தல! sixers story



ஐபிஎல்லுக்கு அச்சாரம்!

பாகிஸ்தானை வென்ற அந்த இரவு இந்திய வீரர்களுக்கு மறக்க இயலாதது.வீரர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் சிறப்பு விருந்து கொடுத்தார் லலித் மோடி. “தோனி, நாம கப் ஜெயிப்போமா?” கேட்டுவிட்டு கண்ணாடி அணிந்த கண்களிலிருந்து தன் லேசர் பார்வையை தோனியின் முகத்தை நோக்கித் திருப்பினார்.“நிச்சயமா சார்...” முள்கரண்டியால் மாமிசத்தை குத்திக் கொண்டே சொன்னார் தோனி.
“என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?”

“ஸ்பெஷலா எதுவுமில்லை. எதிரணி போடுற ஒவ்வொரு பாலையும் சிக்ஸருக்கு விரட்ட முயற்சிக்கிறது மட்டும்தான் இப்போதைக்கு நம்ம கிட்டே இருக்கிற ஒரே திட்டம்…”தோனியின் பதில் மோடிக்குப் பிடித்திருந்தது.ஜாலியாக கேமுக்குள் ஒரு கேம் விளையாட நினைத்தார். “பாய்ஸ். எல்லாரும் இங்கே  வாங்க…”ஆங்காங்கே சாப்பிடுக் கொண்டிருந்த வீரர்கள் வந்துக் குழுமினர்.

“உங்க கேப்டனோட பேசிக்கிட்டிருந்தேன். ஒவ்வொரு பாலையும் நீங்க சிக்ஸருக்கு விரட்டறதுதான் இந்த கப்பை அடிக்கிறதுக்கு அவர் வெச்சிருக்கிற திட்டம்னு சொன்னாரு…”எல்லோரும் அவரது முகத்தையே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.“நான் ஒரு பரிசுத் திட்டம் அறிவிக்கிறேன். இதுக்கும் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இது என்னோட சொந்தச் செலவு…”“ஹிப்... ஹிப்... ஹுர்ரே…” வீரர்கள் பழைய கவுபாய் அமெரிக்கர்கள் பாணியில் ஊளையிட்டு மோடியை உற்சாகப் படுத்தினார்கள்.

“இந்த டோர்ணமெண்ட்டில் யார் ஒரே ஓவர்லே ஆறு சிக்ஸர் அடிக்கிறாங்களோ, அவங்க என்ன கேட்டாலும் நான் வாங்கிக் கொடுப்பேன்… நிச்சயமா உங்களில் ஒருத்தர் அந்த சாதனையை செய்யப் போறீங்கன்னு தெரியும்.

யார் அந்த சிக்ஸர் சிங்கம்?”வீரர்கள் அத்தனை பேரும் உடனே தோனியின் முகத்தைப் பார்த்தார்கள்.எப்போதும் போல கூலாக இருந்த தோனி, யுவராஜ்சிங்கை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார்.யுவராஜ், தோனிக்கு கட்டை விரலை உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்டி அவருடைய கோரிக்கையைப் புரிந்துக் கொண்டார்.உடனே வீரர்கள் தங்களுக்குள் குழு குழுவாகப் பிரிந்து குசுகுசுவென பேசிக் கொண்டார்கள்.

சாந்த்தான் முதலில் வாயைத் திறந்தார். “மோடி சார், கொஞ்சம் காஸ்ட்லியான கிஃப்ட்டா கேட்டுருவோம். பரவாயில்லையா?” குறும்பாகச் சிரித்தார்.“நான் சீரியஸாவேதான் சொல்லுறேன். ஆறு பாலில் ஆறு சிக்ஸர். அடிச்சிக் காட்டுங்க. நீங்க என்ன கேட்குறீங்களோ, அதை வாங்கித் தர்றேன்…”“ரோலக்ஸ் வாட்ச்சோட எக்ஸ்பென்ஸிவ் மாடல்…” வீரர்கள் கூட்டமாகக் குரல் கொடுத்தார்கள்.

“அவ்வளவுதானா? நான் அதைவிட பெருசா பிளான் பண்ணியிருக்கேன்…”
புன்னகைத்தார் மோடி.“சார், என்ன சார்.. சொல்லுங்க சார்…”
“புத்தம்புது போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்…”மோடி குறிப்பிட்ட ஜெர்மனி தயாரிப்பான போர்ஷே 911 காரின் இன்றைய இந்திய விலை சுமார் இரண்டு கோடி ரூபாய் எனில், அது எவ்வளவு பெரிய காஸ்ட்லி கிஃப்ட் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
எந்தவொரு கிரிக்கெட் வீரரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசு.

ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் விளாச முடியுமா?
“நம்மில் யாருக்கு இந்தப் பரிசு கிடைக்கப் போகுதுன்னு தெரியலை. ஆனா, எல்லாருமே முயற்சிக்கணும். நானும் என் பேட்டும் கூட உங்களோட போட்டிக்கு ரெடியா இருக்கப் போறோம்…” தோனி சொன்னார்.சூப்பர் எய்ட் பிரிவில் முதல் போட்டி நியூசிலாந்துடன்.

முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து.ஆரம்பத்தில் சற்றே தடுமாறிய அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீறுகொண்டு எழ, இந்திய பவுலிங் பணால் ஆகிப் போனது.இருபது ஓவர்களில் 190 ரன்கள்.

கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள். எட்ட முடியாத இலக்கு இந்தியாவுக்கு.ஆனால், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான காம்பிரும், சேவாக்கும் புயல் மாதிரி நியூஸி பவுலர்களை தண்டித்தார்கள்.6வது ஓவரிலேயே 75 ரன்களை தாண்டிய நிலையில் எதிர்பாராவிதமாக ஷேவக் அவுட்.தொடர்ந்து வரிசையாக நம் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்ப... 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

மீண்டும் வீரர்களுக்கு தோல்வி ஜூரம்.அதே நாளில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் தோற்றிருந்தது.
அடுத்த மூன்று நாட்களில் முதல் போட்டியில் தோல்வி பெற்றிருந்த இந்தியாவும் இங்கிலாந்தும் மோத வேண்டும்.

இதற்கிடையே நியூஸிலாந்துடனான அடுத்தப் போட்டியிலும் இங்கிலாந்து தோற்றிருந்தது. செமிஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துவிட்டது.
ஆனால், இந்திய அணிக்கோ இங்கிலாந்துடனான போட்டி வாழ்வா, சாவா போட்டி. அதில் வென்றால் மட்டுமே கோப்பையை நினைத்துப் பார்க்கவாவது முடியும்.தோனி, வீரர்களிடம் சொன்னார். “வெற்றியைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை…”செப்டம்பர் 19, 2007 அன்று டர்பன் நகரில் நடந்த அந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எவருமே மறக்க முடியாது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா.ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான காம்பிரும், சேவாக்கும் உக்கிரமாக இருந்தார்கள்.
12வது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

15வது ஓவரில் சேவாக், 16வது ஓவரில் காம்பிர், 17வது ஓவரில் உத்தப்பா என்று அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் அவுட்.18வது ஓவரில் களத்தில் நின்றவர்கள் ‘தல’ தோனியும், யுவராஜ்சிங்கும்.

ஃப்ளிண்டாப்பின் பவுலிங்கில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் யுவராஜ்.19வது ஓவரை வீசுவதற்கு ஸ்டூவர்ட் பிராட் தயாராக நின்றார்.“யுவி, மோடி சார் சொன்ன கிஃப்ட்டை கொஞ்சம் நினைச்சுப் பாரு…” யுவராஜ்சிங்கிடம், தோனி கிசுகிசுத்துவிட்டுச் சென்றார்.அந்த மேஜிக் ஒர்க்கவுட் ஆனது.அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு சிக்ஸர்களாக மாற்றிக் காட்டினார் யுவராஜ்சிங்.

டர்பன் மைதானம் மட்டுமின்றி, டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களும் ஆர்ப்பரித்தார்கள்.வெறும் பன்னிரெண்டே பந்துகளில் அரை செஞ்சுரியும் விளாசியிருந்தார் யுவராஜ்சிங்.

இருபது ஓவர்கள் முடிவில் இந்தியா, இமாலய ஸ்கோரான 218ஐ எட்டியிருந்தது.இங்கிலாந்தும் கடுமையாகப் போட்டியிட்டு 200 ரன்களை எட்டி, வெறும் 18 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றது.அன்றைய இரவு பார்ட்டி களைகட்டியது.“சார், நீங்க சொன்னபடி யுவராஜ்சிங்குக்கு போர்ஷே கார் வாங்கிக் கொடுத்துடணும். மறந்துடாதீங்க...” சேவாக், மோடியிடம் ஜாலியாகக் கேட்டார்.

“போர்ஷேவுக்கு ஆர்டர் கொடுத்துட்டேன். கப்பு வாங்குங்க. நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத கிஃப்டெல்லாம் டீம்லே இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் இந்தியாவில் காத்துக்கிட்டிருக்கு…” சேவாக்கின் தோளைத் தொட்டு உற்சாகமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் லலித் மோடி.அவரது மனசு வேறு கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தது.

யெஸ்.‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ என்று அழைக்கப்படும் உலகின் காஸ்ட்லியான கிரிக்கெட் போட்டித் தொடர்!

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என்பதெல்லாம் வேறும் போர்ஷே காருக்கான விலையல்ல என்று அவருக்குத் தெரியும்.

120 கோடி மக்கள் நிறைந்திருந்த இந்தியாவில் இந்த டி20 போட்டிகள் செய்யப்போகும் மாயம் ஒவ்வொன்றும் அவர் கண் முன்பாக விரிந்தது.
யுவராஜ்சிங் ஆறு சிக்ஸர் விளாசியதிலிருந்து சரியாக நான்கு நாட்களில் பக்காவான ஒரு ஐபிஎல் பிளானோடு சில கார்ப்பரேட் நிறுவனங்களை
மின்னஞ்சலில் அணுகினார் லலித்மோடி.

அவர்கள் கொட்டிக் கொடுக்க முன்வந்த தொகை எவரும் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. லட்சம் கோடிகளைத் தாண்டியது.
ஐபிஎல், கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே மாற்றப் போகிறது என்பது அவருக்குப் புரிந்தது.

(அடித்து ஆடுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்