வதந்திகளின் இருப்பிடமா டுவிட்டர்?
ஒரு காலத்தில் அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ தொடர்பு கொள்வதென்பது குதிரைக் கொம்பு. இன்று தொழில்நுட்ப
வளர்ச்சியினால் அமெரிக்க அதிபர் முதல் தமிழக முதல்வர் வரை… எளிதில் அணுகும் சூழல் உருவாகி இருக்கிறது. “நான் இட்லி சாப்பிட்டேன்… நீங்க?” என்பதிலிருந்து அரசியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும், ஊடக அறிவிப்புகளும், விளம்பரங்களும், அந்தரங்க விஷயங்களும்… என எல்லாமே இன்று சமூக வலைத்தளங்களில்தான் நடைபெறுகிறது. அவ்வளவு ஏன்... ஊடகங்களையே சந்திக்காத நம் பிரதமர் மோடி, தனது ஒவ்வொரு அறிவிப்புகளையும் டுவிட்டரின் மூலமே வெளியிடுகிறார். மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரின் அதிபர் நயீப் புகேலி (Nayib Bukele), தான் பதவியேற்றவுடன் டுவிட்டர் பயன்பாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றார். புகேலியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் டுவிட்டர் வாயிலாக வெளியிடப்பட்டன.இவையெல்லாம் ஒரு பக்கம் நிகழ... மறுபக்கத்தில் வதந்திகளும் சகட்டுமேனிக்கு டுவிட்டர் வழியாக பரவும் ஆபத்தும் தொடர்கிறது.
இதை உணர்ந்த டுவிட்டர் நிர்வாகம், 70 ஆண்டுக் காலமாகச் சீனாவை ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பரப்பும் வகையில் இயங்கி வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது. சீனாவில் சமூகவலைத்தளங்கள் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், வி.பி.என் மூலம் பலரும் டுவிட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சீன ஆதரவு பிரசாரத்தின் நோக்கமானது, வெளிநாடுகளில் உள்ள சீனர்களின் திறனைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சி என டுவிட்டருடன் இணைந்து பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.முக்கியமாக இந்த கணக்குகள் அனைத்தும் சீன மொழிகளில் மட்டும் டுவீட் செய்யப்பட்டுள்ளன. இந்த சீன ஆதரவு கணக்குகள், ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று, தாய்வான் பிரச்னை... உள்ளிட்டவை குறித்து போலியான செய்திகளைப் பரப்பி வந்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா, ‘‘இந்த கணக்குகள் பல ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு, கொரோனா தொற்றை ஒழிக்கச் சீனா பாடுபடுவதாகப் பாராட்டு தெரிவித்தும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் அமெரிக்காவை விரோதிகளாகச் சித்தரித்தும் டுவிட்களை பதிவு செய்துள்ளன...’’ என்கிறார்.
டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவுக்கு சாதகமான செய்திகளை உருவாக்குவதில் 23,750 கணக்குகள் முக்கிய நெட்வொர்க் உடன் இணைந்து செயல்பட்டு வந்ததையும், அவற்றை ரீ-டுவிட் செய்து பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட 1,50,000 கணக்குகளையும் அடையாளம் கண்டோம்...” என்று சுட்டி காட்டியுள்ளது. இதேபோல் ரஷ்ய அரசுக்கு ஆதரவான 1,000 டுவிட்டர் கணக்குகளையும், துருக்கி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 7,340 கணக்குகளையும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
குறிப்பிட்ட விஷயங்களை டாப் ஹேஷ்டேக்குகளாக கொண்டு வந்து அவற்றை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடக்கிறதாம். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் ப்ளீட்ஸ் (Fleets) எனப்படும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இனி ஒரு செய்தியை அல்லது கட்டுரையை ரீ-டுவீட் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் அதை க்ளிக் செய்திருக்க வேண்டும்!
கடந்த மாதம், தவறான அல்லது மாறுபட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் டுவிட்டுகளின் அருகே உண்மையைக் கண்டறியும் தளங்களுக்கான லேபிள்களை அமைக்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது இதன் தொடர்ச்சியாகத்தான்.எது எப்படியோ... நமக்கு வரும் தகவல்கள் உண்மையா என்பதை ஆராய முன் வருவோம்!
அன்னம் அரசு
|