அணையா அடுப்பு - 7



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

மணலெல்லாம் சிவலிங்கம்!

பன்னிரெண்டாவது வயதுவரை இராமலிங்கத்துக்கு முருகன்தான் எல்லாமே. அதன் பின்னரே அவரை திருவொற்றியூர் தியாகப்பெருமான் ஆட்கொள்கிறார். வடிவுடையம்மன் வழிப்பாட்டிலும் ஆர்வம் கொள்கிறார்.

தொண்டை நாட்டின் சிவத்தலங்கள் முப்பத்தி இரண்டில் திருவொற்றியூருக்கு பிரதானமான இடமுண்டு.சென்னைக்கு வடக்கே கடற்கரையோரம் அமைந்திருக்கும் அழகிய ஊர்.அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம்.நிலைக்கண்ணாடியில் திருத்தணிகை முருகன் அவருக்கு காட்சி தந்தார் என்றாலும், தணிகைக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏனோ இராமலிங்கத்துக்கு அமையவில்லை.

பதிலாக திருவொற்றியூர் சன்னதியில் தியாகப் பெருமானுக்கு பின்பாக கோயிலில் எழுந்தருளியிருந்த முருகப் பெருமானை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தரிசித்து வழிப்பட்டார்.அக்காலத்தில் கற்பூரத் தட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும்.ஒருமுறை முருகனை வழிபட கற்பூரம் இல்லையே என்று வருந்தி இராமலிங்கம் பிள்ளை பாடியிருக்கிறார். பின்னாளில் வடலூரில் மலை போல கற்பூரம் குவிந்ததற்கு இதுதான்

காரணமோ என்னமோ?

திருவொற்றியூருக்கு சென்று வந்தவர்களுக்கு நந்தீஸ்வரர் கோயிலை தெரியும். இதுவும் நந்தி, இறைவனை வழிபட்ட தலமே.அக்காலத்தில் இங்கு ஆசிரமம் ஏதேனும் இருந்திருக்க வேண்டும். அதை இராமலிங்கம் நந்தியாச்சிரமம் என்று குறிப்பிடுகிறார். இங்கு ஓர் ஓடை இருந்தது. அதை நந்தியோடை என்பார்கள்.

‘கங்கையிலே மிக்கதெனக் கருதி மேலோர் ஓலையிலே பொறித்த நந்தி ஓடை’ என்று வள்ளலார், இந்த ஓடையையும் பாடியிருக்கிறார்.

இங்கேதான் அவர் தனிமையில் தியானம் பழகியிருக்கிறார்.ஓடையின் கரையில் அழகிய தென்னந்தோப்பு இருந்திருக்கிறது. இயற்கையான அச்சூழல் அவரது சிந்தனைகளுக்கு திறப்பாக அமைந்திருக்கிறது.

‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண் ணீரே
உகந்த தண்ணீரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே’

- என்கிற செய்யுளை அவர் இயற்றக் காரணமான நந்தியோடை இன்றில்லை.ஆனால், அன்று எப்படி இருந்தது என்பதற்கு ஆதாரமாக இராமலிங்கம் இயற்றிய செய்யுள் இருக்கிறது. வள்ளலார் ஞானப் பிரகாசம் மட்டுமல்ல. செம்மொழித் தமிழுக்கும் தம் ஞானநாவால் புத்தொளிப் பாய்ச்சிய மகத்தான கவிஞரும்கூட என்பதை தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் இச்செய்யுளை வாசித்தால் உணரலாம்.

இராமலிங்கத்தின் திருவொற்றியூர் காலங்களில் அவர் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாக சொல்கிறார்கள்.கடற்கரை ஊரான திருவொற்றியூரில் ‘மணலெலாம் வெண்ணீறு’ எனப் பாடிய பட்டினத்தார் வாழ்ந்தார் என்பதை அறிவோம்.அந்த பட்டினத்தார் திருக்கோயிலுக்கும் அடிக்கடி இராமலிங்கம் சென்று வந்தார். அந்தக் கோயிலுக்கு சேவை செய்து, அருகே குடிசை அமைத்துக் கொண்டு ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தார்.

இளம் பிள்ளையான இராமலிங்கத்தின் கண்களில் தெரிந்த ஒளி, அந்த மூதாட்டியைக் கவர்ந்திருக்க வேண்டும். ஒருமுறை இவர் தியானத்தில் அமர்ந்திருந்தபோது, கையைக் கூப்பி மனமுருக இவர் எதிரே அந்த மூதாட்டி நின்றிருக்கிறார். அவருக்கு என்ன பிரச்னையோ?கண்விழித்த இராமலிங்கம் எதுவும் பேசாமல் ஒரு பிடி கடல் மணலை அள்ளி, அவரிடம் தந்து, “கையை இறுக மூடிவிட்டு திறந்துப் பார் அம்மா...” என்றிருக்கிறார்.

மூதாட்டியும் அவ்வாறு செய்த பின்னர், தன் கையில் இருந்த மணல் முழுக்க சிறு சிறு சிவலிங்கங்களாகத் தெரிந்ததாக சொல்லியிருக்கிறார்.
கண்கள் நீர்ப்பெருக்க, தன் கவலைகளை மறந்துச் சென்றாராம் அந்த மூதாட்டி.

திருவொற்றியூர் சன்னதித் தெருவில் ‘முற்றிலும் துறந்த’ துறவி ஒருவர், திண்ணை ஒன்றில் இருந்தார்.

தெருவில் யார் சென்றாலும் -
‘மாடு போகுது’
‘ஆடு போகுது’
‘நரி போகுது’
‘நாய் போகுது’
‘கழுதை போகுது’
‘பாம்பு போகுது’
‘பருந்து போகுது’
‘தேள் போகுது’
- என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒவ்வொரு மனிதருமே அவரது கண்களுக்கு விலங்குகளாகதான் தெரிந்தார்கள். சில பேர் கோபமடைந்து, அவரிடம் சண்டைக்கும் போவதுண்டு.

சன்னதித் தெரு வழியாக ஒருநாள் இராமலிங்கம் சென்றார்.‘இதோ ஒரு உத்தம மனிதன் போகிறான்’ என்று அந்தத் துறவி, சப்தமாகக் கூவினாராம்.
இந்த சப்தத்தை செவிமடுத்த அங்குள்ளோர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.இராமலிங்கம், அந்தத் துறவியை நோக்கினார்.இவரைக் கண்டதுமே அவர் நாணப்பட்டு தூண் மறைவில் ஒதுங்கினார்.

அதுநாள் வரை தன் நிர்வாணம் குறித்து எவ்வித நாணமும் அற்ற அத்துறவி இராமலிங்கத்தைக் கண்டதுமே அத்தகைய உணர்வை அடைந்தார்.
ஒரு முழத்துண்டு கூட உடலுக்கு ஆடம்பரம் என்று அதைத் துறந்தவர்களே நிர்வாணத் துறவிகள். ஆனால், சமூகத்தும் அந்தப் புரிதல் இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது இல்லையா?

அந்தத் துறவியிடம் சென்று இதைதான் உணர்த்தி இருப்பார் இராமலிங்கம்.அதுநாள் வரை விலங்குகளின் மத்தியில் தாம் வாழ்வதாகக் கருதியதாலோ என்னவோ, அத்துறவிக்கு தனக்கு உடையில்லாதது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.உத்தம மனிதனைக் கண்டதாலோ என்னவோ தன் நிர்வாணம் குறித்து நாணமடைந்தார்.நிர்வாணம் குறித்து எவ்வளவோ தத்துவங்கள் உண்டு. அவற்றை அறியாதவர் அல்ல வள்ளலார்.ஆனால், அவர், தன் உடல் முழுக்கப் போர்த்தி தலைக்கும் முக்காடிட்டே வாழ்ந்தார்.

சரி. அந்தத் துறவி என்ன ஆனார்?

மறுநாளிலிருந்து அந்தத் திண்ணையில் அவரைக் காணவில்லை! ஒரு உத்தம மனிதனைக் கண்டுவிட்ட பரவசத்தில் எங்கோ போய்விட்டார்.தங்களை விலங்குகளாகவே கண்டவர் தொல்லை நீங்க திருவொற்றியூர் வாசிகள் நிம்மதியடைந்தனர்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்