நியூஸ் நூடுல்ஸ்
தள்ளிப்போகும் ஆஸ்கர் திரைப்படத்துறையின் மிகப்பெரிய கொண்டாட்டம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா. 2021ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் நடக்கவிருந்த ஆஸ்கர் விழா லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளிப்போகிறது. இதற்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளம் (1938), மார்ட்டின் லூதர் கிங் கொலை (1968), அதிபர் ரொனால்டு ரீகன் மீதான கொலை முயற்சி (1981) என மூன்று காரணங்களுக்காக மட்டுமே ஆஸ்கர் விழா தள்ளிப்போனது.
ஏழ்மையில் ஸ்பைடர்மேன்!
தென் அமெரிக்க நாடுகளில் ஏழ்மையானது பொலிவியா. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்தில் கூட இன்டர்நெட்டின் வேகம் மெதுவாக இருக்கும். இணைய சேவைக்குக் கட்டணமும் அதிகம். பெரும்பாலானவர்களின் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை. ஸ்மார்ட்போன் கூட பணம் வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் அங்கே ஆன்லைனில் பள்ளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. மாணவர்களை உற்சாகப்படுத்த ஸ்பைடர்மேன், பேட்மேன் என விதவிதமான சூப்பர் ஹீரோக்களைப் போல வேடமிட்டு கலை வகுப்பை எடுக்கிறார் ஆசிரியர் ஜார்ஜ் மனோலா. அவரது ஆன்லைன் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரின் திரை முன் காத்துகிடக்கின்றனர் மாணவர்கள்.
தீவில் மட்டுமே கிடைக்கும் உணவு!
குரோஷியாவின் முக்கிய தீவு பாக். வடக்கு அட்ரியாட்டிக் கடலின் நடுவே வீற்றிருக்கும் இத்தீவில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கே வளரும் தாவரங்களை உண்டு வாழும் ஆடுகளின் பால் அதிக சுவையானவை. தவிர, அட்ரியாட்டிக் கடலின் உப்பையும் ஆட்டுப் பாலையும் சேர்த்து பாலாடைக்கட்டியைப் போல ஒரு உணவை தயாரிக்கிறார்கள். பாக் தீவில் மட்டுமே கிடைக்கும் இந்த உணவுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கே வருகை புரிகின்றனர்.
நோக்க வந்தாச்சு நோக்கியா!
இதோ வந்துவிட்டது ‘நோக்கியா’வின் 43 இன்ச் ஸ்மார்ட் டி.வி. 4k தரத்தில் வீடியோ, யூடியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் சப்போர்ட், எல்.இ.டி ஸ்க்ரீன், இரண்டு ஸ்பீக்கர்கள், 24 வாட்ஸ் அவுட்புட், ப்ளூடூத் வசதி என ஒரு நவீன கம்ப்யூட்டரைப் போல இயங்குகிறது இந்த ஸ்மார்ட் டிவி. விலை ரூ.31,999.
இறந்தும் கோல் அடித்த வீரர்!
மெக்சிகோவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோமஸின் வயது 16. கால்பந்து விளையாட்டில் கில்லி. கடந்த வாரம் காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துவிட்டார். கோமஸின் இறுதிச்சடங்கின் போது அவரது நண்பர்கள் செலுத்திய அஞ்சலி வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கோமஸ் நிரந்தரமாக உறங்கிகிடக்கும் சவப்பெட்டிக்கு அருகில் கால்பந்து கோல் அடிப்பதற்கான நெட் கட்டப்பட்டுள்ளது.
நண்பர்கள் கால்பந்தை உதைக்கின்றனர். அது சவப்பெட்டியின் மீது பட்டு கோலாக மாறுகிறது. அந்த கோலை கோமஸ் அடித்ததாக நண்பர்கள் சவப்பெட்டியைக் கட்டிப்பிடித்து அழுகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துவிட்டனர்.
வியட்நாமில் அரிசி ஏடிஎம்!
வியட்நாமில் நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தார் தொழில் அதிபர் ஹோவங் டுவான். பலவிதமான பரிசோதனைகளுக்குப் பிறகு இலவசமாக அரிசி வழங்கும் ஏடிஎம் மிஷினை உருவாக்கி அசத்தியிருக்கிறார் டுவான். அரிசி தேவைப்படுவோர் பட்டனை அழுத்தினால் 1.5 கிலோ அரிசி கொட்டும். இதைப் பார்த்து மற்ற தொழில் அதிபர்களும் தங்களின் ஏரியாக்களில் அரிசி ஏடிஎம்மைத் திறக்கவுள்ளனர்.
இந்தியாவில் நஹி!
இந்தியாவில் சுமார் 40 கோடிப்பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களைப் பகிர்வதைப் போல வாட்ஸ்அப்பில் பணப்பரிவர்த்தனை செய்ய வாட்ஸ்அப் பேவை பிரேசிலில் அறிமுகம் செய்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். 40 கோடிப் பயனாளிகள் இந்தியாவில் இருக்க ஏன் பிரேசில் என்ற கேள்வி எழும். வாட்ஸ் அப்பிற்கான சோதனை ஓட்டம் 2018ல் இருந்து இந்தியாவில்தான் நடந்தது. சோதனை முயற்சி வெற்றிபெற்றாலும் பணப்பரிவர்த்தனை சார்ந்த ஒழுங்குமுறைகள் காரணமாக இங்கே வாட்ஸ்அப் பே அறிமுகமில்லை.
ஆழத்திலும் உச்சியிலும் முதல் பெண்!
உலகின் ஆழமான கடல் பகுதியிலும் விண்வெளியிலும் கால் பதித்த முதல் பெண்மணி என்ற அசாதாரண சாதனையைப் புரிந்திருக்கிறார் கேத்தி சுல்லிவன். அமெரிக்காவைச் சேரந்த புவியியல் வல்லுநர் மற்றும் விண்வெளி வீராங்கனையாகிய கேத்தி அக்டோபர் 11, 1984ல் விண்வெளியில் நடந்து வரலாறு படைத்தார். ஜூன் 7, 2020ல் உலகின் ஆழமான கடல் பகுதியான மரியானா டிரெஞ்சில் டைவ் அடித்து சாகச பிரியர்களின் ரோல் மாடலாக மாறிவிட்டார். கேத்தியின் வயது 68.
5ல் ஒருவருக்கு நிகழும் மோசடி!
ஒவ்வொரு வருடமும் இணையத்தைப் பயன்படுத்தும் ஐந்தில் ஓர் இளைஞர் இணைய மோசடியால் பாதிக்கப்படுகிறார் மற்றும் அவர்களின் கம்ப்யூட்டர் தவறானமுறையில் பயன்படுத்தப்படுகிறது என்கிறது ஸ்காட்டிஸ் க்ரைம் சர்வே. வைரஸ் தாக்குதல்தான் முதன்மையான பாதிப்பாக இருக்கிறது. அடுத்து ஆன்லைன் அக்கவுண்ட்டையும் வங்கிக் கணக்கையும் திருடுதல் அடுத்த பாதிப்பு. 4.5 சதவீதத்தினர் தவறான இ-மெயில்களுக்குப் பலிகடவாகின்றனர்.
70 சிலந்திகளுடன் வாழ்ந்தவர்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெயிட்லின் ஹெண்டர்சன், சிலந்திகளின் மீது தீராத காதல் கொண்டவர். குயின்ஸ்லாந்து மியூசியத்தில் ஜூ கீப்பராக பணியாற்றி வருகிறார். அங்கே நடந்த சிலந்தி கண்காட்சியில் இவருக்கு முக்கிய பணி. கண்காட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடியும் வரை எழுபதுக்கும் மேற்பட்ட சிலந்திகளுடன் ஒரே அறையில் வாழ்ந்திருக்கிறார் கெயிட்லின்.
த.சக்திவேல்
|