ரத்த மகுடம்-104



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘தேசத்துக்கு ஒரு பெயருடன் நடமாடுவதுதானே ஒற்றர்களின் வழக்கம்..? அப்படி நம் பாண்டிய நாட்டில் இப்பொழுது கரிகாலனின் பெயர் அதங்கோட்டாசான்!’’ சொல்லிவிட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.கண்கள் இடுங்க தன் தந்தையைப்

பார்த்தான் கோச்சடையன் இரணதீரன்.
‘‘கெட்டிக்காரன்தான்... நம் தேசத்துக்குள் நமக்கு எதிராக படைகளைத் திரட்டி வந்த அதங்கோட்டாசான் என்கிற முதியவரின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு நம்மையெல்லாம் திசை திருப்பியிருக்கிறான்...’’‘‘நம்மை அல்ல மன்னா... எங்களை...’’ இரணதீரன் அழுத்திச் சொன்னான்.

கேள்வியுடன் அவனை நோக்கினார் பாண்டிய மன்னர்.‘‘பல்லவர்கள் குறிப்பிடும் அதங்கோட்டாசான் சாட்சாத் கரிகாலன்தான் என்பது எங்களுக்குத்தான் தெரியாது...’’‘‘அந்த உண்மையை நான் அறிவேன் என்கிறாயா..?’’ அமைதியாகக் கேட்டார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘தாங்கள் அறியாமல் ஓர் அணுவும் தமிழகத்தில் அசைவதில்லை என்கிறேன் மன்னா...’’‘‘இரணதீரா...’’ தழுதழுத்தார் பாண்டிய மன்னர். ‘‘இன்னொருவனும் அனைத்து அசைவுகளையும் அறிவான்...’’
‘‘யார் மன்னா..?’’

‘‘என் மகன்! பாண்டிய இளவரசன்! கோச்சடையன் இரணதீரன்!’’‘‘மிகைப்படுத்துகிறீர்கள் மன்னா... அடியேனுக்கு இந்த நிஜம் தெரியாது...’’
‘‘மற்ற உண்மைகள் அனைத்தையும் அறிவாயே...’’ வாஞ்சையோடு அவனை நெருங்கி அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உன் வயதில் இந்தளவுக்கு கூட நான் சூட்டிகையாக இல்லை... விருட்சமான பிறகு என்னையே மிஞ்சிவிடுவாய்... எதை வைத்து இப்படி
கணிக்கிறேன் தெரியுமா..?’’

அவரே பதிலையும் சொல்லட்டும் என அமைதியாக நின்றான் இரணதீரன்.‘‘பாதாளச் சிறையிலிருந்து சிவகாமியையும் கரிகாலனையும் நானே விடுவித்தேன் என்பதை அறிந்திருக்கிறாயே... இதை விட ஓர் இளவரசனுக்கு வேறென்ன தகுதி வேண்டும்...’’
நிமிர்ந்து பாண்டிய மன்னரை பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தான் இரணதீரன்.

‘‘ஏன் அவர்களை தப்பிக்க வைத்தேன் என்று தெரிய வேண்டுமா..?’’
‘‘தெரிய வேண்டிய நேரத்தில் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கை அடியேனுக்கு இருக்கிறது மன்னா!’’
அதன் பிறகு இருவரும் அருகருகே நின்றபடி தங்களுக்கு எதிர் திசையில் நடப்பதை கவனிக்கத் தொடங்கினார்கள்.
சிவகாமியின் உதட்டோரம் புன்னகைப் பூத்தது. மீண்டும் தன் பார்வையை கீழே பதித்தாள்.

அகன்ற ராஜ வீதிகளைத் தவிர்த்துவிட்டு சின்னச் சின்ன சந்துக்குள் நுழைந்து கரிகாலன் ஓடிக் கொண்டிருந்தான்.
துரத்தி வரும் பாண்டிய வீரர்களைக் கணக்கிட்டாள். பத்து தலைகள்! மற்றவர்கள் அவனைச் சுற்றி வளைப்பதற்காக சிதறி சந்து முனைகளை நோக்கி ஓடினார்கள்.கரிகாலன் செல்லும் திசையை ஊகித்தவள் குதிரையின் கழுத்தில் சாய்ந்தாள். அதன் செவிகளில் முணுமுணுத்தாள். அதன் பிடரிகளை நீவிவிட்டாள்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் தலையை ஆட்டியது.

மெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள்.மறுகணம் தன்னிரு முன்னங்கால்களையும் அக்குதிரை உயர்த்தியது!‘‘பார் இரணதீரா... நன்றாகப் பார்! எப்பேர்பட்ட அசுவ சாஸ்திரியாக சிவகாமி இருக்கிறாள் என்றுப் பார்!’’ உணர்ச்சிப் பிழம்பாக அரிகேசரி மாறவர்மர் முழங்கினார்.
இரணதீரனும் உணர்ச்சியின் சுழலில் சிக்கியிருந்தான். ராஜ பாட்டையிலும் ராஜ வீதிகளிலும் புரவியில் பயணிப்பது எளிது. அதற்கு சில நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும். வனங்களுக்குள் குதிரையுடன் ஊடுருவ பல திங்கள் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.

ஆனால், மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரில் புரவியுடன் பயணிக்க வேண்டுமென்றால்... தாயின் வயிற்றில் ஜனித்த கணத்திலிருந்து புரவிகளுடன் பழகியிருக்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்த வித்தை கைகூடும்!சற்றும் தடுமாறாமல் மாளிகையின் மேல் இருந்த கைப்பிடி சுவரில் அப்புரவி நடக்க ஆரம்பித்தது.

சிவகாமி அலட்சியமாக அதன் மீது அமர்ந்திருந்தாள். லகானை பிடித்திருந்தாளே தவிர அதை இழுக்கவில்லை.மாளிகையின் ஓரத்தை நெருங்கிய அக்குதிரை, சர்வசாதாரணமாக அருகில் இருந்த அடுத்த மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரை நோக்கித் தாவியது!
‘‘பத்தடி தொலைவு இருக்குமா..?’’ ராமபுண்ய வல்லபர் பதட்டத்துடன் கேட்டார்.

‘‘பன்னிரெண்டு அடிகள் குருவே!’’ சாளரத்தை வெறித்தபடி சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.
‘‘எவ்வளவு அநாயாசமாக அந்தக் குதிரை தாண்டுகிறது... அதுவும் அந்தரத்தில்! துளிக்கூட அதற்கு அச்சமில்லையே..?’’
‘‘எப்படியிருக்கும் குருவே? அது சிவகாமியால் பழக்கப்படுத்தப்பட்ட புரவி... தவிர அதன் மீது அவளே அமர்ந்திருக்கிறாள். எப்படி அது தடுமாறும்? இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த இரு அசுவ சாஸ்திரிகளுள் அவளும் ஒருத்தியல்லவா..?’’
நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘உங்கள் சிஷ்யை கெட்டிக்காரிதான் குருவே...’’
‘‘விநயாதித்தா...’’ பற்களைக் கடித்தபடி அவனை நோக்கித் திரும்பினார். ‘‘மீண்டும் சொல்கிறேன்... இவள் என் சிஷ்யை அல்ல... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி இவள் அல்ல!’’‘‘அப்படியானால் இவள் யார் குருவே...’’‘‘கணத்துக்கு கணம் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருக்கிறது... இவள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதற்கு முன்...’’‘‘... எப்படி இவள் பாதாள சிறையில் இருந்து தப்பித்தாள் என்று அறிய வேண்டும்!’’
‘‘ஆம் விநயாதித்தா!’’

‘‘இன்னமும் உங்களுக்குப் புரியவில்லையா..?’’ குருதி வடிய சிரித்தான் கடிகை பாலகன். ‘‘கீழே கரிகாலர் ஓடிக் கொண்டிருக்கிறார்! பாண்டிய வீரர்கள் அவரைத் துரத்துகிறார்கள்... அவரைக் காப்பாற்ற சிவகாமி முற்படுகிறாள்!’’‘‘வட்டம் கட்டுங்கள்...’’ தலைவன் குரல் கொடுத்தான்.உடனே பாண்டிய வீரர்கள் சிதறி சந்துக்குள் பாய்ந்தார்கள்.

அவர்களின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட கரிகாலன் சந்திலிருந்து பிரிந்த பிறிதொரு சந்துக்குள் நுழைந்தான்.வீரர்களின் கூட்டம் எட்டுத் திசைகளிலும் பரவியது.தன்னை அவர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள்... எல்லா சந்துகளின் முனைகளிலும் குறைந்தது ஐந்து வீரர்களாவது உருவிய
வாட்களுடன் காத்திருக்கிறார்கள்.

என்ன செய்யலாம் என்று மேல் நோக்கிப் பார்த்தான்.மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் குதிரை ஒன்று நின்றிருந்தது. அதன் மீது சிவகாமி அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி செய்கை செய்ய கரிகாலன் தன் கரங்களை உயர்த்தினான்.மறுகணம் தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசினாள் சிவகாமி!காஞ்சிக்கு பலகாத தொலைவில் அமைந்திருந்த வசவசமுத்திர கிராமம் அமைதியாக அந்த அந்நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தது.ஒரேயொரு இளைஞனைத் தவிர.

அவன் பல்லவ இளவரசனான இராஜசிம்மன்! நிதானமாக நடந்தபடி பாலாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.தெற்கே மல்லை... சதுரங்கப்பட்டினம். வடமேற்கே திருக்கழுகுன்றம். கிழக்கே வயலூர்...திருப்தியுடன் தலையசைத்த இராஜசிம்மன், தன் முன்னால் கரைபுரண்டு ஓடிய பாலாற்றை கை கூப்பி வணங்கினான்.சமுத்திர அன்னையுடன் பாலாறு இரண்டறக் கலக்கும் இந்த ஸ்தலமே பல்லவர்களின் விடுதலைக்கான புள்ளி. நதியன்னையும் சமுத்திரத் தாயும் தன் லட்சியத்தை நிறைவேற்ற துணை புரிவார்கள்...

குனிந்து நீரை அள்ளி தன் தலையில் தெளித்துக் கொண்டான்.நிமிர்ந்தான். கால்களை ஊன்றி நின்றான்.சமுத்திர நதியின் மீது இராஜசிம்மனின் நிழல் உச்சியைக் காண முடியாத அளவுக்கு நீண்டு விழுந்தது.அந்த நிழலுக்குள் மரக்கலம் ஒன்று உற்சாகத்துடன் ஓசை எழுப்பாமல் நுழைந்தது!  

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்