அமெரிக்காவில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட படம்!



நெட்பிளிக்ஸில் இருக்கும் முக்கியமான படங்களைப் பட்டியலிட்டால், ‘தி ஃப்ளோரிடா ப்ராஜெக்ட்’ முதல் பத்து இடத்துக்குள் வரும். அந்தளவுக்கு இந்தப் படம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
அம்மா ஹேலியுடன் ஒரு விடுதியில் வசித்து வரும் மோனிக்குத் தந்தை யார் என்று தெரியாது. அவளின் அம்மா எந்தப் பொறுப்பும் இல்லாமல், யாரையும் மதிக்காமல், விருப்பம்போல வாழ்ந்து வருகிறாள்.

ஹேலியின் பாதிப்பில் வளர்கின்ற மோனி, அம்மாவைப் போலவே தன் இஷ்டத்துக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறாள். கடைகளில்
திருடுகிறாள்.  அவளுக்கு உறுதுணையாக ஸ்கூட்டி, டிக்கி என்ற இரு நண்பர்கள். மோனியை போலவே ஸ்கூட்டியும்  தாயின் அரவணைப்பில் வளர்கிறான்.

ஸ்கூட்டியின் அம்மா ஆஸ்லே, ஓர் உணவகத்தில் சர்வராக வேலை செய்கிறாள். அங்கேயிருந்து உணவைத் திருடி மோனியின் குடும்பத்துக்கு யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகக் கொடுக்கிறாள். அதுவே அவர்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

மோனிக்கு ஜான்சி அறிமுகமாகிறாள். ஜான்சி, பாட்டியுடன் தங்கியிருக்கிறாள். அவள் பிறந்தபோது அவளது அம்மாவுக்கு வயது 15. ஜான்சியை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு அம்மா எங்கேயோ சென்றுவிட்டாள். விரைவிலேயே ஜான்சியும் மோனியும் இணைபிரியாத நண்பர்களாகி விடுகிறார்கள். இருவரும் ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். ஒன்றாகவே விளையாடுகிறார்கள்.

நாட்கள் நகர்கின்றன. ஹேலியால் வாடகை கொடுக்க முடிவதில்லை. மோனியும், ஹேலியும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாசனை திரவியங்களை விற்பனை செய்கிறார்கள்.

அதில் கிடைக்கும் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் டிஸ்னி வேர்ல்டு நுழைவுச்சீட்டை திருடி விற்கிறார்கள். இறுதியில் வேறு வழியில்லாமல் ஹேலி பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பிக்கிறாள். இந்த விஷயம் ஆஸ்லேவுக்குத் தெரியவர, ஹேலியை அவள் முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறாள்.

இதைக் கேள்விப் படும் விடுதியின் கண்காணிப்பாளர் பாபி அவளை விடுதியில் இருந்து காலி செய்யச் சொல்கிறார். இன்னொரு பக்கம் மோனியை ஃப்ளோரிடோ குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது.

இந்த களேபரங்களுக்கு இடையில் கடைசியாக தனது தோழி ஜான்சியை சந்திக்கச் செல்கிறாள் மோனி. சூழலை மறந்து இருவரும் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் இருக்கும் மேஜிக் கிங்டம் தீம் பார்க்கை நோக்கி ஓடுவது கிளைமாக்ஸ்.

வீடற்றவர்கள், மற்ற இடங்களில் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாதவர்கள், சமூகத்தால் கைவிடப்பட்டவர்கள்தான் அந்த விடுதியில் மாதக்கணக்காக தங்கியிருக்கிறார்கள். அங்கே வசிப்பவர்களுக்குத் தேவையான சில உதவிகளை என்ஜிஓக்கள் செய்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் இப்படியும் ஒரு சமூகம் வாழ்ந்து வருவதை ரகசியமாகவே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சீன் பேக்கர்.