உஷாரய்யா உஷாரு... கொரோனா கால இணைய மோசடிகள்!



இந்தக் கொரோனா காலத்தில் முகக் கவசம், சானிட்டைசர்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன. நண்பர் ஒருவர் ஆன்லைனில் விளம்பரம் பார்த்து நல்ல நவநாகரிகமான துணியாலான முகக் கவசம் ஒன்றை ஆர்டர் செய்தார். பொதுவாக, கடைகளில் விற்கும் விலையைவிட குறைவாகவே இருந்ததால், எதிர்கால நலன் கருதி அதனை கொஞ்சம் அதிக எண்ணிக்கையிலேயே ஆர்டர் செய்துவிட்டார்.

சொன்ன தேதிக்கு பார்சலும் வந்துவிட்டது. பிரித்துப் பார்த்தால் இவர் ஆர்டர் செய்திருந்த மாஸ்க்குக்கும் வந்திருந்த மாஸ்கின் தரத்துக்கும் அத்தனை வித்தியாசம்! இருப்பதிலேயே மட்டமான துணியில் ஏனோ தானோவென்று தைக்கப்பட்டிருந்தது அந்த மாஸ்க்.

அதனை சரியாகக் காதில் பொருத்தவும் முடியவில்லை. அப்படியே பொருத்தினாலும் வாயை மட்டுமே மறைக்கிறது. மூக்கை மறைக்கவில்லை.
பெரிய பொருளாதார இழப்பு என்று சொல்வதற்கு இல்லைதான். ஆனால், நஷ்டமானது ஆயிரம் ரூபாய் என்றாலும் நஷ்டம் நஷ்டம்தானே? ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்று அவர் மனைவி எச்சரித்தும் நண்பர் இதனைச் செய்யவே, வீட்டுக்குள் புகைச்சல் வேறு.

மக்களுக்கு எந்த ஒரு நெருக்கடி வந்தாலும் இரக்கமுள்ள மனிதர்கள் உதவக் களத்தில் இறங்குவது போலவே ஒரு கும்பல் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றலாம் எப்படித் திருடலாம் என்று திட்டமிட்டு ஆட்டையைப் போடத் தயாராகி விடுகிறது.

இங்கு என்றில்லை உலகம் முழுதுமே கொரோனா கால மோசடிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, இணையதள மோசடிகள் கொரோனா காலத்தில் முன்னிலும் அதிகமாக நிகழ்கின்றன.லாக் டவுன், வீடடங்கல் என்று ஆண்கள் வீட்டிலேயே இருப்பதால், கிடைக்கும் உபரி நேரத்தை வழக்கத்தைவிட அதிகமாக இணையத்தில் செலவிடுகிறார்கள்.

இதனைப் புரிந்துகொண்ட இணையதள மோசடியாளர்கள் உடனடியாகச் செயலில் இறங்கி, அவர்களின் கண்களில் படும்படியான கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து, வலை விரிக்கிறார்கள். பேராசைக்காரர்கள் வசமாக ஏமாறுகிறார்கள்.

கடந்த மாதங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் பலருக்கும் ஒரு கவர்ச்சிகரமான செய்தி வந்தது, லாக்டவுன் காலம் முழுமைக்குமான இலவச நெட்ஃப்ளிக்ஸ் வழங்கப்படும் என்று சொன்ன அதில், கொடுக்கப்பட்டிருந்த சர்வேயை நிரப்பி அதனை பத்து வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இது ஒரு போலி செய்தி. இதற்குப் பலியாகி வாட்ஸ்அப் ஃபார்வேர்டு செய்தவர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களும் திருடு போயிருக்கும். கொரோனா இப்படியாக விர்ச்சுவல் உலகையும் படுத்தத் தொடங்கிவிட்டது.

உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், மாவட்ட கார்ப்பரேஷன்கள், பெருநிறுவனங்கள், அரசுத்துறை எனப் பல்வேறு அமைப்புகளின் பெயரில்தான் இப்படியான போலி மெயில்கள் வருகின்றன. இணையப் பயன்பாட்டாளர்கள், ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் அடிப்படைத் தகவல்கள், வங்கிப் பரிமாற்றங்கள் போன்றவைதான் இவைகளின் இலக்கு.

உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல் இவற்றுக்கு பதில் அளித்தாலோ, இவை கேட்கும் தகவல்களை வழங்கினாலோ உடனடியாக அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவோ, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கையாடவோ வாய்ப்பிருக்கிறது.

இது எப்படிச் சாத்தியமாகிறது?

இணையதளத்தைப் பயன்படுத்திப் பொருட்களை அல்லது சேவைகளை வாங்கும்போது ‘நாங்கள் நிறைய இலவசங்கள் தருகிறோம். தள்ளுபடிகள் தருகிறோம். கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் உபகரணங்களை உங்கள் வீட்டுக்கே சப்ளை செய்கிறோம். விலையும் குறைவு’ என்று கவர்ச்சிகரமாக சொல்லப்படும் அறிவிப்புகளே மக்கள் இப்படி ஏமாறக் காரணம்.இதேபோல், இந்த வழிமுறையில் தகவல்தொடர்புகளைத் திருடுவது என்பது சுலபமானது.

இப்படி அவர்கள் சொல்லும் இணையதளத்தில் செல்லும்போது அதன் வழியாக உங்கள் டிவைஸில் ஒரு மால்வேரைப் போட்டுவிடுவதன் மூலமோ, மொபைல் ஆப் மூலமாக ரேன்சம்வேரை பரப்புவதன் மூலமோ இது எளிது.

இந்த ரேன்சம்வேர் உங்கள் மெயில், வங்கி லாக் இன், பாஸ்வேர்டு, கிரெடிட்கார்டு தகவல்கள் ஆகியவற்றை மட்டுமல்ல, ஒருவரின் டைப்பிங் முறைமையைக்கூட காப்பி செய்துவிடும். இதைக்கொண்டு அத்தனை ரகசியமான தகவல்களையும் திருடிவிட இயலும்.

இந்நாட்களில் நாம் முன்பைவிட அதிகமாக செல்போன், கணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வீட்டிலிருந்தே வேலை செய்வதால் பலர் பல மணி நேரம் ஒரே கணிப்பொறியில்தான் அமர்ந்திருக்கிறார்கள். இது எல்லாம் இணையக் களவாணிகளுக்கு வசதியாக இருக்கிறது.

பல நிறுவனங்கள் தம் தொழிலாளிகளுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான அனுமதியையும் அலுவலகக் கணிப்பொறியை வீட்டிலிருக்கும் கணிப்பொறியில் இணைத்து வேலை செய்வதற்கான அனுமதியும் தருகின்றன.

இது ஒருவகையில் நிறுவனம் மற்றும் பணியாளர் இருவருக்குமே இந்தக் கொள்ளை நோய் காலத்தில் வசதிதான் என்றாலும் இணைய கொள்ளையர்களுக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பு என்கிறார் ஒரு மிகப் பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

இதை ரிமோட் வொர்க்கிங் என்பார்கள். இணையப் பாதுகாப்புக்கு இது ஒரு கடும் சவால். சோஷியல் இன்ஜினியரிங் என்ற இணைப்பின் வழியாகவே இப்படியான ரிமோட் வொர்க்கிங் பணிகள் நடைபெறுகின்றன.

இணையத் திருடர்கள் மால்வேர்கள் அல்லது ரேன்சம் வேர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தகவல்களையும் திருட முடியும் என்பதுதான் இதில் இருக்கும் ரிஸ்க்.மக்களிடம் உள்ள கொரோனா தொடர்பான அச்சம், அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வம்... ஆகியவை இந்தக் கொள்ளையர்களுக்கு கொழுத்த அறுவடை கிட்ட அடிப்படைக் காரணம்.

கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை சுமார் 16 ஆயிரம் புதிய டோமைன்கள் கொரோனா தொடர்பாக உருவாகியிருக்கிறதாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இணையவெளிகள் கொரோனா தொடர்பான சேவையில் குதித்துள்ளன என்கிறார்கள்.இதில் ஒரு சதவீதம் டோமைன்கள் போலியானவை என்கிறார்கள். ஒரு சதவீதம்தானே என்று ஆறுதல் அடைய வேண்டாம். எண்ணிக்கையில் சொன்னால் இது நூறைத் தாண்டும்.

அதேபோல் சுமார் இரண்டாயிரத்து இருநூறு இணையதளங்கள் சந்தேகத்துக்குரியவை. அதிலும் கொரோனா தொடர்பானவை என்று சொல்லப்படும் இணையதளங்களில் பாதிக்குப் பாதி போலிதான் என்கிறார்கள். எனவே, நேரம் இருக்கிறதே என்று தேவையற்ற தளங்களில் மேய்ந்துகொண்டிருப்பதை இந்தக் கொரோனா காலத்தில் தவிர்ப்பது உடைமைக்கும் தகவல்களுக்கும் பாதுகாப்பு. எரியும் வீட்டில் உருவிய மட்டிலும் லாபம் என்று திரியும் கும்பலிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

போலி இணையதளங்கள், மெயில்களை அடையாளம் காண்பது எப்படி?

இப்படி வரும் மெயில்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அல்லது தேசிய மருத்துவ அமைப்புகள் பெயரில்தான் பெரும்பாலும் இருக்கின்றன. உதாரணமாக, உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) போன்ற பெயரில் இருக்கும்.

மனித வள ஆணையம், நீங்கள் வசிக்கும் கார்ப்பரேஷன், ஏன் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர்கூட சில சமயம் இருக்கும்.
ஒரிஜினலைப் போன்றே லோகோ, டோமைன் ஆகியவை இருக்கும்.

இதை க்ளிக் செய்யுங்கள் என்று அதில் ஓர் இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும்.உடல் நலம் சார்ந்த எச்சரிக்கை, மருத்துவத் தகவல், அவசரம் உடனே இணைப்பைத் திறங்கள் என்பதைப் போன்ற போலி அறிவுறுத்தல் இருக்கும்.கோவிட் 19க்கான மெடிக்கல் டெஸ்ட் கிட், மாஸ்க், மருந்து போன்றவை விற்பனை தொடர்பாக இருக்கும்.சிலவற்றில் கோவிட் தொடர்பான சமீபத்தைய ஆய்வறிக்கைகள்கூட இருக்கும். இப்படியான மெயில்கள் இருந்தால் அவை நிஜமா போலியா என்று உறுதி செய்யாமல் திறக்க வேண்டாம்.

இளங்கோ கிருஷ்ணன்