ஐந்தாம் நள்ளிரவு!



இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம், தொலைக்காட்சி சேனல்களில் டாப் டிஆர்பி ரேட்டிங், பெஸ்ட் திரில்லர் என்று விமர்சகர்களின் சர்ட்டிபிகேட்... எனப் பல புகழுக்குச் சொந்தம் கொண்டாடும் படம், ‘அஞ்சாம் பாதிரா’. ஐந்தாம் நள்ளிரவு என்பது இதன் அர்த்தம்.
தமிழ்நாட்டிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்தை தவறவிட்டவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. ‘சன் நெக்ஸ்ட்’டில் காணக்கிடைக்கிறது ‘அஞ்சாம் பாதிரா’.

ஒரு சீரியல் கில்லர் படத்தை எப்படி தரமாக, சுவாரஸ்யமாக, ரசிக்கும்படி எடுக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம்.
ஒரு நள்ளிரவில் காவல்துறை அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்படுகிறார். அவரது உடலிலிருந்து கண்ணும் இதயமும் பிடுங்கப்படுகின்றன.

பீதியைக் கிளப்பும் இந்தச் சம்பவம் காவல்துறையை மட்டுமல்லாமல் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இதேமாதிரி இன்னொரு காவல் துறை அதிகாரியும் கொல்லப்படுகிறார். அவரது கண்ணும் இதயமும் பிடுங்கப்படுகின்றன.

காவல்துறையைக் குறி வைத்துத் தாக்கும் கொலைகாரனைப் பிடிக்க சிறப்பு காவல் படை அமைக்கப்படுகிறது. அவர்களால் கொலைகாரனை நெருங்கக் கூட முடியவில்லை. இக்கட்டான இந்நிலையில் காவல் துறைக்கு உதவ உளவியல் நிபுணரான நாயகன் பணியில் அமர்த்தப்படுகிறார். இருந்தாலும் கொலைச் சம்பவம் தொடர்கிறது. ஓர் இடத்தில் கொலைகாரன் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறான். அதை நாயகன் கண்டுபிடிக்கிறான். பிறகு ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் அந்தத் தடயம் இருப்பதை நாயகன் காண்கிறான்.

அந்தத் தடயத்தை வைத்து கொலைகாரனை எப்படி பிடித்தார்கள்... கொலைக்கான பின்னணி என்ன... என்பதை அட்டகாசமாக எடுத்திருக்கிறார்கள்.
வெறுமனே சீரியல் கில்லர் கதையல்ல. கொலைக்குப் பின்னணியாக இருக்கும் சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன. அது கொலைகாரன் மீதும் ஒருவித பரிதாபத்தை உண்டாக்குவது கதையின் சிறப்பு.

ஒவ்வொரு முறை காவல் துறையினர் கடத்தப்படும்போதும் பின்னணியில் ஒலிக்கும் இசை, அது படமாக்கப்பட்ட விதம் நம்மை பயமுறுத்துகிறது.
கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். குறிப்பாக உளவியல் நிபுணராக நடித்த குஞ்சாக்கோ போபனின் நடிப்பு அசத்தல்.
ஆங்காங்கே ‘ராட்சஷன்’ தமிழ்ப் படம் நினைவுக்கு வந்தாலும் ‘அஞ்சாம் பாதிரா’வை தனித்து தெரியும்படி படமாக்கியுள்ளார் இயக்குநர் மிதுன் தாமஸ்.