நான்...இந்தியன் சூப்பர் ஹல்க் ராஜேந்திர மணி



‘‘உயரமும் இல்லை, அழகும் இல்லை உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை. ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு...’’இப்படிக் கிண்டல் அடித்த அவமான வார்த்தைகள்தான் எனக்கு முதல் படிக்கட்டு.

சென்னை தாம்பரம்தான் சொந்த ஊர். பத்தாவது வரைதான் படிப்பு. அப்பா மாசிலாமணி, அம்மா நிலா. ஓர் அக்கா, உஷா. நாலு தம்பிகள், வேலு, கணேஷ், பாஸ்கர், சுதாகர். மூத்த ஆம்பள பிள்ளை. அதனால அப்பாவுக்கு அடுத்த இடம். முழு குடும்ப பொறுப்பையும் நான்தான் பார்க்கணும். அப்பா கட்டடத் தொழிலாளி. அந்த வருமானத்துலதான் எட்டு பேர் சாப்பிட்டு வாழணும். பெரிய சொத்து, சேமிப்புனு எதுவும் கிடையாது.
எங்களுக்குனு தனி கனவெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. எங்களை காப்பாத்தணும்னுதான் எங்க அப்பா அவருடைய கனவை மூட்டைக் கட்டினார்.

ஆமா. அப்பா சின்ன வயசுலயே பாக்ஸிங், சிலம்பாட்டம் எல்லாம் செய்து வந்தவர். வேலைக்கு இடைல ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம்னு கிளாஸ் எடுப்பார். இந்த உடற்பயிற்சி செய்யறது, பாக்ஸிங் பயிற்சி எல்லாம் தங்களுக்கு வேணும்னு கேட்கிற மக்களுக்கு மட்டும் கிளாஸ் எடுக்கறதுண்டு. ஒருவேளை குடும்ப சுமை இல்லாம இருந்திருந்தா அப்பா இன்னைக்கு ஒரு பெரிய பாக்ஸராவோ அல்லது சிலம்ப குருவாகவோ இருந்திருப்பார்.

அப்பாவுடையை கட்டுப்பாடு எங்களுக்கும் உண்டு. காலைலயே எழுந்து அப்பா கூட சேர்ந்து உடற்பயிற்சி செய்தாகணும். இந்த பழக்கம் எனக்கு உடற்பயிற்சி மேல தீவிரமான ஆர்வமா மாறிச்சு. குறிப்பா உடலை நல்லா ஏத்தி, பயில்வான் மாதிரி ஆகணும்னு ஓர் ஆசை.குடும்ப சூழல் காரணமா படிக்கிறப்பவே சின்னச் சின்னதா வேலைகள் செய்தேன். அதுல ஒண்ணுதான் ஜிம் கிளீனர் வேலை. காலை மாலைனு ஸ்கூல் இல்லாத நேரத்துல ஜிம்மை சுத்தம் செய்யணும்.

14 வயசுல கிடைக்கற வேலைகளை செய்துட்டு அப்படியே ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சேன். அப்பவே இதுதான் வாழ்க்கைனு ஒரு குரல் எனக்குள்ள ஒலிச்சது. சரி... இறங்கித்தான் பார்ப்போமேனு இறங்கினேன். அர்னால்டு மாதிரியானவங்களை எல்லாம் பார்க்கிறப்ப அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ரெண்டு வருஷங்கள்தான்.

16 வயசுல ஓரளவு உடற்கட்டு சகிதமா மாறிட்டேன். இந்த ரெண்டு வருட காலமும் நடக்கற அத்தனை போட்டிகளுக்கும் பார்வையாளனா போவேன். ஓரமா நிற்பேன். அந்த மேடைல என்னைக்காவது நிற்கணும்னு எண்ணம் ஓடிட்டே இருக்கும்.
எனக்கான வயது வந்ததும் மாவட்ட அளவிலான பாடி பில்டிங் போட்டிகள்ல கலந்துகிட்டேன். அங்கதான் முதல் முறையா நேரடியான
அவமானங்களை சந்திச்சேன்.

‘உனக்கெல்லாம் இது தேவையா’னு கேலி கிண்டல் செய்து முகத்துக்கு நேரா சிரிச்சாங்க. ஆனா, அத்தனை பேர் முகத்துலயும் கரி பூசுகிற மாதிரி அந்த போட்டில நான் முதல் பரிசு வாங்கினேன்! எனக்கு அந்த போட்டி... வெற்றி மட்டும் போதாதுன்னு தோணுச்சு. சின்னச் சின்ன போட்டிகள் தொடங்கி எதையும் விடாம இருக்கற அத்தனை போட்டிகள்லயும் கலந்துக்க ஆரம்பிச்சேன். என்னதான் ஆசை இருந்தாலும் இது அதிக பணம் விரயம் ஆகற துறை. பின்னே... ஆணழகன் போட்டின்னா சும்மாவா!

நான் செய்துட்டு இருந்த வேலைல வந்த வருமானத்துல குடும்பத்துக்குப் போக மீதியை போட்டில கலந்துக்க ஒதுக்கணும். ஆனா, அப்படி ஒதுக்கற தொகை ஒரு போட்டில கூட கலந்துக்க போதுமானதா இல்ல.இதுக்கு மேல சாப்பாடு, புரோட்டீன், பயிற்சிகள்... இப்படி காசை அள்ளி இறைக்க வேண்டிய நிலை. பணக்கார மக்களுக்கு மட்டுமே உரிய போட்டிகள் இது. ஜாலியா காசை வெச்சுட்டு என்ன செய்யணும்னு தெரியாம ஜிம்முக்கு வந்து போட்டிகள்ல கலந்துகிட்டு இமேஜுக்காக ஆணழகன் பட்டம் ஜெயிப்பாங்க.

ஆனா, என் நிலை அப்படி இல்ல. சாதிக்கணும்கிற வெறி. அடித்தட்டுல இருந்து வந்த ஒருத்தன் இந்த மேடைல நிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு ஆரம்பப்புள்ளியா நானே இருக்கணும்னு நினைச்சேன்.ஆசைபட்டா போதுமா... வருமானம் வேணுமே. எங்கேயோ கடவுள் கண்ணைத் திறந்த மாதிரி எனக்கு விமானப் படைல வேலை கிடைச்சது. ஓரளவு குடும்ப வருமானம், உடற்பயிற்சி இப்படி பேலன்ஸ் செய்கிற மாதிரி நிலை மாறிச்சு.

அங்கயும் சும்மா இல்லை. விமானப் படை, கப்பல் படை, தரைப் படை இப்படி முப்படைகளுக்குமான பாடி பில்டிங் போட்டிகள் நடக்கும். அங்கயும் கலந்துகிட்டு ‘மிஸ்டர் சர்வீஸஸ்’ பட்டம் ஜெயிச்சேன். அடுத்து ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம் ஜெயிச்சேன்.

ஒரு தமிழன் முதல் முறையாக ‘மிஸ்டர் சர்வீஸஸ்’ வாங்கறது அதுதான் முதல் முறை. இதன் மூலமா தேசிய போட்டிகள் சாத்தியப்பட்டது. ‘மிஸ்டர் இந்தியா’ போட்டிகளுக்கு தயாராக ஆரம்பிச்சேன்.  

அடுத்த கண்டம் கல்யாண ரூபத்துல வந்தது. பையன் நல்ல வேலை, ஓரளவு செட்டிலாகிட்டானாலே வீட்ல அதைத்தானே செய்வாங்க?
ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வச்சாங்க. என் வருமானம் அடுத்தடுத்து குடும்பம், குழந்தைனு போக ஆரம்பிச்சது.

ஆனா, என் மனைவிக்கு என் கனவுகள் பத்தி நல்லாவே தெரியும். அவங்களாவே என்னை தொடர்ந்து இந்தப் போட்டிகளை விடக்கூடாதுன்னு சொல்லி, தான் கொண்டு வந்த நகைகள் மூலமா எனக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

இப்ப என் கனவு மட்டுமில்லை... என் மனைவியுடைய கனவும் சேர்ந்து என்னை தேசிய போட்டிகள் மேடைகள்ல நிறுத்திச்சு!மாவட்ட அளவிலான போட்டிகள்லயே கேலி, கிண்டல், அரசியல்னா... தேசியப் போட்டிகள்ல? அதுலயும் ஒரு தமிழன் இந்த பாடி பில்டிங் மேடைகள்ல நிற்கணும்னா...

கண்டிப்பா பல கட்ட அரசியல் பிரச்னைகளை சந்திக்கணும். வடக்கே இருக்கறவங்க தங்களுக்குப் போட்டியா ஒரு தமிழன் இருக்கறதை எந்த அளவுக்கு வெறுப்பாங்கன்னு கண் கூடா பார்த்தேன். ஜெயிக்க வேண்டிய, ஏன் தேர்வுக் குழுவிலே இருந்த ஒண்ணு ரெண்டு நியாயமானவர்களுக்கும் தெரியும் நான்தான் அந்தப் போட்டியிலே தகுதியானவன்னு.

ஆனா, அரசியல் காரணமா முதல் ரெண்டு வருஷங்கள் மூன்றாம் இடம், இரண்டாவது இடம்னு கொடுத்தாங்க. உண்மையை எத்தனை நாளைக்கு அடக்க முடியும்? மூணாவது வருஷத்துல இருந்து தொடர்ந்து எட்டு வருஷங்கள் ‘மிஸ்டர் இந்தியா’ மற்றும் ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம்
வாங்கினேன்!முதல் தமிழனா இதை செய்துக் காட்டினேன். இப்ப வரை எட்டு வருஷங்கள் ‘மிஸ்டர் இந்தியா’ பாடி பில்டிங் ஜெயிச்சவங்க யாருமில்லை!

இந்தப் போட்டிகள் என்னை ‘மிஸ்டர் ஏசியா’க்கு கூட்டிட்டுப் போனது. 2009ம் வருஷம் ஆசிய அளவிலான பாடி பில்டிங் போட்டில பட்டம் வாங்கின முதல் தமிழன்நான். அடுத்து 2013ம் வருஷம் ஹங்கேரில ‘மிஸ்டர் வோல்ட்’ மேடை ஏறின தமிழன்... அதுலயும் அடித்தட்டுல இருந்து வந்த ஒருத்தன் நான்தான்! 90 கிலோவுக்கு மேலான தரவரிசை எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அங்கயும் ஜெயிச்சேன்.

இதற்கிடைல என் பையன் பெஞ்சமின் ஜெரால்ட், என் வழியிலயே பாடி பில்டிங் உள்ள வந்துட்டார். 2018 ‘மிஸ்டர் ஏசியா’ மேடைல நானும் என் பையனும் ஒண்ணா கலந்திக்கிட்டோம்! அப்பாவும்  பையனும் இதுவரை ஒரே மேடைல இடம் பிடிச்சதே இல்லை!

நான் ‘மாஸ்டர்’ பட்டியல்லயும், அவர் ஜூனியர் பட்டியல்யுமா கலந்துகிட்டோம். அவர் 17 வயசுல ‘மிஸ்டர் ஏசியா’ போட்டில சில்வர் மெடல் அடிச்சார். நான் உலக சாதனை படைச்சப்ப இருந்த சந்தோஷத்தைக் காட்டிலும் அதிகமா சந்தோஷப்பட்டேன்!  ஆங். இந்த ‘இந்தியன் சூப்பர் ஹல்க்’ செல்லப் பெயர் எனக்கு மகாராஷ்டிராலதான் கிடைச்சது.

‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ போட்டி நடந்த நேரம். நான் மேடைக்குப் போக கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எனக்கு முன்னாடி மத்த போட்டியாளர்கள் எல்லாம் வந்து 80 கிலோ எடைக்குக் கீழ நின்னாங்க. நான் மட்டும் 90 கிலோவுக்கு மேல பெரிய உருவமா ஓடி வந்து நின்னேன்!

அவ்வளவுதான். கூட்டமே என்னை ‘ஹல்க் ஹல்க்... ஹல்க்’னு கத்தி கூப்பிட ஆரம்பிச்சது. ஏதோ ஹாலிவுட் பட கேரக்டராமே... அப்ப எனக்கு அது
தெரியாது.

அந்த மேடைல என்னை ‘இந்தியன் சூப்பர் ஹல்க்’னு செல்லமா கூப்பிட்டு முதல் பரிசு கொடுத்தாங்க. இதுக்கு அப்புறம்தான் ஹல்க் ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர்னு தெரிஞ்சுக்கிட்டேன்.இத்தனையும் சாத்தியப்பட்டது என் மனைவி மூலமாதான். அவங்க பெயர் பிரிஸிலா ஜெயந்தி. எங்க குடும்ப நண்பர் மூலமா வந்த வரன். எனக்கு ரெண்டு பசங்க. பெஞ்சமின் ஜெரால்ட் பி.எஸ்.சி இயற்பியல் ரெண்டாமாண்டு படிச்சிட்டு இருக்கார். இன்னொருத்தர் ராபின்சன். பத்தாவது  படிக்கறார்.

52 வருஷ இந்திய பாடி பில்டிங் வரலாறு... அதுல 100 கிலோ தரப்பட்டியலான ஹெவி வெயிட் வரிசைல சாம்பியன் பட்டம்... இன்னமும் எனக்கு அப்புறம் ஒரு தமிழனும் ஜெயிக்கலை!இது ஒரு பக்கம் பெருமைனாலும் இன்னொரு பக்கம் சோகம்தான். தமிழகம் மட்டுமில்ல... தென்னிந்தியாவுலயே பாடி பில்டிங் மேல ஆண்களுக்கு ஆர்வம் குறைவாதான் இருக்கு.

ஆனாலும் ஒரு சந்தோஷம். முன்பை விட இப்ப உடற்பயிற்சி மேல ஆர்வம் அதிகரிச்சிருக்கு. ஏகப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் கடந்த அஞ்சு வருஷங்கள்ல உருவாகியிருக்கு.உண்மைல பாடி பில்டிங் ஒரு தவம். நிறைய தியாகம் பண்ணனும். சாப்பாடு, நண்பர்கள், குடும்பத்துக்கான நேரம், பணம் இப்படி.

இதையெல்லாம் தாண்டி உலக மேடைல நிற்கறப்ப பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடில மறைஞ்சுடும். வலியைத் தாங்கற உடலும், வலிமையைத் தாங்கற மனமும் இருந்தா போதும்... பாடி பில்டிங் மட்டுமில்ல... எந்தக் கலையும் சாத்தியம்தான்!

ஷாலினி நியூட்டன்