சத்துணவு நிதி எங்கே போனது..?
ஊரடங்கு நேரத்தில் ஏன் ஒருவேளை உணவையாவது மாணவர்களுக்கு வழங்க அரசு மறுக்கிறது..?
கேட்கிறார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்?
பசியோடு வந்து... பசியோடு படித்து... பசியோடு வீடு செல்லும் ஏழைக் குழந்தைகளின் பசி போக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் முழுமூச்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் இந்த மூன்று மாத இடைவெளியில், ஊட்டச்சத்தின்மையால் எடை குறைந்து மெலிந்து சுருங்கிக் கிடக்கிறார்கள் என்கிறார் சென்னை முகப்பேரு கார்ப்பரேஷன் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி.‘‘பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவாக அரிசி, பருப்பு, சிறுபயறு, மூக்குக் கடலை, முட்டை, காய்கறிகள்... என அரசால் வழங்கப்படுகின்றன.
இவற்றை உணவாக்கி பருப்பு சாதத்துடன், தினம் ஒரு காய்கறி, கீரை, அவித்த முட்டையோடு, வாரத்தில் ஒரு நாள் சிறுபயறு, மூக்குக் கடலையால் செய்த சுண்டலும் சத்துணவுத்திட்டத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காகவே அரசு நிதியையும் ஆண்டுதோறும் ஒதுக்குகிறது.
இந்த ஊரடங்கில் குழந்தைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது?’’ என்று கேட்கும் கிருஷ்ணவேணி, தான் பணிபுரியும் பள்ளியின் உணவுக் கூடத்தில் தேங்கிக்கிடக்கும் உணவுப் பொருட்களை இயலாமையுடன் பார்க்கிறார்.
‘‘இந்த நோய்த் தொற்று நேரத்தில், அரசு ஏன் இவற்றை குழந்தைகளுக்கு வழங்கவில்லை? மார்ச் மாத இறுதியில் தொடங்கிய ஊரடங்கில், மே மாத விடுமுறை தவிர்த்து மற்ற மாதங்களில் தினம் ஒரு முட்டை வீதம் வாரத்துக்கு 5ம், அரிசி பருப்பையும் சேர்த்து கொடுத்திருக்கலாம். குழந்தைகள் கை கழுவ சோப்பு, மாஸ்க்கை இணைத்து சிறு கிட்டுகளாக குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து வாரம் ஒரு முறை வழங்க அரசு ஏற்பாடு செய்திருக்கலாம். நோய் தீவிரமாகப் பரவும் நேரத்தில் சின்னக் குழந்தைகள் உணவுக்காக அம்மா உணவகங்களின் வாயிலில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். மணிக்கணக்காக நின்றாலும் சப்பாத்தி போன்ற உணவுகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 20 சதவிகிதம் குழந்தைகளால் மட்டுமே வரிசையில் நின்று உணவினை வாங்கிச் சாப்பிட முடிகிறது.
மீதிக் குழந்தைகள் நிற்க முடியாமல் வீட்டிலிருக்கும் அரிசி உணவையே திரும்பத் திரும்ப சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நோய்த் தொற்று கடுமையாகும் நேரத்தில் குழந்தைகளுக்கு சரிவிகித உணவு அவசியமல்லவா..? வயிற்றை நிரப்புவது மட்டுமா உணவு..?’’ என்று கேட்கும் கிருஷ்ணவேணி, தனது தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், கட்டட வேலை பார்க்கும் தினக்கூலிகள் என்கிறார்.
‘‘ஆண்கள் வேலைக்குச் சென்றாலும் பெண்களின் ஊதியம்தான் வீட்டுக்கு முழுதாக வரும். இதில் ஒரு பெண் 4 வீட்டில் வேலை செய்தால்தான் குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்கும். அதில் வீட்டு வாடகை, உணவுத் தேவை, இத்தியாதிகளை அனைவருக்கும் நிறைவேற்ற வேண்டும். ஊரடங்கால் அந்த வருமானத்துக்கும் சிக்கல்.
‘தினமும் அரிசி சாதத்தில் வெறும் தண்ணீரை ஊற்றித்தான் சாப்பிட்டோம் டீச்சர்...’ என என் மாணவர்கள் சொல்வதைக் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறதுஇப்படி இவர்கள் வாழவா காமராஜர் மதிய உணவுத் திட்டத்தையும் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார்கள்? இந்த நிலையை மாற்றத்தானே கலைஞர் மதிய உணவுடன் அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார்?
இந்நிலை இப்படியே தொடர்ந்தால், குழந்தைகள் சோமாலியா நாட்டைவிடவும் மோசமான நிலைக்குச் செல்வார்கள்.ஊரடங்கு அறிவித்த முதல் பத்து நாட்களுக்குத்தான் இவர்களது வீடுகளில் உணவுப் பொருட்கள் இருப்பு இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் நிலைமை தலைகீழ். வருமானம் சுத்தமாக இல்லாத நிலையில், உணவுச் சிக்கல் பெரிதாக வெடிக்க, குழந்தைகள் பசியில் சிக்கி இருக்கிறார்கள்.
நியாயவிலைக் கடைகளில் அரசு தரும் வெறும் அரிசி, பருப்பு, எண்ணெயை மட்டும் சமைத்துச் சாப்பிடுவதால் ஊட்டச் சத்து இவர்களுக்கு கிடைத்து விடுமா? வருமானத்திற்கே வழியில்லை என்னும்போது, சத்தான உணவுக்கு அடித்தட்டு மக்கள் எங்கே போவார்கள்? பெற்றோர்களுக்கு வாழ்வதாரம் இல்லையெனும்போது, குழந்தைகள் நலனை அரசுதானே கையில் எடுக்க வேண்டும்? மார்ச் 19ல் தொடங்கி இந்த ஜூன் மாதம் வரையிலான குழந்தைகள் உணவுக்கான நிதி எங்கே?
அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அரிசி, பருப்பு, எண்ணெயில் தொடங்கி கடுகு, சீரகம், சோம்பு என அஞ்சறைப்பெட்டி பொருட்களுடன், பருப்பு வகைகளையும் சேர்த்து, கோதுமை மாவு, உப்பு, புளி, மசாலாப் பொருட்கள் அடங்கிய 25 நாட்களுக்குத் தேவையான உணவு கிட்டை ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கி இருக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?
பள்ளிகளை மூடியபோதே குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் எல்லாப் பள்ளிகளிலும் இருப்பில் இருந்தன. ஆனால், தேங்கிய உணவுப் பொருட்களை திருப்பிக் கொடுக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டது. பார்த்தால்... அந்த உணவுப்பொருட்களின் தேதி காலாவதியாகி இருந்தது.
இப்படி உணவுப் பொருட்களை காலாவதி ஆகும்படி வீணடித்தது யார் குற்றம்?
எத்தனை குழந்கைள் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடுகிறார்கள்... எவ்வளவு உணவு இருப்பில் உள்ளது... என்பவற்றைத் தெரிந்துகொள்வதற்கான தொழில் நுட்பங்கள் இன்று வந்துவிட்டன. இணையத்தில் யார் வேண்டுமானாலும் இதைப் பார்க்கலாம். இரண்டே இரண்டு சதவிகிதம் தவிர மீதமுள்ள 98% குழந்தைகள் சத்துணவை பள்ளிகளில் சாப்பிடுபவர்கள்.
இது தெரிந்தும் இப்படிச் செய்யலாமா?’’ ஆற்றாமையுடன் வினவும் கிருஷ்ணவேணி, 6ம் வகுப்புக்கு மேல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நாப்கின், இரும்புச்சத்து மாத்திரைகளும் ஊரடங்கு காலத்தில் வழங்கப்படவில்லை என்கிறார்.
‘‘இவற்றை ஆசிரியர்களை வைத்தே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவே அரசு இந்த ஏற்பாடுகளைச் செய்தன.
இப்பொழுது அதே அரசே குழந்தைகளின் எதிர்காலத்தை நசுக்குகிறது.பொறுப்பான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இதையெல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் கிருஷ்ணவேணி. திண்டிவனம் தாய்த்தமிழ் பள்ளியின் நிர்வாகியான பேராசிரியர் பிரபா கல்விமணி, இதை ஆமோதிக்கிறார். ‘‘சமூக இடைவெளியோடு மதிய உணவு வழங்க அரசு அனுமதிக்க வேண்டும்.எங்கள் தாய்த்தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏழை எளிய கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்.
நீண்ட ஊரடங்கால் அனைவருமே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகளுக்கு சத்தான உணவு ஒரு வேளையாவது கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்த கொரோனா காலத்திலும் மதிய உணவைக் கொடுக்க அரசு அனுமதி வழங்கலாம்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் குறைவான குழந்தைகள்தான் இருக்கிறார்கள். சமூக இடைவெளியோடு, சத்தான ஒரு வேளை உணவை வழங்குவது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
அதேபோல் பால்வாடி குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து உணவுகளை வழங்க தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்...’’ என்கிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|