இந்தியாவின் முதல் சிம்பொனிக் Poem!
உலகமே கொரோனா தொற்றால் முடங்கிக் கிடக்கிறது. இந்த இக்கட்டான காலத்தில் மக்களின் தேவைகளுக்கு மனமிரங்கி உதவும் எண்ணத்தை உருவாக்கும் விதமாக சிம்பொனி இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளரான கணேஷ் பி. குமார். இதன் சிறப்பு, இந்திய இசை வரலாற்றில் முதல்முறையாக சிம்பொனிக் போயம் (Symphonic Poem) ஒன்றையும் உருவாக்கி அசத்தியிருக்கிறார் என்பதுதான்.
1998ல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்த ‘துள்ளித் திரிந்த காலம்’ படத்திற்கு இசைமைத்தவர் இவர். மட்டுமல்ல. கே.பாலசந்தரின் ‘காசளவு நேசம்’, ‘பிரேமி’ உள்ளிட்ட சீரியல்களின் பாடல்களுக்கும் இசையைத் தந்தவர். ‘‘இசையை வெளிநாட்டுல இரண்டா பிரிச்சிருக்காங்க. இசைக்காகவே இருக்கிறது முதல் வகை. எதையாவது சார்ந்திருப்பது இரண்டாவது வகை. இப்ப, கர்நாடக இசையில் ராக ஆலாபனையை எடுத்துக்கிட்டா வெறும் இசை மட்டும்தான் இருக்கும். அதுல வார்த்தை இருக்காது. எதையும் வர்ணிக்காது. ராகத்தின் பரிமாணங்களைச் சொல்லும். இதை வெறும் இசைக்காக இசைக்கின்ற இசைனு சொல்வோம். ஆங்கிலத்துல absolute musicனு சொல்வாங்க. இப்படி வெறும் இசைக்கான இசை ரகத்தைச் சார்ந்தது ‘சிம்பொனி’.
இன்னொன்றைச் சார்ந்து இருப்பதற்கு Program Musicனு பெயர். இப்படி புரோகிராம் சார்ந்து இசைக்கிறதுக்குப் பெயர் சிம்பொனிக் போயம். அதாவது, ஒரு விஷயத்தைப் பார்த்து நமக்குள்ள ஓர் உணர்வு ஏற்பட்டு பண்ற சிம்பொனிக்கு ‘சிம்பொனிக் போயம்’னு பெயர்.
இந்த இசை ஆல்பத்துல சிம்பொனிக் போயம் ஒண்ணும் பண்ணியிருக்கேன்...’’ எனச் சின்னதாக அறிமுகம் தந்தபடி தொடர்ந்தார் கணேஷ் பி .குமார். ‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்ைன மேற்கு மாம்பலத்துல. சின்ன வயசுலயே இசையில ரொம்ப ஆர்வம். அதனால, அப்பா பாலகிருஷ்ணன் இசை கத்துக்க ரொம்ப ஊக்கப்படுத்தினார்.
எழும்பூர் ஆர்மோனியா மியூசிக் ஸ்கூல்ல படிச்சேன். என்னுடைய முதல் மியூசிக் டீச்சர் ஆண்டனி டி குரூஸ். ரெண்டு வருஷம் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். பிறகு அவரே பெரிய மாஸ்டரான அப்துல் சத்தார்கிட்ட அழைச்சிட்டு போய் கத்துக்க வச்சார். அப்துல் சத்தார்தான் என்னுடைய குரு. பிறகு, இசையில பல கிரேடுகள் முடிச்சேன். இந்நேரம், கே.பாலசந்தர் சார் தன்னுடைய டீம்ல என்னை எடுத்துக்கிட்டார். ஆனா, சாரின் அலுவலகத்துல இதேபெயர்ல ரெண்டு எடிட்டர்ஸ் இருந்தாங்க. அதனால, எனக்கு ஜயந்த்னு பெயர் வச்சார். ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘காசளவு நேசம்’, ‘பிரேமி’, 16எம்எம்ல வெளியான ‘காதல் வாங்கி வந்தேன்’னு சாருடன் படங்களும், தொடர்களும் பண்ணினேன்.
பிறகு, ‘9 லைவ்ஸ் ஆஃப் மாரா’னு ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைச்சேன். அதுக்கு 2008ல் பெஸ்ட் சவுண்ட் டிராக் விருது கிடைச்சது. அடுத்து, இளையராஜா சார்கிட்ட கீபோர்டு வாசிக்கும் என் நண்பர் பரணிதரன், பாம்பன் சுவாமிகளின் சண்முகக் கவசத்தை இசை வடிவத்துல எடுத்திட்டு வரணும்னு கேட்டுக்கிட்டார். அது மிகப்பெரிய வேலை. அதை 2015ல் முடிச்சு ஜெர்மனி யில அரங்கேற்றம் பண்ணினோம்...’’ என்கிறவர், சிம்பொனி வாய்ப்பு பற்றி தொடர்ந்தார்.
‘‘2018ல் ‘தஹர வித்யா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் புரவலர் ஆனந்த் மாதவன், உலகளவுல இரண்டு இசைப் படைப்புகள உருவாக்கித் தரணும்னு கேட்டார். அவர் அமைப்பின் நோக்கமே உலகத்துக்கு அமைதியையும், மனிதநேயத்தையும் இசை வடிவத்துல சொல்றதுதான். சரினு ஏத்துக்கிட்டு என் பணியை ஆரம்பிச்சேன். முதல்ல, கான்செப்ட் தேவை. அப்ப, ‘மனிதன் வாழ்வில் விழுறது பெரிசல்ல. விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து ஓடுறதுதான் பெரிசு’னு தத்துவ மேதை கன்ஃபூஸியஸ் சொன்ன பழமொழி கண்ணுல பட்டுச்சு.
அதைப் படிச்சதும் இசைமேதை பீத்தோவன் நினைவுக்கு வந்தார். ஏன்னா, அவர் வாழ்க்கையில் அடிபட்டு மேலே வந்தவர். காது கேளாமையினாலும், நோய்களாலும் ரொம்பக் கஷ்டப்பட்டவர். அப்படியிருந்தும் நிறைய இசைப்படைப்புகளை உருவாக்கினார். கன்ஃபூஸியஸ் சொன்னது பீத்தோவனுக்கு ரொம்பப் பொருந்திப் போச்சு. அதனால, என்னுடைய முதல் சிம்பொனியை பீத்தோவனுக்கு அர்ப்பணிக்கணும்னு நினைச்ேசன். இந்த சிம்பொனிக்கு ‘ரைஸ்’னு பெயர் வச்சேன். அதாவது, எழுச்சி.
அடுத்து, சிம்பொனிக் போயத்துக்கு தயாரானனேன். இதுக்கும் கான்செப்ட் தேவை. ஒரு தீம் சார்ந்து இருக்கணும். இந்நேரம், ஆனந்த் மாதவன் இரண்டாம் உலகப் போர்ல நடந்த ஒரு கதையைச் சொன்னார். 1942ம் ஆண்டு குஜராத்ல நவாநகரைச் சேர்ந்த ஜாம்ஷாகிப் திக்விஜய்சிங்ஜினு ஒரு மன்னர் போலந்து அகதிகளுக்கு இடம் கொடுத்திருக்கார். அதாவது, இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்யாவும், ஜெர்மனியும் போலந்து நாட்டை பாதி பாதியா பிடிச்சுக்கிட்டாங்க.
ரஷ்யா, தான் பிடிச்ச போலந்து அகதிகளை சைபீரியாவுல வைக்கிறாங்க. இதனால, உலகளவுல ரஷ்யாவுக்கு அழுத்தம் தரப்படுது. உடனே ரஷ்யா, அந்த அகதி மக்கள்ல ஆண்களை மட்டும் எல்லையில நிறுத்தறாங்க. போர் வந்தா முதல்ல அவங்க குண்டடிபடட்டும்னு நினைச்சாங்க. பெண்களையும், குழந்தைகளையும் முகாம்ல வைக்கிறாங்க. மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் குளிர்ல அவங்க கஷ்டப்பட்டாங்க. இந்த விஷயம் போலந்து தூதர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவுது. இது மன்னர் திக்விஜய்சிங்ஜி காதுகளுக்கும் எட்டுது. அவர் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சிருக்கார். அதனால, 500 குழந்தைகள தத்தெடுத்துக்கிறேன்னு சொல்றார்.
ஆனா, இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இதுக்கு சம்மதிக்கல. பிறகு, ராஜா தன் பொறுப்பில் எடுத்துக்கிறேன்னு அனுமதி வாங்கினார். சுமார் இருபது டிரக்குகளில் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்குக் காய்கறிகள் அனுப்பினார். அங்கே இந்தக் குழந்தைகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாங்க. காய்கறிகளைக் கொடுத்துட்டு வரும்போது குழந்தைகள கூப்பிட்டு வர்றதா திட்டம்.
துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியா அந்தக் குழந்தைகளை அழைச்சுட்டு வந்தார். முதல்ல குழந்தைகள் வந்தாங்க. அப்புறம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க வந்தாங்க. இவங்களை பம்பாய் பக்கம் கோலாப்பூர்ல தங்கவைத்தார். இதைக் கேட்டதும் என்னால சும்மா இருக்க முடியல. இதையே ரெண்டாவது தீமாக எடுத்துக்கிட்டேன்.
என்னுடைய சிம்பொனிக் போயம், அந்தக் குழந்தைங்க கிட்ட ஒரு ராஜா வந்து அழைச்சிட்டு போகப் போறார்னு சொல்றாங்க. அந்த இரவு அவங்க மனநிலை எப்படி இருக்கும்? நிஜமா வண்டி வருமா? நம்மள காப்பாத்துவாங்களானு தவிக்கிற கட்டத்துல இருந்து ஆரம்பிக்கும். அந்த மனநிலையை இசையா சொல்லியிருக்கோம். இதுல ெமாத்தம் 10 செக்ஷன் இருக்கு. ஒவ்வொரு செக்ஷனும் ஒரு விஷயத்தைப் பேசும்.
ஒன்பதாவது செக்ஷன்ல, ராஜா திக்விஜய்சிங்ஜி, ‘நீங்க அனாதைக் குழந்தைகள் கிடையாது. நான்தான் உங்க அப்பா’னு சொல்லி வரவேற்கிறார். கடைசியா, பத்தாவது செக்ஷனுக்கு புறநானூறுல உள்ள, ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’னு ஆரம்பிக்கிற பாடலை எடுத்துக்கிட்டேன். இதை எங்க குழுவின் தமிழ்மொழி முதன்மை ஆலோசகர் வி.முத்துக்குமரகுருசாமி எடுத்துத் தந்தார்.
இந்தச் சங்கப்பாடல், தமக்கென உழைக்காமல் பிறர்க்கென உழைப்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்குது. இப்படியா இந்த சிம்பொனிக் போயத்தை முடிச்சிருக்கேன். இதுக்கு பெயர் ‘தி ஜர்னி’. மொத்தமா, இந்த இசை ஆல்பத்துக்கு, ‘ஸ்பிரிட் ஆஃப் ஹியூமானிடி’னு பெயர் வச்சிருக்கோம்...’’ என்கிற கணேஷ் பி. குமார் இந்தப் பாடல்களை ஜெர்மனியிலுள்ள ஹாலே ஆர்க்கெஸ்ட்ரா குழுவுடன் இணைந்து ரிக்கார்ட் செய்திருக்கிறார்.
‘‘சிம்பொனிக் போயத்துல முதல் பாடல் ஒரு ஆங்கிலப் பாடல். தொலைந்த ஆத்மாக்கள்ங்கிற தலைப்பிலான அந்தப் பாடலையும் இன்னும் மூணு பாடல்களையும் என் மனைவி ஜார்ஜினா மார்கரைட் எஸ்ரா எழுதினாங்க. அத்துடன், புறநானூறு பாடலையும் மொழி பெயர்த்துத் தந்தாங்க.
இந்த ஆல்பத்திற்கான ரிக்கார்டை ஜெர்மன்ல பண்ணினோம். அங்க ஹாலேனு ஒரு நகரம் இருக்கு. அந்த நகரத்தின் மாநில ஆர்க்கெஸ்ட்ராவுடனும், அந்த மாநில சேர்ந்திசை பாடல் குழுவுடனும் சேர்ந்து இந்த சிம்பொனி இசை ஆல்பத்தை முடிச்சோம். இந்தக் குழுவுடன் சேர்ந்து பாப் ஷாலினியும் பாடினாங்க. ஆனா, இந்த ஜெர்மன் குழுவுக்காக ஒரு வருஷம் காத்திருந்தோம். 2018ல் அப்ரோச் பண்ணி 2019 ஜூலையில்தான் தேதி கொடுத்தாங்க. அந்த மாசமே ஆல்பம் தயாராச்சு. கூடவே, வீடியோவும் எடுத்ேதாம்.
இந்நேரம், ஆனந்த் மாதவன் இந்த ஆல்பத்தை உலகளவுல எடுத்திட்டுப் போகணும்னு நினைச்சார். தொடர்ந்து இந்த ஆல்பத்தின் திட்டத் தலைவர் டாக்டர் பிரேம் ெவங்கடேஷ் பல்வேறு நிறுவனங்களுடன் பேசினார். இதைக் கேட்ட அமெரிக்காவைச் சேர்ந்த நவோனா ரிக்கார்ட்ஸ் நிறுவனம் ரொம்ப ஆர்வமானாங்க. 2021ல் ரிலீஸ் பண்ணலாம் னாங்க. சரினு ஏத்துக்கிட்டோம்.
ஆனா, இந்த 2020ம் ஆண்டு பீத்தோவனின் 250வது பிறந்தநாள் வருது. அதோடு, இரண்டாம் உலகப் போர் முடிஞ்சு 75வது வருஷம். அதனால, என் சிம்பொனிக்கும் சிம்பொனிக் போயத்துக்கும் இந்த வருஷம் நெருக்கமான சம்பந்தம் இருக்குனு சொன்னேன்.
உடனே அவங்க ஆச்சரியப்பட்டு மற்ற வேலைகள நிறுத்திட்டு இதுக்கான வேலைகள செய்தாங்க. இதோ… இந்த வாரத்துல எங்க சிம்பொனி இசை ஆல்பம் வெளியாகுது...’’ என நெகிழ்ந்த கணேஷ் பி. குமார், ‘‘இதை சிடியில கேட்கலாம். தவிர, உலகத்துல உள்ள முக்கிய மியூசிக் ஸ்ட்ரீமிங் சர்வீஸ்ல டவுன்லோடும் செய்துக்கலாம்...’’ என்கிறார் உற்சாகமாக!
பேராச்சி கண்ணன்
|