ஜூன் 19 to 21, 2020...சென்னை ரவுண்ட் அப்!



அதிகாலை ஆறு மணி. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இத்தனை அமைதியை இதற்குமுன் சென்ட்ரல் கண்டிருக்குமா?

தெரியாது. சில போலீசார் நடப்பதும், உட்காருவதுமாக இருக்கின்றனர். வெளியே உள்ள பிளாட்பாரத்தில் ரிக்‌ஷாக்காரர்கள், பிளாட்பாரவாசிகள் கண் அயர்ந்து உறங்குகின்றனர்.வடஇந்தியர்கள் சிலர் தங்கள் ஊருக்குச் செல்வதற்கான ரயிலுக்காக வேகம் காட்டுகின்றனர். ஆறரை மணிக்குக் கிளம்பும் அந்த ராஜ்தானி விரைவு வண்டியில் கூட அவ்வளவு கூட்டமில்லை.

‘‘இதுபோல ஒரு நிலைமை வரவே கூடாது சார்… வீட்டுக்குப் போக முடியாம டூட்டி பார்த்திட்டே இருக்கோம். அப்படியே போனாலும் வீட்டுல யாருக்காவது பரவிடுமோனு பயமாயிருக்கு. என்ன நோய் சார் இது…’’ என நம்மிடம் வேதனையைப் பகிர்ந்துவிட்டு நடக்கத் தொடங்கினார் பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஒருவர்.   

கொரோனா தொற்றால் தமிழகமே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்ேநரத்தில், தலைநகர் சென்னை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசிட்டிவ் கேஸால் இரண்டாவது முறையாக ஊரடங்கிற்குள் ஊடரங்கை சந்தித்துள்ளது.முதன்முதலில் ஊரடங்கிற்குள் ஊரடங்கு போட்டபோது பொருட்கள் வாங்க மக்கள் கூடியதே தொற்று அதிகமானதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது முன்கூட்டியே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தளர்வுகளின்றி நடந்து வருகிறது.

சென்ட்ரலிலிருந்து சவுகார்பேட்டை பக்கமாக நகர்ந்தோம். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு கொண்ட மின்ட் தெரு பேரமைதியாக இருக்கிறது.
ஆங்காங்கே தென்படும் தெருவோரவாசிகள் மட்டும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். தேவராஜ முதலியார் தெருவில் உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து மணிசத்தம் கேட்டது. தினமும் நடக்கும் காலை பூஜை. ஆனால், இந்த இக்கட்டான காலத்தால் கதவுகள் மூடப்பட்ட நிலையில் நடந்து கொண்டிருந்தது.
 
கோயிலின் அருகே ஒரு குடும்பத்தினர் காய்கறிகளை பாலிதீன் பைகளில் வேகமாகப் போட்டபடி இருந்தனர். தக்காளி, உருளைக்
கிழங்கு, பெல்லாரி வெங்காயம் என எந்தக் கவரை எடுத்தாலும் 20 ரூபாய் என்றனர். ‘‘அத்த ஏன் சார் கேட்குறே..? நான் பொறந்து வளர்ந்தெல்லாம் இந்தத் தெருவுலதான். மூணு தலைமுறையா இங்கக் கிடக்கோம். எங்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டேங்குறாங்க. இப்ப சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுறோம். முன்னாடி பூ வித்து பொழச்சிட்டு இருந்தோம். கோயில் மூடினதால வியாபாரம் போச்சு. அதான் காய்கறி வியாபாரம் பண்றோம்.
நேத்து நைட் அதோ அந்த வண்டிய (டாடா ஏஸ் வண்டியைக் காட்டுகிறார்) புடிச்சு திருமழிசையாண்ட காய்கறி வாங்கிட்டு வந்தோம். இப்ப கவர்ல போட்டு மீன்பாடி வண்டியில எடுத்திட்டு தெருவா தெருவா போவணும்.

ரெண்டு மணிக்கெல்லாம் இங்க வர்றலன்னா வண்டிய டேஷனுக்கு இழுத்திட்டு போயிடுவாங்க. அப்புறம் எங்க பாடு திண்டாட்டம்தான்...’’ எனக் கவலை தோய்ந்த குரலில் சொன்னார் அதிலிருந்த பெண் ஒருவர். அங்கிருந்து பாரீஸ் பஜாருக்குள் சென்றோம். கிடங்குத் தெரு, பந்தர் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பத்ரியன் தெரு, ஆண்டர்சன் தெரு, கொத்தவால்சாவடி என எல்லாமே களையிழந்து கிடந்தன.

ஐகோர்ட்டின் எதிரில் உள்ள ரங்கவிலாஸில் டீ குடிக்கவும், காலை உணவை வாங்கவும் மக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். தொடர்ந்து, ராயபுரம் வழியாக காசிமேடு நோக்கி பயணமானோம். வழியெங்கும் போலீஸார் பேரியர்கார்டுகளைப் போட்டு தடைகள் ஏற்படுத்தியிருந்தனர்.

சில போலீஸார், ‘பாதுகாப்பா போங்க சார்…’ என அன்புடனும் சிலர், ‘ஏன் சார் எங்க உயிரை வாங்குறீங்க…’ என எரிச்சல்பட்டும் நம்மை அனுப்பி வைத்தனர்.எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும் காசிமேடும் களையிழந்து இருந்தது. பெரிய, சிறிய விசைப்படகுகளுடன் ஃபைபர் படகுகளும், கட்டுமரங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தன. இப்போதுதான் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க ஆயத்தமாகினர். அதற்குள் தளர்வுகளில்லாத ஊரடங்கால் கடலுக்குப் போக முடியாமல் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.

‘‘இன்னப்பா சொல்றது… போன வாரம் ஃபைபர் படகுல கடலுக்குப் போனோம். அதுக்குள்ள மறுபடியும் ஊரடங்குப் போட்டுட்டாங்க. மூணு மாசமா யாருக்கும் எந்தத் தொழிலுமில்ல. பெரிய விசைப்படகுகள் இன்னும் தொழிலுக்கே போகல. அதனால, சில குடும்பங்கள்தான் சமாளிக்குது. பல குடும்பங்கள் கஞ்சிக்கே வழியில்லாம செத்திட்டு இருக்கு…’’ வேதனையுடன் சொன்னார் அங்கிருந்த மீனவப் பெரியவர் ஒருவர்.

அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு வந்தோம். காத்து வாங்கவோ, காதலிக்கவோ ஆளில்லாமல் வெறிச்சோடி கிடந்தது. ஆம்புலன்ஸ்கள் சைரன் சத்தத்துடன் போவதும் வருவதுமாக இருந்தன. கார்களிலும் டூவீலர்களிலும் அத்தியாவசியப் பணிக்குச் செல்பவர்களைப் பார்க்க முடிந்தது. இங்கேயும் நிறைய பேரியர்கார்டுகள். தொடர்ந்து ரிச்சி தெருவிற்குள் நுழைந்ேதாம். ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தெரு. இன்று அங்குள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்ற நிலை.

சேப்பாக்கம் பெல்ஸ் சாலை வழியாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்திற்குள் வந்து சேர்ந்தோம். சனிக்கிழமை அமாவாசை என்பதால் குளத்திற்கு முன் சில புரோகிதர்கள் தர்ப்பணம் செய்பவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஆட்கள்தான் வரவில்லை.

ஓர் ஆண்டில் சுமார் முந்நூறு நாட்கள் திருவிழா கொண்டது பார்த்தசாரதி கோயில். ஆனால், கொரோனாவால் கோயில் மூடப்பட்டு கிடக்கிறது. சிலர் வாயிலில் நின்றே கைகூப்பி பார்த்தசாரதியை தரிசனம் செய்தபடி சென்றனர்.

ஐஸ்ஹவுஸ் வழியாக அண்ணாசாலை வந்தோம். ஜெமினி மேம்பாலம் மூடப்பட்ட நிலையில், அதன் அடிவழியில் செல்லும் வாகனங்கள் எல்லாம் போலீசாரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட பிறகே விடப்பட்டன. மாலை நான்கரை மணிக்கு தி.நகர் பக்கமாகச் சென்றோம். பாண்டி பஜாரில் மருந்துகடைகளையும், உணவகங்களையும் தவிர வேறெந்த இயக்கமும் இல்லை. உணவகங்களின் வாயிலில் சிகப்பு, பச்சை சட்டைகள் அணிந்தபடி ஸ்விகி மற்றும் டூன்ஸோக்காரர்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர்.  

முன்பு ரங்கநாதன் தெருவில் நகரக் கூட முடியாது. கூட்டம் அலைமோதும். இன்று செக்யூரிட்டிகள் மட்டும் அந்தந்த நிறுவன வாயிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்.  ‘‘இந்நேரத்துக்கு எல்லாம் இந்த இடம் இப்படியா சார் இருக்கும்? என்னால உட்காரகூட முடியாது. என் ரெண்டு பக்கமும் ஜனங்க பை நிறைய பொருட்கள தூக்கிட்டு நிக்கும். குழந்தைங்கள பக்கத்துல உட்கார வச்சிப்பாங்க.

போன வாரம் ஊரடங்கு தளர்வுல கூட கொஞ்சம் கூட்டம் வந்துச்சு. கலகலனு இருந்துச்சு. இப்ப மறுபடியும் முழு ஊரடங்கால் கம்முனு கிடக்குது. எப்போ பழையமாதிரி மாறும்னு இருக்கு...’’ என வருத்தப்பட்ட செக்யூரிட்டி ஒருவர் இந்தப் பணிக்காக புரசைவாக்கத்திலிருந்து சைக்கிளில் வந்து செல்கிறார். 

மீண்டும் அண்ணாசாலையைப் பிடித்து சைதாப்பேட்டை வழியாக சென்னைக்குள் வருபவர்களை அன்புடன் வரவேற்கும் கிண்டி கத்திபாரா மேம்பாலத்திற்கு வந்தோம். அத்தியாவசியப் பணிக்கான பேருந்துகளும், கார்களும், டூவீலர்களும் வருவதும் போவதுமாகப் பரபரப்புக் காட்டினாலும் சிறிது நேரத்தில் எந்த வாகனங்களும் இல்லாமல் பேரமைதி ஏற்பட்டு விடுகிறது.

அங்கிருந்து கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தோம். சாதாரண நேரங்களில் இந்த இடத்தைக் கடக்க குறைந்தது ஒருமணி நேரமாவது பிடிக்கும். ‘‘என்ன வேணும் சார்..?’’ பஸ்நிலைய வாயிலில் இருந்து செக்யூரிட்டி கேட்டார். நம் போட்டோகிராபரைப் பார்த்ததும் பத்திரிகை என அவரே ஊகித்துக் கொண்டு, ‘‘பஸ் வந்துபோயி மூணு மாசமாச்சு. இங்க வேலை பார்த்த எல்லோரும் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் உள்ள சிலர் கடைப் போட்டிருந்தாங்க. அவங்ககூட இப்ப கடைபொருட்கள் வேஸ்ட்டாகக் கூடாதுனு வண்டியில வச்சு வெளியில வித்திட்டு வர்றாங்க. எப்படியாவது சம்பாதிச்சு வயித்தை கழுவணும்ல...’’ என்றார்.

அங்கிருந்து, ‘கோயம்பேடு கிளஸ்டர்’ என அதிகாரிகளாலும், கொரோனா பாதிப்புக்குக் காரணம் எனப் பொதுமக்களாலும் கைகாட்டப்படும் கோயம்பேடு மார்க்கெட் பக்கமாக சென்றோம்.  இருள்சூழ வெறிச்சென இருந்தது அந்த இடம். அதன் உள்நுழையும் சாலையை பேரியர்கார்டுகளால் அடைத்துப் பாதுகாப்புப் பணியில் இருந்தனர் போலீசார்.

நகரும்போது என்னவோ போல் இருந்தது. காரணம், எத்தனையோ பேருக்கு வாழ்வளித்து, எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னையின் இன்றைய நிலைதான். கிளம்பினோம். மனதில் திரும்பத் திரும்ப எழுந்த கேள்வி இதுதான். எப்போது சென்னை பழைய இயல்பு நிலைக்குத் திரும்பும்?!
 
செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள் :ஆ.வின்சென்ட் பால்