வென்றது கருப்பு



கடந்த ஏழு மாதங்களில் கொரோனா கிருமி அரிக்காத துறைதான் ஏது?

கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல.கடந்த மார்ச் 13ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையே நடந்த ஒருநாள் போட்டிதான் ஊரடங்குக்கு முன்பு கடைசியாக நடந்த சர்வதேசப் போட்டி. ஆஸ்திரேலியா வென்ற இந்தப் போட்டி பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிப் போய் கடனுக்கே என்று நடந்தது.

கிரிக்கெட் சர்வதேசத் தரம் பெற்றிருக்கும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் இவ்வளவு பெரிய இடைவெளி என்பது போர்கள் நடந்த காலக்கட்டங்களில் மட்டுமே ஏற்பட்டது. அப்போதும் கூட போரில் பங்கேற்காத நாடுகளில் கிரிக்கெட் ஆடப்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

ஆனால், இம்முறை உலகின் எந்த மூலையிலும் கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனாவிலிருந்து வெளிவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக கிரிக்கெட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை 8ம் தேதி இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டிதான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டிக்கு முன்பாக கொரோனா சூழலால் கிரிக்கெட்டுக்கு சில புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

* பந்து வீச்சாளர்கள் க்ரிப்புக்காக பந்தில் எச்சில் தேய்ப்பது வழக்கம். எச்சில் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால், அந்த வழக்கத்தை கிரிக்கெட் கவுன்சில் தடை செய்தது. வேண்டுமானால் எச்சிலுக்கு பதிலாக வியர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சலுகையும் காட்டியது.

* போட்டியில் பங்கேற்ற வீரர் எவருக்காவது கொரோனா பாசிட்டிவ் என்று தெரிய வந்தால், அவருக்கு பதிலாக மாற்றுவீரர் (வழக்கமான மாற்று வீரர்களைவிட கூடுதலாக) அனுமதிக்கப்படுவார். இவருக்கு ‘கொரோனா சப்ஸ்டிட்யூட்’ என்கிற சிறப்பு அந்தஸ்து உண்டு.

* சர்வதேசப் போட்டிகளில் பொதுவான நடுவராக, இருநாடுகளும் சாராத வெளிநாட்டு நடுவர்கள் பயன்படுத்தப்படுவர். கொரோனாவால் வெளிநாட்டிலிருந்து நடுவர்களை வரவழைக்க முடியாத சூழலில் அந்நாட்டு நடுவர்களையே பயன்படுத்திக்கொள்ள விலக்கு அளிக்கப்பட்டது.

* நடுவர் கொடுக்கும் முடிவை மேலதிகமாக அப்பீல் செய்யும் முறை டி.ஆர்.எஸ் முறை. அனுபவமில்லாத உள்ளூர் அம்பயர்களைப் பயன்படுத்துவதால், பாதிக்கப்படும் அணி இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

* மைதானத்தில் வீரர்கள் மற்றும் போட்டி நடக்க உறுதுணையாக இருக்கும் அலுவலர்கள் தவிர்த்து பார்வையாளர்கள் எவருமின்றி போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்சொன்ன விதிமுறைகளுக்கு உட்பட்டே இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இப்போட்டி நடந்தது.இப்போட்டிக்கு வேறு சில வரலாற்றுச் சிறப்புகளும் உண்டு.அமெரிக்காவில் கடந்த மே மாதம் நிறவெறி காரணமாக போலீஸாரால் தாக்கப்பட்டு காலமான கருப்பர் இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட், உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான மனப்பான்மையைத் தோற்றுவித்தார்.

‘‘ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையைக் கண்டிக்கும் விதமாகவும், அனைத்து இன மக்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் தோளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடப் போகிறோம். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒற்றைக்காலில் முட்டி போட்டு அமர்ந்து ப்ளாய்டுக்கு மரியாதை செலுத்தப் போகிறோம்...’’ என்று மேற்கிந்தியத் தீவு வீரர்கள் அறிவித்தனர்.

இங்கிலாந்து வீரர்களும் இந்த முடிவுக்கு ஆதரவாக, மேற்கிந்தியத் தீவு வீரர்களோடு ஒற்றைக்காலில் முட்டி போட்டு தங்கள் சகோதரத்துவத்தைக் காண்பித்தது கண்கொள்ளாக் காட்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஜார்ஜ் ப்ளாய்ட் கொலைக்குப் பிறகு கருப்பர் இன மக்களிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அமெரிக்க இல்லினாய்ஸ் போலீஸார் இதேபோல முட்டி போட்டு அமர்ந்த காட்சி நினைவிருக்கலாம்.இனவெறி என்பது சமூகத்தில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் இருந்ததற்கு கடந்தகால சாட்சியங்கள் ஏராளம்.

குறிப்பாக கிரிக்கெட்டில் நிறவெறி பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்ட அணிகள் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும். மேற்கிந்தியத் தீவுகள் அணி மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெள்ளையர்கள் அல்லாத பல அணி வீரர்களும் மைதானத்தில் நிறவெறி பாகுபாடு காரணமாக அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு.இத்தகையதொரு பின்னணியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் எடுத்த முட்டி போடும் முடிவு இயல்பானதே.

அந்த முடிவை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்து வீரர்களும் உடன் இணைந்தது பாராட்டுக்குரியதும், நம்பிக்கையை ஏற்படுத்துவதுமான செயல். இதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து வீரர்களுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.பரபரப்பான இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் வீறுகொண்டு எழுந்தது இங்கிலாந்து.
வலுவான முன்னிலையை நோக்கி அந்த அணி நகர்ந்து கொண்டிருந்த சூழலில் கடைசி 7 விக்கெட்டுகளை 64 ரன்களில் இழந்தது.

அதையடுத்து இறுதி நாளில் 200 ரன்களை எட்டினால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி என்ற சூழலில் மேற்கிந்தியத் தீவுகளின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 27 ரன்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதற்குப் பிறகும்கூட ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்துக் கொண்டிருந்தது மேற்கிந்தியத் தீவுகள்.

ஆனால், ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சியதைப் போல நின்று இங்கிலாந்து பவுலர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ப்ளாக்வுட். யெஸ். இவரது பெயரிலேயே ‘ப்ளாக்’ - கருப்பு இருக்கிறது!வெற்றிக்கோட்டுக்கு வெகு அருகாமை வரை அணியைக் கொண்டுவந்து செஞ்சுரியை மயிரிழையில் நழுவவிட்டு, 95 ரன்களில் அவுட் ஆனார். மேற்கொண்டு தேவைப்பட்ட 11 ரன்களை தட்டுத் தடுமாறி வால் வீரர்கள் எடுத்து வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

கடைசி நாள் வரை இரு அணிகளுக்கும் மாறி மாறி வெற்றி தேவதை கண்ணடித்து, கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு அருள் பாலித்திருக்கிறாள்.
இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. 1988க்குப் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சீரிஸ் வெற்றியைப் பெற முடியாத மேற்கு இந்தியத் தீவுகள், இரண்டில் ஒரு போட்டியில் வென்றாலோ அல்லது இரண்டு போட்டிகளிலுமே தோல்வியைத் தவிர்த்து டிரா செய்தாலோ போதும், சீரிஸை வென்றுவிடலாம்.

தம் அணி தோற்றுவிட்டதே என்று புலம்பாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பாராட்டித் தள்ளுகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் இந்திய அணியே வென்றதைப் போல கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் -வென்றிருப்பது மேற்கிந்தியத் தீவுகள் அணி மட்டுமல்ல.நிறம், இனம், மொழி பாகுபாடுகள் கடந்து, உலகில் சகோதரத்துவம் வெல்லும் என்கிற நம்பிக்கையும்தான்!                     

யுவகிருஷ்ணா