சிங்கர் பாதி ஆக்ட்ரஸ் மீதி!



ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கன்சர்ட்டில் ‘வான் வருவான்...’ என ‘காற்று வெளியிடை’ பாடலை ரம்மிய குரலில் பாடி மயக்கின அதிதி ராவ் ஹைதரி, வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயிலு’க்காக தனுஷுடன் சேர்ந்து ‘காத்தோடு காத்தானேன்... கண்ணே உன் மூச்சானேன்...’ என ஸ்வீட் ஹனி வாய்ஸில் கிறங்கடித்திருக்கிறார்.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குராக புரொமோஷனாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’... என டாப்கியரில் நடிப்பிலும் பளபளப்பவர், மலையாளத்தில் ஜெயசூர்யாவுடன் நடித்த ‘சூஃபியும் சுஜாதாவும்’ நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனதில் அதீத ஆனந்தத்தில் திளைக்கிறார்.

உங்க வாய்ஸ் ச்சோ ஸ்வீட்...

தேங்க்ஸ். எங்க ஃபேமிலியே மியூசிக் ஃபேமிலி. அம்மா அருமையா பாடுவாங்க. புரொஃபஷனல் ஸிங்கர். அதிகாலைல எழுந்தா, தம்புரா தாலாட்டும். தம்புராவும் கையுமா அம்மா பாடிக்கிட்டிருப்பாங்க. அவங்களைப் பார்த்து நானும் சாதகம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

ஸ்கூல் டேஸ்ல நானும் அதிகாலைல எழுந்து டான்ஸ் க்ளாஸ் போவேன். சூர்யோதயத்தை பார்த்து ரசிக்கறது எவ்வளவு பெரிய அனுபவம் தெரியுமா..?
இப்ப என் குரலை எல்லாரும் பாராட்டறாங்க. கிரெடிட் அம்மாவுக்குத்தான் போகணும்... கூடவே என்னைப் பாடகியா அறிமுகப்படுத்தின ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும்!

உங்க ஹிஸ்ட்ரி... ஜியாகிராபி...

நோட் பண்ணிக்குங்க. பிறந்தது ஹைதராபாத்ல. வளர்ந்தது மும்பைல. பாட்டி, அம்மாவோட ஃபேமிலி எல்லாம் ஹைதராபாத்லதான் இன்னமும் இருக்காங்க. எங்க பாட்டி, எழுத்தாளர்! இப்ப வரை அதுல எங்களுக்குப் பெருமை. மும்பைலதான் ஸ்கூல், காலேஜ் முடிச்சேன். மம்மூட்டி சாரோட ‘பிரஜாபதி’ மலையாளப் படத்துல அறிமுகமானேன்.

ஹைதராபாத்ல பிறந்தாலும் தெலுங்கு சரளமா பேச வராது. ‘காற்று வெளியிடை’ என் வாழ்க்கைல பெரிய திருப்புமுனை. மணிரத்னம் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்ததும் அவரைப் போய் சந்திச்சேன். ரெண்டு, மூணு சீன் சொல்லி நடிக்கச் சொன்னாங்க. அன்று மாலையே அந்தப் படத்துல கமிட் ஆகிட்டேன்! அன்று எடுத்த போட்டோ ஷூட்டைதான் ஃபர்ஸ்ட் லுக்கா வெளியிட்டாங்க. மறக்க முடியாத நாள் அது... மறக்கவே விரும்பாத எக்ஸ்பீரியன்ஸ் அது... மணி சார்... ரியல் ஜெம்!

காதல்ல நம்பிக்கையுண்டா?

உண்மையான காதல்ல நம்பிக்கை இருக்கு. லவ் பண்றப்ப எந்த சிரமமுமில்லாம ஒருத்தரோட ஓர் அறைல அமர்ந்து பேசிட்டிருக்க முடியும். அங்கே மனசை ஷேர் பண்ணிக்க முடியும். ஸோ, உண்மையான லவ்வை மதிக்கறேன்.
கிசுகிசுவை கண்டுக்குவீங்களா?

ரூமர்ஸ்னு சொன்னாலே அது ரூமர்ஸ்தான்! எல்லா நாளும் ரூமர்ஸை கேள்விப்படறேன். சில கிசுகிசு மனசை காயப்படுத்தும். பட், தலையை உலுக்கிட்டு அதுல இருந்து வெளிய வந்துடுவேன். ஐ இக்னோர் ரூமர்ஸ்!
எப்ப நம்பர் ஒன் ஆகப்போறீங்க..?

இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல. என்னைத் தேடி வரும் ஆஃபர்ஸ் எல்லாமே சந்தோஷமானது. டாப் டைரக்டர்களின் படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். அதுவே பெரிய பாக்யம். சந்தோஷம்.

சிலருக்கு நிறைய சம்பளம் வாங்குவதுதான் சக்சஸ். வேறு சிலருக்கு விருதுகள் அதிகம் வாங்குவது. எனக்கு அப்படியில்ல. ஒரு பெரிய இயக்குநர் என்னை நம்பி தன் ஸ்கிரிப்டுல நடிக்க வைக்கறதே பெரிய கவுரவம். அந்த வகைல, சஞ்சய்லீலா பன்சாலி, மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குநர்கள் படங்கள்ல நான் நடிச்சிருக்கேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!

மை.பாரதிராஜா