ரத்த மகுடம்-106
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது. தன்னையும் அறியாமல் அதே வினாவைத் தொடுத்தார். ‘‘நம் மன்னரையா..?’’‘‘ஆம்! சாளுக்கிய மன்னரை!’’ அழுத்திச் சொன்னான் விநயாதித்தன்.‘‘எதற்கு?’’ ‘‘அதுதான் முன்பே சொன்னேனே குருவே...’’ ‘‘பாதகமில்லை... மீண்டும் ஒருமுறை சொல்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு மூச்சு வாங்கியது.
 அவரை நிதானமாக ஆராய்ந்தான் விநயாதித்தன். அவன் நயனங்களில் மெல்ல மெல்ல பாசத்தின் ரேகைகள் படர்ந்தன. அறிவாளிதான்... மதியூகிதான்... என்னவோ கிரகங்களின் சேர்க்கை... இப்பொழுது விழிக்கிறார்.‘‘சொல் விநயாதித்தா...’’‘‘மதுரை பாதாளச் சிறையில், தான் எடுத்த ரகசியத்தை சாளுக்கிய மாமன்னரிடம் ஒப்படைக்க சிவகாமி சென்றிருக்கிறாள்!’’விழிகளை அகற்றாமல் விநயாதித்தனைப் பார்த்தார்.
அவர் தோளின் மீது ஆதரவாக விநயாதித்தன் கை வைத்தான். ‘‘சிவகாமி, சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவிதான் குருநாதரே! சந்தேகத்தைப் பொசுக்கிவிட்டு வாருங்கள்...’’‘‘எங்கு..?’’‘‘பாண்டிய மன்னரைச் சந்திக்க!’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் துள்ளினார். ‘‘இந்த நள்ளிரவிலா..?’’‘‘இதே அகாலவேளையில்தான்!’’‘‘எதற்கு..?’’
‘‘அவருடன் உரையாட...’’‘‘உரையாடி..?’’‘‘உறவை பலப்படுத்த!’’ விநயாதித்தன் பெருமூச்சுவிட்டபடி சாளரத்தை ஏறிட்டான். சில கணங்களுக்கு முன் அமளிதுமளியாகக் காட்சியளித்த எதிர்ப்புறத்தை இப்பொழுது இரவு கழுவி சுத்தப்படுத்தியிருந்தது.
‘‘விநயாதித்தா...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை உலுக்கினார்.திரும்பி அவரைப் பார்த்தான். அந்தப் பார்வையில் எதை உணர்ந்தாரோ... அவரையும் அறியாமல் அவர் உதடுகள் உச்சரித்தன... ‘‘இளவரசே...’’‘‘குருவே! சிவகாமியை பாதாளச் சிறையில் அடைத்தது பாண்டிய இளவரசன்...’’ ‘‘ம்...’’‘‘நம் ஒற்றர் படைத்தலைவியாக பாண்டியர்களை அவள் வேவு பார்க்க வந்ததாக கரிகாலன் குற்றம் சுமத்தினான்... கிடைத்த ருசுக்களும் அவனுக்கு சாதகமாக இருக்கவே இரணதீரனும் அவளை சிறையில் அடைத்தான்...’’ ‘‘ம்...’’‘‘இப்பொழுது சிவகாமி தப்பித்திருக்கிறாள்...’’ ‘‘...’’
‘‘பாண்டியர்களின் ஆதரவை வேண்டி மதுரைக்கு வந்த நாம், அவர்களது விருந்தினர்களாக பாண்டியர்களின் தலைநகரில் தங்கியிருக்கிறோம்... நம்மைச் சேர்ந்தவள் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்தும் தப்பித்திருக்கிறாள்...’’ ‘‘...’’‘‘இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாழிகைகளுக்கு முன் நாம் இருவரும் பாண்டிய இளவரசனின் துணையுடன் அவளைச் சந்தித்திருக்கிறோம்!’’ ‘‘அவள் தப்பித்ததற்கும் நாம் அவளைச் சந்தித்ததற்கும்...’’
‘‘... தொடர்பு இருப்பதாக பாண்டிய மன்னர் கருதினால்..?’’
விநயாதித்தனின் இந்த வினா, ஸ்ரீராமபுண்ய வல்லபரின் நாடி நரம்புகளுக்குள் குருதி எனப் பாய்ந்தது. சட்டென திரை விலகியது போல் வெளிச்சம் பாய்ந்தது. நிமிர்ந்தார்.
‘‘நிச்சயம் அப்படித்தான் கருதுவார்...’’ இந்தக் குரல்... இந்தக் குரல்... விநயாதித்தனின் வதனத்தில் சுருக்கங்கள் களைந்தன. இப்போது தன் முன் நிற்பவர் நிலைகுலைந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் அல்ல... சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சர்... நம் தேசத்தின் தலைசிறந்த மதியூகி...
‘‘அதனால்தான் பாண்டிய மன்னரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்கிறேன் குருவே...’’ மரியாதையுடன் சொன்னான் விநயாதித்தன். ‘‘என்னை விட... ஏன், தன்னை விட... நீங்கள் கெட்டிக்காரர்... திறமையாகப் பேசி பாண்டியர்களுடன் உறவை வளர்ப்பீர்கள்...
பல்லவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சாயாதபடி தடுப்பீர்கள் என சாளுக்கிய மாமன்னர் நம்புகிறார்... அதனாலேயே மதுரைக்கு உங்களை அனுப்பினார்... அரசியல் பாடங்களை அடியேன் கற்க வேண்டும் என்பதற்காக என்னையும் உடன் அனுப்பியிருக்கிறார்... நம் மாமன்னரின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்... அதற்கு இந்த நள்ளிரவில் நாம் பாண்டிய மன்னரைச் சந்தித்துதான் ஆக வேண்டும்...’’ ‘‘அவர் உறக்கத்தில் இருப்பாரே...’’ ‘‘இல்லை குருவே... நம்மைப் போலவே கரிகாலனையும் சிவகாமியையும் தன் மாளிகையின் உச்சியில் இருந்தபடி அவர் பார்த்துக் கொண்டிருந்தார்...’’ விநயாதித்தன் சுட்டிக் காட்டிய திசையின் பக்கம் தன் பார்வையைப் பதித்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘கரிகாலனும் சிவகாமியும் தன் பார்வையை விட்டு மறைந்ததுமே பாண்டிய மன்னர் அகன்றுவிட்டார்...’’
‘‘தப்பித்த சிவகாமியைப் பிடிக்க அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையா..?’’ ‘‘தெரியவில்லை குருவே... கரிகாலனை தன் வீரர்கள் துரத்துவதையும் மாளிகையின் உச்சியில் புரவியின் மீது அமர்ந்தபடி சிவகாமி நடைபோட்டதையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்...’’
ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘மெய்மறந்தா..? இதுபோன்ற தருணத்தில் ஒரு நாட்டின் மன்னர் இப்படி நடந்து கொள்ளமாட்டாரே..?’’‘‘அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் குருவே... ஏனெனில் பாண்டிய மன்னருக்கு அருகில் அவர் மகனும் அமைதியாக நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்... எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அவனும் இறங்கவில்லை...’’ ‘‘யார்... பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனா..?’’‘ஆம்...’ என விநயாதித்தன் தலையசைத்தான்.
‘‘எனில் தாமதிக்காமல் பாண்டிய மன்னரை நாம் சந்தித்து உரையாடத்தான் வேண்டும்... பல்லவர்களுக்கா நமக்கா... யாருக்கு உறவாக அவர் இருக்கிறார் என்பதை அறியத்தான் வேண்டும்...’’ தனது வலதுகை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை மூன்று முறை தட்டினார். ‘‘நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் சிவகாமி தப்பித்ததற்கும்... கரிகாலனை பாண்டிய வீரர்கள் துரத்தியதற்கும்...’’ ‘‘... பாண்டிய மன்னருக்கும் தொடர்பு இருக்குமோ என அஞ்சுகிறேன் குருவே...’’
‘‘உண்மைதான்... அவரது அனுமதியில்லாமல் இத்தனையும் நடந்திருக்க வாய்ப்பில்லை...’’ ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த ராமபுண்ய வல்லபர், சட்டென விநயாதித்தனின் தோள்களை தன் இரு கரங்களாலும் பற்றினார். ‘‘உண்மையா..?’’
‘‘உள்ளுணர்வு சொன்னதை வெளிப்படுத்தினேன்...’’ ‘‘நான் கேட்டது சிவகாமி குறித்து... அவள் நம்மைச் சேர்ந்தவள்தான் என எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’ ‘‘மதுரையில் என்னைச் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவள் சொன்னாள்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கண்களால் தொடரும்படி சைகை செய்தார்.
‘‘ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், தான் கரிகாலனை நோக்கி குறுவாளை வீசினால்... உடனே எடுக்க வேண்டிய மர்மத்தை, தான் எடுத்துவிட்டதாகவும் அதை எவ்வித இடையூறும் இன்றி சாளுக்கிய மாமன்னரிடம் ஒப்படைக்க, தான் சென்று கொண்டிருப்பதாகக் கருத வேண்டும் என்றும் சொன்னாள்...’’ ‘‘ஆனால், அவள் வீசியது குறுவாள் அல்லவே! குறுவாளுக்குள் இருந்த வாள் அல்லவா..?’’‘‘இந்த சந்தேகம் எழக் கூடாது என்பதற்காக நாம் இருந்த திசையை நோக்கி அவள் சைகை செய்தாள்!’’ ‘‘எப்பொழுது?’’
‘‘கரிகாலன் மீது குறுவாளை எறிந்ததுமே!’’ ‘‘நான் கவனிக்கவில்லையே..?’’‘‘அடியேன் கவனித்தேன்!’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிந்தனையில் ஆழ்ந்தார்.‘‘அவளைச் சந்தேகிக்க வேண்டாம் குருவே... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான்... நமக்காகத்தான் தன் உயிரையும் பணயம் வைத்து எல்லா சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறாள்...’’‘‘அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான்... சரி... காஞ்சி சிறையில் இல்லாத எந்த மர்மத்தை அவள் மதுரைச் சிறையில் கைப்பற்றியிருக்கிறாள்?’’‘‘தெரியவில்லை குருவே...’’
‘‘ம்... ம்... வா... பாண்டிய மன்னரைச் சந்திக்கலாம்... அதற்கு முன்... இந்த கடிகை பாலகனை...’’ என்றபடியே திரும்பிய ராமபுண்ய வல்லபர் அதிர்ந்தார்!ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடந்த கடிகை பாலகன் அங்கில்லை!விநயாதித்தனின் கண்களும் சிவந்தன.
கோபத்துடன் தன் வீரர்களைப் பார்த்தான். அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.‘‘நம்மைப் போலவே சிவகாமியின் புரவி சாகசத்தையும் கரிகாலனின் வாள்வீச்சையும் வாயைப் பிளந்தபடி வீரர்கள் பார்த்திருக்கிறார்கள்... அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கடிகை பாலகன் தப்பித்திருக்கிறான்...’’ விநயாதித்தன் முணுமுணுத்தான். ‘‘பிரச்னை அவன் தப்பியது அல்ல...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பற்களைக் கடித்தார். ‘‘பதினைந்து பேர்... யார் அவர்கள்..? எதற்காக ஒரே மாதிரி பதினைந்து செய்திகளை அந்தப் பாலகன் வைத்திருந்தான்... சிவகாமியும் அதேபோன்ற செய்தியை ஏன் நம்மிடம் கொடுத்தாள்..?’’ ‘‘யோசிப்போம் குருவே... அதற்குமுன் பாண்டிய மன்னரைச் சந்தித்து விடுவோம்!’’விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள்.
மல்லைக் கடற்கரையில் இருந்த பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், நிதானமாக சுங்கத் தலைவர் தன்னிடம் ஒப்படைத்தசுவடிக் கட்டை ஒவ்வொன்றாகப் படித்தார்.அவ்வப்போது சிந்தனையில் அவர் நயனங்கள் ஆழ்ந்தன. பிறகு இயல்புக்குத் திரும்பி தம் பணியைத் தொடர்ந்தன.முழுவதுமாக அந்த சுவடிக் கட்டை ஆராய்ந்ததும் நிமிர்ந்தார்.
‘‘அவ்வளவுதானா..?’’‘‘ஆம் மன்னா...’’ குனிந்து தன் வாயைப் பொத்தியபடி சுங்கத் தலைவர் பதில் அளித்தார். ‘‘கடந்த ஏழு நாட்களில் எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து மல்லைக் கடற்கரைக்கு வந்தன... என்னென்ன பொருட்கள் வந்திறங்கின... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் இந்த சுவடிக்குள் இருப்பவைதான் மன்னா... உண்மையைச் சொல்வதென்றால்...’’ உமிழ்நீரை விழுங்கினார்.‘‘கடந்த ஒரு திங்களாக நமக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுங்கக் காசு வந்திருக்கிறது... அதுதானே..?’’‘‘ஆம் மன்னா...’’
சுவடிக் கட்டை சுங்கத் தலைவரிடம் திருப்பிக் கொடுத்த விக்கிரமாதித்தர், தன் கரங்களை உயர்த்தி அவருக்கு விடை கொடுத்தார். பின் நிதானமாக மல்லைக் கடற்கரையில் நடக்கத் தொடங்கினார்.நரசிம்மவர்ம பல்லவரால் தொடங்கப்பட்டு ஆயனச் சிற்பியால் மேற்கொள்ளப்பட்ட சிற்பப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருந்தன. ‘ஒருபோதும் இவை நிறைவடையவே கூடாது... சிற்பக் கலைக்கு பெயர்போன இடமாக மல்லை மாறக் கூடாது... பல்லவர்களுக்கு அந்தப் பெயர் கிடைக்கவே கூடாது...’
மனதுக்குள் உச்சரித்த விக்கிரமாதித்தர், அங்கிருந்த மரக்கலத்தில் ஏறி கடலை உற்றுப் பார்த்தார். சமுத்திரத்தின் ஓசை செவியை அறைந்தது... இரவுக் கடலோ கண்களை நிரப்பியது...தன் இடத்துக்கு வந்து சேர்ந்த சுங்கத் தலைவர், தலையை உயர்த்தி விக்கிரமாதித்தர் நின்றிருந்த கலத்தைப் பார்த்தார்.
தனக்குள் புன்னகைத்தபடியே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டு ஒன்றை எடுத்தார்.அது, கடந்த ஏழு நாட்களுக்குள் மல்லைக்கு வந்த மரக்கலங்கள் தொடர்பான உண்மையான விவரங்கள் அடங்கிய பட்டியல்!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|