ஒத்திகை
பாண்டியன் எக்ஸ்பிரஸ்.
குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு. வசதிக்குக் குறைவில்லை என்றாலும் அதில் ஏறியதிலிருந்து என் மனதில் ஒரு கவலை தொடர்ந்து கொண்டிருந்தது. சூட்கேஸை இருக்கைக்குக் கீழே செயின் லாக்கில் இணைத்தாகிவிட்டது. செல்போனை அங்கிருந்த மின் இணைப்பில் சார்ஜர் மூலம் தொடர்பு கொடுத்தாகி விட்டது. விரிப்பை விரித்து தலையணையை வைத்துக் கொண்டாகி விட்டது.
ஆனால், படுத்த உடன் தூக்கம் வராமல் இரண்டு முறை எழுந்தெழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன். இருந்தபோதிலும் நான் கவலைப்படுவது அவ்வளவு வெளிப்படையாக பிறருக்குத் தெரியும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. எதிரிலிருந்த இளைஞன் என்னைப் பார்த்து ‘’ஏதாவது பிரச்னையா சார்? நான் உதவி செய்யட்டுமா? தண்ணீர் பாட்டில் கொண்டு வரல்லையா?’’ என்று கேட்டான். அதற்கு பதிலளிக்காமல் ‘‘நீங்க எங்கே இறங்கணும்?’’ என்று கேட்டேன்.
‘‘கொடைக்கானல் ரோடு ஸ்டேஷனில்...’’ என்று அவன் கூறியபோது என் முகத்தில் வெளிப்பட்ட உவகையை அவன் உணர்ந்திருக்க வேண்டும். ‘‘நானும் அதே ஸ்டேஷனில்தான் இறங்க வேண்டும். வண்டி விடியற்காலை நாலேகாலுக்குப் போகிறது. தூங்கிடுவேனோன்னு பயம். செல்போனிலே அலாரம் வச்சிருக்கேன். இருந்தாலும் ஒரு பதற்றம்... நல்லவேளை நீங்களும் கொடைரோடுதான் போறீங்க. நான் தூங்கிட்டிருந்தா என்னைக் கொஞ்சம் எழுப்பி விடுங்க...’’புன்னகைத்தான் அவன். ‘‘கவலைப்படாமல் தூங்குங்க அங்கிள். எங்களாலே எப்படியும் முழுமையாகத் தூங்க முடியாது. அதனாலே நிச்சயம் எழுந்துக்குவோம்...’’ என்று அவன் மனைவி யும் ஆறுதலாகப் பேசினாள்.
தங்களை தினேஷ், மல்லிகா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள்.சில நொடிகளில் மல்லிகா பேசியதன் உண்மை விளங்கியது. இரண்டு பெண் குழந்தைகளோடு வந்திருந்தார்கள் அவர்கள். பெரியவளுக்கு ஆறு வயது இருக்கும். சின்னவளுக்கு மூன்று வயது இருக்கலாம். கீழ் பர்த்தில் மல்லிகா தன் இரண்டாவது மகளோடு படுத்துக் கொள்ள, மேல் பர்த்தில் தினேஷ் தனது முதல் மகளோடு படுத்துக் கொண்டான்.
அவள் தன் அப்பாவிடம் தொடர்ந்து கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். கதைகள் வேறு சொல்லச் சொன்னாள். இதெல்லாம் ஒருவிதத்தில் என் தூக்கத்தைப் பாதித்தாலும் எப்படியும் இவர்கள் காலையில் என்னை எழுப்பிவிட்டு விடுவார்கள் என்றும் நம்ப வைத்தது. நான் போக வேண்டியது முக்கியமான அலுவல். அழைத்துச் செல்ல நிறுவனத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு காரை அனுப்பியிருப்பார்கள். தவறவிட்டால் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
அரைகுறைத் தூக்கம். மூன்று மணிக்கு முழிப்பு வந்து விட்டது. சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பியவன் இனி தூங்க வேண்டாமென்று தீர்மானித்து உட்கார்ந்து கொண்டேன். எதிர் இருக்கை தம்பதிகளும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘கடைசியில் நான்தான் இவர்களை எழுப்ப வேண்டியிருக்கும்’ என்று நினைக்கும்போதே புன்னகை வெளிப்பட்டது.
ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் நாலேகால் மணிக்கு அந்த தினேஷ் எழுந்து விட்டான். மனைவியை எழுப்பினான். குழந்தைகளும் எழுந்து விட்டனர். என் பெட்டியை செயின் லாக்கிலிருந்து விடுவித்தேன். தயார் நிலையில் கைப்பையை மாட்டிக் கொண்டேன். அப்புறம் பார்க்கலாம் என்பதுபோல புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தனர். அந்தக் குழந்தைகள் டாடா கூறின. ‘‘நாமும் அங்கிள் இறங்குகிற ஸ்டேஷனில்தான் இறங்கப் போறோம். இறங்கத் தயாரா இருங்க...’’ என்றாள் மல்லிகா.
வண்டி நின்றது. வேகமாக இறங்கினேன். நிறுவனத்தின் கார் ஓட்டுனர் தொடர்பு கொண்டு, தான் ரயில் நிலைய வாசலில் இருப்பதாகச் சொன்னார். அந்த ஸ்டேஷனில் ஒரே நிமிடம்தான் ரயில் நிற்கும். ரயில் மிக மெதுவாக நகரத் தொடங்கியது. அப்போதுதான் எனக்கு அது உறைத்தது. அந்தக் குடும்பம் இறங்கவில்லையே!
திடீரென தினேஷ் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலிலிருந்து பதற்றத்துடன் இறங்கினான். ‘‘சீக்கிரம்...’’ என்று கத்தியபடி வண்டியில் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த மூத்த மகளைக் கீழே இறக்கினான். மல்லிகா ஒரு சூட்கேஸை வெளியில் போட, பதற்றத்தில் அவன் அதைப் பிடிக்க முடியாமல் போய் சூட்கேஸ் கீழே விழுந்தது. வண்டி வேகம் எடுத்துக் கொண்டிருந்தது. இறங்க முடியாமல் பேயறைந்த முகத்தோடு தன் இரண்டாவது மகளுடனும், இரண்டு பைகளுடனும் மல்லிகா வண்டியிலேயே நின்று கொண்டிருக்க, தினேஷின் முகம் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த நவரசக் காட்சி மொத்தமும் வெறும் அரைநிமிடத்தில் முடிந்து விட்டது. ரயில் பார்வையைவிட்டு மறைந்து விட்டிருந்தது. ஸ்டேஷனில் அப்போது வேறு யாருமே இல்லை. அங்கிருந்த இருக்கையில் அவனை உட்காரச் சொன்னேன். ‘‘என்ன சார் இது? என்ன சார் இது?’’ என்று நம்ப முடியாத அதிர்ச்சியோடு அவன் கேள்விகளை வெளிப்படுத்தினான்.‘‘இந்த ஸ்டேஷனில் ஒரு நிமிடம்தான் வண்டி நிற்கும்னு உங்களுக்குத் தெரியாதா?’’ என்று கேட்டபோது தெரியாது என்பதுபோல் வேகமாகத் தலையசைத்தான்.
இதற்குள் அந்தச் சிறுமி விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொன்னேன். ‘‘கவலைப்படாதீங்க. செல்போனில் உங்கள் மனைவியைக் கூப்பிடுங்க. அடுத்த ஸ்டேஷனிலே அவங்களை இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் டாக்ஸியில் இங்கே வரச்சொல்லுங்க...’’ என்றேன்.‘‘ஐயோ, அவளுடைய செல்போனும் என்கிட்டேதானே இருக்கு. அவளிடம் வெறும் இருநூறு ரூபாய்தான் இருக்கு...’’ சொல்லும்போதே அவன் கண்களில் கண்ணீர்.
‘‘அவங்க செயினைப் பிடிச்சு இழுத்தால் வண்டி நின்னுடும். இந்நேரம் அதைச் செய்திருப்பாங்க...’’ என்றேன். ‘‘அவ அதையெல்லாம் செய்யக்கூடியவ இல்லே. மிகவும் மிருதுவானவள். வீட்டில எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். சுயமாக எதுவும் செய்யமாட்டா. குழந்தைகள் ஏதாவது ஹில் ஸ்டேஷனுக்குப் போகணும்னாங்க. அதுதான் கொடைக்கானலுக்கு வரத் தீர்மானிச்சோம். ஆரம்பமே இப்படி ஆயிடுச்சு...’’
கொடைக்கானலில் அவனுக்கு யாரையும் தெரியாது என்றான். ஸ்டேஷன் மாஸ்டரிடம் இதுபற்றிக் கூறலாம் என்று சொன்னேன். அவன் உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. படபடப்புக் காரணமாக மார்பை பிடித்துக் கொண்டிருந்தான். பிறகு ‘‘அங்கிள் நீங்க கிளம்புங்க. உங்களுக்கு வேலை இருக்கும். நான் பார்த்துக்கறேன்...’’ என்றான். மேலும் சிலமுறை கூறியும்கூட அவன் பிடிவாதமாக இருக்கவே நான் கிளம்பினேன்.
கிளம்பும்போது அவனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டேன். வெளியே வரும்போது ஸ்டேஷன் மாஸ்டர் அவர் அறையில் இல்லை. எனக்கான கார் காத்திருந்தது. கிளம்பி விட்டேன்.இந்தச் சம்பவம் தொடர்ந்து மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது. ‘‘கடவுள் ஏன் அந்தக் குடும்பத்தை இப்படிச் சோதிக்க வேண்டும்?’’ என்ற கேள்விகூட அடிக்கடி எழும்பியது.
அதற்குப் பிறகு அவனை என்னால் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் செல்போன் பாதிக்கப்பட அதில் பல தொலைபேசி எண்கள் அழிந்து விட்டன. அவற்றில் தினேஷின் எண்ணும் ஒன்று. அந்த மல்லிகாவின் அழகும் அப்பாவித்தனமும் ‘அவளுக்கு எதுவுமே தெரியாது’ என்ற அவளது கணவனின் வாக்கியமும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது.
ஆனால், காலப்போக்கில் எனது வாழ்க்கையில் நடந்த வேறு பல திருப்புமுனைச் சம்பவங்களில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையச் சம்பவம் மறந்து போய் விட்டது.இந்த நிலையில்தான் ஒரு நாள் அந்த மல்லிகாவை கடைத் தெருவில் சந்திக்க நேரிட்டது.‘‘நீங்க அன்னிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸிலே எங்ககூட வந்தவர்தானே அங்கிள்?’’ என்று அவள் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே பரபரப்புடன் ‘‘அன்னக்கி ரொம்பப் பதற்றமான நிகழ்ச்சிகள் நடந்து விட்டது. அப்புறம் என்ன ஆச்சு?’’ என்று கேட்டேன்.
‘‘சொல்றேன்... எங்க வீட்டுக்கு வாங்களேன். ஐந்து நிமிட தூரத்தில்தான் இருக்கு. நீங்க கட்டாயம் வரணும். இல்லேன்னா அவர் வருத்தப்படுவார்...’’ எனக்கும் அப்போது நேரம் இருந்தது. அவள் கணவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. வீட்டை நோக்கி நடக்கும்போது அவள் பேசத் தொடங்கினாள். ‘‘நீங்க அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தீங்கன்னு சொன்னார். அந்தப் பதற்றமான சூழலில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் அவருக்கு மிகவும் இதமளித்ததாம்...’’
இந்த இடத்தில் ஒரு சிறு இடைவெளியை அளித்தபின், அன்று நடந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினாள். ‘‘வண்டி வேகம் எடுத்துடுச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல்லே. வெடவெடன்னு கை, கால் எல்லாம் நடுங்கிச்சு. கீழ விழுந்துடுவேன்னு பயம் உண்டானது. பொண்ணு வேற அழறா. என் பயத்தைக் காட்டிக்கிட்டா அவ இன்னும் பயந்திடுவா. கஷ்டப்பட்டு என் பயத்தை அடக்கிக்கிட்டேன். என்ன காரணத்தாலோ அபாயச் சங்கிலியை இழுக்கணும்னு எனக்குத் தோணாமப் போச்சு. அது விடியற்காலை என்பதால் என் நிலைமை சக பயணிகளுக்கெல்லாம் தெரியவில்லை. எல்லாரும் தூங்கிக்கிட்டிருந்தாங்க.
ஒரு மணி நேரம் கழித்து மதுரையில்தான் வண்டி நின்றது. அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் நடந்ததைச் சொன்னேன். அவர் கொடை ரோடு ரயில் நிலையத்தைத் தொடர்பு கொண்டார். அப்புறம் ‘உன் கணவனை இங்கே வரச் சொல்லட்டுமா?’ என்றார். ‘இல்லை நாங்கள் கொடைக்கானலுக்குப் போவதாகத் திட்டமிட்டோம். நானே அங்கு போகிறேன். ஆட்டோவோ, டாக்ஸியோ ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றேன்.
ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால், எனக்கான சோதனை பாக்கி இருந்தது. பாதி வழியிலே டாக்ஸி டிரைவர் என்னைப் பார்த்த பார்வை தவறானதாக இருந்தது. இல்லாத செல்போனை காதுகிட்டே வச்சுக்கிறமாதிரி பாவனை செய்து இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தப்பாவிடம் பேசுவதாக நடித்தேன். அதற்குப் பிறகு அவன் வாலாட்டவில்லை.
ஒரு வழியாக எங்கள் குடும்பம் அன்று மதியம் ஒன்று சேர்ந்தது...’’ இதற்குள் வீடு வந்துவிட்டது. வாசலில் எந்த ஆணின் காலணிகளும் தென்படவில்லை. வெளியே எங்காவது போயிருப்பானோ? அதிக நேரம் தங்க முடியாதே. இன்னொரு நாள் வரவேண்டியதுதான் என யோசித்தபோதே சமையலறையிலிருந்து மல்லிகாவின் குரல் கேட்டது.
‘‘என்னாலே தனியாகவும் இந்த உலகிலே சமாளிச்சுக்க முடியும் என்கிற மனஉறுதியை எனக்கு முதலில் கற்றுக் கொடுத்தது கொடை ரோடு ரயில் நிலைய சம்பவம்தான் அங்கிள்...’’அப்போதுதான் அங்கிருந்த புகைப்படம் ஒன்றில் மனம் பதிந்தது. சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு பூவும் சாத்தப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் தினேஷ் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
பிகினி பால்!
ராதிகா ஆப்தேவின் ரூட்டை பிடித்துவிட்டார் அமலாபால். ஆம். திருமணத்திற்கு பிறகும் பிகினியில் ஆப்தே போலவே கலக்குகிறார்.சமீபத்தில் கேரளாவில், தான் ரிலாக்ஸாகி வரும் போஸை பதிவிட்டு, ‘Some people spend their valuable years living with war with the sole aim of resting in peace. Why don’t you try living in peace? The world could do with some right now!’ என்ற தத்துவத்தையும் உதிர்த்திருக்கிறார் அமலா பால்!
இடதுசாரி நடிகை!
லாக் டவுனில் பெயிண்ட்டிங்கில் அசத்துகிறார் ‘லிங்கா’ பொண்ணு சோனாக்ஷி சின்ஹா. மும்பையிலுள்ள தன் வீட்டில் ஸ்கெட்ச் பேனாவும், டிராயிங் நோட்டுமாக இருக்கும் சோனாக்ஷி, லெஃப்ட் ஹேண்டில்தான் அசத்தலாக வரைகிறார். இதை கண்காட்சியாகவும் வைத்து ஓவியங்களை விற்பனையும் செய்துவிட்டார். கிடைத்த தொகையை கொரோனாவினால் பாதித்த ஏழைச் சிறுவர்களின் சிகிச்சைக்கு அளிக்கிறாராம்!
பேக்கரி டீலிங்!
கா ஜல் அகர்வால், போகிற போக்கைப் பார்த்தால், பெயருக்கேத்த மாதிரி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி கடை ஆரம்பித்து விடுவார் போல. பின்னே... அப்படி ஒரு நேர்த்தி லுக்கில் ஸ்வீட்ஸ், கேக்குகளை செய்து அசத்துகிறாரே! இரண்டு மாதங்களுக்கு முன்பு, சமோசாவில் கோன் ஷேப் சரியாக வந்திருக்கிறது என புளகாங்கிதம் அடைந்தவர், இப்போது சாக்லெட் கேக், சீஸ் கேக், கேரட் அல்வா என வெரைட்டி ஐட்டங்களை செய்து மிரள வைக்கிறார்.
அருண் சரண்யா
|