காமராஜர் ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகள்!



காவல்துறை ஒடுக்குமுறைகள், சிறைச்சாலைப் படுகொலைகள் பற்றி இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில்.
அப்படி பேசும் பெரும்பாலானவர்கள் ஏதோ 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில்தான் இவை எல்லாம் அரங்கேறுவதாக சவுண்டு விடுகிறார்கள்.

அதிலும் இந்த 50 ஆண்டுகளில் அதிகமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுக ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகளை வசதியாக மறந்துவிட்டு, திமுக ஆட்சியில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர்.இதன் வழியாக திமுக - திராவிட ஆட்சி - மலர்வதற்கு முன், 1967 வரை தமிழகத்தில் காவல்துறை அடக்குமுறைகளே இல்லை என்பது போன்ற சித்திரத்தை எழுப்புகின்றனர்.

உண்மை அப்படியில்லை என்கிறது தமிழக வரலாறு!
1. 1948 - 51களில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது பல இடதுசாரி தலைவர்களும் தொண்டர்களும் நாடு முழுவதும் வேட்டையாடப்பட்டனர். தமிழகத்தின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. அப்போதுதான் அந்தக் கொடிய பயங்கரம் சேலம் சிறையிலே நடந்தது. அன்று சிறைப்படுத்தப்பட்டால் அனைவரும் தலையில் கட்டாயம் குல்லாய் அணியவேண்டும். இதை அணிய மறுத்த கம்யூனிஸ்டுகள் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2. எல்லை மீட்புப் போராட்டத்தில் காங்கிரசின் காவல் துறை நரவேட்டை ஆடியது. மண்டையைப் பிளந்து, கை கால்களை நொறுக்கி போராட்டக்காரர்களை ஒடுக்க முனைந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.3. 1953 ஜூலை 14, 15ல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, ‘டால்மியாபுரம்’ பெயரை ‘கல்லக்குடி’ என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை திமுக நடத்தியது.

இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முனைந்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது காங்கிரஸ் ஆட்சி. தடியடி, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.4. 1957ம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று செங்கொடி சங்கத்தின் முக்கிய ஊழியர்களான அப்பாரு, குருசாமி, பழனி, ஞானமுத்து ஆகிய நால்வரும் காமராஜர் ஆட்சியில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய கூலி உயர்வுப் போராட்டத்தில்தான் காமராஜர் அரசு இவர்களை சுட்டுக் கொன்றது.

பனிரெண்டு மணி நேர உழைப்பு. கூலியோ ஆண்களுக்கு 7 1/2 அணா, பெண்களுக்கு 5 1/2 அணா. 1952 முதல் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

நான்கு வருட விசாரணைக்குப் பிறகு குறைந்த பட்ச கூலி நாளொன்றுக்கு 2 1/4 ரூபாய் தர வேண்டுமென கமிஷன் தீர்ப்பளித்தது.
ஆனால், தோட்ட முதலாளிகள் தர மறுத்தனர். காமராஜர் அரசாங்கம் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டது. இதை எதிர்த்து ‘குறைந்தபட்சக் கூலியை அமல் நடத்து’ என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அந்தப் போராட்டத்தில்தான் கண்மூடித்தனமாக போலீசார் சுட்டு நால்வர் மாண்டனர். கம்யூனிஸ்டு அலுவலகமும், தோட்டத் தொழிலாளர் சங்கமும் சீல் வைக்கப்பட்டன. இறந்த தொழிலாளர்களின் புகைப்படத்தை எடுக்கக் கூட அரசு அனுமதிக்கவில்லை.5. 1957ல் காமராஜர் ஆட்சியில் முதுகுளத்தூர் கலவரம் நடந்தது. அப்போது 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

6. 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுப் படுகொலை செய்தது காங்கிரஸ் அரசு.
- இவை எல்லாம் ஒரு சோறு பதங்கள்தான். இன்னும் பானை சோறு அளவுக்கு உதாரணங்கள் இருக்கின்றன.

யார் ஆட்சிக்காலத்தில் காவல்துறை அடக்குமுறை அதிகம்... என்று பேசாமல், காலனி ஆட்சிக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்க ஆங்கிலேய அரசு ஏற்படுத்திய காவல்துறை சட்டதிட்டங்களே சுதந்திர இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுப்போம்.
ஜனநாயக நாட்டுக்கு ஏற்ற ஜனநாயக காவல்துறையை ஏற்படுத்த முயல்வோம்!

பேராச்சி கண்ணன்