ஸ்கிரிப்டிலிருந்து சினிமாட்டோகிராபி வரணும்! ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா
‘ஈரம்’ படத்தை பளிச்சென்று படம் பிடித்த கலைஞன் மனோஜ் பரமஹம்சா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரையில் பிரதிபலிக்க வைத்தது இன்னும் பெரிய கேன்வாஸ். ஷங்கரோடு ‘நண்பன்’ என அவர் அடுத்த அடி வைத்தது இன்னும் பிரம்மாண்டம்.“ஒளிப்பதிவில் இன்னிக்கு ஆயிரம் டெக்னாலஜி ஒவ்வொரு நாளும் வந்திட்டே இருக்கு. கொஞ்சமும் சளைக்காமல் அப்டேட் பண்ணிட்டே இருக்கணும்.
இந்த ஷாட், அந்த ஷாட்னு டெக்னிக்கலா பேசினால், உங்களுக்கு குழப்பி அடிக்கும். கடைசியில் நாம ஒரு பாட்டி பண்ற வேலையைத்தான் பண்ணப்போறோம். கதை சொல்லணும்... அதையும் புரிகிற மாதிரி சொல்லணும். டைரக்டர் மனசில இருக்கிற கற்பனையை அப்படியே காட்சியாக்கிப் பார்வையாளனுக்குக் கடத்தணும். இதுதான் ஒரு ஒளிப்பதிவாளனின் வேலை.
சினிமா இப்ப ஒரு நல்ல திசையை நோக்கி நகர ஆரம்பிச்சிருக்கு. உயிரைக் கொடுத்த ஒளிப்பதிவு கூட படம் வெற்றி அடைந்தால்தான் பேசப்படும். படம் வெற்றியாச்சுன்னா கூடவே எல்லாம் கவனிக்கப்படும். ஜெயிக்கிறதுக்குப் பின்னாடி பல விஷயங்கள் இருக்கு.
ஒளிப்பதிவாளராக வந்திட்டால் பலவிதமான டைரக்டர்களுடன் மாத்தி மாத்தி வேலை பாத்தாகணும். அவங்க அலைவரிசைக்கு நாம் சரியாக இருக்கணும். ஏன்னா நாம் பண்ணுகிற வேலைக்கு முதல் ரசிகர் இயக்குநர்தான்...” தடதடவென பேசுகிறார் மனோஜ் பரமஹம்சா. ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணனின் முதன்மை சீடர்.
எப்படி ஔிப்பதிவுக்கு வர்றீங்க…
அப்பா பாபு, தெலுங்கு சினிமாவில் 10 படங்களுக்கு மேல் இயக்கியவர். அவர்தான் நான் ஒளிப்பதிவாளன் ஆகணும்னு ஆசைப்பட்டார். இன்னிக்கும் பாருங்க, ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர், நடிகர், கலை இயக்குநர்னு எல்லாரும் என்ன பண்றாங்கன்னு கவனிச்சுப் பார்த்தால் புரியும். ஆனால், கேமராமேன் என்ன பண்றார் என்பதுதான் எப்போதும் மர்மம். எல்லோரும் பயன்படுத்துற ஒரே கேமராதான். ஆனால், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரிசல்ட்டை தர்றாங்களே!
இந்த ஒளிப்பதிவு அறிவும், ஆற்றலும் கலந்த விதமா வேற இருக்கு. இந்த ஒரு மீடியா சினிமா எல்லாத்தையும் சம்பந்தப்பட வைக்குது. ஒரு சினிமா ஒளிப்பதிவாளனோட அடுத்தடுத்த தினங்கள் கூட ஆச்சர்யமானது. ஒரு நாள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், அடுத்த நாள் ஒரு மீன் மார்க்கெட், அதற்கும் அடுத்த நாள் வேறொரு இடம்னு ஒவ்வொரு தினமும் எங்களுக்கு பாடமே சொல்லும்.
நல்ல சம்பளமும் கொடுத்து, நல்லாவும் நம்மை வச்சுக்கிட்டு இருக்கிற இந்த தொழிலை bestன்னு எப்பவும் சொல்வேன். இன்ஸ்டிடியூட் முடிச்சு சரவணன் சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவர் மாதிரி ஒரு நல்ல மனிதரை இன்னும் நான் வாழ்க்கையில் சந்திக்கவே இல்லை என்பதில் போய் அந்த சந்திப்பு நிக்குது.
பி.சி.ராம் ஸ்கூல் மாதிரி சரவணன் ஸ்கூலும் பெரியது…
எனக்கு இன்னும் சரவணன் சார் அலைபேசி எண்தான் ஞாபகத்தில் இருக்கு. ஏழு வருஷங்கள் அவர் கூட இருந்து 15 படங்களுக்கு மேல் வேலை பார்த்திருக்கேன். ஒரு நாள் சுரேஷ் கிருஷ்ணா, இன்னொரு நாள் ஷாஜி கைலாஷ், விக்ரமன், அடுத்த நாள் பேரரசுன்னு விதவிதமான இயக்குநர்கள் இருப்பாங்க. இதெல்லாம் பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர்கள் எப்பவும் எதற்கும் ரெடியாக இருக்கணும். திடீர்னு மழை பெய்யும். ஆர்ட்டிஸ்ட் வரமாட்டாங்க… திடீர்னு லைட்டிங் போயிடும். எல்லா சூழலிலும் வேலை பார்க்கப் பழகணும். ‘ஈரம்’ பண்ணும் போது ஒவ்வொரு ஃப்ரேம்லயும் மழை பெய்து முடிஞ்சது மாதிரி ஈரமா இருக்கணும். சூரியனே வரக்கூடாதுன்னு சொன்னார் நண்பர் அறிவழகன்.
நாங்க ஷூட் பண்ணது செம வெயில் அடிக்கிற ஏப்ரல், மே. வெயிலும் வரக்கூடாது. ஈரமா இருக்கணும்னா… அது எவ்வளவு கஷ்டம்? ஆனா, பண்ணோம். அதுதான் வேலை. அதுதான் இங்கே தேவை. இதையெல்லாம் செய்ய அனுபவம் கொடுத்தவர் சரவணன் சார்.உங்களுக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆல்டைம் ஹிட்…
அதில் ஒளிப்பதிவு டாமினேட் பண்ண விடாமல் தடுத்தே வைச்சிருப்பேன். பக்கத்து வீட்டில் நடந்து, கௌதம் சார் பார்த்த காதல்தான். அதை அப்படியே எடுக்கணும்னு நினைச்சோம். பார்த்தவங்களும் அதையே சொன்னாங்க. ஆக, நினைச்சது நடந்தது. சினிமாட்டோகிராபி ஸ்கிரிப்ட்டிலிருந்து வரணும். கதையிலேயே அதற்கான இடங்கள் இருந்தால் இன்னும் சௌகர்யம். என் வாழ்க்கையில் சரவணன் சார் மாதிரி, கௌதம் சாரும் முக்கியமானவர்.
‘ஈரம்’ கதை கேட்டுட்டு ‘நீ இதை வேறு ஒருவரை வைச்சு பண்ணு’ன்னு நான் அறிவழகன்கிட்டே சொல்லியிருக்கிறேன். அவர் என் மேல் நம்பிக்கை வச்சதும் அழகு. ‘ஈரம்’ பார்த்திட்டு, என்னை ஷங்கர் சார் ‘நண்ப’னுக்கு தேர்வு செய்தது எனக்கான பெரிய அங்கீகாரம். இப்ப ‘துக்ளக் தர்பார்’னு சேதுபதி நடிக்க படம் பண்றேன்.
உங்களுக்கு குழந்தைகள் சினிமாவில் ஆர்வம் இருக்கு...
நாம் குழந்தைகளுக்காக எதுவும் செய்யலை. நாம பார்க்கிற சினிமாவைத்தான் அவங்களும் பார்க்குறாங்க. முதலில் ‘பூவரசம் பீப்பி’ன்னு ஒரு படம் ஹலிதா டைரக்ட் செய்து தயாரிச்சோம். இப்ப குழந்தைங்க படிக்க ‘அம்புலிமாமா’ கூட வர்றதில்லை.
திரைப்பட விழாக்களில் காணக்கிடைக்கிற சில குழந்தைகள் படங்கள் அபூர்வமா இருக்கு. அப்படி எல்லாம் படங்கள் யாரும் இது வரையில் இங்கே எடுக்கலையேன்னு வேதனையா இருக்கு. இப்ப பிரபாஸ் நடிக்கிற 150 கோடி படத்துக்கு நான் கேமரா பண்ணிக்கிட்டு இருக்கலாம். அதெல்லாம் வேறே. மனசுக்குள்ள இப்படி குழந்தைகளுக்காக படம் பண்ணணும், குட்டியாக ஒரு குறும்படம் செய்யணும்னு இருக்கு. என்ன செய்ய! சுனாமி, கொரோனா வந்திட்ட பின்னாடி என்ன நம்பிக்கையில் சொத்து வாங்குறது சொல்லுங்க!
இன்னும் சொல்ல என்ன இருக்கு...
எங்க அப்பா என்கிட்ட வாத்தியார் - மாணவன் மாதிரியே இல்லை. தோளில் கை போட்டு பேசினார். அவர் படம் எடுத்ததெல்லாம் சிறிய வகையான படங்கள். இப்ப அந்த மாதிரி கதையோடு வருகிறவர்களை அவர் நினைவாக தேடுகிறேன். அப்படிப்பட்ட கதைகளோடு வந்தால் மினிமம் ரிஸ்க்கில் படம் எடுத்துப் பார்க்கலாம்.
என்னை சினிமாவில் மனம் போனபடி இருக்க விட என் மனைவி சிரிஷாவும் சம்மதிக்கிறாள். இந்த கொரோனா நாளில் மட்டுமே என் மனைவியோடும், குட்டி இளவரசன் சோ ஆத்ரேயாகூடவும் ஜாலியா இருந்தேன். அவங்களை வேடிக்கை பார்த்திட்டு கொஞ்சம் கம்ப்யூட்டர், கொஞ்சம் மியூசிக்னு இருந்தேன். இது கூட அவர்கள் என் இயல்புப் படி இருக்க விட்டதுதான்!
நா.கதிர்வேலன்
|