உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 10

வட ஐரோப்பிய பிளேக் வெடிப்புகள்


பதினாறாம் நூற்றாண்டின் பாதியில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஒரு நூற்றாண்டு காலம் வட ஐரோப்பிய பிராந்தியங்கள் ஸ்வீடன் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. குறிப்பாக, பால்டிக் பகுதிகளின் ஏகபோகம் ஸ்வீடன் கையில் இருந்தது.
இது, அருகில் இருந்த இங்கிலாந்து பேரரசு மற்றும் ஃப்ரஞ்சு பேரரசுகளை மட்டுமல்லாது சற்று தொலைதூரத்திலிருந்த ரஷ்யாவின் ஜார் பேரரசையும், மத்திய கிழக்கில் இருந்த ஒட்டோமான் சாம்ராஜ்யத்தையுமேகூட எரிச்சல்படுத்தியது.

ஸ்வீடனை எப்படி ஓரங்கட்டலாம் என்று இந்த அரசுகள் நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான், இளவயது பனிரெண்டாம் சார்லஸ் பேரரசின் அரசராகிறார். ரஷ்யாவின் முதலாம் பீட்டர், டென்மார்க் - நார்வேயின் நான்காம் ப்ரெடரிக், போலந்து - லித்துவேனியாவின் இரண்டாம் அகஸ்டஸ் என மூன்று அரசர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்வீடனை மூன்று திசையிலிருந்து தாக்கினார்கள்.கி.பி 1700 முதல் கி.பி 1721 வரை நீடித்த இந்த நெடுங்காலப் போரை வரலாறு பெரும் வடக்கத்தியப் போர் என்று வர்ணிக்கிறது.

இந்தப் போரின் முடிவில் ஸ்வீடனின் பேரரசர் பனிரெண்டாம் சார்லஸ் இறந்தார். இதற்குப் பிறகு ரஷ்யா ஐரோப்பிய அரசியலில் முக்கியமான பங்கை வகிக்கத் தொடங்குகிறது. கிழக்கு, மத்திய மற்றும் வட ஐரோப்பிய பிராந்தியங்களில் ரஷ்யாவின் கை ஓங்குகிறது. பிரிட்டனும் ஃப்ரான்சும் மேலும் வலுவாகின்றன.

ஐரோப்பா மற்றும் புரூஷியா பகுதிகளின் வரலாற்றை மாற்றி அமைத்த இந்த வடக்கத்தியப் போரின் காலகட்டத்தில் ஒரு பிளேக் சத்தமில்லாமல் நுழைந்து பல லட்சம் பேரைக் காவு வாங்கியது. இதனை, பெரும் வடக்கத்தியப் போர்க்கால பிளேக் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

பிளேக்கின் வரலாறு தொடர்ச்சியானது. ஒரு புரிதலுக்காக வரலாற்று அறிஞர்கள் பிளேக்கை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்கள்.

பெல்மாண்ட் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஜோசப் பைரன், கி.பி.541 முதல் கி.பி.750 வரையான காலகட்டத்தை பிளேக்கின் முதல் வருகை என்றும், கி.பி.1345 முதல் கி.பி.1840 வரையான நெடிய காலகட்டத்தை பிளேக்கின் இரண்டாம் வருகை என்றும், கி.பி.1866ம் ஆண்டு முதல் 1960 வரையான காலகட்டத்தை பிளேக்கின் மூன்றாம் வருகை என்றும் பிரிக்கிறார்.

இந்தக் காலப் பகுப்பில் சில சர்ச்சைகள் உள்ளன. சில ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. பிளேக்கின் இரண்டாம் வருகையின் முடிவுக்கும் மூன்றாம் வருகையின் தொடக்கத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளி மிகச் சிறியது. அப்படிப் பார்த்தால் கி.பி.1345 முதல் கி.பி.1960 வரையான காலகட்டம் முழுதுமே இரண்டாம் கட்ட பிளேக்தான் என்கிறார்கள் சிலர்.

எது எப்படி இருந்தாலும், பிளேக் ஆறாம் நூற்றாண்டில் உருவான பிறகு தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறது என்பது மட்டும் உண்மை. சென்ற நூற்றாண்டின் பாதி வரைக்கும் பிளேக் உலகை உலுக்கிவிட்டுத்தான் போயிருக்கிறது.

ஜோசப் பைரனின் காலப் பகுப்பைக் கொண்டு பார்க்கும்போது இந்த வட ஐரோப்பிய பிளேக் இரண்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தது.

கி.பி.1708 முதல் 1712 வரை நான்கே ஆண்டுகள்தான் இதன் கோரத்தாண்டம் இருந்தது. ஆனால், ஒட்டுமொத்த வட ஐரோப்பாவையும் கலங்கடித்து விட்டது.

இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த பிளேக்கால் மாண்டார்கள். லண்டனில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்த பிளேக் மெல்ல நகர்ந்து வட ஐரோப்பிய பகுதிகளுக்குள் ஊடுருவியது. கி.பி.1702ல் ஸ்வீடன் பேரரசர் பனிரெண்டாம் சார்லஸின் படைகள் தங்களது எதிரிகளான சாக்ஸன் படைகள், போலந்து படைகள், லித்துவேனிய படைகள் ஆகியவற்றைத் தீரமுடன் எதிர்கொண்டது. தெற்கு போலந்தின் நிடா ஆற்றங்கரையின் கிசோவில் நடந்த போரில் ஸ்வீடன் பெரும் வெற்றியடைந்தது.  

ஆனால், சக மனிதர்களுடனான போரில் வென்ற ஸ்வீடன் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரி யுடனான போரில் தோற்றது. ஆம்! அந்தப் போரில் பங்கேற்ற ஒரு படைப் பிரிவுக்கு பிளேக் தொற்று ஏற்பட்டது. அப்போது முதல் கி.பி.1714 வரை பிளேக் போலந்தின் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தாக்கியது. லித்துவேனியா முதல் லிவின் வரை வரிசையாகப் பரவிக்கொண்டே சென்றது.

பிறகு அங்கிருந்து போலந்து - லித்துவேனியப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. வார்சா முதல் க்ரேகோவ் வரை கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள். போரினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு, உள்நாட்டுக் கலகத்தில் சிக்கியிருந்த போலந்து, இந்தக் கொள்ளை நோயால் நிலைகுலைந்தது. மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினார்கள்.

புரூஷியா இந்தப் போரில் நடுநிலை வகித்தாலும் பிளேக்கிலிருந்து தப்ப இயலவில்லை. எல்லைகளை மூடி தன்னைக் காத்துக்கொள்ள முயன்றது.
போலந்திலிருந்து உள்ளே நுழைபவர்களுக்கு மருத்துவரின் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்தது. அப்படி வந்தாலுமேகூட அவர்கள் புரூஷிய அரசால் குவாரண்டைன் செய்யப்பட்டு தனியிடங்களில் அடைக்கப்பட்டார்கள். மரக்கட்டைகளாலும், வேலிகளாலும் தடை செய்தாலும் நீண்ட எல்லைப் பகுதியை புரூஷியாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இதனால், புரூஷியாவில் நுழைந்த பிளேக் அங்கிருந்து ரஷ்யா வரைக்கும் ஊடுருவியது. கி.பி.1708ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பைகெயில்கோ என்ற போலந்து கிராமத்தில் முதன் முதலாக பிளேக் நுழைந்தது. அதுதான் புரூஷியாவுக்குள் பிளேக்கின் முதல் வருகை. அந்த ஒரு மாதத்துக்குள்ளாக அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த அத்தனை கிராம மக்களையும் கொன்றுவிட்டு முன்நகர்ந்தது பிளேக்.

புரூஷியாவில் நுழைந்த பிளேக் பால்டிக் பகுதிகளைச் சூறையாடத் தொடங்கியது. புரூஷியா, பிராண்டன்பர்க், பொமரேனியா, லித்துவேனியா, லிவர்னியா, எஸ்டோனியா, பின்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றைக் கடந்து மத்திய ஸ்வீடன் வரை ஊடுருவியது இந்தக் கொள்ளை நோய்.
கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் பிரான்சின் மார்சிலியிலும் தன்னுடைய கொடூரத் தாண்டவத்தைத் தொடங்கியிருந்தது பிளேக்.

கி.பி.1720ல் அந்நகரத்தில் நுழைந்த இந்நோய் ஒட்டுமொத்த ஃபிரான்சையுமே சூறையாடியது. ஃபிரான்ஸ் பலவகையிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேறுபட்ட மனநிலை கொண்ட நாடு. ஏற்கெனவே இங்கு வந்து போன கொள்ளை நோய்களின் அனுபவத்தில் மிகச் சிறப்பான குவாரண்டைன் ஏற்பாடுகளைஎல்லாம் ஃபிரஞ்சுக்காரர்கள் மேற்கொண்டார்கள். ஆனால், இந்த மார்சிலி பிளேக் சுமார் ஒரு லட்சம் பேரைக் காவு வாங்கி விட்டுத்தான் நகர்ந்தது.

மேலும் சுமார் ஐம்பதாயிரம் பேர், இந்நகருக்கு வெளியே வட பிராந்தியங்களில் வாழ்ந்தவர்களும் இந்நோய்க்குப் பலியானார்கள்.இரண்டாம் கட்ட பிளேக் உலக இலக்கியத்துக்கு செய்த பங்களிப்பு முக்கியமானது.

இக்காலகட்டத்தில் பிளேக்கின் கொடுமைகளையும் சமூகத்தில் பிளேக் உருவாக்கும் பாதிப்புகளையும் பல படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
கடவுளுக்குக் கீழ்ப்படியாமையே பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் என்ற மூட நம்பிக்கை உட்பட, அக்கால சமூக நடப்புகள் பலவற்றை இந்த பிளேக் இலக்கியங்கள் தொட்டுக் காட்டு கின்றன.

(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்