நான் - இராமச்சந்திரன் நாகசாமிஎதை வேண்டுமானாலும் பிறர் உதவி இல்லாமல் கத்துக்கலாம், ஆனால், மொழிகளை மட்டும் தகுந்த ஆசிரியர் மூலம்தான் கத்துக்க முடியும்.
அப்படி எனக்குத் தெரியாத மொழியான சமஸ்கிருதம் மேல் ஈர்க்கப்பட்டு அதையே பாடமாக எடுத்து பட்டம் படிச்சேன். சமஸ்கிருத மொழியால்தான் இன்று நான். கொடுமுடியின் பக்கத்தில் ஊஞ்சலூர்தான் சொந்த ஊர். அப்பா, புரோகிதர். சமஸ்கிருத வித்துவான். பெயர் இராமச் சந்திரன்.

1930 ஆகஸ்டு 10ம் தேதி பிறந்தேன். கொடுமுடியில் சங்கர வித்யாசாலா என்னும் நூறு வருட பழமையான பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிப்பு.

மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சமஸ்கிருத இலக்கியத்தில் பிஏ, எம்ஏ பட்டங்கள். டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் வாங்கினேன்.
என்னைச் சேர்ந்தவங்க பலரும் ‘சமஸ்கிருதம் படிக்கிறியே உனக்கு யார் வேலை கொடுப்பாங்க’ன்னு கேட்டாங்க. ‘உன் கூட படிச்சவங்கள்லாம் நல்லா படிச்சு முடிச்சு வெளிநாட்டிலெல்லாம் இருக்காங்க, நீ ஏன் சமஸ்கிருதம் படிக்கிறே’ன்னு கிண்டல்கள் கூட செய்தாங்க.எதையும் காதில் வாங்கிக்கலை.

எப்படி தமிழ் பழமையான மொழியோ அதே போல் சமஸ்கிருதமும் பழமையான மொழி. பல ஸ்தல வரலாறுகள் தெரிஞ்சிக்க சமஸ்கிருதம்தான் பயன்படும். ஏன் காஸ்பியன் கடல்வழி வாணிகத்தின் வழியாக பாரசீகம், பார்த்தியா வரைக்கும் சமஸ்கிருதம் பரவி அங்கே இருந்த மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் மன்னர்கள் பெயர் எழுதக் கூடிய அளவுக்கு இந்த மொழி பரவியிருந்தது.
அந்த வரலாறுகளை தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். நீங்க ஒவ்வொரு மொழி கத்துக்கும் போதும் கூடவே அந்த மொழி சார்ந்த பண்பாடு, கலை, வரலாறு எல்லாமே உங்களுக்கு அடுத்தடுத்து தெரிய வரும்.  

சமஸ்கிருதத்தை வெறுமனே ஸ்தோத்திரமாகவும், மந்திரங்கள் உச்சரிக்கவும் மட்டுமே இல்ல. அப்படி நான் பார்க்கவும் செய்யலை. அதை ஒரு வரலாற்றுப் பொக்கிஷமா நான் பார்த்தேன். நம்ம நாட்டு வரலாற்றை முதல்ல தெரிஞ்சிப்போம். சென்னை வரலாறு தெரியாதவனுக்கு எதுக்கு
செக்கோஸ்லோவியா வரலாறு? நம்மைப் பற்றி,  நாம் வாழும் பூர்வீகம் பற்றி ஒவ்வொருவரும் படிக்கணும். அந்த வரலாறுகளை பாடப்புத்தகத்தில் சேர்க்கணும்.

வெள்ளைக்காரன் வரலாற்றைதான் இப்ப நாமெல்லாம் படிச்சுட்டு இருக்கோம். இந்த சிஸ்டமெல்லாம் மாறினாதான் சொந்த வரலாறும், அதன் மீதான ஈர்ப்பும் உணர்வும் கிடைக்கும். சுதந்திரம் வாங்குறதுக்கு முன்பே நாங்கல்லாம் பள்ளி மாணவர்கள். சுதந்திர தாகத்துடன் படிச்ச ஆட்கள் நாங்க. இப்போதைய ஆட்சி முறைகள் கூட வெள்ளைக்காரன் போட்டுக் கொடுத்த கிராஃப் படிதான் நடக்குது. நம் பண்டைய மன்னர்கள் எப்படி ஆட்சி செய்தாங்கன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் அரசியல் சாசனம் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

எனக்கு படிச்சிட்டு இருக்கும் போதே திருமணம் நடந்திருச்சு. 1957ல் வீட்டில் பார்த்து முடித்த பெண். அவங்க பெயர் பார்வதி. நல்லா பாடுவாங்க. சுமார் 1000 பாடல்களுக்கு மேல விடாம பாடுவாங்க. குடும்பத்தை சரியா சீராக நடத்தினாங்க. எனக்கு ரெண்டு பசங்க. பாபு, மோகன். ரெண்டு பெண்கள். உமா, கலா. ஒரு பொண்ணு கிரைம் இன்வெஸ்டிகேஷன் துறையில் அமெரிக்காவில் வேலை பார்க்கறாங்க. இன்னொரு பொண்ணு சென்னை பல்கலைக்கழக ஃபாரன்சிக் துறையில் வேலை செய்றாங்க.

ஒரு பையன் அமெரிக்காவில் கணினி துறைல வேலை செய்யறார். அடுத்தப் பையன் அக்கவுண்டென்ட் சீனியரா இருந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.  படிப்பை முடித்த கையோடு சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவுத் தலைவராக 1959ல் வேலைக்கு சேர்ந்தேன். எனக்குச் சின்ன வயசுலயிருந்தே இலக்கியம் படிக்கிற பழக்கம் இருந்ததால, அந்த வேலை ரொம்பப் பிடிச்சிருந்தது.

அருங்காட்சியகத்துல சேர்ந்ததுக்கு அப்புறமா அங்க இருந்த பாரதியார் கைப்பட எழுதின கவிதைகளை முதன் முதலாக பொதுமக்கள் பார்வைக்குக் காட்சியாக வச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது.பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்துக்கு சென்றிருந்தபோது பாரதியார் பிறந்த வீடு, தீக்குச்சிகளுக்கு நெருப்பு உருவாக்கப் பயன்படுற கந்தகம் தயாரிக்கிற கூடமா இருந்துச்சு. எப்பேர்பட்ட சுதந்திர கவிஞர் வாழ்ந்த வீடு அது.... அதை மீட்டு சீர்ப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தேன்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடு ஆங்கிலத்தில்தான் இருந்திச்சு. அதையெல்லாம் மாற்றி ‘கலைச் செல்வங்கள்’ என்கிற பெயரில் முதன் முறையாகத் தமிழில் கையேடு தயாரித்து வைத்தேன்.
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் அரசு அலுவலகமாகத்தான் முதலில் செயல்பட்டு வந்துச்சு. அதனுடைய மதிப்புத் தெரியாம அந்த மஹாலைத் தடுப்பு வைத்துப் பிரிச்சு அலுவலகமா மாற்றி  நடத்திட்டு இருந்தாங்க.

நாங்கள் அதை மீட்டெடுத்து சில பராமரிப்பெல்லாம் செய்து பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தோம். மேலும் ஒலி - ஒளி நிகழ்ச்சி மூலம் பழங்கால கதை சொல்லுதல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தோம். மக்கள் நம் நாட்டு பழமையைத் தெரிஞ்சிக்க பல
கோயில்கள், கல்வெட்டுகள், மன்னர் கால அரண்மனைகளை எல்லாம் மீட்டெடுத்து கல்வெட்டு பக்கத்திலேயே தமிழ், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போர்டுகளும் வைச்சு பல பகுதிகளை சுற்றுலாத்தலமா மாற்றினோம்.

இயல், இசை, நாடக இயக்கம் ஆரம்பித்து இசை, நடனம் மூலம் தமிழ் வரலாற்றை எடுத்து சொல்கிற நிகழ்ச்சிகளா பல அயல்நாட்டு தமிழ் சங்கங்கள்ல, மொழி சார் விழாக்கள்ல நடத்தினோம்.பள்ளிகள் தோறும் அந்தந்தப்பகுதி தொன்மையான கட்டிடங்கள் அல்லது அருகில் இருக்கும் அரண்மனைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லணும்னு ஒரு திட்டம் போட்டுக் கொடுத்து அதன்படி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வி சுற்றுலா ஏற்பாடுகள் செய்தோம்.

நான் வருவதற்கு முன்பு வரை தமிழகத்தில் தொல்லியல் துறை, அகழ்வாராய்ச்சி இதற்குன்னு தனித் துறையோ, அல்லது படிப்போ ஏதும் கிடையாது.
எல்லாவற்றையும் திட்டம் போட்டு, பழங்கால தொல்லியல் வரலாறுகள், கையேடுகளை முறைப்படுத்தி கல்லூரிகளில் ஒரு துறையாகவும், அதற்கென ஒரு மாநில துறையும் ஆரம்பிச்சோம்.

இதற்கென ஆர்வமுள்ள மக்களைத் தேர்ந்தெடுத்து நாங்களே சொல்லிக்கொடுத்து பேராசிரியர்களை உருவாக்கி, முதற்கட்டமா அரசு சார் கல்லூரிகள்ல துறை ஏற்படுத்தி பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தினோம். அதன் மூலம்தான் இன்னைக்கு தமிழில் தொல்லியல் பட்டப் படிப்பு இருக்கு.
நம் பண்டைய வரலாற்றை பாதுகாக்கவே சட்டத்தில் திருத்தங்கள் செய்து புது சட்டங்கள் கொண்டு அதையும் செயல்படுத்தினோம்.

இந்த வரலாறு தெரியாத காரணம்தான் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துட்டு பல தொன்மையான பொருட்களை தன்னுடையதுன்னு சொல்லி எடுத்திட்டு போனான். அப்படிப்பட்ட வழக்குகள் மட்டும் எண்ணிக்கையே இல்லாமல் நடந்தது. அதையெல்லாம் ஆதாரப்பூர்வமா நிரூபிச்சு மீண்டும் தமிழகத்திலேயே சேர்த்திருக்கோம்.

ஏன் சமீபத்தில் ஒரு நடராஜர் சிலை, தன்னுடையது என லண்டன் கொண்டு போயிட்டாங்க. அதை தக்க ஆதாரங்களுடன் சாட்சியாக நானே நின்று வழக்காடி அந்த சிலையை கொண்டு வந்தேன். அதைப் பாராட்டிதான் எனக்கு 2018ம் வருடம் பத்ம பூஷன் விருது கொடுத்தாங்க. நம் மாநில, தேசியம் சார்ந்த அகழ்வாராய்ச்சிகள் குறித்து மட்டும் 200க்கும் மேலான புத்தகங்கள் வெளியிட்டிருக்கேன்.

தமிழை உயர்த்த வேண்டும் என்பதற்காகப் பிற மொழிகளை நாம் எதிர்க்கத் தேவையில்லை. பிற மொழி வருகையால் அவ்வளவு சுலபமாக அழிந்துவிடக் கூடியதல்ல நம் தமிழ் மொழி. ஒவ்வொரு மொழியும் சோதனை காலத்தை சந்திக்கும்போதே தனக்கான வளர்ச்சிப் பாதையையும் அம்மொழியே தானாக உருவாக்கிடும்.

தாய் மொழியுடன் மேற்கொண்டு பல மொழிகளை சேர்த்து குழந்தைகளை படிக்க வையுங்க. எதையும் ஆராய்ந்து, விஞ்ஞான ரீதியான அடிப்படையில் புரிந்து படிக்கணும். கத்துக்கிட்ட மொழி நம்மை எக்காலத்திலும் கைவிடாது!

செய்தி:  ஷாலினி நியூட்டன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்