வந்தது லாக்டவுன்... அதிகரிக்குது குடும்ப வன்முறை!



கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை குறித்து ‘Listen To Her’ என்ற குறும்படத்தை நடிகை நந்திதா தாஸ் இயக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
முடிவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வாக தேசிய மகளிர் ஆணையத்தின் வாட்ஸ் ஆப் எண் 7217735372; பெண்களுக்கான உதவி எண் 181; மன அழுத்த ஆலோசனை உதவிக்கு 112 ஆகிய எண்கள் வழங்கப்பட்டிருந்தது.

ஊரடங்கால் வீடுகளுக்குள் அனைவரும் அடைபட்டுக் கிடக்கும் கட்டாயச் சூழலின் முதல் வாரத்திலேயே குடும்ப வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன என்பது முகத்தில் அறையும் நிஜம்.இது குறித்து இந்திய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, ‘இமெயில் மூலம் மட்டுமே 116 புகார்கள் வந்துள்ளதாக’த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஊரடங்கில் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களிடம் புகார்களைப் பெற மாவட்டம்தோறும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டிருப்பதையும், அனைத்து மாவட்டத்திற்கும்
ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.

181 உதவி எண் மூலம் 356 புகார்கள்; 1091 உதவி எண் மூலம் 32 புகார்கள்; 1098 உதவி எண் மூலம் 16 புகார்கள்; 100 காவல் உதவி எண்ணில் 62 புகார்கள்; பாதுகாப்பு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் 472 புகார்கள்... என ஊரடங்கில் குடும்ப வன்முறை தொடர்பாக 938 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது தேசிய மகளிர் ஆணைய வலைதளத்தின் படி, இந்தக் கட்டுரை அச்சுக்கு செல்லும்வரை, மொத்தம் 5187 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

என்ன நடக்கிறது... ஏன் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்திருக்கின்றன..?

‘‘லாக்டவுனுக்கு பிறகு பெண்கள் மிகவும் மோசமான குடும்ப வன்முறைக்கு உள்ளாகி வருகிறார்கள்...’’ என்று ஆவேசத்துடன் பேசத் தொடங்கினார் வழக்கறிஞர் திலகவதி.‘‘ஏப்ரல் மாதம் மட்டும் பதிவான வழக்குகளில் 89% குடும்ப வன்முறை வழக்குகளே. காவல் துறைக்கு மட்டும் 5740 புகார் அழைப்புகள் லாக்டவுனில் வந்துள்ளன. மார்ச் 25 முதல் மே 31 வரை கணக்கிட்டால் 1477 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 10 வருடங்களில் வந்த புகார்களைவிட அதிகம்.

நோய் தொற்றால் ஏற்பட்ட லாக்டவுன் இது என்றாலும் வீட்டில் இருப்பது நம் நாட்டு பெண்களுக்கு புதிதல்ல. ஆனால், வெளியில் சுற்றிவிட்டு இரவு வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு இந்த லாக்டவுன் மிகப் பெரும் அதிர்ப்தியை கொடுத்துள்ளது.வேலைக்கும் போக முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அதிக மன அழுத்தத்துக்கு ஆண்கள் ஆளாகிறார்கள்.

முக்கியமான விஷயம், குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் இடத்தில் இந்தச் சமுதாயம் ஆண்களையே நியமித்திருக்கிறது. எனவே இனி நம் பொருளாதார நிலை எப்படி இருக்கும்... நம் வேலை எப்படி போகும் என்ற சிந்தனையில் ஆண்கள் சிக்கித் தவிக்கிறார்கள். பலர் தற்கொலை முடிவுவரை செல்வதாக பதிவுகள் வருகின்றன.

வீடு வாகனம் வாங்கிய கடன்கள், அதற்கான இ.எம்.ஐ. போன்றவை அவர்களை அச்சமூட்டி மன உளைச்சலைத் தருகிறது. பாதுகாப்பற்ற மனோ நிலையில், லாக்டவுன் முடிந்து வெளியே வரும்போது கையில் பணம் இருக்குமா... வேலை இருக்குமா... என்பதெல்லாம் பயமுறுத்த, தங்கள் மன அழுத்தத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் வெளியிட்டு அடக்கு முறையைக் கையாள்கிறார்கள்.

போதைக்கும் மதுவிற்கும் அடிமையான ஆண்கள் என்றால், மனைவியை அடித்து பணத்தைப் பறிக்கிறார்கள். குழந்தைகளையும் அடித்து கெட்ட வார்த்தைகளால் தாக்குகிறார்கள். பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இந்தக் காட்சிகளை வீட்டில் இருந்து பார்க்கும் குழந்தைகள் உளவியல் சிக்கலில் சிக்குகிறார்கள்.

போக்குவரத்து தடையும் சிக்கலான விஷயமாக பெண்களுக்கு மாற, ஆண்களிடம் அடிவாங்கினால் வெளியில் போகவோ, தங்கள் பெற்றோர் வீட்டிற்குச் செல்லவோ முடியாமல் தவிக்கும் பெண்கள் அனைவரும் காவல் நிலையங்களுக்குச் செல்வதில்லை. மீறி காவல் நிலையம் சென்றாலும், நீதி மன்றங்கள் இயங்காத நிலையில், காவலர்கள் புகாரையும் எடுக்காது கட்டப் பஞ்சாயத்து செய்தே அனுப்பி வைக்கிறார்கள்.

பெண்களின் சிக்கல்கள் சமையல் அறையில் தொடங்குகிறது. வீட்டில் சும்மாவே இருக்கும் ஆண்கள் கூடுதலாக உணவுக்கு ஆர்டர் போடுகிறார்கள். முற்றிலும் சமையல் அறையிலே பொழுது கழிகிறது. வீட்டில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அவரை கவனிக்கும் பொறுப்பு பெண்களின் தலையிலேயே விழுகிறது.

இப்படி ஒட்டு மொத்த குடும்பத்தின் தூய்மை, ஆரோக்கியம், பொருளாதாரம்... என எல்லாமும் பெண் மீதே விழ, பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தியவள், வருமானம் குறைந்து கடன் பிரச்னை வரும்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறாள்.

பாதிக்கப்படும் அத்தனை பெண்களும் 181 ல் புகார் அளிப்பதில்லை என்றாலும், தமிழ் நாடு காவல் நிலையத்தில் தொலைபேசி வாயிலாக மட்டும் 2963 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. இதை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை...’’ என பெருமூச்சு விடுகிறார் வழக்கறிஞர் திலகவதி.

இதை ஆமோதிக்கிறார் மற்றொரு வழக்கறிஞரான சுதா காந்தி. ‘‘ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவை புகாராகப் பதியப்பட்டவை. இதற்கும் மேல் புகாராகப் பதியப்படாத குடும்ப வன்முறைகள் அநேகம்.

பெண்கள் சம்பாதித்தாலும் வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும், குடும்ப உறுப்பினர்களை கவனிக்கும் பணியும் அவள் மீதே திணிக்கப்படுகிறது. மூன்று வேளைக்கு மட்டும் சமைத்த பெண்கள் ஊரடங்கில் ஐந்து வேளை சமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். டீ, காபி, ஸ்நாக்ஸ் தயாரிப்பு தனி.

இந்த சுமைகள் போதாதென்று குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தனி. இவை எல்லாம் பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.  
லாக்டவுன் தொடங்கிய எப்ரல் மாதம் வரதட்சணை கொடுமையால் ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இறந்தார். மது கிடைக்காததால் 17 வயது மகளை அப்பா அடித்துக் கொன்றிருக்கிறார்.

சிறிய அறை மட்டும் கொண்ட வீட்டில் கணவருக்கு வருமானம் இல்லை. மதுவும் கிடைக்கவில்லை. குழந்தைக்கு அடுத்த வேளைக்கு உணவில்லை.  இதில் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கணவரின் பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும்.

மீன் வியாபாரம், காய்கறி விற்பனை, வீட்டுப் பணிப்பெண் வேலை... என இதுநாள்வரை பகல் முழுவதும் கணவரின் அடி உதையில் இருந்து தப்பித்த பெண்கள் இப்போது ஊரடங்கால் இரவு பகல் பாராமல் எல்லா நேரங்களும் கணவர்களிடம் அடி உதை வாங்குகிறார்கள். 

இப்படி ஆண்களின் அடக்குமுறைக்கு ஆளாகும் பெண் கணவனை மீறி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிப்பது சவாலானது. குடும்ப வன்முறைக்காக வழங்கப்பட்டுள்ள பிரத்யேக டோல் ஃப்ரீ எண்கள் பெண்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

இந்தியாவில் 57 சதவிகிதம் பெண்கள் கைபேசி பயன்படுத்துவதில்லை. மீதியுள்ள 43 சதவிகிதத்தில், 30 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இணையம் பயன்
படுத்துபவர்கள். இந்த எதார்த்தத்தில் மூன்றில் ஒருவர் எனக் கணக்கிட்டால் புகார் எந்த அளவில் உள்ளது என்பது நமக்கே புரியும்!

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் ‘Special Cell for Women and Children’ ஆகியவை டாட்டா சமூக அறிவியல் மையத்தோடு (TISS) இணைந்து 17 மாநிலங்களில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ களப் பணியாளர்களை நியமித்து, அவர்கள் எண்களை இணைய பக்கத்தில்
வெளியிட்டது.  

தமிழகத்திலும் குடும்ப வன்முறை புகார்களைப் பெற்று, பெண்களுக்கு வழிகாட்ட மாவட்ட ரீதியாக அங்கன்வாடி பணியாளர்களை நியமித்து இணையத்தில் வெளியிட்டார்கள். இணையம் பயன்படுத்த தெரியாத அல்லது இணையமே இல்லாத பெண்களை எப்படி அணுகுவது..?

உளவியல் ஆலோசனை வழங்குபவர்களின் தொடர்பு எண், அங்கன்வாடி ஊழியர்களின் கைபேசி எண்கள் சுலபமான முறையில் கிடைப்பது மாதிரி டோர் கேம்பெயின் செய்து துண்டறிக்கையாக வழங்கலாம். அல்லது ஒவ்வொரு தெருமுனையிலும் அதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டலாம்.

குடும்ப வன்முறைக்கு ஆட்படும் பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குபவர்கள் இவர்களது பிரச்னைகளைக் கேட்டபின் இவர்களின் கணவருக்குத்தான் ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார்கள்.  உளவியல் ஆலோசனை தேவைப்படுவது ஆண்களுக்கு என்னும் நிலையில், தன் வீட்டு ஆண்களை பெண்களால் அழைத்து வர முடியுமா? இதற்காக சில ரிகாபிளிசேஷன் சென்டர்களை ஆங்காங்கே ஏற்படுத்தலாம்.

ஊரடங்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல் அச்சம் ஊட்டும் விதத்தில் அதிகரித்திருக்கிறது. போலவே குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகளை இணையத்தில் தேடுபவர்களும் பெருகியிருக்கிறார்கள்.ஒவ்வொரு பேரிடர் காலம் முடிந்ததும், குடும்ப வன்கொடுமைகள் எவ்வளவு நடந்தது... எவ்வளவு குழந்தைகள் பேரிடர் காலத்தில் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளானார்கள்... என அறிக்கை தரப்படும்.  

இந்த லாக்டவுன் நான்கு மாதங்ளைக் கடந்து நீடிக்கிறது. இன்னும் நவம்பர் டிசம்பர் என தொடர்ந்தால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எனவே இப்போதே கூடுதல் கவனத்துடன் ஆக்கப்பூர்வமான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதே பேரிடர் நேரங்களில் கை கொடுக்கும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சுதா காந்தி.

‘‘லாக்டவுன் நேரத்தில் எல்லா வேலைகளையும் பெண்கள் மீது திணிப்பது ஒருவித மன அழுத்தத்தை தரும். இதைச் சரி செய்ய வீட்டில் இருப்பவர்கள் இணைந்து பேசிக் கொண்டே வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம்; சேர்ந்து சமைக்கலாம்; ஒன்றாக சாப்பிடலாம்; ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கலாம்; வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளை குழந்தைகளுடன் விளையாடலாம். கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி, நல்ல இசைகளைக் கேட்கலாம். மன அழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்...’’ என்கிறார் உளவியல் மருத்துவரான சேகர் ராஜகோபால்.

மகேஸ்வரி நாகராஜன்