அஜித், சூர்யா இப்படி செய்யலாமா..?கோலிவுட் உள்குத்து அரசியல்



‘எம்.எஸ்.தோனி’யின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை, பாலிவுட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு பிரியமான ஹீரோவாக முன்னேறி வந்தவரை பாலிவுட்டின் டாப் இயக்குநர்கள், ஹீரோக்கள், ஸ்டார் கிட்ஸ்... என பலரும் ஒன்று சேர்ந்து மன அழுத்தத்தை கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அங்கே செய்திகள் கிடுகிடுக்கின்றன.

இவை எல்லாம் பாலிவுட்டில் மட்டும் நடக்கும் விஷயங்கள் அல்ல... எல்லா மொழி திரைத்துறையிலும் இந்த பாலிடிக்ஸ் நடக்கிறது என்கிறார்கள்
விஷயம் அறிந்தவர்கள்.குறிப்பாக தமிழ்ச் சினிமாவிலும் இவையெல்லாம் நாள்தோறும் நடக்கின்றன என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.
‘‘பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட்னு மற்ற இண்டஸ்ட்ரீயோடு ஒப்பிடுகையில் இங்க ஹீரோக்களுக்கு பாலிடிக்ஸ் கிடையாது. தொழில் செய்கிற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குத்தான் பெரியளவுல பாதிப்பு இருக்கு...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார்.

தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர் உட்பட பலவற்றில் தலைமை பொறுப்பு வகித்தவர் இவர். ரஜினியின் ‘தில்லுமுல்லு’, கமலின் ‘ராம் லட்சு
மணன்’ உள்பட ஏராளமான படங்களை விநியோகித்தவர் கேயார்.‘‘ஆந்திராவில் சிரஞ்சீவி ஃபேமிலி டாமினேட் பண்றாங்க. தியேட்டர்களை ஒரு குரூப் வச்சிருக்காங்க. இதுபோக என்டிஆர் ஃபேமிலி, நாகேஸ்வரராவ் ஃபேமிலி, கிருஷ்ணா ஃபேமிலினு ஏகப்பட்ட டாமினேஷன்ஸ் அங்க இருக்கு.

நான் எல்லா ஸ்டேட்டும் பாத்திருக்கேன். ஆனா, அங்க இருக்கறா மாதிரியான டாமினேஷன்ஸ் இங்க இல்ல. இண்டஸ்ட்ரீயை ஒப்பிடும் போது, தமிழ்ல உருவங்கள் வேணா முரட்டுத்தனமா இருக்கலாமே தவிர மத்தபடி இங்க கொஞ்சம் சாஃப்ட் நேச்சர்தான். மனச்சாட்சிப்படி நடப்பாங்கனு உறுதியா சொல்வேன்.

வேற இடங்கள்ல ஒருத்தர் வளர்ந்திடக் கூடாதுனு நினைச்சாங்கன்னா அதேமாதிரி செய்து காட்டுவாங்க. தமிழ் சினிமால தற்கொலை செய்து கொண்டவங்கனு லிஸ்ட் எடுத்தா நிறைய பேரை சொல்ல முடியும். மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி(ஜி.வெங்கடேஸ்வரன்)யும், நானும் ஒரே காலகட்டத்துல தொழில் பண்ணினோம். அவரோட மரணத்துல கூட பல காரணங்கள் சொல்லப்பட்டது.

அதே மாதிரி சில்க் ஸ்மிதா, ஷோபானு பலரது இறப்பிலும் பல காரணங்கள் சொல்றாங்க. எல்லாமே பர்சனல் காரணம்னு மட்டும் சொல்லிட முடியாது...’’ என்ற கேயார், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் இந்தியில் படம் தயாரிப்பதும் சுலபமல்ல என்கிறார். ‘‘அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் கால்ஷீட்டை எல்லாம் நாம அவ்வளவு சுலபத்துல வாங்கிட முடியாது. அப்படியொரு புரிதல் அங்க இருக்கு. நல்ல கதையோடு போனா கூட கதையை மட்டும்தான் இந்தில அனுமதிப்பாங்க.

ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா எல்லாம் இயக்கத்துக்காக அங்க போனாலும் நிரந்தரமா தங்கிட முடியாது. ஒருசில படங்களை இயக்க அனுமதிப்பாங்க. அவ்ளோதான். ஆனா, தமிழ் சினிமால நடக்கற அரசியல் வேறு விதமானது. தியேட்டர் பக்கம், டிஸ்ட்ரிபியூஷன் பக்கம்னு தொழில் ரீதியான பாதிப்புகள் நிறைய நடந்திருக்கு.

பொதுவா ஒண்ணை மட்டும் சொல்ல விரும்பறேன். ஒரு துறைல ஒருத்தர் முன்னேறும்போது, அந்தத் துறைக்கு என்ன கைமாறு செய்யப் போறார்னு பார்க்கணும். சம்பந்தப்பட்டவங்களும் தங்களை ஏற்றி விட்ட ஏணிக்கு ஏதாவது செய்யணும் என்கிற நினைப்பு இருக்கணும்.ரஜினியும் தனுஷும் ஒரே ஃபேமிலிலதான் இருக்காங்க. இருந்தாலும் வெளி தயாரிப்பாளர்களுக்குத்தான் படங்கள் கொடுக்கறாங்க.

ஆனா, சிவகுமார் ஃபேமிலி அப்படி செய்யறதில்ல! சூர்யா, கார்த்தி, ஜோதிகானு அவங்க குடும்பத்துல மூணு நட்சத்திரங்கள் இருக்காங்க. என்ன பயன்? திரும்பத் திரும்ப சொந்த தயாரிப்புலதான் இவங்க மூணு பேரும் நடிக்கறாங்க. லாபத்தையும் தங்களுக்குள்ளயேதான் பார்த்துக்கறாங்க.
மத்தபடி சிவகுமாரை வளர்த்துவிட்ட இண்டஸ்ட்ரீக்கு எந்த விதமான பயனும் இல்ல. சிவகுமாராலதான் அவங்க மூணு பேரும். இதை அந்த ஃபேமிலி எப்பவாவது நினைச்சுப் பார்க்கணும்...’’ என்ற கேயார், அஜித்தும் இப்படித்தான் என்கிறார்.

‘‘ஆமா... தேவி சொன்னாங்கனுதான் அஜித், போனி கபூருக்கு கால்ஷீட் கொடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ல நடிச்சார். திரும்ப ‘வலிமை’க்கும் போனி கபூருக்கே கால்ஷீட் கொடுத்திருக்கார்.ஏன்... இங்க வேற தயாரிப்பாளர்களே இல்லையா? அஜித்தை உருவாக்கின, வளர்த்துவிட்ட எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருக்காங்களே... அவங்களுக்கும் அவர் படம் பண்ணலாம் இல்லையா? இந்த சென்டிமென்ட்டை விட தேவி சென்டிமென்ட் அவருக்கு பெருசா தெரியுது! ஒரு நிமிஷம்... ஒரேயொரு நிமிஷம்... நாம எங்கிருந்து வந்தோம்... எப்படி வளர்ந்தோம்னு அவர் சிந்திக்கணும். இதெல்லாம் கண்டிஷன் போட்டு வர்றதில்ல. மனசாட்சிப்படி வரணும்.

கமல், விஜய்யை அப்படி சொல்ல முடியாது. விஜய் நிறைய புரொட்யூசர்களை கூப்பிட்டு கால்ஷிட் கொடுக்கறார்.
கமலை வச்சு படம் பண்றதுக்கு மத்தவங்களுக்கு தைரியம் கிடையாது. அவர் நஷ்டத்துல கொண்டுபோய் விட்டுடுவார்னு சொல்வாங்க. அவருடைய விஷப்பரிட்சை, அவர் பிசினஸ்னு பார்க்கும்போது யாருக்கும் அவர் கடன் தரவேண்டியதில்ல. சில படங்களுக்கு பிரச்னை வருமோனு தெரிஞ்சா அவரே அந்தப் படத்தை தயாரிப்பார். பிசினஸிலும் கரெக்டா இருப்பார். ஒரு படம் ஓடலைனாலும் யாருக்கும் பேலன்ஸ் வைக்க மாட்டார். திருப்பி
கொடுத்திடுவார்.

ரஜினியும் அப்படித்தான். இதெல்லாம் மனிதாபிமான அடிப்படைல செய்யறதுதான். சிவகார்த்திகேயன் வரை சொந்த புரொடக்‌ஷன் வச்சிருக்காங்க. இனி வரும் காலம் அப்படித்தான் இருக்கும். ஹீரோக்களே, தயாரிப்பாளர், டைரக்டர்களை செலக்ட் பண்றாங்க. ஏன்னா, ஒரு ஸ்டேஜுக்கு பிறகு சரி வரலைனா அவங்களே சொந்தமா பண்ணிக்கப் போறாங்க.

ஆனாலும் ஒரு விஷயம். எல்லாத்தையும் முன்னெச்சரிக்கையா ஹேண்டில் பண்ணி தடுக்க முடிஞ்சாலும் கூட, கர்மாவை யாரும் தடுத்திட முடியாது. நடக்கறது நடந்தே தீரும். அதான் இயற்கை. போறவங்க போயிட்டுதான் இருப்பாங்க. இருக்கறவங்க. இருக்கத்தான் செய்வாங்க...’’ என்கிறார் கேயார்.
இதற்கு மாறுபட்ட கருத்தை சிலர் சொல்கின்றனர். குறிப்பாக சினிமா பின்னணியே இல்லாமல் நடிக்க வந்து, இப்போது ஓரளவு தாக்கு பிடித்து நிற்கும் ஹீரோக்கள்.

‘‘தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீயே இப்பத்தான் கொஞ்சம் மாறியிருக்கு. முன்னாடி நிலமையே வேறு. ஒண்ணா செல்ஃபி மோட்டுலதான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க. ஆனா, அடுத்த நாளே, கேரியருக்கு வேட்டு வைக்கறவங்க இங்க அதிகம். ஒரு ஹீரோவோட படம் ஓடலைனா இண்டஸ்ட்ரீயில ஒரு பெரும் கூட்டம் ஒண்ணு சேர்ந்து ‘சக்சஸ்’ பார்ட்டி கொண்டாடின வரலாறு அதிகம்.

ஒரு படம் ஓடும் போதே, ‘இந்த ஹீரோ பெரிய ரேஞ்ச்சுக்கு போவான்’னு அவனை ஒரு தயாரிப்பாளர் கமிட் பண்ணி வைப்பார். ஆனா, இந்த அப் கம்மிங் ஹீரோ, தனக்கு போட்டியாக வந்துடக் கூடாதுனு அவர் நடிக்கப் போகும் படத்தின் ஃபைனான்ஸையே லாக் செய்து அந்த புராஜெக்ட்டையே டிராப் செய்ய வைத்து விடுவார் இன்னொரு ஹீரோ.

அதுமாதிரியான சூழல்கள் வரக்கூடாதுனுதான் இப்போதைய ஹீரோக்கள் தாங்களே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கறாங்க.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றோம். அடுத்து டாப்புல வருவார்னு நினைக்கற ஹீரோவின் கால்ஷீட்டை ஒரு தயாரிப்பாளர் வாங்கறார். ஆனா, இன்னொரு ஹீரோவை வைச்சு இன்னொரு படத்துக்கு பூஜை போட்டுட்டு ஷூட்டுக்கு கிளம்பிடறார்.

இப்ப கால்ஷீட் கொடுத்த அந்த அப்கம்மிங் ஹீரோ, மாசக்கணக்கா காத்திருக்கார். ஏன்னா, இந்தப் படத்தை முடிக்காம இன்னொரு படத்துக்கு அவரால போக முடியாது.இப்படியே ஆறேழு மாசங்களுக்கு மேல ஆச்சுனா அந்த அப்கம்மிங் ஹீரோவின் கதி என்ன..? இப்படி அவர் நிலமை ஆகணும்னுதான் அந்தத் தயாரிப்பாளர் முன்கூட்டியே கால்ஷீட் வாங்கி அந்த ஹீரோவை அந்தரத்துல விட்டிருக்கார்!
இது உதாரணமில்லை பாஸ்... கண்கூடா நடக்கற நிஜம். இப்படி ‘கட்டம் கட்டற’ தயாரிப்பாளர்கள் இங்க அதிகம். அதனாலதான் ஹீரோக்கள் இப்ப சொந்தமா படங்களை தயாரிக்கறாங்க...’’ என்கிறார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ராலட்சுமணனோ இண்டஸ்ட்ரீக்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கிறார். ‘‘தமிழ் சினிமால மட்டும் ஒரு ஆளை திட்டம் போட்டு ஓரம்கட்டுவதோ காலி பண்றதோ நடக்காது.தமிழகத்தை ‘வந்தாரை வாழ வைக்கும் பூமி’னுதான் சொல்வாங்க. அது சினிமா உலகுக்கும் பொருந்தும். வட இந்தியால நம்மாட்களை ஜீரணிக்க மாட்டாங்க. அதே போல, கன்னடத்துல வேறு மாநில நடிகர்கள் நடிக்கவே கூடாதுனு ஒரு காலத்துல எழுதப்படாத சட்டமே இருந்தது.

இப்படி எதுவுமே தமிழ் சினிமால எந்தக் காலத்திலும் இருந்ததில்ல. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சின்னமான கலைத்தாய், நான்கு குழந்தைகளை அரவணைச்சிட்டிருப்பாங்க. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மொழியை -  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் - பிரதிபலிக்கும். அஞ்சலிதேவி தலைவரா இருந்தப்ப உருவான சிலை இது.

இப்படித்தான் தமிழ் சினிமா இயங்குது. பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் எல்லாம் தமிழ்ல நடிச்ச பலப் படங்கள் நூறு நாட்கள் ஓடியிருக்கு. இங்க எல்லா லாங்குவேஜ் படப்பிடிப்புகளும் நடந்திருக்கு; நடக்குது. இப்பக்கூட எந்த ஹீரோவுக்கும் நாம மொழி பேதம் பார்க்கறதில்லையே!
திறமையில்லாதவர்னு புறக்கணிச்சிருக்கலாம். ஆனா, இவர் இந்த இனத்தை சேர்ந்தவர்... இவர் இந்த மதத்தை சேர்ந்தவர்னு யாரையும் ஒதுக்கித்
தள்ளினதில்ல.

தமிழ் சினிமாவில் தற்கொலைகள் நடக்கவே இல்லனு சொல்லிட முடியாது. சிலது நடந்திருக்கு. அதெல்லாம் அவங்க வாழ்க்கை முறை, காதல், மனச்சோர்வாலதான் நடந்திருக்குமே தவிர அவங்க புறக்கணிக்கப்பட்டதாலோ அல்லது அவங்க வாழ்க்கைப் பறிக்கப்பட்டதாலோ நடக்கலை!
அசோகனுக்கும், சந்திரபாபுவுக்கும் எம்ஜிஆர் கால்ஷிட் கொடுக்கறேன்னு சொல்லி நட்டாத்துல விட்டுட்டார்னு சொல்வாங்க. அதில் உண்மை இல்லை. எம்ஜிஆர் அவங்களுக்கு உதவத்தான் கால்ஷீட் கொடுத்தார்.  

எல்லா மனிதர்களுக்கும் சில பலவீனங்கள் உண்டு. ஒரு கட்டத்துல அசோகனின் செயல்பாடுகள் எம்ஜிஆருக்கு பிடிக்காமப் போகுது. இதன் பிறகு பரஸ்பரம் கோ ஆப்பரேட் பண்றது சிரமம்தானே?

எம்ஜிஆரும் சிவாஜியும் பலரை தயாரிப்பாளர்களா உயர்த்தியிருக்காங்க. சந்திரபாபுவை, கவிஞர் கண்ணதாசனைனு பலரையும் அவரே கூப்பிட்டுத்தானே சொன்னார்? ஒவ்வொரு படமும் நின்னு போனதுக்கு வேற வேற காரணங்கள் இருக்கு. எம்ஜிஆர் அவங்களைப் பழிவாங்கிட்டார்னு அவரைப் பிடிக்காதவங்கதான்  கிளப்பிவிட்டாங்க.

அதேமாதிரி விஜய்காந்த் வளர்ச்சியை ரஜினி தடுக்கப் பார்த்தார்னு சிலர் இப்பவும் பேசிட்டு இருக்காங்க. சிரிப்பா வருது. பெயர் ஒற்றுமையைத் தவிர மத்தபடி ரெண்டு பேருமே தனித்துவம் மிக்கவர்கள்.சிவாஜி எப்பவும் கான்ஃபிடெண்ட்டா இருந்தார். ‘எவன் வேணும்னாலும் நடிக்க வாங்கடா... என்னால ஜெயிக்க முடியும்’னு நின்னார்.

ரஜினியும் அப்படித்தான். அவர் தமிழ் சினிமால அடியெடுத்து வச்ச கொஞ்ச காலத்துலயே மாஸ் ஹீரோவாகிட்டார். அதனால அவர் இன்னொருத்தரை கட்டம் கட்ட நினைச்சிருக்க மாட்டார்...’’ என்கிறார் சித்ராலட்சுமணன்.

பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவரோ ‘எல்லாரும் சும்மா சொல்றாங்க... இங்கயும் காலம் காலமா உள்குத்து நடந்துட்டுதான் இருக்கு...’ என்கிறார்.
‘‘பொய் சொல்லலை தம்பி... நீங்களே லிஸ்ட் எடுங்க. சினிமா பின்னணியே இல்லாம வளர்ந்து ஆளாகி டாப்புக்கு வந்து சட்டுனு காணாமப் போனவங்க யார் யாரு..?

அப்புறம் மெல்ல மெல்ல முன்னேறி வர்றப்பவே காணாமப் போனவங்க யார் யாரு..? அந்தக் காலத்துல இருந்து இப்ப வரை பட்டியல் போட்டுப் பாருங்க... ரீடிங் இன் பிட்வீன் லைன்ஸா உங்களுக்கே பல மர்மங்கள் புரியும்!கே.பாக்யராஜ் போலவே ஒருத்தர் ஹீரோவா நடிச்சார். அவர்தான் ‘முந்தானை சபதம்’ யோகராஜ். அவர் என்ன ஆனார்... எத்தனைப் படங்கள் பண்ணினார்..?

ரஜினியும் கமலும் சேர்ந்து ஹிட் கொடுத்துட்டிருந்தாங்க. திடீர்னு ஏன் பிரிஞ்சாங்க? நளினிகாந்த்னு ஒரு நடிகர் இருந்தாரே... அவர் என்ன ஆனார்?
ஒரு காலத்துல சில்வர் ஜூப்ளியா கொடுத்த மோகன், ராமராஜன், ரவீந்திரன், ‘ஒருதலைராகம்’ சங்கர்... எல்லாம் ஏன் திடீர்னு காணாமல் போனாங்க..?

ஜெய்சங்கராலயும் ரவிச்சந்திரனாலயும் ஒரு கட்டத்துக்கு பிறகு ஏன் ஹீரோவா தொடர முடியலை..? அவ்வளவு ஏன் தம்பி... விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் மட்டும் சமீபகாலமா ஏன் தொடர்ந்து சிக்கல்ல மாட்டுது?!

யோசிங்க தம்பி... உங்களுக்கே பதில் கிடைக்கும்! என்ன... இங்க அப்படி பாதிக்கப்பட்ட எந்த ஹீரோவும் தற்கொலை செய்துக்கலை... அதனால பெருசா இந்த உள்குத்து அரசியல் வெளிச்சத்துக்கு வரலை!’’ சொல்லிவிட்டு நிதானமாக நம்மைப் பார்த்து புன்னகைத்தார்!  

எம்.இக்னேஷியஸ்