அணையா அடுப்பு-5
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பிரசங்க பீரங்கி! அன்றைய இரவு பிரசங்கம் அமர்க்களம். சபாபதி பிள்ளை எதிர்பார்த்ததைவிட வெகுசிறப்பாக அமைந்தது.காரணம் ஏடு வாசித்த இராமலிங்கம்.
அண்ணனின் பிரசங்கத்துக்கு ஏற்ப செய்யுட்களையோ, பாடல் களையோ அழகாக பொருத்தமாக இடையிடையே படித்தார். நிறுத்தி, நிதானமாக, சத்தமாக, அனைவருக்கும் தெளிவாகக் கேட்கும் வண்ணம் அவ்வளவு அருமையான ஏடு வாசிப்பு.அன்று பிரசங்கம் கேட்க வந்தவர்களெல்லாம் சபாபதி பிள் ளையிடம், இராமலிங்கத்தைப் பாராட்டிவிட்டே சென்றார்கள்.அண்ணனுக்கு ஆச்சரியம்.
ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்குக்கூடச் செல்லாத தன்னுடைய தம்பி, இந்த அருந்தமிழ்ப் பொக்கிஷங்களை எங்கே வாசித்திருக்கக் கூடும்? எல்லா லிங்கமுமா சுயம்பு லிங்கம்?
தன்னுடைய தம்பி சுயம்பு என்பதை உணர்ந்தவர் மனசுக்குள் மகிழ்ச்சிக் கூத்தாடினார்.எனினும், அப்போது வரை அண்ணனுக்கும், தம்பிக்கும் பேச்சு வார்த்தை சுமுகமாக இல்லை.அன்று வீட்டுக்குத் திரும்பியதுமே தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் சொன்னார். “இராமலிங்கத்துக்கு சுற்றிப்போடு. ஊர் கண்ணே இன்று அவன் மீதுதான்...”நீண்ட காலம் கழித்து அண்ணன் தன் தம்பியை அன்போடு அணுகியது அண்ணிக்கு பெரும் மகிழ்ச்சி.
அன்றிலிருந்து சபாபதி பிள்ளை தன்னுடைய பிரசங்கங்களுக்கு தம்பி இராமலிங்கத்தை அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். பிரசங்கத்துக்கு அழைக்க வருபவர்களே குறிப்பிட்டுச் சொல்லவும் ஆரம்பித்தனர். “ஏடு வாசிக்க நம்ம தம்பியையே அழைச்சுட்டு வந்துடுங்க பிள்ளைவாள்…”
முன்பைக் காட்டிலும் பிரசங்க வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. கிட்டத்தட்ட தினமும் எங்காவது நிகழ்ச்சி இருக்கும்.ஒரு நாள்.சபாபதி பிள்ளைக்கு எழ முடியாத அளவுக்கு உடல்நலக் கோளாறு. உடல் கடுமையாக அனலெடுத்தது.
அன்று ஒரு முக்கியமான நிகழ்ச்சி. எப்படியாவது போயே ஆகவேண்டும் என்றுதான் நினைத்தார்.ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. தம்பியை அழைத்தார். “தம்பி, நம்மை நம்பி செட்டியார் நிகழ்ச்சியை பெரியதாக ஏற்பாடு செய்திருக்கிறார். அண்ணனால் இன்று வரமுடியாது என்பதை அவரிடம் சொல்லிவிடு. இன்னொரு நாள் இன்னும் சிறப்பாக நாம் செய்து கொடுத்துவிடலாம்...”தலையாட்டிவிட்டு கிளம்பி னார் இராமலிங்கம்.
அண்ணனும், தம்பியும் வருவார்கள் என்று எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் நிகழ்ச்சி அமைப்பாளரான செட்டியார். அன்று பிரசங்கத்தைக் கேட்க பெரிய கூட்டம் திரண்டிருந்தது.மேடையில் சுவாமி படமெல்லாம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பூஜையும் போட்டாயிற்று.அப்போது இராமலிங்கம் வந்து விஷயத்தைச் சொன்னார்.
செட்டியாருக்கு கண்ணீரே வந்து விட்டது. ‘இவ்வளவு பேர் நம்மை நாடி வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறோமே!’ என்று வருந்தினார்.செட்டியாரும், இராமலிங்கமும் பேசிக்கொண்டிருந்ததை கூட்டத்துக்கு வந்திருந்த சில முக்கிய பிரமுகர்கள் கண்ணுற்றார்கள். அருகில் வந்து பிரச்னை என்ன வென்று கேட்டறிந்தார்கள்.“இவ்வளவுதானே? சபாபதியின் எத்தனை பிரசங்கத்துக்கு இராமலிங்கம் ஏடு வாசித்திருக்கிறான். அண்ணன் எப்படி பிரசங்கிப்பான் என்பதை அணுஅணுவாக உள்வாங்கிய இராமலிங்கமே இன்று பிரசங்கம் செய்யட்டுமே?” செட்டியாரும் அரைமனதோடு இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், இராமலிங்கமோ மறுத்தார். “அண்ணனுடைய உரையைக் கேட்கத்தான் இத்தனை பேர் கூடியிருக்கிறார்கள். சிறுவனான நான் அண்ணன் இத்துறையில் அரும்பாடுபட்டு பெற்றிருக்கும் பெயரைக் கெடுக்க மாட்டேன்...”“அட நீ வேறப்பா. உன்னைப் பத்தி உனக்கே தெரியாது. பொன் வைக்கிற இடத்துலே பூவையே வைக்கலாம். நாங்க வைரத்தைத்தான் வைக்க நினைக்கிறோம்...” என்றார்கள்.பெரியவர்கள் வற்புறுத்த ஒருகட்டத்தில் இராமலிங்கம் ஒப்புக் கொண்டார்.
அவருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட, மேடையேறினார்.நிகழ்ச்சியில் இந்த தவிர்க் கவியலா மாற்றத்தைப்பற்றி செட்டியார், கூடியிருந்த மக்களிடம் விளக்கினார்.“இராமலிங்கமே பிரசங்கம் செய்யட்டும்...” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழுந்தன. அந்தளவுக்கு ஏற்கனவே பிரபலமாகி இருந்தார்.இராமலிங்கம் கணீர் குரலில் ஆரம்பித்தார். அன்று திருவிளையாடற்புராணம். இராமலிங்கத்தின் தமிழ், மகுடி ஓசையாய் மக்களைக் கட்டுப்படுத்தியது.யாரும் அங்கும் இங்கும் அசையாமல் அச்சிறுவனின் தமிழ்ச்சுவையைப் பருகத் தொடங்கினர்.
இதற்கிடையே, நிகழ்ச்சிக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டு வரச் சொன்ன தம்பி இன்னமும் திரும்பி வரவில்லையே என்று சபாபதி பிள்ளை கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.உடல்நலிவையும் பொருட்படுத்தாமல் தாமே போய் பார்த்துவிட்டு வரலாம் என்று தயாரானார்.
பாப்பாத்தி அம்மாளோ, “நீங்க ஓய்வெடுங்க. நான் போய் தம்பியை அழைச்சுட்டு வர்றேன்...” என்று கிளம்பினார்.பிரசங்கம் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு பாப்பாத்தி அம்மாள் வந்தபோது நள்ளிரவைத் தொட்டிருந்தது.
கணீர் குரலில் தன்னுடைய மைத்துனர் திருவிளையாடற் புராணத்தை எடுத்துச் சொல்லும் பாங்கைக் கேட்டு மெய்சிலிர்த்த அந்த அம்மாள், இராமலிங்கத்துக்கு தெய்வ சக்தி இருக்கிறது என்று தன் மாமியார் அடிக்கடி சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்தார்.
விடிய விடிய பிரசங்கம் நடந்து முடிந்தது.இராமலிங்கத்தைப் பாராட் டாத வாய்களே இல்லை.பெரும் வணிகரான செட்டி யார் அள்ளி அள்ளிப் பணம் கொடுத்தார்.“இனிமேல் நீ தனியாக, உன் அண்ணன் தனியாக பிரசங்கம் பாருங்கள். இரட்டை வருமானம் வந்தால் வேண்டாம் என்கிறதா? நான் உன் அண்ணனிடம் பேசுகிறேன்...” என்று வாழ்க்கைக்கு வழி சொன்னார்.அதன்பிறகு இராமலிங்கம் தனியாக பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார்.
குடும்பத்தின் பாரத்தை அண்ணனோடு சேர்ந்து சுமந்தார்.சிறுபிள்ளையான இராமலிங்கத்துக்கு ஏராளமான பிரசங்க வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியது சபாபதி பிள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தது.“நான்தான் சொன்னேனே, பிரசங்கத்தில் அண்ணனை மிஞ்சுகிறான் தம்பி...” என்று பெருமையோடு சொன்னார் அண்ணி.அதுநாள் வரை இராமலிங்கத்தின் பிரசங்கம் எதையும் நேரில் கண்டதில்லை சபாபதி பிள்ளை.ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல், தன் முகத்தை மறைத்துக் கொண்டு தம்பியின் பிரசங்கத்தைக் காணச் சென்றார்.
அப்போது - (அடுப்பு எரியும்)
-தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|