தல sixers story-7சரித்திரம்!

அன்றைய தேதியில் உடன் போட்டியிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் பலவீனமான பவுலர்களைக் கொண்டிருந்தது இந்தியா.ஹர்பஜன்சிங் தவிர்த்து மற்ற பவுலர்கள், ‘காட்டான்’ பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கான திறன் படைத்தவர்களாக கருதப்படவில்லை.எனவே, இந்தியாவின் வெற்றி என்பது முழுக்க பேட்ஸ்மேன்களின் தலைமீது வைக்கப்பட்ட பெரும் சுமை ஆனது.

‘தல’ எம்.எஸ்.தோனி, ‘சிக்ஸர் மன்னன்’ யுவராஜ்சிங், ‘பேட்டிங் யமஹா’ வீரேந்தர் சேவக், ‘அமைதிப் புயல்’ கவுதம் காம்பீர், ‘நம்பிக்கை நட்சத்திரம்’ ரோஹித் சர்மா என்று இறுதிப்போட்டி வரையிலான இந்தியாவின் வெற்றிநடைக்கு பேட்ஸ்மேன்களே பெரிதும் அச்சாரமாக அமைந்தார்கள். ஃபீல்டிங்கைப் பொறுத்தவரை முந்தைய இங்கிலாந்து டூரில் இந்தியா, கடுமையாக சொதப்பியிருந்தது.

ஆனால் - எம்.எஸ்.தோனியின் தலைமை, கடுமையான உழைப்பைக் கோரும் ஃபீல்டிங் யுக்தியாக இல்லாமல், டி20 போட்டிகளுக்கே உரித்தான குயிக் விக்கெட்டுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஃபீல்டிங் முறையாக அமைந்தது.ஒரு விக்கெட் கீப்பர் என்கிற முறையில் அவருக்கு ஸ்மார்ட் ஃபீல்டிங் யுக்தி நன்கு கைவரப்பெற்றிருந்தது.

ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பலம், பலவீனத்தை நன்கு கணித்து, அதற்கேற்ப பவுலர்களுக்கு ஆலோசனை செய்து, எப்படி பந்து போட்டால் எங்கே கேட்ச் ஆகும், எப்படி ரன் அவுட் செய்ய முடியும் என்பதையெல்லாம் துல்லியமாக அவரால் கணிக்க முடிந்தது.

பவுலிங், ஃபீல்டிங்கில் சற்றே பலவீனமாக இருந்த இந்திய அணிக்கு மாறாக - இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு விளையாட தேர்வாகி இருந்த பாகிஸ்தானோ, பெரும்பாலும் பவுலர்களின் சாமர்த்தியத்தால் இறுதிப்போட்டிக்கு தேர்வாகிய அந்தஸ்தை எட்டியிருந்தது.

எனினும் இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் ‘பவுல் அவுட்’ முறையில் தோற்றிருந்தது என்பதுதான் எவராலும் நம்ப முடியாத நிகழ்வாக அப்போது அமைந்திருந்தது.போட்டிக்கு முன்பாக பாகிஸ்தானின் ஓய்வறையில் பேட்டிங்கை விட, பவுலிங் மற்றும் ஃபீல்டிங் குறித்த யுக்திகளே அதிகமாக ஆலோசிக்கப்பட்டன.அவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய சேதி ஒன்றும் இருந்தது.

ஆம். அதுவரை இந்தியாவுக்கு அதிரடி ஓப்பனிங் கொடுத்துக் கொண்டிருந்த சேவாக், உடல்நலிவு காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற்க இயலவில்லை.சேவாக்குக்குப் பதிலாக யூசுப் பதான், காம்பீருடன் ஓப்பனிங் செய்ய இருந்தார்.வழக்கம்போல தோனிதான் டாஸ் வென்றார்.

வழக்கம்போல பேட்டிங்கையே தேர்வு செய்தார்.ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று சேவாக்கின் இடத்தைக் கைப்பற்றியதற்கு நியாயம் செய்த பதானை, மூன்றாவது ஓவரின் இறுதியிலேயே பாகிஸ்தான் வெளியேற்றி விட்டது.

அடுத்து வந்த ராபின் உத்தப்பாவையும் ஒற்றை இலக்கத்திலேயே காலி செய்தனர்.ஆனால் - அமைதிப் புயல் காம்பீர் அன்று ஆவேசப் புயலாக மாறி பாகிஸ்தான் பவுலர்களை கடுமையாக தண்டித்துக் கொண்டிருந்தார்.

அவரோடு கூட்டணி அமைத்த யுவராஜ்சிங், தோனி ஆகியோரை பாகிஸ்தான் பவுலர்களால் கட்டுப்படுத்த முடிந்தாலும், காம்பீரின் வெறித்தனம் அன்று எல்லை தாண்டிய பயங்கரவாதமாக அமைந்தது.54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களோடு 75 ரன் எடுத்து 18வது ஓவரின் இறுதியில்தான் அவுட் ஆனார்.

போதாக்குறைக்கு கடைசியில் வந்த ரோஹித் சர்மாவும் விளாசு விளாசுவென்று 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார்.எனினும் கூட -20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைதான் இந்தியா எடுக்க முடிந்திருந்தது.

ஒருவேளை காம்பீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி இருந்தால், இந்தியா 100 ரன்களுக்கே ததிங்கிணத்தோம் போட்டிருக்கும்.157 என்பது நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய எண்ணிக்கை அல்ல. அதே நேரம் மோசமான ஸ்கோரும் அல்ல என்பதே இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய அம்சம்.இப்போது இந்திய அணியின் கோப்பைக் கனவு பவுலர்களின் கைகளில்.

இன்றுவரையில் இந்திய பவுலர்களில் unsung hero-வாக விளங்கும் ருத்ரபிரதாப் சிங் என்கிற ஆர்.பி.சிங் இறுதிப்போட்டியில். தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் களமிறக்கினார்.

முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் ஓப்பனர் முகம்மது ஹபீஸை வெளியேற்றினார்.ஒரு பக்கம் இம்ரான் நசிர் புயல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தான் வீசிய அடுத்த ஓவரிலேயே கம்ரான் அக்மலை க்ளீன் பவுல்ட் செய்து டக் அவுட்டாக ஃபெவிலியனுக்கு திரும்ப வைத்தார் ஆர்.பி.சிங்.

அனுபவமிக்க பேட்ஸ்மேனான யூனிஸ்கான் போராட 5வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது பாகிஸ்தான்.அடுத்த 15 ஓவர்களில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்க, மேலும் 100 + ரன்களை எட்டினால் வெற்றி என்கிற சுலபமான சூழலில் இருந்தது.

அப்போது 14 பந்துகளிலேயே 33 ரன்களை விளாசியிருந்த இம்ரான் நசிர், துரதிருஷ்டவசமாக (பாகிஸ்தானுக்கு, அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு) உத்தப்பாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.இந்தச் சமயத்தில் எந்த கேப்டனும் செய்யாத ஒரு துணிச்சலான முயற்சியை தோனி செய்தார்.

ஸ்லோ மீடியம் வீசக்கூடிய ஜோகிந்தர் சர்மா, பார்ட் டைம் பவுலரான யூசுப் பதான் ஆகியோருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு தந்தார்.வேகப்பந்து வீச்சுக்கு செட்டில் ஆகியிருந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இது ரோதனையாகப் போயிற்று.

இதற்கு இந்தியாவுக்கு நல்ல பலனும் கிடைத்தது.ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதோடு அவசரப்பட்டு ஷாட் அடித்த யூனிஸ்கானையும் வெளியேற்ற முடிந்தது.இதன் பின்னர் பந்து வீச வந்த இர்ஃபான் பதான், பன்னிரெண்டாவது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் அதிரடி மன்னன் சாஹித் அப்ரிடி ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார்.

அந்த ஓவரின் முடிவில் 78 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் தத்தளித்தது.வெற்றி தேவதை இந்தியாவைக் கண்டு கண்ணடித்த நிலையில், தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சினர் மிஸாப் உல் அக்.அனுபமிக்க ஹர்பஜன் சிங் வீசிய 17வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.

அடுத்த ஸ்ரீசாந்தின் ஓவரில் சோஹைல் தன்வீரும் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸர்கள் விளாச, பாகிஸ்தான் வெல்லலாம் என்கிற நிலையில் கடைசி பந்தில் தன்வீரை, யார்க்கர் போட்டு கில்லி எகிற வைத்தார்.12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி.

19வது ஓவரில் பாகிஸ்தான் 7 ரன்கள் எடுத்ததோடு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் ஒரு விக்கெட்டுதான் இருந்தது.ஜோஹிந்தர் சர்மா, முதல் பந்தை அகலப்பந்தாக வீசி ஒரு ரன்னை வாரிக் கொடுத்தார்.

இரண்டாவது பந்தை மிசாப் உல் அக், சிக்ஸருக்கு விரட்டினார்.4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில், 3வது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டும் முயற்சியில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ரிஸ்க்கான ஒரு ஷாட்டை உல் அக் அடிக்க, பந்து ஸ்ரீசாந்தின் கைகளுக்குள் அடங்கி கேட்ச் ஆனது.

வெற்றி.ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.முதலாவது டி20 கோப்பை இந்தியாவின் வசமானது.ஜூன் 25, 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற உலகக்கோப்பையால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வாழ்வு கிடைத்தது.செப்டம்பர் 24, 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற உலகக்கோப்பையால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இருபது ஓவர் போட்டிகள், கிரிக்கெட்டுக்கு புதுரத்தம் பாய்ச்சியது.சரித்திரம் புதியதாக எழுதப்பட்டது.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்