CBI விசாரணை நடத்தலாம்...தீர்ப்பு கிடைக்குமா..?டைரி குறிப்புகள்!



மத்திய புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation - CBI) என்பதன் சுருக்கமே சிபிஐ. இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகளில் முதன்மையானது. இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்புக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ அமைப்பு இதுதான்.   

வரலாறு என்ன?

இதன் பூர்வீகம் இரண்டாம் உலகப் போர் காலத்தில் உள்ளது. போருக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்த நினைத்த பிரிட்டீஷ் அரசு, லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1941ம் ஆண்டு சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்கியது. போர் முடிந்த பின்னும் இந்த அமைப்புக்கான தேவை இருக்கவே அப்படியே தொடரப்பட்டது. 1946ம் ஆண்டின் தில்லி சிறப்புக் காவல் சட்டத்தால் இந்த அமைப்பு சில மாற்றங்களுடன் அப்படியே தொடர வழிவகை செய்யப்பட்டது.

இதன்படி, உள்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புக் காவல் அமைப்பு நடுவண் ஆட்சியின் பிற பகுதிகளிலும் அந்தந்த பிராந்திய அரசுகளின் ஒப்புதலோடு இயங்கத் தொடங்கியது.இந்திய விடுதலைக்குப் பிறகு 1963ம் ஆண்டு இந்திய உள்துறை அமைச்சகம், தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ் சிபிஐ என்ற அமைப்பை உருவாக்கியது.

தொடர்ந்து 1987ம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, குற்றப்பிரிவு (தனி) என இரண்டு பிரிவுகளாகச் செயல்படத் தொடங்கியது. பொருளாதாரக் குற்றங்கள் தவிர இன்னபிற கிரிமினல் குற்றங்களைக் கவனிக்கவும் குற்றப்பிரிவு (தனி) என்ற கிளை அமைப்பு உருவாக்கப்பட்டது.

சிபிஐ பிரிவுகள்

ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு, சிறப்புக் குற்றப் பிரிவு, மத்திய தடய அறிவியல் ஆய்வகம் என நான்கு முதன்மையான பிரிவுகள் இன்றுள்ளன. இதைத் தவிர வழக்கு விசாரணை இயக்குநரகம், நிர்வாகப் பிரிவு, கொள்கை மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவு ஆகிய நிர்வாகப் பிரிவுகளும் உள்ளன.

சில சுவாரஸ்யமான வழக்குகள்

சிபிஐ என்றாலே ஏதோ மிகப் பெரிய வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் என்ற மனநிலை மக்கள் மனதில் உள்ளது. ஆனால், சாதாரணமான ஊழல் வழக்குகள், சீட்டிங் கேஸ்கள், ஃபிராடுதனங்கள் கூட அதில் ஈடுபட்டுள்ளவர்களின் செல்வாக்கு மற்றும் அரசியல் பின்புலங்கள் காரணமாக சிபிஐ வசம் செல்கின்றன.

சிபிஐயின் அதிகாரபூர்வமான இணையதளம் வெளியிட்டுள்ள நூறு வழக்குகளை கவனத்தில் எடுத்துக்கொண்டால்... பல சுவாரஸ்யங்கள் கிடைக்கின்றன.அதில் கிட்டத்தட்ட பெரும்பான்மையானவை பொருளாதார மோசடிகள். குறிப்பாக வங்கிக் கடன் மோசடிகள். அரசு வங்கி முதல் கூட்டுறவு வங்கிகள் வரை... ஒன்றிரண்டு கோடி முதல் பல நூறு கோடிகள் வரை கடன் வாங்கி ஏமாற்றிய வழக்குகள். போலி ஆவணங்கள் தந்து கடன் வாங்கியவை, கடன் வாங்கிவிட்டு தலைமறைவு என தினுசு தினுசான வழக்குகள்.

இதைத் தவிர கணிசமாக லஞ்ச, ஊழல் வழக்குகள். சுங்க இலாகாவில் வேலை செய்யும் அதிகாரி, ஒரு சரக்கு, துறைமுகத்திலிருந்து வெளியேற அனுமதிக்க லஞ்சம் கேட்ட வழக்கு; போலி ஆவணங்கள் மூலம் வருமானவரி ரீஃபண்ட் பெற முயன்ற வழக்கு; நூற்றுக்கணக்கான போலி நகை
களுக்கு கடன் வழங்கப் பரிந்துரைத்த கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர் மீதான வழக்கு; சீனியாரிட்டி தொடர்பான தவறான தகவல்களைத் தந்து ஒரு மருத்துவக் கல்லூரியின் டீனாக பதவி உயர்வு பெற்றதற்கான வழக்கு; கலாேத்ராவில் கலையரங்கம் கட்டுவதற்கான செலவில் நிகழ்ந்த ஊழல்; மானிய விலையில் கதிர் அடிக்கும் இயந்திரம் வழங்கும் விவகாரத்தில் நிகழ்ந்த ஏமாற்று; ஒரு வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கில் அவரின் அனுமதியின்றி வங்கி மேலாளர் நிகழ்த்திய பண ஏமாற்று நடவடிக்கைகள்...

- எனப் பல சுவாரஸ்யமான எளிய வழக்குகளைக் கூட சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான அமைப்பா?

கடந்த 2013ம் ஆண்டு சிபிஐக்கு எதிராக கவுகாத்தி உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே சிபிஐ. இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோ, ஜனாதிபதியின் ஒப்புதலோ, நாடாளுமன்ற ஒப்புதலோ இல்லை என்பதால் இதனை அரசியல் சாசனத்தின் அங்கீகாரம் கொண்ட அமைப்பாக ஏற்க முடியாது என்றது.

அரசுத் துறை ஊழியர் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு உச்சநீதி மன்றத்தில் தடை வாங்கியது. நாடு முழுதும் ஏற்கெனவே சிபிஐ வசம் உள்ள பல நூறு ஊழல், லஞ்ச வழக்குகள், கிரிமினல் வழக்குகள் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

சிபிஐ எப்போது ஒரு வழக்கை கையில் எடுக்கும்?

சம்பந்தப்பட்ட மாநில அரசு சிபிஐயைக் கேட்டுக் கொள்ளும்போது ஒரு வழக்கை சிபிஐ எடுக்கிறது. மத்திய அரசு பொதுவாக ஒரு மாநிலக் கோரிக்கையின் மீது தீர்மானம் எடுக்கும் முன்பு சிபிஐயைக் கேட்கிறது.டிஎஸ்பிஇ சட்டப்பிரிவு 6ன் கீழ் மாநில அரசு ஒப்புதல் அறிக்கை கிடைத்த பின்பு சிபிஐ களத்தில் இறங்கும். சமயங்களில் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ள உத்தரவிடும்.

சிபிஐயின் குறைபாடுகள்

தேர்தல் ஆணையம் போல அரசியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட சுயாதீனமான அமைப்பாக இல்லாததால், மத்திய அரசின் கைப்பாவையாகவே சிபிஐ இயங்கும். இதனால் கடந்த காலங்களில் ஆளும் அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக சிபிஐ துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.

1978ம் ஆண்டின் எல்.பி.சிங் கமிட்டி, 2007ம் ஆண்டின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 19வது அறிக்கையின் பரிந்துரை போன்றவை சிபிஐ அமைப்பை முறையான வலுவான விசாரணை அமைப்பாக மாற்ற பரிந்துரைத்துள்ளன. ஆனால், முழுமையான தீர்வுதான் இன்னமும் கிடைத்தபாடில்லை.

தேங்கிக் கிடக்கும் தமிழக வழக்குகள்

சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது மாநில அரசு.
ஆனால், இதற்கு முன்பு இப்படி ஒப்படைக்கப்பட்ட வழக்குகளே எந்த பதிலும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பதுதான் பரிதாபம்!
கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐஐடியில் படித்த மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக நடைபெறும் வழக்கை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. இதன் நிலவரம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

இப்படி, சிபிஐ-யால் துப்பறிய முடியாத வழக்குகள் அநேகம். 1992ம் ஆண்டு கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி பீனா தாமஸ் வழக்கு முதல் பல வழக்குகள் இந்தக் கணக்கில் உள்ளன. விழுப்புரம் மாணவி ஜெயயை ஆளும் கட்சியினர் எரித்துக் கொன்ற வழக்கில்கூட சிபிஐ விசாரணைக்காக கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்திய அளவில் புகழ்பெற்ற ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவரின் தந்தை கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஒருபுறம் இப்படி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற வழக்குகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மறுபுறம் சிபிஐ மிகச்சில வழக்குகளைத் தவிர பெரும்பாலானவற்றில் சொதப்பியே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.குறிப்பாக, பணம் மற்றும் அதிகாரத்தின் முன் சிபிஐ சோரம் போவது துயரமானது என்கிறார்கள் முன்னாள் நீதியரசர்கள். முறையான சட்ட அங்கீகாரத்தோடு சிபிஐக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியது காலத்தின் தேவை.        

இளங்கோ கிருஷ்ணன்