தியேட்டர்... ஓடிடி...ஹீரோயின் ராஜ்ஜியமாகிறதா திரைத்துறை..?



சினிமாவில் கதாநாயகிகளின் கை ஓங்கி வரும் சீஸன் இது. ஹீரோக்களின் படங்களுக்கு சமமாக அதிரடி ஆக்‌ஷனில் ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்
அதிகரித்து வருகின்றன.ம்ஹும். தமிழில் மட்டுமல்ல. இந்திய அளவில்!பாலிவுட்டில் வித்யாபாலன், டாப்ஸி, கங்கணா ரணாவத்; டோலிவுட்டில் அனுஷ்கா, சமந்தா; கோலிவுட்டில் நயன்தாரா, த்ரிஷா, ஜோதிகா, அமலாபால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ்... என ஹீரோயின்கள் பலரும் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதையே விரும்புகின்றனர்.

திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமல்ல... நேரடியாக ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீசான ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ போன்றப் படங்களும் ஹீரோயின் ஓரியண்டட்தான்.இந்தியில் டாப்ஸி நடித்த ‘தபாட்’ படத்தின் 12வது நாள் வசூல் ரூ.31 கோடி என அங்கே போஸ்டர் ஒட்டுகிறார்கள்!பட உலகில் ஏன் இந்த மாற்றம்? இன்றைய கதாநாயகிகளுக்கு ஒன்ஸ் அப்பான் எ டைம் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி போல் ஆகும் ஆசை வந்துவிட்டதா? மக்களின் ரசனை மாறிவிட்டதா?

திரையுலகை சேர்ந்தவர்களிடம் பேசினால், அள்ளுகிறது அதிர்ச்சியும் ஆச்சரியமும்!‘மாயா’வுக்கு பிறகு நயன்தாராவின் சம்பளம் கோடிகளில் உயர்ந்தது. அவர் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு போனார். அதனாலேயே கோலிவுட்டின் மற்ற ஹீரோயின்களும் ‘ஹீரோயின் சப்ஜெக்ட்’டை தேட ஆரம்பித்துவிட்டனர்.இப்படி நயன்தாராவுக்கு ‘மாயா’, டாப்ஸிக்கு ‘கேம் ஓவர்’ கொடுத்த அஸ்வின் சரவணன் என்ன சொல்கிறார்?
‘‘உமன் சென்ட்ரிக் படங்கள்தான் பண்ணணும்னு ஆர்வத்தோட எல்லாம் கதை பண்ணல. என் கதையில் ஒரு பெண் கதாபாத்திரம் முக்கியத்துவமா இருக்கு. அந்தக் கதாபாத்திரம் தனக்குப் பொருத்தமா இருந்ததால நயன்தாரா நடிச்சாங்க.

‘மாயா’வையும், ‘கேம் ஓவ’ரையும் படமாகத்தான் பார்க்கறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவமான படமா பார்க்கல. ‘மாயா’வுக்கு அப்புறம் நிறைய ஹீரோயின்கள் லீட் ரோல் படங்கள்ல நடிக்க வந்திருப்பது பாசிடிவ்வான அம்சம். என்னோட ரெண்டாவது படம் ‘இறவா காலம்’மும் என் முந்தைய படங்கள் போல ஒரு படம்தான். ஹீரோ படம், ஹீரோயின் படம்னு அதை பிரிச்சு பார்க்கல...’’ என்கிறார் அஸ்வின் சரவணன்.

இந்தக் கருத்தையே முன்மொழிகிறார் ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார். ‘‘‘அறம்’ படத்தை ஒரு படமா நினைச்சுத்தான் பண்ணினேன். ஹீரோயின் சப்ஜெட்டா கதையை ரெடி பண்ணலை. ஒரு கதை பண்ணினேன். அதுல முன்னணி கதாபாத்திரம் எதுவோ, அந்த பாத்திரம்தான் அதுல யார் நடிக்கணும்னு ஆர்ட்டிஸ்ட்டையும் தீர்மானிக்குது.

ஒரு பெண்ணை மையமாக வைச்சோ, ஓர் ஆணை மையமா வைச்சோதான் கதை பண்ணுவேன்னு யாரும் பிடிவாதம் பிடிக்கறதில்ல. அப்படி கதை எழுதவும் முடியாது. இன்னொரு விஷயம், இது ஆணாதிக்க சமூகம். அது திரைப்படங்களிலும், அதன் கலைஞர்களிடமும், கதைகளிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.

இப்படிப்பட்ட சூழல்ல ஒரு பெண், தனக்கான தனித்துவத்தை நிரூபிக்கற வாய்ப்புக்காக காத்திருக்காங்க. அந்த வாய்ப்பு இன்னிக்கு சினிமாவில்
சுப்பீரியராக இருக்கற ஒரு ஹீரோயினுக்கு எளிமையா வசப்படுது. அவ்வளவுதான்...’’ அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
‘‘‘அறம்’ படத்துக்கு ஒரு ஹீரோ படத்துக்கு இணையான ஓப்பனிங் இருந்துச்சு. பல வருஷங்களா ஹீரோக்கள் படம்தானே பார்த்திட்டு இருந்தோம்.

சின்ன சேஞ்ச் வேணுமே! அதான் ஹீரோயின் படங்கள் அதிகரிச்சிட்டிருக்கு...’’ என நகைச்சுவை தொனிக்க பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் சுந்தர் பாலு. த்ரிஷாவின் ‘கர்ஜனை’, வரலட்சுமியின் ‘கன்னித் தீவு’ ஆகிய படங்களை இயக்கி வரும் இவர், ‘கன்னித் தீவு’ படத்தின்  தயாரிப்பாளரும் கூட!

‘‘ஹீரோயினுக்காக தியேட்டருக்கு வந்து படங்கள் பார்க்க எவ்வளவோ ரசிகர் ரசிகைகள் இருக்காங்க ஹீரோயினே ஹீரோ மாதிரி நடிக்கறப்ப, பார்க்க சுவாரஸியமாதான் இருக்கும்.

ஓர் இயக்குநரா சொல்றதா இருந்தா, ஒரு ஹீரோவுக்கு கதை ரெடி பண்ணிட்டா, அவர் கால்ஷீட்டுக்காக வருஷக்கணக்குல காத்திருக்கணும். அதுவே ஹீரோயின்கள்கிட்ட கதை சொன்னா... உடனடியா அவங்க அதுல நடிக்க ஆர்வமா இருப்பாங்க. வெறுமன ஒரு பாட்டுக்கு ஆடிட்டு, மரத்தை சுத்தி லவ் பண்ணிட்டு இருக்கறதுல இருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகரும் ஆசை அவங்களுக்கும்தானே இருக்கு! ‘நடிகையர் திலகம்’ல நடிச்சு, தேசிய விருதும் வாங்கின பிறகுதானே கீர்த்தி சுரேஷால ஒரு படத்தையே தூக்கி நிறுத்த முடியும்னு நாமும் நம்ப ஆரம்பிச்சோம்?

ஒரு ஹீரோயினை கன்வே பண்ணி, நம்ம கதைல நடிக்க வைப்பது எளிதான விஷயம். பெண்கள்னாலே ஒரு ஈர்ப்பு உண்டு. அந்த லாஜிக்ல ஹீரோயின் படம்னா... ஆடியன்ஸுக்கு அட்ராக்‌ஷன் இருக்கத்தான் செய்யும்.

ஆனா, நல்ல படங்கள் வந்தாதான் ஓடும். ஹீரோக்களே கூட ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு ஏழு கோடி எல்லாம் சம்பளம் வாங்கிறதில்ல. ஆனா, நயன்தாரா வாங்குறாங்களே! விஜய் சேதுபதியே கூட பத்து படங்கள் நடிச்சதுக்கு அப்புறம்தானே மூணு கோடிக்கே வந்தார்?!

இங்க ஹீரோயின் படம்னா எதிர்பார்ப்பு இருக்கு. ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ படங்களுக்கு வியூவர்ஸ் அதிகம். அதனால ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் வாங்கறதுல ஓடிடி ப்ளாட்ஃபார்ம்ஸும் ஆர்வம் காட்டறாங்க.

இந்தியாவை விட சீனாவுல தியேட்டர்கள் அதிகம். 24 ஆயிரம் தியேட்டர்கள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அங்கயே இந்த லாக் டவுன்ல புதுப்படங்கள் எதுவும் ஓடிடில நேரடியா ரிலீஸ் ஆனா மாதிரி தெரியல. ஓடிடில வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அதுல படம் ரிலீஸ் ஆகுதுனா, ஒரு தயாரிப்பாளருக்குதான் பெனிஃபிட். இது சந்தோஷமான விஷயம்தான். ஆனா, அந்தப் படத்தோட இயக்குநருக்கோ, டெக்னீஷியன்களுக்கோ லைஃப் கிடைக்காது.

ஒரு படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனாதான் அது ஹிட்டா... ஃபளாப்பானு தெரியும். அதோட டெக்னீஷியன் யார்... இயக்குநர் யார்னு வெளியே தெரிய வரும். சமீபத்தில் ரிலீஸான ஜோதிகா, கீர்த்திசுரேஷ் படங்களின் இயக்குநர் முகம் எப்படி இருக்கும்னு மக்களுக்கு தெரியுமா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர் சுந்தர் பாலு.

ஹீரோயின்கள் என்ன நினைக்கிறார்கள்? முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேசினோம். ‘‘இப்ப லாக் டவுன் வந்துட்டாதாலதான் ஓடிடி ரிலீஸுக்கு சம்மதிக்கறாங்க. இல்லனா, தியேட்டர்ல ஓடியோ ஓடாமலோ முடிஞ்ச பிறகுதான் ஓடிடிக்கு வந்திருக்கும்.

ஆனா, ஒண்ணு. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள்னா பட்ஜெட் குறைவு. மினிமம் லாபம் இருக்கு. அதனாலயே அப்படிப்பட்ட படங்களை ஒடிடில வாங்க ஆர்வம் காட்டறாங்க.

உதாரணமா ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அதிகபட்சம் அஞ்சு கோடிக்கு எடுத்திருப்பாங்க. அதை ஆறரை, ஏழு கோடிக்கு ஓடிடிக்கு கொடுத்திருப்பாங்க. ஆனா, சூர்யா படம், குறைஞ்சது முப்பது கோடியை எட்டியிருக்கும். இதுக்கு மேல ஒரு விலையை வைச்சுதான் ஓடிடிக்கு விற்க முன்வருவாங்க. அதாவது நேரடியா ஓடிடில ரிலீஸ் செய்ய.

அவ்வளவு பணத்தை கொடுத்து வாங்க எந்த ஓடிடியும் தயாரா இல்ல. தியேட்டர்ல ரிலீஸ் ஆன பிறகு ஒரு தொகைக்கு ஓடிடிக்கு வாங்கினாதான் அவங்களுக்கும் லாபம்.இதே நிலைதான் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கும். அந்தப் படத்தை இருநூறு கோடிக்கு வித்திருப்பதா சொல்றாங்க. இந்தத் தொகையை ஓடிடியால கொடுக்கவே முடியாது. அதாவது நேரடியா ஓடிடில ரிலீஸ் செய்ய. ஏன்னா, இந்தத் தொகையை ஒருபோதும் அந்த ப்ளாட்ஃபார்மால எடுக்கவே முடியாது.

இப்படி ஹீரோ படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டா இருப்பதால்தான் டைரக்ட் ஓடிடி ரிலீஸுக்கு ஹீரோயின் படங்களை செலக்ட்
பண்றாங்க. இன்னொரு விஷயம்... நடிகர் படமோ, நடிகை படமோ... கதைதான் என்னிக்கும் ஹீரோ! கதை நல்லா இருந்தா தியேட்டர்லயும் ஓடும். ஓடிடியிலும் ரீச் ஆகும். இல்லனா எங்கயும் எடுபடாது. அதுல நடிச்ச ஆர்ட்டிஸ்ட்டும் நிலைச்சு நிற்க மாட்டாங்க...’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஹீரோயின்.

கதாசிரியரும், தமிழ் சினிமா ஆர்வலரும், திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு.துளசி பழனிவேலின் கருத்தோ இண்டஸ்ட்ரீயின் இன்னொரு முகத்தை பிரதிபலிக்கிறது. ‘‘ஒரு கதை வலுவா இருந்தா போதும். யார் நடிச்சாலும் மக்கள் ஏத்துக்குவாங்க. ஆடு, யானை, குரங்குனு விலங்குகளுக்கு முக்கியத்துவமான படங்கள் ஒரு காலத்தில் வசூலை குவிச்சிருக்கு. 1940கள்ல பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான். ‘அபலை’, ‘ஊர்வசி சாகசம்’, ‘சத்யவாணி’, ‘சகுந்தலை’, ‘திலோத்தமா’னு நீண்ட பட்டியலே இருக்கு.

1945ல் வெளியான ‘பர்மா ராணி’ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம்தான். அதுல ஹீரோயின் ஆக்‌ஷனிலும் கலக்கியிருப்பாங்க. ‘மின்னல் ராணி’, ‘துபான் குயின்’ எல்லாம் இந்த வரிசைதான்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கின பெரும்பாலான படங்கள் ஹீரோயின் ஓரியண்டட்தான். ‘குலவிளக்கு’ல ஜெமினி இருந்தாலும் சரோஜா தேவியை மையப்படுத்திதான் கதை போகும். ‘தெய்வத்தின் தெய்வம்’ல விஜயகுமாரிக்குதான் முக்கியத்துவம் இருக்கும்.

‘சிற்பி’னு ஒரு படம். அதுல பத்மினிதான் மெயின். ‘வந்தாலே மகராசி’யில் ஜெயலலிதான் கலக்கியிருப்பாங்க. ‘ரவுடி ராக்கம்மா’ல வெறும் பெண்கள்தான். ‘எதிர்காலம்’ல பத்மினி ரவுடி மாதிரி நடிச்சிருப்பாங்க. இதுக்குப் பிறகு வந்த காலத்துல ஹீரோயின்கள் அம்மன்களாக கலக்கினாங்க. ‘நம்ம வீட்டுத்தெய்வம்’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘அவ்வையார்’னு பெண்களுக்கு முக்கியத்துவமான பக்தி படங்கள் வந்தது. அம்மன் படம்னாலே தியேட்டர்கள்ல வசூல் அள்ளும். ஹீரோ படங்களை விட பெரிய ஓப்பனிங் இருந்திருக்கு.

கே.பாலசந்தர் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள பல படங்களை உருவாக்கியிருக்கார். ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’னு சொல்லிட்டே போகலாம். இதெல்லாம் ரசனை மாற்றங்கள் இல்ல. ஏன்னா, கதைதான் பிரதானம். அந்தக் கதைல ஆண் முக்கியமா பெண் முக்கியமா என்பதுதான் விஷயம். உண்மையை சொல்றதா இருந்தா எல்லா காலகட்டத்திலும் ஹீரோக்கள் கால்ஷீட் கிடைக்க தாமதமாச்சுன்னா ஹீரோயின் கால்ஷீட்டை வாங்கி படங்கள் எடுக்கத் தொடங்கிடுவாங்க.

இப்ப ஹீரோக்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனாலயே எல்லாருக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்கறதில்ல. அப்படியே கிடைச்சாலும் ஹீரோக்களின் சம்பளம் பெரியளவுல இருக்கு. அவங்களை வைச்சு படம் பண்ணினா பட்ஜெட்டும் அதிகரிக்கும். ரிஸ்கும் அதிகம்.
அதனாலயே ஹீரோயின் படங்கள் வருது. மினிமம் பட்ஜெட். ரிஸ்க் கம்மி...’’ என்கிறார் பெரு.துளசி பழனிவேல்.

மை.பாரதிராஜா