வெளிநாட்டு போட்டோகிராபர் ஊரடங்கில் ஆட்டோ ஓட்டுகிறார்!



தலைப்பும் இங்குள்ள புகைப்படங்களும் ‘அட’ போட வைக்கிறதல்லவா..? இந்த ஆச்சர்யத்துக்கு சொந்தக்காரர் திலீப்குமார். ஜூன் மாத தொடக்கத்திலிருந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு சென்னையில் ஆட்டோ ஓட்டலாம் என அரசு அறிவித்ததும் திலீப் செய்த முதல் காரியம் ஆட்டோ ஓட்டத் தொடங்கியது தான்.அதுவும் எப்படி..? பாதுகாப்பு உடைகளுடனும் சானிடைசர் உட்பட கொரோனா தடுப்பு சாதனங்களை தன் ஆட்டோவில் பொருத்தியும்!

“சென்னைதான் பூர்வீகம், 20 வருஷங்களா துபாய்ல இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு புகைப்படம் எடுத்து தரும் பணில இருந்தேன். இப்ப சில வருஷங்களா சென்னைல வசிக்கிறேன்.

திருமணம் மாதிரியான விசேஷங்களுக்கு போட்டோ எடுக்கிறேன்...’’ என்ற திலீப், நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுக்க நினைத்திருக்கிறார்.‘‘நாங்க ஷூட்டிங் போன இரண்டாவது நாளே ஊரடங்கை அறிவிச்சிட்டாங்க. டாக்குமெண்ட்ரிக்காக ஒரு ஆட்டோவை சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தேன்.

ஊரடங்கு அறிவிச்சதும் வீட்ல நானும் ஆட்டோவும் சும்மாதான் இருந்தோம்! வயதானவர்கள், நோயாளிகள்னு பலர் மருத்துவமனைக்கு போக சிரமப்படுவதை பார்த்தேன். நான் இருக்கிற பகுதில வசிக்கிற ஒரு பெரியவர் நீண்ட தூரம் நடந்து சென்று மருந்து வாங்கிட்டு வந்தார்.

இதையெல்லாம் பார்த்து மருத்துவமனை சார்ந்த பணிகளுக்கான சேவையாதான் ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். ஆவணப்பட முயற்சில இருந்தப்ப ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டதும் சும்மா லைசன்ஸ் வாங்கி வைச்சதும் இப்ப கைகொடுத்தது...’’ புன்னகைக்கும் திலீப், முதல் காரியமாக தடுப்பு ஒன்றை தயார் செய்திருக்கிறார்.  

‘‘பயணம் செய்யறவங்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவருக்கும் இடையில கண்ணாடி மாதிரி ஒரு தடுப்பை தயார் செஞ்சேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த உடையை வாங்கி அணிஞ்சேன். சவாரிக்கு யார் ஏறினாலும் முதல்ல அவங்களை சானிடைசரால கையை முழுமையா கழுவச் சொல்றேன். அப்புறம் அவங்க இறங்கினதும் கிருமி நாசினியால ஆட்டோவை சுத்தப்படுத்தறேன்...’’ என்ற திலீப், பயணிகள் அனைவருக்கும் மாஸ்கும் வழங்குகிறார்.

‘‘மாஸ்க் இலவசம். அதுக்கு நான் பணம் வாங்கறதில்லை. பெரும்பாலும் என்னை மருத்துவமனை வாசல்ல பார்க்கலாம். அங்கதான் வண்டியை நிறுத்தி சவாரிக்காக காத்திருப்பேன். தினமும் காலை 8 மணில இருந்து அதிகாலை 2 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறேன்...’’ என்ற திலீப்பின் ஆட்டோவில் எப்பொழுதும் தேவைக்கு அதிகமாகவே கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கின்றன.

‘‘வழியில எந்த ஆட்டோகாரர் மாஸ்க் அல்லது சானிடைசர் கேட்டாலும் கொடுப்பேன். சில ஆட்டோகாரர்கள் நான் செய்திருக்கிற தடுப்பு நடவடிக்கைகள் பத்தி கேட்பாங்க. பொறுமையா அவங்களுக்கு விளக்குவேன். என் ஆட்டோல வயதானவர்களுக்குதான் முன்னுரிமை.

மற்ற பயணிகளை காவல்துறை அனுமதிச்சா வண்டில ஏத்துவேன். சில நேரம் போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்ப ஆட்டோல நான் செய்திருக்கற பாதுகாப்பு நடவடிக்கைகளை அவங்ககிட்ட காட்டுவேன். என்னைப் பாராட்டி வழியனுப்புவாங்க...’’ என்ற திலீப், தற்காலிகமாகவே, தான் ஆட்டோ ஓட்ட வந்திருப்பதாகச் சொல்கிறார்.

‘‘இப்படி ஆட்டோ ஓட்டுறதால சாப்பிடுற டைமிங் மாறியிருக்கு... மூணு வேளை எல்லாம் சாப்பிடுறதில்ல. குறிப்பா வெளில ஒரு வாய் கூட சாப்பிட
மாட்டேன். வீட்டுக்கு வந்து கவச உடையை கழட்டிட்டு குளிச்சுட்டு என்னை நானே தனிமைப்படுத்திகிட்டுதான் சாப்பிடுறேன். 

ஆக்சுவலா ஆட்டோ ஓட்டுநர் பத்தின என் ஆவணப்படத்துக்கு இப்பதான் பலத் தகவல்கள் கிடைக்குது. எல்லாமே பிராக்டிகலா நான் அனுபவிக்கறது.
ஆக, என் டாக்குமெண்ட்ரி உணர்வுப்பூர்வமா வரும்னு நம்பறேன். சென்னை சாலைகள் அவ்வளவு மோசமா இருக்கு. இதுல வண்டி ஓட்டுற
ஒவ்வொரு ஆட்டோகாரரும் வணக்கத்துக்கு உரியவங்க.

அட்ரஸ் பத்தின தெளிவு கூகுள் மேப்பை விட இவங்ககிட்ட அதிகம். ஆனா, அவ்வளவு துன்பப்படுறாங்க...’’ என்று சொல்லும் திலீப், புகைப்படங்கள் எடுப்பது போக மற்ற நேரங்களிலும் ஆட்டோ ஓட்டினால் என்ன என்று இப்பொழுது யோசிக்கிறார். ‘‘பணத்துக்காக மட்டுமில்ல... சேவைக்காகவும் ஆட்டோ ஓட்டலாம்னு நினைக்கிறேன்.

தவிர கொரோனா காலங்கள் எப்ப முடியும்னு யாருக்கும் தெரியலை. சொல்லப்போனா நம்ம வாழ்க்கை முறையே இந்த கொரோனா காலத்துக்கு பிறகு மாறும்.அப்ப ஒவ்வொருத்தரும் குறைஞ்சது ரெண்டு வேலைகள் செய்தாதான் சமாளிக்க முடியும். இதுபத்தி இப்பவே எல்லாரும் யோசிக்கிறது நல்லது...’’ என்கிறார் திலீப் குமார்.         

செய்தி:  திலீபன் புகழ்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்