லவ் ஸ்டோரி - காதல் மனம் சார்ந்ததா உடல் சார்ந்ததா தேவை சார்ந்ததா...? இயக்குநர் ரமணா



அனேகமாக காதல்ங்கற வார்த்தையை 13 வயசுல தான் கேள்விப்படுறோம். அதுவரைக்கும் பக்கத்திலிருக்கிற பெண்ணை வித்தியாசமாக பார்க்கத் தோணாது. கிராமத்தில் எல்லோரும் கூட்டாஞ்சோறு கிண்டி, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடியிருக்கோம்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் என் கிளாஸில் இருக்கிற பெண் பிள்ளைகள் லீவு போடுவார்கள். ரமணா, முருகன், வெற்றின்னு கூப்பிட்டுக்கிட்டே போய் ‘சரஸ்வதி’ன்னு கூப்பிடும்போது ‘உள்ளேன் ஐயா’ சொல்ல குரல் இருக்காது. ஓர் அமைதி கண நேரம் இருக்கும்.

நாலாவது நாள் பாவாடை சட்டை போட்டுட்டு, ஆம்பிளைச் சட்டை போட்டுட்டு வந்த பெண் இன்னும் சிவந்து களையா வரும். அருகிருந்து பேசுவது நிக்கும். அடிச்சுப் பேசுறது குறையும். அப்போதுதான் முதன்முறையாக மாற்றுப்பாலினத்தின் ஈர்ப்பு புரியும். பச்சக் குதிரை தாண்டிய அதே பொண்ணை இப்ப பார்த்தாலே மனசு படபடத்து அடங்கும்.

ஒண்ணுமண்ணா இருந்து விளையாடியவர்கள், ‘மனப்பாடம் பண்ணியிருக்கேன், கேட்கிறியா’னு சொன்னவள்… விலகிப்போறது, தானாக நடக்கும்.
ஆக, எனக்கெல்லாம் பத்தாவது படிக்கும்போதுதான் கொஞ்சமா புரியும். நம்பினால் நம்புங்கள். மகரந்தச் சேர்க்கை தொடங்கி மனிதச் சேர்க்கை வரை 16 வயதில்தான் புரிய வந்தது. சோறு, துணி, பட்டாஸ், பலகாரம் மட்டும் கேட்டவன், அப்புறம்தான் உடம்பின் தேவைகளை உணர்கிறேன்.

கல்லூரிக்கு வந்து விடுகிறேன். 23 பெண்களுக்கு மேல் காதல் கடிதம் எழுதியிருக்கிறேன். உருகி, உருகி கரைஞ்சிருக்கேன். ரத்தத்தில கையெழுத்துப் போட்டிருக்கிறேன். அவையெல்லாம் சினிமா பாதிப்பு. ‘உயிருள்ளவரை உஷா’, ‘மைதிலி என்னை காதலி’ என டி.ஆர் உச்சத்தில் இருந்த காலம். ‘ஒரு தலை ராகம்’, ‘நான் பாடும் பாடல்’ என 80களின் சினிமா காதலில் உருகி பெருகியிருந்த சமயம். காதலைப் போற்ற ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என படம் பார்த்து செய்த காதல்கள்.

போதாக்குறைக்கு கமல் வேறு காதல் மன்னனாகவே உருவாகி வந்திருந்தார். கட்டுப்பாடே இல்லாத காற்று மாதிரி ஒரு வாழ்க்கை.
இப்போதுதான் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புகிறேன். தெளிந்த பேச்சு கைகொடுக்க முதலில் பட்டிமன்றம். பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் இறங்கி விடுகிறேன். அதற்கான தயாரிப்பில்  வெறி பிடித்தவன் மாதிரி என்னைத் தயார் பண்ணியிருக்கேன்.

எவ்வள வோ காயப்பட்டிருக்கேன். எவ்வளவோ சந்தோஷங்களை அனுபவிச்சிருக்கேன். ஒண்ணு பிடிக்குதுன்னா, நேர்மையாக கேட்டிருக்கேன். நெறைய தொலைச்சிருக்கேன். என்ன இருந்தாலும், எப்படியிருந்தாலும் வாழ்க்கையில் அப்பப்போ ஏதாவது அற்புதம் நடந்து கொண்டுதான் இருக்கு…
எனது இரண்டு பெண் தோழிகள் மூலமாக இவள் அறிமுகமாகிறாள். அவளே சாந்தா.

அவளிடம் பேசும்போது எட்டாவது படிக்கும்போது இருந்த பதட்டம் இல்லை. 16 வயதில் ஏற்பட்ட கிளர்ச்சியும் இல்லை. 21 வயதில் ஏற்பட்ட குழப்பமும் இல்லை. பதிலாக ஒரு தைரியம் கிடைத்தது. இரண்டு மூன்று முறை இவளைச் சந்தித்தபிறகு நான் கேட்டது ‘நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா’ என்பதுதான். காதல் என்ற வார்த்தையே அங்கில்லை. என்னவோ மீதி வாழ்க்கையை இவளோடு தொடறேன் என மனசு சொல்லுகிறது. பழையது எல்லாமே பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது.

அந்தப் பெண்ணும் யோசிக்காமல் ‘எங்க வீட்டில் போய் கேளுங்க’னு சொல்லி விட்டது. ‘ஏன் என்கிட்டே கேட்கிறே, உன்னை எனக்குப் பிடிக்கலை, அண்ணனைக் கூட்டிட்டு வருவேன், ஆபீஸ்ல சொல்லுவேன்’ என எந்த மிரட்டலும், புறக்கணிப்பும் இல்லை. நண்பனோடு அவள் அப்பாவைப் பார்த்து என்னை விவரித்து… ‘இப்போதைக்கு எந்த வருமானமும் இல்லை. ஆனால், நம்பிக்கை இருக்கு. முன்னுக்கு வருவேன்’ என்கிறேன்.
‘என் பொண்ணை சரியாக வளர்த்திருக்கேன்னு உன் மூலம் தெரிகிறது. ஓர் ஆணை வெறுத்து பழகாமல், முறையாக நீ கேட்டு வந்திருப்பதே எனக்குப் பிடிக்கிறது’ என்கிறார்.

நூறு பேரின் முன்னிலையில் திருப்பதியில் நடந்தேவிட்டது திருமணம். எங்களின் மகா பிரியத்திற்கு ஆதாரமாக தர்ஷினி, ஸ்வேதா என இரண்டு குழந்தைகள். 23 வயது தாம்பத்யம் பூரணத்தின் வடிவில் நெருங்கியிருக்கிறது.வாழ்க்கையை ஆச்சரியமாகப் பார்க்க வைக்கிறதும் காதல்தான்; அலுப்பா மாத்தறதும் காதல்தான். வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்வதும் காதல்தான். தொலைக்கச் சொல்வதும் காதல்தான்.

ஆரம்பத்தில் காமம் சார்ந்த, காதல் கலந்த இந்த உறவு என்பது பயங்கரமான கண்டிஷன்ஸ், நிறைய கட்டளைகள், அதிகபட்ச எதிர்பார்ப்புகள், ரொம்ப பொசஸிவ்னஸ் கூடியிருக்கிறது. பொதுவாக காதலில் அடிக்கடலில் நீச்சலிடும் சாகசமும் உண்டு. மலையிலிருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும், அரவணைப்பும், அரக்கத்தனமான சண்டையும் உண்டு.

ஆனால், சாந்தா என்னை தன் கைகளில் ஏந்தியிருக்கிறாள். அவளே தோழியாக, காதலியாக, தாயாக, என்னைக் காக்கும் கடவுளாக மொத்தமாக வந்திருக்கிறாள். அவளே எனக்கான ஆதார பலம். உள்ளத்தில் அமைதியையும், குழப்பமற்ற மனதையும், நெஞ்சுக்கு நிம்மதியையும் அருளி யிருக்கிறாள். நான் சோதனைகளைத் தாண்டி வந்த விதமே இப்படித்தான்.

முன்பு கட்டிலில் இருக்கும்போது இருவருக்கும் இடைவெளி இருக்காது. ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிள்ளைகள் போலிருப்போம்.
காதல், மனம் சார்ந்ததா, உடல் சார்ந்ததா, தேவை சார்ந்ததா… என இன்னும் எனக்கு புலப்படவில்லை. இப்பவும் அதே கட்டிலில்தான் படுத்து உறங்குகிறோம். அதே இரண்டு பேர்தான். ஆனால், கட்டிலின் ஒரு நுனியில் அவளும், மறுநுனியில் நானும் உறங்குகிறோம். என்ன, வெறுத்துவிட்டதா, கலந்தது சலித்து விட்டதா என்றால் இல்லை.

ஒரு சின்ன இருமல் என்றாலும் மறுகணம் ’தண்ணீர் வேண்டுமா’ என்கிறாள். திடீரென்று சின்ன சத்தம் கேட்டாலும் ‘சாந்தா’ என நான் துடிக்கிறேன்.
தூக்கத்தில் இதெல்லாம் நடக்கிறது. உடல்கள் உறங்கி மனம் விழித்திருக்கிறது. உடல் விலகி மனசு நெருக்கமாகிவிட்ட அழகு கூடியிருக்கிறது. சமநிலை கிடைத்திருக்கிறது. பூரணத்துவம் கை வந்திருக்கிறது.

இப்போது அவளின் நெற்றியின் ஓரத்தில் நான் இடுகிற முத்தத்தில் பழைய காமத்தின் மூர்க்கம் இல்லை. கலந்து விடாமல், களைப்புறாமல் கொடுக்கும் இந்த முத்தத்தில் நிறைவு தெரிகிறது.

இந்த நிறைவுதான் காதலா! காதல் நிறைந்து கிடக்கும் இடத்தில் வேறெதற்கும் இடம் கிடையாதோ! அச்சம், குழப்பம், தயக்கம், தடுமாற்றம் என எதற்கும் வழி இல்லையோ! ஆயிரம் ஜென்மங்கள் சேர்ந்தே வாழ்ந்தாலும் ஒன்றை ஒன்று… ஒருவரை ஒருவர்… புரிந்து கொள்ள முயன்று கொண்டிருப்பதே வாழ்க்கையோ!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்