வாங்க...வெயிட் லாஸ் பண்ணலாம்!



சிவகார்த்திகேயனின் ‘காக்கிசட்டை’யில் சின்ஸியர் நர்ஸ்; ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ளில் ட்யூனர் கௌசல்யா; ‘இனிமே இப்படித்தானி’ல் சந்தானத்தின் மனைவி... என தமிழில் காமெடியும் எமோஷனலுமான கேரக்டர்களில் பிச்சு உதறியவர் வித்யுலேகா ராமன்.
டோலிவுட்டிலோ பிசி பொண்ணு. சமீபத்தில் டயட்டும், ஃபிட்னஸு மாக செதுக்கிச் செதுக்கி தனது உடல் எடையை குறைத்திருப்பவர் இப்போது கேக் மற்றும் குக்கீஸ் வெரைட்டிகள் செய்வதிலும் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார்.

அதனை விற்பனை செய்வதற்கென்றே இன்ஸ்டாவில் Parfait என்ற பெயரில் ஆன்லைன் ஷாப் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். ‘‘இந்த லாக்டவுன்ல குட்டியா பிசினஸ் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். Parfait ஒரு ஃபிரெஞ்ச் வார்த்தை. பர்ஃபெக்ட்னு அதுக்கு அர்த்தம். Parfait என்கிற வார்த்தை ரொம்பப் பிடிக்கும். அதை என் உடம்புல கூட டாட்டூவா போட்டிருக்கேன்.

வீட்ல நானே விதவிதமான ஃப்ளேவர்ஸ்ல குக்கீஸ், கப் கேக்ஸ், கேக்ஸ் தயாரிச்சு விக்கறேன். சின்ன வயசில இருந்தே பேக்கிங் ஃபுட்ஸ் ரெடி பண்றதுல ஆர்வமா இருப்பேன். பேக்கிங் ஸ்கூல் எதுவும் போனதில்ல. எல்லாமே ஆர்வத்தினால அப்டேட் பண்ணிக்கிட்ட விஷயங்கள்தான். எங்க வீட்ல யாருக்கு பர்த் டேனாலும் நான்தான் கேக் பேக் பண்ணுவேன்.

மைதா, சர்க்கரை இல்லாமல் சுகர் ஃப்ரீ கேக்குகளும் கூட பண்றேன். ஹைதராபாத்துக்கு ஷூட் போனாலும் சரி, ஃபாரீன் ட்ரிப் போனாலும் சரி என் கண்கள் கேக் ஷாப் மீதுதான் போகும். என்ன குக்கீஸ் ட்ரெண்ட்ல இருக்கு... என்ன மாடல் ஹாட்டா மூவ் ஆகுதுனு நோட் பண்ணி வச்சுக்குவேன்.

இந்த லாக் டவுன்ல நிறைய வெரைட்டி குக்கீஸ்களை விதவிதமான ஃப்ளேவர்ஸ்ல நானே ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே என் ஐடியாஸ்தான். லாக் டவுன் சரியானதும் சென்னையிலும் ஹைதராபாத்லேயும் ஷாப்பை ஓபன் பண்ற ஐடியா இருக்கு...’’ புன்னகைக்கும் வித்யு, தன் ஸ்லிம் சீக்ரெட்டையும் உடைக்கிறார்.

‘‘ஓவர்நைட்ல உடல் எடையை குறைக்கலை. இதுக்குப் பின்னாடி ரெண்டு வருஷ கதை இருக்கு. ஒரு டைம்ல எல்லாப் பெண்களையும் போல நானும் விதவிதமான ஃபேஷன் டிரெஸ்ஸை அணியணும்னு விரும்பியிருக்கேன். குண்டு உடம்பால, அதெல்லாம் சாத்தியமில்லாமப் போயிருக்கு. அதனால வாங்கின டிரெஸ்ஸைக் கூட தூக்கி வீசியிருக்கேன்.

2018 டிசம்பர்ல ஒரு ஃப்ரெண்டோட மேரேஜுக்காக ஒரு டிரெஸ் தச்சு வச்சிருந்தேன். பிங்க் கலர். அந்த டிரெஸ்ஸை ஜனவரியில் போட்டுப் பார்த்தா, அது என் முட்டிக்கு மேல கூட பத்தல. இருபது நாள் கூட ஆகல. இவ்ளோ வெயிட் போட்டுடோமா... இந்த டிரெஸ் இப்படி பத்தாமல் போயிடுச்சேனு செம ஃபீல் ஆகிட்டேன்.

அதுவுமில்லாம, குண்டாக இருக்கும்போது கால்பிளாடர்ல ஒரு ஸ்டோன் வந்து, சின்ன ஆபரேஷனும் ஆச்சு. அப்ப டாக்டர்ஸ் என்கிட்ட ‘இப்படியே வெயிட் அதிகரிச்சிட்டே போனா, உடல் ரீதியா நிறைய பிரச்னைகள் ஏற்படும். உங்க ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும் கணக்கு பண்ணினா முப்பது கிலோ அதிகமா இருக்கீங்க. அதை குறைச்சே ஆகணும்’னாங்க.

இதுவும் பயமுறுத்தி மனசை உறுத்திட்டே இருந்துச்சு. அதுவுமில்லாமல் ஓவர்வெயிட் ஆக இருந்தா, ‘பிசிஓ’ மாதிரி பெண்களுக்கே ஏற்படும் உடற்பிரச்னைகளும் வருமோனு பயந்தேன். ‘பிசிஓ’ஸை கண்ட்ரோல்ல வைக்கணும்னா அட்லீஸ்ட் இருபது கிலோ வெயிட்டாவது குறைக்கணும். ஆனா, நான் வெயிட் லாஸ் பண்றதைப் பத்தி பெருசா நினைக்காமலேயே இருந்தேன். அப்ப என் வெயிட் 86 கிலோவா இருந்துச்சு.

2019 தொடக்கத்திலே புத்தாண்டு சபதம் எடுக்கும்போது கூட என் வெயிட்டை குறைக்கணும்னு தீர்மானம் போட்டிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல உடல் எடை என் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சதும், வெயிட் குறைக்கறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சேன்.

ஒருநாள் யோகா பண்ணினேன். ஆயுர்வேதா எடுத்துக்கிட்டேன். ரொம்பவே பத்திய சாப்பாடு சாப்ட்டேன். மூணு, நாலு மாசம் யோகா அண்ட் ஆயுர்வேதாவிலேயே ஓரளவு மாற்றம் தெரிஞ்சது. 80 கிலோ வந்துட்டேன்.

அப்புறம், ஃப்ரெண்ட்ஸ் மூலமா கீட்டோ டயட் பத்தி தெரிஞ்சது. அதுல கொழுப்பு அதிகம் எடுத்துக்கணும். கார்போ ஹைட்ரேட்ஸ் குறைவா இருக்கும். நான் மீடியம் ஃபேட்தான் எடுத்தேன். அதுலேயே நல்ல மாற்றம் தெரிஞ்சது. 70 கிலோ வந்துட்டேன்.

ஜூலை 19ல எல்லாம் 72 கிலோல இருந்திருக்கேன். அப்புறம் என் பர்சனல் ட்ரெயினர் நவீன், நிறைய கைட் பண்ணினார். அவர் சொன்ன ஒர்க் அவுட் பண்ணும்போது, ‘ஐயோயோ... நான் குண்டாவே இருந்துடறேன்’னு கூட அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அப்படி ஒரு ஒர்க் அவுட் அது.

அவரோட மோட்டிவேஷனால ரெகுலரா ஜிம் போனேன். கார்டியோவும், வெயிட் டிரெய்னிங்குமா ஒர்க் அவுட் போச்சு. இடையே லாக்டவுனும் வந்துட்டதால ஃபுட் எங்கயும் ஆர்டர் பண்ணாம வீட்டுச் சாப்பாடே சாப்பிடும் வாய்ப்பு அமைஞ்சது.

இன்னொரு விஷயம், வீட்டு வேலைகள் நிறைய செஞ்சேன். வீட்டு வேலை செஞ்சாலே உடம்பு குறையும். இப்படியே 68 கிலோவா ஆகிட்டேன்.
இன்னமும் அஞ்சாறு கிலோ குறைச்சாதான் என் ஹைட்டுக்கேத்த வெயிட் கிடைக்கும். ஒல்லியாகணும்னு நான் நினைச்சதில்ல. ஆனா, நல்லா ஹெல்த்தியா, ஸ்டிராங்கா, ஃபிட்டா இருக்கணும்னு நினைச்சேன்.

இப்ப அப்படி கொண்டு வந்துட்டேன். உடம்பை குறைக்கணும்னு நினைக்கறவங்க யார் அட்வைஸையும் கேட்காதீங்க. ஒவ்வொருத்தர் உடம்பு வாகுக்கும் ஒவ்வொண்ணு செட் ஆகும். உங்க உடம்புக்கு எது செட் ஆகுதோ அந்த முறைல நீங்க வெயிட் லாஸ் ட்ரை பண்ணுங்க...’’ என நம்பிக்கை விதைகளை விதைக்கிறார் வித்யு.

மை.பாரதிராஜா