ரத்த மகுடம்-107



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை மன்னா...’’ ஆசனத்தின் நுனிக்கு வந்து சட்டென்று பதில் அளித்தான் சாளுக்கிய இளவரசன்.

‘‘வேறு எந்தப் பொருளில் வினவினாய் விநயாதித்தா..?’’ அரியாசனத்தில் நன்றாகச் சாய்ந்தபடி கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் நயனங்களால் விநயாதித்தனுக்கு சமிக்ஞை செய்தார்.
சாளுக்கிய இளவரசனுக்கு அருகில் இருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் அதைக் கண்டு புன்னகைத்தான்.

விநயாதித்தன் இவர்கள் இருவர் பக்கமும் தன் பார்வையைப் பதிக்கவில்லை. அவனது கருவிழிகள் பாண்டிய மன்னரின் கண்களை மட்டுமே இமைக்காமல் பார்த்தன. ‘‘சாதாரணமாகத்தான் கேட்டேன் மன்னா...’’
‘‘ஆனால், அது அசாதாரணமான அர்த்தத்தை வெளிப்படுத்து
கிறதே..?’’ புருவத்தை உயர்த்தினார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘வரலாறும் அப்படி பதிவு செய்துவிடக் கூடாதே என்றுதான் மன்னா தங்கள் எண்ணத்தை அறிய வினவுகிறேன்...’’
‘‘அதனால்தான் இந்த அகால வேளையில் என்னைத் தேடி உங்கள் தேசத்தின் போர் அமைச்சருடன் வந்திருக்கிறாயா..?’’
‘‘ஆம் மன்னா...’’‘‘சரித்திரப் பதிவுகள் மீது உனக்கு அந்தளவு அக்கறை இருக்கிறதா..?’’
‘‘அனுபவப்பட்டவன்... அனுபவித்து வருபவன் என்பதால் எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மீது அடியேனால் மிகுந்த அக்கறை செலுத்த முடிகிறது...’’
‘‘விளக்க முடியுமா..?’’

இப்படி அரிகேசரி மாறவர்மன் கேட்டதுமே பதில் சொல்ல ராமபுண்ய வல்லபர் முற்பட்டார்.
தன் கரங்களால் அவரை அமைதியாக இருக்கும்படி கட்டளையாக இல்லாமல் மரியாதையுடன் சைகை செய்துவிட்டு விநயாதித்தனே விடையளிக்கத் தொடங்கினான். ‘‘தாங்கள் அறியாததல்ல மன்னா...’’

‘‘நான் அறிவேனா இல்லையா என்பதல்ல விஷயம்... உனது விளக்கம் என்ன என்பதுதான் வினா...’’
‘‘பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான பகை சார்வாகனர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது. சாளுக்கியர்களின் மாமன்னரான இரண்டாம் புலிகேசி அவர்கள் தமிழகத்தின் மீது...’’
‘‘பல்லவர்களின் மீது...’’ அழுத்தத்துடன் இடைமறித்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... நா தடுமாறிவிட்டது...’’

‘‘உள்ளத்தில் இருப்பதை உதடுகள் உச்சரித்தன...’’ நகைத்தார் பாண்டிய மன்னர். ‘‘ம்... மேலே சொல்...’’

‘‘பல்லவர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றார்கள். மகேந்திரவர்ம பல்லவரின் படைகள் தோற்றன. இது அனைவருக்கும் தெரியும்... ஆனால், பல்லவ நாட்டின் பல பகுதிகளில் சாளுக்கியர்களை பல்லவர்கள் தோற்கடித்ததாக கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன...’’‘‘பல்லவர்கள் மட்டும்தான் அப்படி வைத்திருக்கிறார்களா..?’’‘‘மன்னா...’’

‘‘நீங்கள் வைக்கவில்லையா? தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க நரசிம்மவர்ம பல்லவர் சாளுக்கியர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியை அவர் தீக்கிரையாக்கினார். இதுவும் அனைவரும் அறிந்த செய்திதான்.

ஆனால், அப்படியா உங்கள் நாட்டில் கல்வெட்டு வைத்திருக்கிறீர்கள்..? அந்தப் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற்றதாகவும் நரசிம்மவர்மரின் படைகள் தோற்று ஓடியதாகவும் சாசனமாக செதுக்கியிருக்கிறீர்களே..!’’  தன்னையும் அறியாமல் சட்டென ஸ்ரீராமபுண்ய வல்லபரைப்பார்த்தான் விநயாதித்தன்.

இதைக் கண்டு அரிகேசரி மாறவர்மரும் கோச்சடையன் இரணதீரனும் நகைத்தார்கள்.
‘‘விநயாதித்தா...’’ அழைத்தார் பாண்டிய மன்னர்.
விநயாதித்தன் சங்கடத்துடன் அவரை ஏறிட்டான்.

‘‘இதில் சங்கடப்பட எதுவுமில்லை... எப்படி நீங்கள் செய்தது தவறில்லையோ அப்படி பல்லவர்கள் கல்வெட்டுகள் வைத்ததும் பிழையில்லை. அவரவர் தேசத்து மக்களை உற்சாகப்படுத்தவும் போர் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து மறுமுறை யுத்தம் புரியும் வெறியை ஏற்றவும் இப்படி சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட பெரும் வெற்றியாக கல்வெட்டில் செதுக்கிவைப்பது அரச மரபுதான்... ராஜ தந்திரத்தில் இதுவும் அடக்கம்தான்...’’

‘‘புரிகிறது மன்னா...’’‘‘எது..? கல்வெட்டுகள் தொடர்பான இந்த சர்ச்சைகள்தானே..?’’
‘‘அதுமட்டுமல்ல மன்னா... சரித்திரப் பதிவுகள் தொடர்பாக நாம் உரையாடிக் கொண்டிருக்கும் விஷயமும்தான்!’’

‘‘பலே...’’ நிமிர்ந்து உட்கார்ந்தார் பாண்டிய மன்னர். ‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரே... சரியாகத்தான் உங்கள் சிஷ்யனை வளர்க்கிறீர்கள்! சாளுக்கிய அரியணையில் விநயாதித்தன் அமரும்போது நிச்சயம் தன் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பான்... இருப்பார்! என்ன ரணதீரா... நான் சொல்வது சரிதானே..?’’‘‘உரைகல்லில் உரசிப் பார்த்து நீங்கள் சொல்லும்போது அது சரியாகத்தான் இருக்கும் மன்னா...’’ இரணதீரன் மரியாதையுடன் தன் தந்தைக்கு பதில் அளித்தான்.

‘‘அளவுக்கு மீறி என்னைப் புகழ்கிறீர்கள்...’’ விநயாதித்தன் நெளிந்தான்.‘‘உண்மையைச் சொல்கிறோம்...’’ அரிகேசரி மாறவர்மரின் விழிகள் சாந்தத்துடன் விநயாதித்தனை அளவெடுத்தன. ‘‘இதில் எனது சுயநலமும் கலந்திருக்கிறது...’’அங்கிருந்த மூவரும் கேள்வியுடன் பாண்டிய மன்னரை நோக்கினார்கள்.‘‘நாளை என் மகன் ரணதீரன் பாண்டிய அரியணையில் அமரும்போது அவனுக்கு சமமான வீரர்கள் அருகில் இருக்கும் தேசங்களை ஆட்சி புரிய வேண்டும்! அதுதான் என் மைந்தனின் வீரத்துக்கு அழகு!’’பெருமையுடன் விநயாதித்தனைப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

விநயாதித்தன் எழுந்து பாண்டிய மன்னரின் அருகில் வந்தான். அவரது கால்களைத் தொட்டு வணங்கினான்.

அவனைத் தூக்கி நிறுத்தினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நன்றாக இரு... இறுதி மூச்சு நிற்கும் வரை உன் தேசத்து மக்களுக்கு ஒரு குறையையும் வைக்காதே... மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்து... எதிரிகளை மன்னிக்காதே... அவர்கள் செய்ததை மறக்கவும் செய்யாதே!’’
‘‘மிக்க நன்றி மன்னா...’’ தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற ராமபுண்ய வல்லபர் திருப்தியுடன் பதில் அளித்தார்.

‘‘பழம்பெருமை வாய்ந்த பாண்டிய தேசத்தின் ஆசி சாளுக்கிய இளவரசருக்கு கிட்டியிருக்கிறது... இதைவிட வேறென்ன எங்களுக்கு வேண்டும்...’’
இதைக் கேட்டதும் அரிகேசரி மாறவர்மரின் கண்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. ‘‘ஆசி வேறு... உறுதிமொழி வேறு என்பதை அறியாதவரல்ல நீங்கள்...’’
‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஓரடி முன்னால் எடுத்து வைத்தார்.

‘‘சாளுக்கிய போர் அமைச்சரே... விநயாதித்தனுக்கு நான் ஆசி வழங்கியது வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன் என்பதால்... ஆனால், பல்லவர்களுக்கும் உங்களுக்கும் விரைவில் நடக்கவிருக்கும் யுத்தத்தில் யாருக்கு நாங்கள் துணையாக நிற்போம் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது... அது தொடர்பான உறுதிமொழியையும் வழங்க இயலாது...’’விநயாதித்தன் நிமிர்ந்தான்.

‘‘அமைச்சரைவைக் கூட்டி மந்திராலோசனை நடத்திதான் யுத்தம் தொடர்பான முடிவை பாண்டிய மன்னனாக நான் எடுக்க முடியும்... இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை... தேசம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் நாட்டின் பிரதிநிதிகள்தான் ஒருமனதாக முடிவெடுக்க முடியும்... புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘நீங்கள் கணித்தது சரிதான்... பாதாளச் சிறையில் இருந்த சிவகாமியைத் தப்பிக்க வைத்தது நான்தான்...’’ நிதானமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இந்த நள்ளிரவு நேரத்தில் என்னைச் சந்திக்க நீங்கள் இருவரும் வந்தபோதே எதற்காக வருகை புரிந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்...’’ சாளுக்கிய இளவரசனை அணைத்தபடி மெல்ல அந்த அறையில் நடந்தார் பாண்டிய மன்னர். ‘‘வந்ததும் நீ கேட்டதற்கான பதில் இதுதான் விநயாதித்தா...’’ ‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள் மன்னா...’’ உடன் நடந்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் வினவினார்.

‘‘சாளுக்கியர்களின் நலனுக்காக என்று சொன்னால் அது பொய்...’’ திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘பாண்டியர்களின் நலனுக்காக என்றால் அதுவே மெய்!’’‘‘புரியவில்லை மன்னா...’’ அணைப்பின் கூச்சத்துக்கு மத்தியிலும் விழிப்புடன் விநயாதித்தன் உரையாடலைத் தொடர்ந்தான்.

‘‘பாண்டியர்களின் உதவி கேட்டு நீங்கள் இருவரும் மதுரைக்கு வந்தீர்கள்... அரைத் திங்களாக எங்கள் விருந்தினராக இங்கு தங்கியிருக்கிறீர்கள்... உங்களுக்கு உரிய பதிலைச் சொல்வதற்குள் திடீரென்று பல்லவர்களின் உபசேனாதிபதியும், பல்லவ இளவரசனின் உயிருக்கு உயிரான நண்பனும், பாரத தேசத்தின் தலைசிறந்த அசுவ சாஸ்திரியுமான கரிகாலன் மதுரைக்கு வந்து சேர்ந்தான்...’’‘‘தன் பங்குக்கு பாண்டியர்களின் உதவியைக் கேட்டுத்தானே..?’’

‘‘இல்லை சாளுக்கிய போர் அமைச்சரே!’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் பளிச்சென்று பதில் அளித்தான். மூவர் கண்களும் திகைப்புடன் அவனை நோக்கின.
‘‘கரிகாலன் மதுரைக்கு வந்தது பாண்டியர்களின் உதவியைக் கேட்டு அல்ல!’’ அழுத்தமாகச் சொன்னான் இரணதீரன்.
‘‘பிறகு..?’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி.

‘‘நமக்கு பாண்டியர்கள் உதவக் கூடாது என்பதற்காகவே
கரிகாலன் மதுரைக்கு வந்திருக்கிறான்...’’ சட்டென்று சொன்னான் விநயாதித்தன்.
இடுப்பில் கைகளை வைத்தபடி இரு இளவரசர்களையும்
அன்புடன் மாறி மாறிப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘சாளுக்கிய இளவரசர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! கரிகாலனின் நோக்கம் அதுதான்... அதனால்தான் எனக்கு நீங்கள் விருந்தளித்தபோது அனைவர் முன்பாகவும் திட்டமிட்டு உங்கள் ஒற்றர் படைத் தலைவியான சிவகாமியின் மீது பெரும் ஐயத்தைக் கிளப்பினான். சந்தர்ப்ப சாட்சியங்கள் கரிகாலனுக்கு சாதகமாக இருக்கவே சிவகாமியைக் கைது செய்து பாதாளச் சிறையில் அடைக்க வேண்டியதாயிற்று.

இதற்குள் இந்த விஷயம் பாண்டிய தேசம் முழுக்க பரவிவிட்டது. ‘நட்பு பாராட்ட சாளுக்கிய இளவரசர் தன் நாட்டின் போர் அமைச்சருடன் மதுரைக்கு வருகிறார்... அதேநேரம் தனது ஒற்றர் படைத் தலைவியை வைத்து பாண்டிய நாட்டில் உளவும் பார்க்கிறார்... இது நியாயமா...’ இப்படித்தான் மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது நிச்சயமாக பாண்டிய மன்னர் கூட்டவிருக்கும் மந்திராலோசனையில் எதிரொலிக்கும்...’’‘‘புரிகிறது பாண்டிய இளவரசே... சாளுக்கியர்கள் பக்கம் பாண்டியர்கள் நிற்க முடியாத நிலையை கரிகாலன் உருவாக்கியிருக்கிறான்...’’ புருவங்கள் முடிச்சிட விநயாதித்தன் ஆமோதித்தான்.

‘‘அதேதான் சாளுக்கிய இளவரசே... அதற்காக பல்லவர்களுக்கு உதவியாக பாண்டியப் படைகள் திரளும் என்றும் நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்... இதுவும் நடக்காதபடி வெகு சாமர்த்தியமாக முதியவர் அதங்கோட்டாசானை வைத்து கரிகாலன் காய்களை நகர்த்தியிருக்கிறான்...’’

‘‘எதற்காக இப்படி பாண்டியர்கள் எங்கள் பக்கமும் வராமல் பல்லவர்கள் பக்கமும் செல்லாமல் கரிகாலன் முட்டுக்கட்டை போடுகிறான்..?’’ உதட்டைக் கடித்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘பதினைந்து பேருக்காக...’’ புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உங்களிடம் சிக்கிய கடிகை பாலகனிடம் ஒன்றே போல பதினைந்து செய்திச் சுவடிகள் இருந்ததே... பாதாளச் சிறையில் ரகசியமாக சிவகாமி உங்களிடம் கொடுத்தாளே... அதேதான்!’’
 
(தொடரும்)

செய்தி:  கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்