மகாபாரதத்தை பிரமாண்டமாக மறு ஆக்கம் செய்திருக்கிறார் ஜெயமோகன்!
7 ஆண்டுகள்... ஒரே காப்பியம்... ஆனால், 26 தனித்தனி நாவல்கள்... 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள்...
‘வெண்முரசு’ மகாபாரத புதுப்பதிப்பை நிறைவு செய்கிறார் ஜெயமோகன். அதுவும் இதுவரை இந்திய அளவில் யாரும் செய்யாத சாதனையாக. ஆம்... மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வெண்முரசு’ என்ற பொதுத்தலைப்பின் கீழ் 25 தனித்தனித் தலைப்புகளில் 25 நாவல்கள் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை. அனைத்துமே அவரது வலைத்தளத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நாள்தோறும் ஓர் அத்தியாயம் வீதம் தொடர்ச்சியாக வெளியானவை.இப்பொழுது ‘வெண்முரசு’ தொடர்ச்சியின் இறுதி நாவலான, 26வது புதினம் ‘விண் திரை’யை - பாண்டவர்கள் விண்ணுக்குச் சென்ற காதையை - வரும் ஜூலை ஒன்றாம் தேதி அவரது வலைத்தளத்தில் (www.jeyamohan.in) தொடங்குகிறார். இந்த ‘விண் திரை’ ஆகஸ்ட் இறுதியிலேயே முடிந்துவிடும் என்றும் அறிவித்திருக்கிறார்.
‘வெண்முரசு’ நாவல்கள் ஒவ்வொன்றும் அதனளவில் தனி நாவல்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக மகாபாரத காப்பியம்! இவை அனைத்தையும் அச்சில் ‘கிழக்கு பதிப்பகம்’ கொண்டுவந்துள்ளது.
உலகின் பெரும் காப்பியத்தை திரும்பி எழுதும் சாகசம் ஜெயமோகனுக்கு வெற்றிகரமாக கை கூடியிருக்கிறது. சாதாரண வார்த்தைகளில் கூட மந்திர த்வனி ஏற்றும் அவரது புனைவுலகம் தன் எழுத்து வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிறது. அவருக்கு சிறப்பு செய்ய தமிழ் இலக்கிய உலகம் திரண்டிருக்கிறது. இந்திய காவிய மரபின் வளமைகளை உள்வாங்கி எழுதிய ‘வெண்முரசு’ நாவல் வகைகளை நினைவூட்டி நடந்தது இந்த உரையாடல். மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதினார் என்பது ஐதீகம். அதையே பின்னணியாக வைத்து மகாபாரதத்தை இப்பொழுது எழுதிய ஜெயமோகனையே வியாசராகவும், பிள்ளையாராகவும் இங்கே கற்பனைத்து உருவகப்படுத்தியிருக்கிறார் ஓவியர் ஷ்யாம்!ஏழு வருடங்களாக ‘வெண்முரசு தொடர்ச்சியில் உழைப்பைக் கொட்டியிருக்கிறீர்கள். தீர்க்கமும், பொருளும், அடர்த்தியும் கொண்ட இந்த இடத்திற்கு உங்கள் மனநிலை எப்படி வசப்பட்டது?
என் அம்மா மகாபாரதத்தில் அறிஞர் எனச் சொல்லும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகாபாரதம் என்பது பழங்கதையல்ல. புராணம் அல்ல. ஆழ் படிமங்கள் கொண்ட பெரும் தொகுதி. நம்முடைய ஆழ்மனம் இந்த ஆழ் படிமங்களால் ஆனது. நம்முடைய நம்பிக்கைகள், கனவுகள் அனைத்தும் அங்கிருந்துதான் வருகின்றன. இந்த சமூகத்தை ஆழ்ந்து பார்க்க, நாட்டின் வரலாற்றை உண்மையாக ஆராய, நம் சொந்த மனதின் ஆழத்திற்குச் செல்ல, நாம் எப்படியும் மகாபாரதத்திற்குள்தான் சென்றாக வேண்டும்.
இந்தியாவில் நவீன இலக்கியம் உருவானபோது எல்லா மொழிகளிலும் மகாபாரதத்தை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். ‘வெண்முரசு’ அதன் தொடர்ச்சி தான். நான் மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்யவில்லை. என்னுடைய பண்பாட்டை, தேச வரலாற்றை, என் சொந்த ஆழ்மனத்தைத்தான் தியானித்து அறிய முயல்கிறேன். அதற்கான மனநிலை இயல்பாக உருவாகி வரும்.இது கங்கையில் குளிப்பது போலத்தான். கங்கையில் குளித்தால் நீந்த வேண்டியதில்லை. அதுவே கொண்டு செல்லும்.
ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கிறேன். உலகத்தின் 15க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்த நாவலை எழுதியிருக்கிறேன். இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்தபடி எழுதியிருக்கிறேன். எங்கிருந்தாலும் எழுதத் தொடங்கும்போது ஓர் உச்ச மனநிலை வரும். முதல் ஒரு பத்திக்குப் பிறகு எதையும் யோசிக்க வேண்டியிருக்காது. அதுவாக நிகழும். இதை நான் முயற்சி செய்து எழுதவில்லை. இந்த வேகம் என்னைக் கையில் எடுத்துக் கொண்டது.
பலரும் நுழைய அஞ்சும் பிரதேசங்களில் சாவகாசமாக சென்று விடுகிறீர்கள். மகாபாரதத்தை உங்கள் பார்வையில் திருப்பி எழுதும் எண்ணம் எப்படி வந்தது?சுந்தர ராமசாமி ஆசிரியராக இருந்து வெளிவந்த ‘காலச்சுவ’ட்டில் நான் மகாபாரதத்தை முன் வைத்து நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். முழு மகாபாரதத்தை எழுதவேண்டும் என்ற லட்சியம் எனக்கிருந்தது.
‘இனி நான் உறங்கட்டே’ என்ற மகாபாரத நாவலை மலையாளத்தில் எழுதிய பாலகிருஷ்ணன் என்னுடைய ஆசிரியர் மாதிரி. அவரிடம் பேசும்போது விளையாட்டாக, ‘முழு மகாபாரதத்தையும் எழுதப் போகிறேன்’ என்றேன். அவர் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு என் தோளை அணைத்து ‘நீ எழுது. உன்னால் முடியும்’ என ஆசீர்வதித்தார். எழுத நினைத்து புத்தகங்களைத் திரட்டினேன். தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். எனக்கு 50 வயதாகும்போது இனி நேரமில்லை எனத் தோன்றியது. 2014ல் எழுதத்தொடங்கி விட்டேன்.
‘வெண்முரசு’ பழைய மகாபாரதத்தை அப்படியே திருப்பிச் சொல்லும் முயற்சி அல்ல. இது மகாபாரதத்தின் விளக்கம் அல்ல. இது ஒரு நவீன நாவல். மகாபாரதத்தின் கதை என்பது ஒரு தொல் படிமம். அந்த படிமத்தை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை விளக்க ‘வெண்முரசு’ முயல்கிறது. உதாரணமாக பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறார் என்பது கதை. அதை ஒரு தொன்மமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய வீட்டில் ஒரு மூத்த பாட்டா சமகாலத்தின் அத்தனை அம்புகளையும் ஏற்றுக்கொண்டு அதில் படுத்திருக்கிறார்.
காந்தி பற்றி ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிற வசைகளை பார்க்கும் போது இந்தியாவின் ஒரு மூலையில் காந்தி அம்புப்படுக்கையில் படுத்திருப்பது போலவே தோன்றுகிறது. ‘வெண்முரசு’ மகாபாரதத்திலிருக்கிற அத்தனை ஆழ் படிமங்களையும் நவீன வாழ்க்கைக்காக எடுத்தாண்டு இருக்கிறது. ‘வெண்முரசு’ மகாபாரதத்தின் கதைகளையும் தொன்மங்களையும் படிமங்களாக மாற்றி எழுதப்பட்ட ஒரு பெரிய நவீன படைப்பு, இதுதான் மற்றவர்கள் எழுதிய மகாபாரதத்திற்கும், இதற்குமான வேறுபாடு.
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுதப்பட்ட படைப்புகள் இதை எழுதத் தூண்டியதா ?
மகாபாரதத்தை ஒட்டி முன்னால் பல நூல்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், பாலகிருஷ்ணன், கன்னடத்தில் பைரப்பா போன்றவர்கள் எழுதிய நூல்கள் முக்கியமானவை.
அவை எதனோடும் ‘வெண்முரசு’க்கு தொடர்பில்லை. ‘வெண்முர’சை அவற்றுடன் ஒப்பிடும்போது மிகப் பிரம்மாண்டமானது. மிகமிக ஆழமானது. ‘வெண்முரசு’, ஒவ்வொரு தருணத்திலும் கற்பனையுடன் நெடுந்தூரம் செல்கிறது. ‘வெண்முரசு’வில் அத்தனை கதைகளும் பெரிதாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான விதைகள் இருக்கும். மழை பெய்தால் முளைக்கும். அதைப்போல மகாபாரதத்தில் முளைக்காமல் இருந்த விதைகளை விதைக்க வைக்கும் முயற்சி ‘வெண்முரசு’.
முக்கியமான காப்பியங்களில் முதல் வரிசையில் மகாபாரதம் இருப்பது ஏன் ?
‘சிலப்பதிகாரம்’ போல ஒரு 500 சிலப்பதிகாரங்கள் இருந்தால் எப்படி இருக்குமோ அதுவே ‘மகாபாரதம்’. பலநூறு கதைகள் திரண்ட கதை உலகம். ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை, தரிசனத்தை முன் வைக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கின்றன. எனவே அவைகளைப் படித்து முடிக்கவே முடியாது.
மகாபாரதத்தில் யார் கதாநாயகர்கள்..? அர்ஜுனனா, கர்ணனா, பீமனா..? எல்லோருமேதான். இந்த முடிவற்ற தன்மைதான் உலகத்தின் எந்த மொழியிலும் இருப்பதை விடவும் முழுமையானதாக இருக்கிறது. உலக இலக்கிய செல்வங்களில் மகாபாரதம்தான் தலையாயதும், ஈடு இணையற்றதுமாகும்.
பொதுவாக இவ்வகை காப்பியங்கள் நீதி சொல்வதற்கான வழிமுறையாக பார்க்கப்படுகிறது. உங்களுக்கு அந்த வகை பிரியம் உள்ளிருக்கிறதா..? மகாபாரதம் தன்னளவில் நீதி சொல்லக்கூடிய படைப்பல்ல. முதலில் அது பாண்டவர்களின் வெற்றியைச் சொல்லக்கூடிய காப்பியம். பிறகு வம்சக் கதைகளையும், நீதிக்கதைகளையும் சேர்த்தார்கள்.
மகாபாரதத்தில் இருக்கிற நெறி நூல்கள் அடுத்த ஆயிரம் ஆண்டில் சேர்க்கப்பட்டவை. அதை தர்ம சாஸ்திரங்களின் கலைக் களஞ்சியம் எனலாம். இந்த அறநூல்களைத் தவிர்த்துவிட்டு மகாபாரதத்தைப் பார்க்கலாம். மகாபாரதம் இன்ன நீதியைச் சொல்கிறது என எதையும் குறிப்பாக சொல்ல முடியாது. உண்மையான வாழ்க்கையில் இருக்கக்கூடிய முடிவில்லாத தர்ம சங்கடங்களை, அறச்சிக்கல்களை மகாபாரதம் சொல்கிறது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை சார்ந்து கேட்கக் கூடிய அடிப்படைக் கேள்விகளை அதில் கேட்டுக் கொள்ளலாம்.
‘வெண்முர’சைப் பொறுத்தவரை அதில் எந்த நீதியையும் கூறவில்லை. எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால், எல்லா நீதிகளையும் பரிசீலிக்கிறது. எல்லா அறங்களையும் ஆராய்ந்து பார்க்கிறது.
அவற்றையும் இன்றைய காலத்தில் வைத்து மதிப்பிடுகிறது.ஊரடங்கின் முதல் பகுதியில் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு ஒரு சிறுகதை வீதம் 69 சிறுகதைகள் எழுதிவிட்டீர்கள். இப்பொழுது ஊரடங்கு தொடர்வதால் அடுத்தகட்ட சிறுகதைத் திருவிழாவை உங்கள் வலைத்தளத்தில் தொடங்கியுள்ளீர்கள். அனைத்துமே மனக்குகையை குடைந்து குடைந்து எழுதப்பட்ட சிறுகதைகள். இப்படி ஆவேசமாக எழுத என்ன காரணம்..? ஊரடங்கில் கதைகள் எழுத ஏன் தோன்றியதென்றால், நெருக்கடி நிலைமையில் தெய்வத்திடம்தான் சரண் அடைவோம். எனக்கு தெய்வம் கலை, இலக்கியம்தான். அதற்குத்தானே என்னை அளிக்க வேண்டும்? ஒரு நெருக்கடியில் அதை விட்டு வேறொன்றைத் தேடுவது தவறு.
தவறான அரைகுறை செய்திகள் நம்மை ஆக்ரமிக்கின்றன. அதனால் கசப்புகள் எழ மிகையாக எதிர் வினையாற்றுகிறோம். நெருக்கடி நிலையில் நம் மனது கலங்கிவிடுகிறது. அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. நோயைப்பற்றின செய்திகளை ஓரளவுக்கு மேல் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என முடிவு செய்தேன். பதிலாக என்னை இலக்கியத்திற்குள் மூழ்கடித்துக் கொண்டேன்.
நினைவு தெரிந்த நாள் முதல் தொடர்ச்சியாக பயணம் செய்பவன் நான். இத்தகைய பயணங்களை வேறெந்த எழுத்தாளரும் செய்வதில்லை. 15 நாட்கள் கூட நான் தொடர்ந்து ஊரில் இருப்பதில்லை. இப்போது மூன்று மாதங்களாக வீட்டில் இருக்கிறேன்.
எனக்கு மானசீகமான பயணங்கள் தேவைப்படுகின்றன. கடந்த காலத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது இமயமலை போன்ற புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இதை அனைத்தையும் புனை கதை வழியாகச் செய்துகொண்டு இருக்கிறேன்.
எழுத விட்டுப்போனவை இப்போது எழுதப்படுகின்றன. ஒரு கதை, பல கருக்களை மனதில் கொண்டு வருகிறது. ஏறத்தாழ இப்போது 100 கதைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதைகள் வழியாக ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்த ‘வெண்முர’சிலிருந்து வெளியே வருகிறேன்!
செய்தி: நா.கதிர்வேலன்
படங்கள் :ஆ.வின்சென்ட் பால்
|