பசியற்ற ஆரணியை நோக்கி ஒரு தனி மனிதனின் பயணம்!



‘‘இங்க பிச்சை எடுக்கிறவங்களுக்கு எப்படியாவது உணவு கிடைச்சிடுது. ஆனா, ஆதரவற்ற முதியவர்களும் குழந்தைகளும் உணவுக்காக என்ன செய்வாங்கனு எப்பவாவது நாம யோசிச்சிருப்போமா?

உண்மைல, அவங்க உணவில்லாம பசியோடு எதுவும் பண்ண முடியாத நிலைல வாழ்ந்திட்டு இருக்காங்க. சிலர் அரசின் முதியோர் பென்ஷன் வாங்கினாலும் கூட சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கறாங்க.

இதை வெளியில சொல்லவும் முடியாம உள்ளுக்குள்ள புழுங்கிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தேன். ரொம்ப வேதனையா இருந்துச்சு. இவங்களுக்கு உதவணும்தான் இந்த விஷயத்தை கையிலெடுத்தேன்…’’ அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் சுதாகர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த இவர் தன் மனைவி வித்யாலட்சுமியுடன் இணைந்து ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளுக்காகக் கடந்த 555 நாட்களாக உணவு கொடுத்து வருகிறார்.

‘அறம் செய்வோம்’ என்ற அமைப்பின் வழியே இப்படியொரு நல்ல காரியத்தை முன்னெடுத்து வருகிறார் இந்த மனிதர். இதுமட்டுமல்ல. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக சிக்கன், முட்டை, சுண்டல் எனச் சிற்றுண்டியாகத் தன்னால் முடிந்தவரை வழங்கி வருகிறார்.

‘‘எல்லாமே ஒருவேளை உணவுதான். ஆனா, அதுல அவங்கபடுற சந்தோஷத்தைப் பார்க்கிறப்ப எங்களுக்கு அவ்வளவு திருப்தி கிடைக்குது. இன்னும் நிறைய செய்யணும்னு இருக்கேன்…’’ உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சுதாகர். ‘‘சொந்த ஊர் ஆரணி. இங்க 2012ல் இருந்து ‘ஆரணி டைம்ஸ்’னு உள்ளூர் செய்திப் பத்திரிகை நடத்திட்டு வர்றேன். இந்த நேரத்துலதான் ஆதரவற்ற முதியவர்களையும் குழந்தைகளையும் பார்த்தேன். சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க.

இவங்களுக்கு ஒருவேளை உணவையாவது தினமும் கொடுக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். 2019 ஜனவரி 1ம் தேதியிலிருந்து மதியம் ஒரு வேளை கொடுக்கலாம்னு ஆரம்பிச்சேன். முதல்ல பால்காரர்கள், கேஸ் சிலிண்டர் போடுறவங்ககிட்ட இந்த மாதிரி உண்மையில முடியாதவங்க இருந்தா தகவல் சொல்லுங்கனு சொன்னேன். அவங்க பல வீடுகளுக்குப் போறதால கஷ்டப்படுறவங்களைப் பார்த்து தகவல்கள் சொன்னாங்க.

இதுல ஒரு 20 பேரைத் தேர்ந்தெடுத்து உணவு கொடுக்க ஆரம்பிச்சேன். இப்ப 85 பேருக்கு உணவு கொடுத்திட்டு வர்றேன். என் வீட்டைச் சுத்தி இருக்கறவங்க பாத்திரத்தை எடுத்திட்டு வந்து வீட்டுலயே வாங்கிட்டுப் போயிடுவாங்க. இவங்களுக்கு வெஜிடபிள், லெமன், புளினு வெரைட்டி சாதங்கள்தான் ஒவ்வொரு நாளும் வழங்கறோம். அடிப்படை உணவு மட்டும்தான். ஆரம்பத்துல என்னுடைய சொந்தக் காசு போட்டுதான் ஆரம்பிச்சேன். உடனே, என் நண்பர்கள் சிலர் மாசம் தங்களால் முடிஞ்ச பங்களிப்பை செய்ய ஆரம்பிச்சாங்க.

அப்புறம் சிலர் பிறந்தநாள், திருமணநாள் போன்ற கொண்டாட்ட நாட்களை முன்னிட்டு மதிய உணவு வழங்க முன்வந்தாங்க. ரூ.1,250 கொடுத்தாங்கன்னா நாங்களே மதிய உணவை வழங்கிடுவோம். இதை வெளிய கடையில வாங்க மாட்டோம். ஏன்னா, சாப்பிடுற பலரும் முதியவர்கள். அவங்க வயிற்றுக்கு ஏதாவது ஆகிடக்கூடாதுனு நாங்களே வீட்டுல தயாரிச்சு வழங்கறோம். என் மனைவியே சமையல் பண்றதால செலவும் குறைவா வருது...’’ என்ற சுதாகர் ஸ்பான்சர் கிடைக்காவிட்டாலும் மதியம் உணவு வழங்குவதை, தான் நிறுத்துவதில்லை என்கிறார்.

‘‘கடந்த ஆண்டு ெமாத்தமே 110 நாட்கள்தான் ஸ்பான்சர் வந்திருக்கும். மீதி 250 நாட்களும் என்னுடைய செலவுலதான் மதிய உணவு வழங்கினேன். நான் பண்ணணும்னுதான் ஆரம்பிச்சேனே தவிர யாரையும் எதிர்பார்க்கல. அதேநேரம், ஸ்பான்சர் வந்தா சந்ேதாஷமா வரவேற்று செய்றோம்.
இதுதவிர, இப்ப ஒன்பது குடும்பத்தை தத்தெடுத்து உதவிகளைச் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். அப்பா, அம்மா இல்லாத, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகள், சிங்கிள் பெற்றோர்னு… இப்படியா இருக்கிற குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து மளிகையும், அரிசியும் வாங்கிக் கொடுத்திட்டு வர்றேன்.
அதாவது, மாசம் ரூ.2,500க்கு இந்தப் பொருட்களை வாங்கித் தந்திடுவேன். எப்படியும் அவங்க ஏதாவது வேலைக்குப் போவாங்க. அந்தப் பணத்தை வச்சு மத்த செலவுக்குப் பயன்படுத்திப்பாங்க.

அப்புறம், இங்க இருளர் குழந்தைங்க நிறைய இருக்காங்க. அவங்க ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்காங்க. அதனால, அவங்களுக்கு மாலைல முட்டையும், சுண்டலும் ஊட்டச்சத்தா கொடுக்க ஆரம்பிச்சேன். 2020 ஜனவரில ஆரம்பிச்சேன். கொரோனா வந்ததால அரசே மூணு வேளை உணவு அவங்களுக்குக் கொடுத்துச்சு. இதனால, அந்த ஊட்டச்சத்து உணவை நிறுத்தினேன். இப்ப உணவு கொடுக்கறதை அரசு நிறுத்தியிருக்கிறதால மறுபடியும் ஆரம்பிச்சிருக்கேன். 25 குழந்தைகளுக்கு நான்கு இட்லி வீதம் தினமும் காலைல கொடுக்கறோம். குழந்தைங்களுக்கு கொடுக்குற இட்லி மட்டும் தற்சமயத்துக்கு ஹோட்டல்ல வாங்கிக் கொடுக்கறேன். சீக்கிரம் அதையும் நாங்களே தயாரித்து வழங்க இருக்கோம்.

முன்னாடி இவங்களுக்கு வாரத்துல ரெண்டு முறை சிக்கனும், முட்டையும் கொடுத்திட்டு இருந்தேன். அரசு உணவு கொடுக்க ஆரம்பிச்சதால அதையும் நிறுத்தியிருந்தேன். இப்ப அடுத்த வாரத்துல இருந்து சிக்கன், முட்டை கொடுக்கலாம்னு இருக்கேன். இதையும் நாங்களே வீட்டுல ரெடி பண்ணி கொடுக்குறோம்.

அடுத்து, அரசு ஆஸ்பத்திரில பிரசவ கிட் கொடுக்குறோம். இது, அம்மாக்களுக்கான கிட். ரொம்ப பின்தங்கின பெண்களுக்கு இந்தக் கிட்டை வழங்கறோம். அந்த ஆஸ்பத்திரில இருக்கிறவங்களே நம்மகிட்ட யாருக்குக் கொடுக்கலாம்னு சொல்லிடுவாங்க. அதை பார்த்து கொடுப்போம்.
800 ரூபாய் மதிப்புள்ள அந்த கிட்ல பெட்ஷீட், துண்டு எல்லாம் இருக்கும்...’’ என்கிறவரிடம் எப்படி இதற்கான செலவை சமாளிக்கிறீர்கள் என்றோம்.  
‘‘நான் ‘ழ’ புத்தகக்கூடுனு புத்தகக் கடை வச்சிருக்கேன்.

ஆரணில இருக்குற ஒரே புத்தகக் கடை. அதிலிருந்து வர்ற வருமானம். தவிர, மனைவி வித்யாலட்சுமி வீட்டுக்கு பக்கத்துல பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. கூடவே, சின்னதா ஒரு சேலை கடையும் நடத்தறாங்க. இதனுடன் நண்பர்கள் தர்ற உதவித் தொகை. எல்லாம் சேர்ந்துதான் இந்தளவுக்கு நடத்த முடியுது. ஒண்டியா எல்லாம் செய்யவே முடியாது.

இப்படி செய்றதுக்கு எந்த நோக்கமும் இல்ல. பக்கத்துல இருக்கிறவங்களுக்கு நாமதான் பண்ண முடியும். வெளியிலிருந்து வந்து யாரும் பண்ண முடியாது. நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு நாம் பண்ணலைனா வேற யாரு செய்வாங்க? இந்தக் கேள்விதான் இப்பவரை இந்த உதவிகளை நான் செய்யக் காரணம்.  

அதனாலதான் அமைப்பின் பெயரை ‘அறம் செய்வோம்’னு வச்சோம். 2017லயே இந்தப் பெயரை வச்சிட்டேன். இந்த அமைப்பை ஆரம்பிச்சதே ஏதாவது சமூக சேவை பண்ணணும்னுதான். ஆனா, அதன்வழியா இலக்கியக் கூட்டங்கள் நடத்திட்டு இருந்தோம். இப்பகூட மாதம் ஒரு எழுத்தாளரைக் கூட்டி வந்து பேச வைக்கிறோம். பின்னாடி அதுவே சமூக சேவைக்குள்ள வந்துடுச்சு...’’ என்கிற சுதாகர் தன் எதிர்காலத் திட்டத்தை விவரிக்கிறார்.

‘‘2025க்குள்ள ஒரு பெரிய ஆதரவற்றவர் இல்லம் கட்டணும். இங்க நான் பார்த்தவரை ரெண்டு விஷயம் முக்கியமா இருக்கு. ஒண்ணு, பெரியவங்க தனியா இருந்து கஷ்டப்படறாங்க. அப்புறம், குழந்தைங்களைப் பார்த்துக்க ஆட்களில்ல. இவங்க ரெண்டு பேரையும் ஒரு புள்ளில ஒண்ணாக்கிட்டா என் வேலைகள் ஈஸியாகும். அதுக்கு ஆதரவற்றோர் இல்லம்தான் சரியா இருக்கும். அதை நோக்கியே இயங்கிட்டு இருக்கோம்..!’’

பேராச்சி கண்ணன்