி அச்சாகி இருக்கிறது.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்