தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்... அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!ஒரு ‘வாவ்’ ஸ்டோரி

“குழந்தையை இயற்கையிடம் விட்டு விடுங்கள். இயற்கை ஆசிரியராக மாறி கற்பிக்கட்டும்....” இது 18ம் நூற்றாண்டில் மாபெரும் புரட்சி என உணரப்பட்டது. பலரையும் சிந்திக்க வைத்த, குழந்தை மைய கல்விக்கு முதல் குரல் கொடுத்தவர் ரூசோ. உடல் வளர்ச்சி, புலன் வளர்ச்சி, புலன் திறன் மேம்பாடு, ஒரு தொழில்பயிற்சி, சமூக நன்னடத்தை, ஒழுக்கம் என்பதை கல்வியின் லட்சியமாக அவர் கூறினார். ஆசிரியர் என்பவர் அறிவுறுத்துபவர் அல்லர். அவர் ஒரு வழிகாட்டியாக மட்டும் செயல்பட வேண்டும் என்பார் ரூசோ.

இந்த கொரோனா பேரிடர் காலம் மீண்டும் ரூசோ போன்ற அறிஞர்களின் கொள்கைகளை பரிசோதனை செய்யும் ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வசதி படைத்தவர்களும், தன் சொத்துக்களை விற்றும் கடன் வாங்கியும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பவர்களும் தங்களது குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் படிக்கவைக்க முன்வருகின்றனர்.  

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த மாணவர்களை ‘பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை’ச் சேர்ந்தவர்கள் சிலர் நேரடியாக சந்தித்துள்ளனர்.பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் என்பது அரசுப்பள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கல்வியையும் அதற்கான கல்விச் சூழலையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேலைசெய்யும் இயக்கம்.

தமிழகத்தின் முக்கியமான கல்வியாளர்களான எஸ்.எஸ்.ராஜகோபாலன், வி.வசந்திதேவி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ச.மாடசாமி ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.

“‘தனியார் பள்ளி மாணவர்கள் எல்லாம் ஆன்லைன்ல படிச்சுட்டு இருக்காங்க... நீ என்ன பண்ற’ என அரசுப் பள்ளி மாணவர்களை நோக்கி பலரும் கேட்கிறார்கள். எங்கள் நோக்கம் இதற்கான பதில் அல்ல. மாறாக அந்தக் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தோம். அதனாலேயே அரசுப் பள்ளி மாணவர்களை நேரடியாக சந்தித்தோம்...’’ என்று ஆரம்பித்தார் மதுரையைச் சேர்ந்த வாசல் பதிப்பகம் ரத்தின விஜயன்.

‘‘எங்கள் சந்திப்பில் பாடம் கற்றுக் கொடுப்பதைவிட குழந்தைகளுக்கான கற்பனை வெளியை இந்த நேரத்தில் எவ்வாறு கொடுக்கலாம் என்று விவாதித்தோம்.

இந்த நேரத்தில்தான் அறிவொளி இயக்கம் ஞாபகம் வந்தது. நான் அதில் இயங்கியிருக்கிறேன். எளிய சாதாரண மக்களுக்கான கல்வி என்ன என்பதை தெரிந்து கொண்ட இடம் அது.அறிவொளியில் சொல்லிக் கொடுப்பதற்கு தொண்டர்களைத் தேடுவோம். எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் கிராமங்களில் கற்றுக் கொடுக்க முன்வந்தார்கள். அவர்கள், படித்த பட்டதாரிகளோ அல்லது பெரிய பெரிய துறை அறிவாளிகளோ இல்லை.

சாதாரணமானவர்கள். 10ஆம் வகுப்பு வரை படித்து தினசரி வேலைக்கு சென்றுகொண்டிருப்பவர் மாலையில் தொண்டராக வருவார். சில நேரங்களில் எட்டாம் வகுப்பு படித்த குழந்தைகள் எல்லாம் கற்றுக் கொடுக்க வந்தார்கள். இந்த அனுபவத்தை இப்போதைய சூழலுக்கும் பயன்படுத்த முடியுமா என யோசித்தோம்.

ஓர் ஊரில் ஓர் அரசுப் பள்ளி இருக்கிறதென்றால் சுற்றுப்புறத்திலுள்ள ஐந்தாறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு படிப்பார்கள். எனவே அந்த ஐந்தாறு கிராமங்களில் இருந்து ஐந்து முதல் ஏழு தொண்டர்கள் வரை கண்டுபிடித்தால் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாவது குழந்தைகளை எங்கேஜ் செய்ய முடியும்...’’ என்ற ரத்தினவிஜயன், வீட்டிலேயே முடங்கி இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் பொழுதுகள் சிறப்பாக இல்லை... அவர்களது வீட்டுச் சூழலும் சரியாக இல்லை என்கிறார்.

‘‘எனவே அவர்களுக்கு ஒரு வெளி வேண்டும். அது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். எனவே கிராமங்களிலுள்ள வீட்டுத் திண்ணைகள், மரத்தடி
களில் அதுபோன்ற வெளியை உருவாக்க முடிவு செய்தோம். பிறகு குழந்தைகளின் கற்பனைக்கான இடத்தை உருவாக்க சில நடவடிக்கைகள், சில ஆய்வுகள், விளையாட்டுகள், பாடல்கள், ஓவியம் வரைதல், எளிய முறையிலான அறிவியல்பரிசோதனைகள்… ஆகியவற்றை கையில் எடுத்தோம்.

உண்மையில் நம் திட்டங்களை அப்படியே குழந்தைகளிடமும் திணிக்க முடியாது. அந்த திட்டங்களை எல்லாம் குழந்தைகள் மாற்றிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு கற்பிப்பது என்பது ஆசிரியர்களும் சேர்ந்து கற்பது போல்தான்! எனவே முதல் கட்டமாக குழந்தைகளை மனம் திறந்து பேச வைத்தோம். தொண்டர்களாக இருக்கும் ஆசிரியர்களுடன் அவர்களை சுமுகமாக பழக வைத்திருக்கிறோம்.

இது முதல் அடிதான். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். திண்ணை, மரத்தடிகளில் சமூக இடைவெளியுடனேயே மாணவர்களை அமர வைக்கிறோம். சமூகத்தில் அக்கறையுள்ள தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் எங்களுக்கு கைகொடுத்தால் நிச்சயம் இந்த ஊரடங்கு நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்த முடியும்...’’ என்கிறார் ரத்தின விஜயன்.

இதை ஆமோதிக்கிறார் ரத்தின விஜயனுடன் சென்ற ஆசிரியை ராணி குணசீலி. ‘‘தனியார் பள்ளிகள் இணையம் வழியாக மாணவர்களை சந்திக்கையில், நாங்கள் நேரடியாக அரசுப் பள்ளி மாணவர்களை சந்திக்கிறோம். முகம் பார்த்து கற்றுக் கொடுக்கிறோம்.  

சோப்பு, சானிடைசர், முகத்தில் மாஸ்க்... என பாதுகாப்புடன் கொரோனா தொற்று இல்லாத கிராமங்களுக்குச் சென்று அந்த ஊர் பிரசிடெண்ட்டை முதலில் பார்த்து எங்கள் நோக்கத்தை தெரிவிக்கிறோம். பிறகு அவர்களது ஆதரவுடன் திண்ணை, மரத்தடி கல்வியை மேற்கொள்கிறோம்.
குழந்தைகளுக்கு நாங்களும் கதைகள் சொல்கிறோம். அவர்களையும் கதைகள் சொல்ல வைக்கிறோம்.  

கோயில் படித்துறை, மரத்தடி நிழல்கள், வீதிகள் எல்லாம் இப்போது வகுப்பறைகளாக மாறியுள்ளன...” உற்சாகத்துடன் சொல்கிறார் ராணி குணசீலி.
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை முத்துக்குமாரியிடமும் பரவசம் எதிரொலிக்கிறது. ‘‘ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்த டிவி பார்ப்பதிலிருந்து சிலமணி நேரம் அவர்களை விடுவித்து சுதந்திரப் பறவைகளாக மாற்றியிருக்கிறோம்.

கிராமப்புறங்களில் பொதுவாக பெண் குழந்தைகள் மீதுதான் கட்டுப்பாடுகள் அதிகம். ஆண் குழந்தைகளை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சாப்பிடும் நேரத்தில் மட்டுமே ஆண் குழந்தைகளைத் தேடும் தாய்மார்கள் இங்கு அதிகம்.

முதல் நாள் ஓர் ஊருக்கு நான் சென்றபோது பிள்ளைகள் படிப்பை விட்டு வேறு விஷயங்களில் தங்கள் கவனத்தைத் திருப்பி இருந்தனர். இப்படியே போனால் பள்ளி இயங்கத் தொடங்கும்போது இவர்களை மீண்டும் படிக்க வைப்பது சிரமம். இந்நிலையில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை நிச்சயம் மாணவர்களை மலர வைக்கும்...’’ என்கிறார்.

அன்னம் அரசு